Published:Updated:

`நாங்கள் ஏன் சிங்கிளாகவே இருக்கிறோம்!' - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்!

`நாங்கள் ஏன் சிங்கிளாகவே இருக்கிறோம்!' - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்!
`நாங்கள் ஏன் சிங்கிளாகவே இருக்கிறோம்!' - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்!

`நாங்கள் ஏன் சிங்கிளாகவே இருக்கிறோம்!' - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்!

க்ரஷ், கமிடெட், கேர்ள் பெஸ்டி போன்ற பதங்கள் எல்லாம் 90'ஸ் கிட்ஸ்களின் காதுகளைப் பதம் பார்த்ததில்லை. சொன்னாலும், எங்களுக்கு அவற்றிற்கிடையே உள்ள வித்தியாசங்கள் புரியாது. காரணம், பெண்களிடம் பேசிப் பழகுவது எப்படியென்பதே எங்களுக்குத் தெரியாது. தன் பிறந்தநாளுக்குத் தன்னுடன் படிப்பவர்களுக்கு `ஆசை' சாக்லேட் கொடுக்கையில், எந்தப் பெண்ணாவது வாழ்த்துச்சொல்லி கைகொடுத்தால் போதும், அந்தப் பெண்ணுக்குத் தன் மேல் `ல்தகா சைஆ’ இருப்பதாக நினைத்துக்கொண்டு டைரி மில்க் சாக்லேட்டாய் உருகிவிடுவார்கள். ஒரு பெண் தன்னிடம் சாதாரணமாகப் பேசினால் கூட, `இதுக்குப் பேர் லவ்தானே ஜெஸ்ஸி' எனக் குதூகலமடையும் கூட்டத்தில் 90'ஸ் கிட்ஸ் தலைக்கட்டுதான் பெரியது. இதன் நீட்சிதான், ஃபேஸ்புக்கில் எந்தப் பெண்ணாவது `ஹாய்' சொன்னாலே, பேரன், பேத்திக்குப் பெயர் யோசிக்கும் அளவுக்குச் சென்றுவிடுவது. இவர்கள் ஏன், எதற்கு, எப்படி இப்படி இருக்கிறார்கள்! பதில் தெரிந்துகொள்ள இந்த முறையும் என்னோடு மூணாப்புக்குச் செல்ல வேண்டும். ரெடி, ஸ்டெடி, போ!

``மதம்ங்கிறது மனுஷங்ககிட்ட மட்டும்தான் இருக்கு... ஆனா காதல்ங்கிறது காக்கா குருவிகிட்ட கூட இருக்கு"

-தோழர் விஜய்

மூணாப்பு படிக்கும்போது என்னுடன் படித்த ஒரு பெண்ணைக் காதலித்தேன்(!). சிறுமி என்றுதான் குறிப்பிட வேண்டும். ஆனால், அப்போது நானும் சிறுவன் என்பதால், `பெண்' என்றே தொடர்வோம். முதல் ரேங்க் வாங்கும் பெண் அவள். வகுப்பின் லீடரும் கூட. நமக்கு மூன்றாம் ரேங்க் வாங்கவே முக்கும். லீடர் கையில் குட்டு வாங்குபவன். அதுவும் அசிஸ்டென்ட் லீடர் கையில்! நான் மாநிறம், அவள் WWE ஷேமஸின் நிறத்தில் இருப்பாள். அவள் அம்மா, மதிய உணவோடு லிட்டில் ஹார்ட்ஸோ, ஃப்ரூட்டியோ, ஜெம்ஸோ வாங்கிக்கொண்டு வருவார். நான் கவரோடு சேர்த்து இலந்தை வடகத்தை மறைந்து நின்று மென்றுகொண்டிருப்பேன். பக்கத்தில் சென்றதில்லை, பென்சில் கடன் வாங்கியதில்லை, ஹோம் ஒர்க் நோட் கேட்டதில்லை. நான் பேசியிருக்கிறேனா இல்லையா என்பதே நினைவில் இல்லை. இதிலிருந்தே தெரிந்திருக்கும். எஸ்! திஸ் இஸ் ஒன் சைடு லவ்!

