Published:Updated:

நேசக்காரிகள்: அன்னப்பறவை - தேவி

நேசக்காரிகள்: அன்னப்பறவை - தேவி
பிரீமியம் ஸ்டோரி
நேசக்காரிகள்: அன்னப்பறவை - தேவி

நேசக்காரிகள்: அன்னப்பறவை - தேவி

நேசக்காரிகள்: அன்னப்பறவை - தேவி

நேசக்காரிகள்: அன்னப்பறவை - தேவி

Published:Updated:
நேசக்காரிகள்: அன்னப்பறவை - தேவி
பிரீமியம் ஸ்டோரி
நேசக்காரிகள்: அன்னப்பறவை - தேவி

ருவேளை பசியாறுவதற்காகவே பள்ளிக்கூடம் சென்ற தேவி இப்போது ஓர் ஊருக்கே உணவளித்துக் கொண்டிருக்கிறார்!

சேலம் அருகிலுள்ள அரண்மனைக்காடு கிராமத்தில் பிறந்தவர் தேவி. தன்னுடைய பதினோராவது மாதத்தில் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வளர்ந்தார். வறுமையின் பிடியில் குடும்பம் சுழல அதிலிருந்து ஓரளவேனும் தங்களைக் காத்துக்கொள்ள தேவியின் அக்கா படிப்பை நிறுத்திவிட்டு அம்மாவுடன் வேலைக்குச் செல்ல, தேவி மட்டும் பள்ளிக்கூடம் சென்றார். கல்வி கற்க வேண்டுமென்கிற ஆசை இரண்டாவதுதான். வீட்டில் ஒருவராவது ஒருவேளை சரியாகச் சாப்பிட வேண்டுமென்ற நப்பாசையில்தான் தேவியைப் பள்ளிக்கூடம் அனுப்பியிருக்கிறார்கள்.

நேசக்காரிகள்: அன்னப்பறவை - தேவி

பன்னிரண்டாம் வகுப்பு வரை பயின்றவருக்குப் பெண் என்னும் உணர்வு, மேலோங்க பள்ளிக்கூடத்துக்குச் செல்ல மறுத்து, திருநங்கையாகத் தன்னை மாற்றிக்கொள்ள அறுவை சிகிச்சை செய்வதற்கு வீட்டில் விருப்பம் தெரிவித்திருக்கிறார். அம்மாவும் அக்காவும் மறுப்பு தெரிவிக்க, ஒரு நள்ளிரவில் வீட்டிலுள்ள பணம், நகைகளை எடுத்துக்கொண்டு கடப்பாவுக்குச் சென்றுவிட்டார். தேவியால் அடுத்தகட்டத்துக்குக் குடும்பம் நகரும் என எதிர்பார்த்தவர்களின் தலையில் பேரிடியாக விழுந்தது இந்தச் செயல். கடப்பாவில் அறுவை சிகிச்சை செய்து அங்கேயே வசித்த தேவியால் அம்மாவையும் அக்காவையும் பிரிந்து இருக்க முடியவில்லை. அங்கிருந்து தன் கிராமத்துக்கே வந்து சேர்ந்தார். ஊர்க்காரர்கள் தேவியைச் சேர்க்கக் கூடாது எனச் சொல்ல... தேவியின் அம்மா, ஊருக்கு எதிராக, `என் மகளை நான் இங்குதான் வைத்திருப்பேன்' எனச் சவால்விட்டு மகளை வீட்டில் சேர்த்துக்கொண்டார்.

பாலியல் தொழிலாளி மற்றும் திருநங்கைகள் நல்வாழ்வுக்காக அரசாங்கம் கொண்டுவந்த ‘தாய்’ திட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டார் தேவி. சுமார் ஆறாண்டுகள் அங்கே பணியாற்றியதில் கிடைத்த தொகையை வைத்து, சொந்த கிராமத்தில் இரண்டு ஏக்கர் நிலம் வாங்கினார். அந்த இடத்தில் ஆதரவற்ற முதியோர்களுக்கான ஓர் இல்லத்தைக் கட்ட, தெரிந்த நண்பர்களின் உதவியை நாடினார். வங்கியில் கடன் வாங்கினார். குறுகிய காலத்திலேயே தேவியின் `தாய்மடி' இல்லம் உருவானது.

2014-ம் ஆண்டு முறையாகப் பதிவு செய்து நடத்தப்பட்டுவரும் இந்த இல்லத்தில் இப்போது 42 ஆதரவற்ற முதியவர்கள் இருக்கிறார்கள். அதோடு, தாய் தகப்பன் இன்றி உறவினர்களின் வீட்டில் வாழும் முப்பதுக்கும் மேற்பட்ட வசதியற்ற குழந்தைகளைப் படிக்க வைக்கிறார் தேவி.

தன்னுடைய இல்லத்தில் ஒரு பெரிய தொட்டி போல கட்டியிருக்கிறார். தங்கள் வீட்டில் மீந்துபோகும் ஒரு பிடி அரிசியை ஊர்மக்கள் அங்கு வந்து கொட்டலாம் என `கைப்பிடி அரிசி' திட்டத்தை தேவி அறிவிக்க மாதத்துக்கு 600 கிலோ முதல் 800 கிலோ வரை அரிசி கிடைக்கிறது. அதை வைத்தும், தன் தோட்டத்தில் விளையும் காய்கறிகளை வைத்தும் பலநூறு பேரின் பசியாற்றிக் கொண்டிருக்கிறார் தேவி.

“பெண்ணாக மாறிட்டாலும் ஒருபோதும் என்னால தாயாக முடியாது. ஆனா, இன்னிக்குப் பலபேர் என்னை அம்மான்னு கூப்பிடுறாங்க. அதுவும் மனசார. இதில் கிடைக்கிற நிறைவுதான் என்னைத் தொடர்ந்து இயங்க வைக்குது. எங்கம்மா மட்டும் அன்னிக்கு என்னைப் புரிஞ்சிக்காம இருந்திருந்தாங்கன்னா உயிரோடவே இருந்திருக்க மாட்டேன். அவங்களுக்கு என் மேல் இருந்த அன்பைத்தான் ஆதரவற்ற பல பேரோட நான் பகிர்ந்துக்கிறேன்” எனக் கண்களில் நீர் திரளப் பேசும் தேவியைப் பார்த்து, “அம்மா இங்கே கொஞ்சம் வாங்க” என ஒரு பெரியவர் அழைக்க, தேவியின் கண்களில் திரண்டிருந்த நீர் அவர் கன்னத்தில் வழிகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- தமிழ்ப்பிரபா,  படம் : க.தனசேகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism