Published:Updated:

கமல், அடுத்த ஜேம்ஸ்பாண்ட்! - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்!

கமல், அடுத்த ஜேம்ஸ்பாண்ட்! - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்!
கமல், அடுத்த ஜேம்ஸ்பாண்ட்! - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்!

குதியானது தப்பிப் பிழைக்கும் என்கிறார் சார்லஸ் டார்வின். தகுதியானது என்பது, உடலாற்றலால் வலியதோ அல்லது அறிவாற்றலால் வலியதோ அல்ல. மாற்றங்களுக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக்கொள்வது. அப்படி ஓர் இனம் இந்த உலகில் உண்டெனில் அது 90'ஸ் கிட்ஸ் மட்டுமே!

டார்வினிலிருந்து ஆரம்பித்திருப்பதால் டரியலாக வேண்டாம். இது பயாலஜிகல் தொடர் அல்ல; ஜாலியான நாஸ்டாலாஜிக்கல் தொடர். இங்கே 90'ஸ் கிட்ஸின்ன் வாழ்க்கை `அன்று முதல் இன்று வரை' எப்படியெல்லாம் மாறியிருக்கிறது என்பதை அடி வரை போய் அலசி, என் அனுபவங்களை அசைபோட்டு கொசுவத்தி சுற்றப்போகிறோம். நாஸ்டால்ஜியா மழையில் நனைய தயாரா..!

இன்று செல்லும் இடமெல்லாம் ரசிகர் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள் 90'ஸ் கிட்ஸ். ப்ச்ச்... இதற்கான விதை எங்கு போடப்பட்டது என அறிந்துகொள்ள, வேர்களுக்குச் சென்று பார்க்கவேண்டும். அதாவது மூணாம்புக்குப் போக வேண்டும்... மனசை திடமாக்கிகோங்க!

``இனி நான் போகுற பாதை, சிங்கப்பாதை!"

சிவாஜி (எ) எம்.ஜி.ஆர், மல்டி மில்லியனர்

மூணாம்ப்பில்தான் எங்க கேங்குக்கு `ரசிகர் சண்டை'போடும் பழக்கம் துளிர்த்தது. அப்போது, பெரும்பாலான 90'ஸ் கிட்ஸ் ரஜினி ரசிகர்களாக இருந்தார்கள். நானும்தான்! மீதம் இருப்பவர்களில் கமல் ரசிகர்கள் அநேகம். இன்னொரு புறம், ஃபேன்சி டிரெஸ் போட்டியில் போலீஸ் வேடம் போடும் முரட்டு பீஸ்கள் சிலர் விஜயகாந்த் ரசிகர்களாக இருப்பார்கள். ஒருவன் மட்டும் அர்ஜுன் ரசிகனாக இருந்தான். இன்னொருவன், `இதுதான்டா போலீஸ்' ராஜசேகரின் ரசிகன். இப்போதுதான் ஷூட்டிங் சென்றுகொண்டிருக்கும் படத்தைவைத்தே அடித்துக்கொள்கிறார்கள். அன்று, அதிரடி வியாழன், சூப்பர் ஹிட் வெள்ளியில் போடப்படும் பழைய படங்களைவைத்துதான் சண்டையே ஆரம்பிக்கும். 

உதாரணத்துக்கு, ரஜினிகாந்த் நடித்த படம் ஏதேனும் ஒளிபரப்பானால், மறுநாள் காலையிலேயே ரஜினி ரசிகர்கள் கும்பலாய்க் கூடி, படத்தைச் சிலாகிக்க ஆரம்பித்துவிடுவார்கள். அன்று முழுவதும் பிரேயரின்போது ஒன்றாக நிற்பது, ஒன்றாகச் சென்று உச்சா அடிப்பது, ஒன்றாகச் சேர்ந்து இலந்தை வடகம் வாங்கித் தின்பது, லன்ச்சில் பூரி ஷேர் செய்வது என, `அவெஞ்சர்ஸ்' டீம் போல் அவ்வளவு ஒற்றுமையாகத் திரிவர். இதைப் பார்க்கும் மற்றவருக்கு செம காண்டாகும். `ரஜினிலாம் ஒரு ஆளே இல்லை' என எதிர்கோஷ்டி ஆரம்பிப்பார்கள். `அப்போ கமல் மட்டும்...' என அங்கிருந்து `படா'ரென பதில் வரும். அது அப்படியே கேங் வாராக மாறி, வாய் சண்டை  கைகலப்பாகி, ஸ்கூலிலிருந்து வீட்டுக்குச் செல்லும் பொழுதில் உச்சத்தை அடையும். கல்லைத் தூக்கி எறிவதில் ஆரம்பித்து, காசு வெட்டிப் போடப்போறேன் என எட்டணாவைத் தூக்கிக் காட்டுவது வரை வழியெல்லாம் ரணகளமாய் இருக்கும்.

தன் ஆதர்ச நடிகர்கள், படத்தில் செய்த ஸ்டன்ட்களை எல்லாம் அப்போதுதான் செயல்படுத்திப் பார்ப்பார்கள். விஜயகாந்தைப்போல் சுவரில் ஏறி வந்து மிதிக்கிறேன் எனச் சாக்கடைக்குள் விழுந்த மணிப்பாண்டியைப் பார்த்து, `என்னைத் தொட்டா ஆயிரம் பாவம்' என உற்சாக மிகுதியில் ஓடிப்போய் கால் தவறி இன்னொரு சாக்கடையில் விழுந்தான் வாசு. பெரும்பாலும், ரசிகச் சண்டைகள் அன்றைய மாலையே இப்படி ஏதாவது ஒரு துயரமான சம்பவத்தில் முடிவுக்கு வந்துவிடும். மறுநாள், யார் மீதும் சாக்கடை நாற்றம் வீசாது!