ஒருமுறை, பள்ளியின் ஆண்டுவிழா நெருங்கிக்கொண்டிருக்கிறது, பலர் நடனமாடப் போகிறார்கள். பலரில் நானும் ஒருவன், அவளும் ஒருத்தி. `பாய்ஸ்' படத்திலிருந்து `பூம் பூம்' பாடலுக்கு இருவர் மட்டும் ஆடப்போவதாகவும், என் நெருங்கிய நண்பர்கள் நால்வர் இடையிடையில் குப்பை மனிதர்களாகப் பல்டி அடிக்கப்போவதாகவும் பகலிலேயே கண்களுக்குள் கனவுகள் ஒளிபரப்பாகின. அந்தப் பாடல் இல்லையென்றால், `எனக்கு 20 உனக்கு 18' படத்திலிருந்து ஏதேனும் ஒரு பாடலென `பிளான் பி' கனவும் வந்தது. அட, கனவும் பலித்தது.

``காதல்ங்கிறது சிலருக்குச் செடி மாதிரி, ஒண்ணு போனா இன்னொண்ணு. சிலருக்கு அது பூ மாதிரி. ஒருமுறை உதிர்ந்துட்டா அவ்வளவுதான். மறுபடியும் மறுபடியும் எடுத்து ஒட்ட வைக்க முடியாது"

- தோழர் விஜய்

`எனக்கு 20 உனக்கு 18' படத்திலிருந்து `அழகின அழகி' பாடல்தான் ரெக்கார்டரில் ஒலிக்கிறது. என்னையும் அவளையும் இன்னபிற குரூப் டான்ஸர்களையும் ஆடப்போகும் வரிசையில் நிறுத்தி, நடனசைவுகளை சொல்லிக்கொடுக்கத் தொடங்கினார் சசிகலா மிஸ். அவள் முதல் வரிசையில், நான் மூன்றாம் வரிசை. எப்படியாவது முதல் வரிசைக்கு வந்துவிட வேண்டுமென, மிகுந்த ஆர்வத்தோடு ஆடிக்கொண்டிருந்தேன். பாடல் தொடங்கும் டிரம் பீட்டிலிருந்து `தகதிமிதகதிமிதா ஏ உய்யோ' வரை சொல்லிக்கொடுத்தார்கள், உயிரைக் கொடுத்து ஆடினேன். என்ன நினைத்தார்களோ, திடீரென என்னை மட்டும் அழைத்து ஓரமாய் நிற்கச் சொன்னார்கள். `ஆடவந்து இப்படி அசிங்கப்பட்டோமே' எனக் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. `சூரியா, நீ நல்லா ஆடுறே. இன்னொரு டீம்ல ஆள் தேவைப்படுது. அதுல நீ ஆடிடு' என என் ஆசையில் அரையடி ஆப்பைச் சொருகினார் சசிகலா மிஸ். `தகதிமிதகதிமிதா' என சந்தோஷமாய் ஆடிக்கொண்டிருந்தவனை `தத்தியாடுதே தாவியாடுதே' என அரவிந்த்சாமி பாடலுக்கு ஆடவைத்து அழவைத்தார்கள்.

அதுமட்டுமல்லாமல், `நம்மவர்' படத்திலிருந்து `சுத்தம் என்பது நமக்கு' பாடலுக்குக் கையில் பக்கெட்டையும் விளக்கமாற்றையும் கொடுத்து மிச்சசொச்சமிருந்த பற்றுறுதியையும் ஆண்டுவிழாவில் ஃபினாயில் ஊற்றிக் கழுவிவிட்டார்கள். தன்னம்பிக்கை முழுதாய்த் தகர்ந்து தாழ்வு மனப்பான்மை மனதில் ஊற ஆரம்பிக்கத் தொடங்கியது. அதிலிருந்து அவளின் பக்கம் தலை வைத்துக்கூட அமரவில்லை. ஆனாலும், மனதுக்குள் கொஞ்சநஞ்ச நம்பிக்கை மிச்சமிருந்தது. என்னிடம் இருந்த ஸ்பைடர்மேன் டிரெஸ்ஸை என் பிறந்தநாளுக்கு அணிந்துகொண்டு வகுப்புக்குள் நுழைந்தால், அவளாகவே என்னிடம் பேசுவாள் என நம்பிக்கையாக இருந்தேன். ஆனால், அதற்கு முன்னே வேறோர் இடத்தில் விழுந்தது இடி!

``தோல்வியடைய காதல் ஒண்ணும் பரீட்சை இல்லைங்க; அது ஒரு ஃபீலிங்! ஒரு தடவை வந்துச்சுன்னா மறுபடியும் மறுபடியும் அதை மாத்திட்டு இருக்க முடியாது"

-தோழர் விஜய்

`ரிமோட் கார் வேணுமா, சைக்கிள் வேணுமா' என அப்பா கேட்ட கேள்விக்கு `ரிமோட் கார்' எனப் பதில் சொல்ல, மறுநாளே மதுரைக்கு அழைத்துப்போய் ரிமோட் கார் கடைக்கு அருகிலிருந்த ஒரு சைக்கிள் கடையில் சைக்கிள் வாங்கிக்கொடுத்தார். அழுகை முட்டிக்கொண்டு வந்தது. `உச்சா முட்டிகிட்டு வருது. எங்கே பாத்ரூம்' எனச் சுண்டு விரலில் சைகை காட்டி, சைக்கிள் கடை பாத்ரூமில் 10 நிமிடங்களில் அழுதுவிட்டுத் திரும்பினேன். சைக்கிள் பழகும் எல்லோரும் போஸ்ட் மரத்திலோ அல்லது ஊர்ந்துவரும் பாட்டியின் மீதோ மோதுவார்கள். அதுதான் டிசைன்! அப்படி நான் பல பாட்டிகள் மீது டிசைன் டிசைனாக மோதியிருக்கிறேன். அதில் ஒரு பாட்டி, அவளின் பாட்டி. அதன்பிறகு, அவள் பக்கம் அல்ல, அந்தப் பள்ளியின் பக்கமே தலை வைத்து அமரவில்லை. வேறு பள்ளிக்கு அழுது புரண்டு மாறிவிட்டேன். நீங்கள் கேட்கலாம் அந்த ஸ்பைடர்மேன் டிரெஸ் எனும் ப்ரம்மாஸ்திரத்தை கையில் எடுத்திருக்கலாமே என! எடுத்திருக்கலாம்தான். என்ன செய்ய, என் பிறந்தநாள் கோடை விடுமுறையில்தான் வரும் எனத் தாமதமாகத்தான் புரிந்தது! ச்சை...

ஆறாப்பு படிக்கும்போது கடைசியாக அவளைப் பார்த்தது. அவள் குடும்பம் வேறு இடத்திற்குக் குடிபெயர்ந்த தகவல் மட்டும் கிடைத்தது. எந்தத் திசையில் இருக்கிறாள் என்றுகூடத் தெரியாது. சைக்கிளை எடுத்துக்கொண்டு பல கிலோ மீட்டர்கள் பெடல் அழுத்தியிருக்கிறேன். அவளைப் பார்க்கும் வாய்ப்பு மட்டும் கிடைக்கவே இல்லை. அவள் படிக்கும் பள்ளியின் வாசலில் அன் அஃபீசியலாக வாட்ச்மேன் வேலை பார்த்திருக்கிறேன். ஒன்றும் நடக்கவில்லை. இது சரிபட்டு வராதென, காதல் தோல்வியில் (!) சிலபல பாடல்களைக் கேட்டு ஃபீல் செய்துவிட்டு `அவள் நினைப்புதான் நம் பிழைப்பைக் கெடுக்கிறதென' வெளியில் வந்துவிட்டேன். பல ஆண்டுகள் கழித்து, அவள் படிக்கும் கல்லூரியின் பெயர் தெரியவந்தது. இரண்டு முறை குளித்துவிட்டு கிளம்பியாச்சு கல்லூரிக்கு. அதன் எதிரில் இருந்த டீக்கடையில் 3 மணி நேரம் காத்திருந்து 12வது டீ குடித்து முடித்த நேரத்தில், ஒரு 50 அடி தூரத்தில் அவளையும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