``நல்லவனா இருக்கலாம். ஆனா, ரொம்ப நல்லவனா இருக்கக் கூடாது!"

- தர்மதுரை

அப்போதெல்லாம், `பாட்ஷா', `முத்து', `படையப்பா' என ரஜினி ரசிகர்களின் கை எப்போதும் ஓங்கியிருக்கும். அந்தக் கைகளில் வர்மகலை செய்துவிட எப்போதும் முயற்சி செய்துகொண்டிருப்பார்கள் கமல் ரசிகர்கள். மற்ற நேரமெல்லாம், தான் உண்டு தன் சோலி உண்டு என அமைதியாக இருக்கும் கமல் ரசிகர்கள், சண்டையின்போது மட்டும் `ஆளவந்தான்' கமலாய் மாறிவிடுவார்கள். 

ஒருமுறை, நந்தகுமார் என்கிற கமல் ரசிகன், கையில் பாம்புப் படத்தை மருதாணியால் வரைந்துகொண்டு, `நான் ஆளவந்தானா மாறிட்டேன்' என மருதாணி அழியும் வரை பயமுறுத்திக்கொண்டிருந்தான். அர்ஜுன் ரசிகனான ஆனந்தின் கையில் அவன் வெறிகொண்டு கடித்துவைத்திருந்த பல் தடத்தைப் பார்த்ததும் பயத்தில் அடிவயிறு கலங்கிப்போனது. ``அவன் `ஆளவந்தான்' கெட்டப்பில் வந்தால், நான் `பாபா' கெட்டப்பில் வருவேன்'' என வகுப்புக்கு முண்டாசு கட்டிவந்த பாலாஜியை, மேத்ஸ் டீச்சர் குனியவைத்துக் கும்மியெடுத்தது இன்றும் கண்களிலேயே இருக்கிறது.

அடிக்குக் காரணம் அந்த முண்டாசு மட்டுமல்ல, `பாபா' கத்தியென வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்துவந்ததுதான். அடித்துக்கொண்டிருந்த மேத்ஸ் டீச்சருக்கு, `பாபா' கத்தியின் கைப்பிடியில் வரையப்பட்டிருந்த நாமம், மீசையெல்லாம் இருந்த விநோதமான முகத்தைப் பார்த்து `குபுக்'கெனச் சிரிப்பு வந்துவிட்டது. `சரி, போய்த்தொலை' என பாலாஜியை மன்னித்துவிட்டார் மேத்ஸ் டீச்சர். பாலாஜி, அன்றிலிருந்து எங்களுக்கு பாபாஜி!

``வீரம்னா என்ன தெரியுமா, பயம் இல்லாத மாதிரி நடிக்கிறது!"

- ஆதி ஐ.பி.எஸ்

ரசிகச் சண்டையில் முன்வைக்கப்படும் பாயின்ட்கள் பெரும்பாலும் `காசா, பணமா... கரியை அள்ளிப்போடு' என்ற புரளிகளாகவே இருக்கும். `உங்களில் யார் அடுத்த ஜேம்ஸ்பாண்ட்?' போட்டிக்கு, கமலையும் அஜித்தையும் இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுத்தார்களாம். கடைசியில், அவர்களின் நெற்றியில் மூன்று சுருக்கங்கள் இல்லையென நிராகரிக்கப்பட்டார்களாம். மூன்று கோடு வந்ததும் கமல் ஜேம்ஸ்பாண்ட் ஆகிவிடுவார்.

கலைநிகழ்ச்சிகள் நடத்த, மைக்கேல் ஜாக்சன் ஒருமுறை இந்தியா வந்திருந்தாராம். அப்போது அவர் தங்கி இருந்த அறையில் உள்ள டி.வி-யில் பிரபுதேவாவின் பாட்டு ஓடிக்கொண்டிருந்ததாம். உடனே, மைக்கேல் ஜாக்சன், பிரபுதேவாவை வரவழைத்து தான் அணிந்திருந்த `தொப்பி'யைக் கழட்டிக் கொடுத்தாராம். அந்தத் தொப்பியைத்தான் பிரபுதேவா `கண்ணாலே மியா...மியா...' பாட்டில் அணிந்திருந்தாராம். விஜயகாந்த், சரத்குமார், பிரபு போன்ற நடிகர்கள் நடிக்கும் ஆக்ரோஷக் காட்சிகளில் கன்னங்கள் ஆடுவதை க்ளோஸப்பில் காட்டுவார்கள். அப்படிக் கன்னங்கள் குலுங்குவதற்கு, அவர்களது வாய்க்குள் பலூனை வைத்திருப்பதுதான் காரணமாம் என சீரியஸாகப் பேசிக்கொண்டிருப்பார்கள்.

#90sKidsRumours இதுதான் இன்று படிப்படியாய் வளர்ந்து, விதவிதமாய்  `வடை' சுடுவதில் வந்து நிற்கிறது. இந்தக் கூட்டம் எப்படி, தல-தளபதி ரசிகர் கூட்டமானது என்பதை, இன்னொரு சுபயோக சுபதினத்தில் பார்ப்போம்.

சரி... நீங்க எப்போ, எப்படி, ஏன் விஜய்/அஜித் ரசிகர் ஆனீங்க சொல்லுங்க. அதையும் உள்ளே கோத்துவிடுவோம்!