``ஓ அவங்களா, அவங்க லவ் பண்றாங்க ஜி" என்றான் டீக்கடையில் எனக்கு கம்பெனி கொடுத்த அக்கல்லூரிக்காரன் ஒருவன். எனக்கு நாக்கு மேல் அண்ணத்தில் ஒட்டிக்கொண்டது. வார்த்தைகள் எதுவும் வரவில்லை. குப்பென வியர்த்து, கண்கள் பிசுபிசுப்பாகின. `பின்னே, டீக்கடைக்காரர் கேட்ட 84 ரூபாய்க்கு நான் எங்கே போவது. என்னிடம் இருந்ததே 60 ரூபாய்தான்’. இப்படித்தான், கம்பெனி கொடுத்தவனிடம் கண் கலங்கியதைச் சமாளித்துவிட்டு, அழுவதற்கு மறைவிடம் தேடிக் கொண்டிருந்தேன். இது நடந்து இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு, கம்பெனி கொடுத்த `ஜி'யைச் சந்திக்க நேர்ந்தது. ``அலோ ஜி எப்படியிருக்கீங்க, பார்த்து எவ்ளோ நாளாச்சு" என்றவரின் 31 பல்லும் தெரிந்தது.

குசல விசாரிப்புகள் முடிந்தபிறகு, நினைத்தது போலவே பழைய நினைவுகளை கிண்ட ஆரம்பித்தார். ``ஜி, அந்தப் பொண்ணுக்கு லவ் ஃபெயிலியர் ஆகிடுச்சு ஜி ( நிஜமான லவ் ஃபெயிலியர் ). சூஸைட் அட்டம்ப்ட் வேற பண்ணிடுச்சு. நல்ல வேளை காப்பாத்திட்டாங்க. கொஞ்ச நாள்ல அவங்க அப்பா சூஸைட் பண்ணி இறந்துட்டார். குடும்பமே நிலைக்குலைஞ்சு போயிடுச்சு ஜி. இப்போ அந்தப் பொண்ணுதான் வேலைக்குப் போய், அம்மா, தம்பி ரெண்டு பேரையும் பார்த்துக்குது" என்றார். நீண்ட நாள்களுக்குப் பிறகு எனக்கு  நாக்கு மேல் அன்னத்தோடு ஒட்டிப்போனது, அந்தக் குளிரிலும் உடல் வியர்த்தது. ``ஜி, ஃபீல் பண்ணாதீங்க ஜி. டீ சாப்பிடுவோம் வாங்க" என்றார் " காசு வெச்சுருக்கீங்களா. என்கிட்ட 60 ரூபாய்தான் இருக்கு" என்றேன். `குபுக்'கெனச் சிரித்துவிட்டார். டீ குடித்துக் கொண்டிருக்கும்போது கவனித்தேன், எதிரில் ஒரு பேருந்து காலியாய் நின்றுகொண்டிருந்தது. அழுவதற்கு ஏற்ற இடம்!

தாழ்வு மனப்பான்மைதான் 90'ஸ் கிட்ஸ்களின் மிகப்பெரும் எதிரி. பெண்களிடம் சகஜமாகப் பேசிப் பழகுவதற்கான சூழலும் அப்போது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. பெண்களுக்கு மத்தியில் அமர்வதென்பது, அப்போது ஃபனிஷ்மென்ட். ஆணாதிக்க மனநிலை, தாழ்வு மனப்பான்மை, பார்த்த சினிமாக்கள், கேட்ட வசனங்கள், குடும்ப அமைப்புகள், அதிலுள்ள அரசியல், உறவுகள் பற்றிய தவறான புரிதல்கள், பாய்ஸ் ஹை ஸ்கூல் எனப் பல விஷயங்கள் ஜோடிப்போட்டு வாழ்க்கையில் கபடி விளையாடியிருக்கின்றன. FLAMES-ல் உள்ள 'A'வுக்கு இன்றும் சரியான அர்த்தம் தெரியாத ஏழைத்தாயின் மகன்களான நாம், இனியாவது மாறுவோம். சரியான புரிதலை வளர்த்துக்கொள்வோம். மாற்றம், முன்னேற்றம், ஓகே கண்மணி!

சரி, நீங்க ஏன் பாஸ் இன்னும் சிங்கிளாவே இருக்கீங்க?!

அடுத்த கட்டுரைக்கு