Published:Updated:

கஜா பறித்த கலையை மீட்டோம்!

கஜா பறித்த கலையை மீட்டோம்!
பிரீமியம் ஸ்டோரி
கஜா பறித்த கலையை மீட்டோம்!

கஜா பறித்த கலையை மீட்டோம்!

கஜா பறித்த கலையை மீட்டோம்!

கஜா பறித்த கலையை மீட்டோம்!

Published:Updated:
கஜா பறித்த கலையை மீட்டோம்!
பிரீமியம் ஸ்டோரி
கஜா பறித்த கலையை மீட்டோம்!
கஜா பறித்த கலையை மீட்டோம்!

காவிரி டெல்டா பகுதியைப் புரட்டிப்போட்ட கஜா புயல் விவசாயிகளை மட்டுமா பாதித்தது, பலரின் வாழ்வாதாரங்களைத் தகர்த்திருக்கிறது என்ற கண்ணீர் நிஜம் உறுதியானது, தோல்பாவைக் கூத்துக் கலைஞர் கிருஷ்ணன் உடனான சந்திப்பில்.

மூச்சிழுத்து முடிப்பதற்குள் தென்மாவட்டங்களைச் சூறையாடிவிட்டுப் போன கஜா, புதுக்கோட்டையைச் சேர்ந்த கிருஷ்ணனின் பரம்பரைத் தொழிலான தோல்பாவைகளையும் பறித்துச் சென்றுவிட்டது. முப்பது, நாற்பது வருடங்களுக்கு முன்பு வரையப்பட்ட ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட தோல்பாவைகளைப் பறிகொடுத்து நின்றவருக்கு சென்னையைச் சேர்ந்த தன்னார்வக் கலைஞர் குருவும் அவர் நண்பர்கள் சிலரும் சேர்ந்து உதவிக்கரம் நீட்டியிருக்கின்றனர். அவர்கள் வரைந்துகொடுத்த தோல்பாவைகளுடன் ஐந்து மாதங்களுக்குப் பிறகு சென்னையில் மீண்டும் மேடையேறியிருக்கிறார் கிருஷ்ணன். கூத்துக்கான திரைச்சீலையைக் கட்டியபடியே பேசத் தொடங்கினார்.

கஜா பறித்த கலையை மீட்டோம்!

“எனக்கு இதைவிட்டா வேற தொழிலும் தெரியாது. எனக்குப் பிறந்ததுக மொத்தம் ஏழு பிள்ளைங்க. எங்க அப்பன் பாட்டன் காலத்துலேர்ந்து இந்தத் தோல்பாவைக் கூத்துதான் எங்க குலத்தொழில். கூத்து இல்லாத நேரத்துல நான் வீட்டுல கிடப்பேன். பிள்ளைங்க மட்டும் பிளாஸ்டிக் வியாபாரம் பார்க்கப் போயிடுவாங்க. இந்த அஞ்சு மாசத்துல அந்த வியாபாரத்துலேர்ந்து வந்த வருமானம்தான் எங்க மொத்தப்பேருக்கும். ஆட்டுத்தோலை உப்பில்லாமப் பதப்படுத்தி நாம கட்டிக்குற வேட்டிப் பதம் வந்ததும் அதில் வரைஞ்சு வண்ணம் தீட்டித் தோல்பாவைகளை உருவாக்குவோம். டீத்தண்ணி மட்டும் குடிச்சுட்டு உட்கார்ந்தா ரெண்டு நாள்ல ஒரு சின்னத் தோல்பாவையை உருவாக்கலாம். அப்படிப் பல தலைமுறைகளுக்கு முன்னாடி உருவாக்கின தோல்பாவைகள் அத்தனையையும் கஜா புயல் வாரிச் சுருட்டிக்கிட்டுப் போயிருச்சு. இந்தப் புயல்ல நிறைய விவசாயிங்களுக்கு நிலம் போச்சு. ஆனா எங்களுக்கு விவசாயம் எல்லாம் தெரியாது, எங்களுடைய விவசாயம், சொத்து எல்லாம் இந்தத் தோல்பாவைதான். திரும்பவும் தோல்பாவையெல்லாம் கிடைக்குமான்னு திக்கு தெரியாம நின்னப்போ எங்களுக்கு குரு தம்பிதான் உதவினாரு...” என்னும் கிருஷ்ணனுக்கு எழுதப்படிக்கத் தெரியாது. அதனால் அரிச்சந்திரன், மயில் இராவணன், இராமாயணம் என எத்தனையோ நாடகங்களுக்கான பாடல்கள் அத்தனையும் மனப்பாடல்தான் என்று அவர் சொல்லவும் பிரமிப்பே மிஞ்சுகிறது. எழுதப்படிக்கத் தெரியாதவர் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தியும் கூத்து உருவாக்கி வைத்திருக்கிறார் என்பது மகிழ்வான முரண்.

திரைக்குப் பின்னே விரவிக் கிடந்த பாவைகளில் மூங்கில் குச்சிகளை மாற்றியபடியே பேச்சைத் தொடர்கிறார்.

கஜா பறித்த கலையை மீட்டோம்!

‘‘புயலுக்கு முன்ன மட்டும் நாங்க ராசா கணக்கா வாழ்ந்திடலை. முன்னெல்லாம் பத்துநாள் தொடர்ந்து கூத்து நடத்துவோம். நாங்க ஒரு ஆள் பாடுறது ஒன்றரை கிலோமீட்டர் தூரத்துக்கு வெங்கலச் சத்தம் கணக்கா கேட்கும். வெத்தலை பாக்கு மரியாதையோட கையில் ஆறாயிரம் ரூபாய் கொடுத்தனுப்புவாங்க. ஆனால், இந்தச் சீரியல் நாடகமெல்லாம் வந்து எங்களுடைய வாழ்க்கையவே மாத்திருச்சு. அது வந்த பிறகு எங்களோட வாய்ப்பும் குறைய ஆரம்பிச்சது. அந்தக் காலத்துல சம்பாரிச்சது ஒரு ரூபாயா இருந்தாலும் அதுக்கு லட்ச ரூபாய் மதிப்பு இருந்துச்சு. இப்போ புதுசா இரண்டாயிரம் ரூபாய் நோட்டெல்லாம் அறிமுகப்ப டுத்தியிருக்காங்க, எங்களுக்கு என்ன மாறிடுச்சு? நாலுபேரு டீக்குடிக்க நாற்பது ரூபாய் ஆயிருது. அழிவின் விளிம்பில் இருந்த எங்க கலையை கஜா மொத்தமா அழிச்சிட்டுப் போயிருச்சு” என்றவர், மீண்டும் எப்படியோ பாடுபட்டு வீட்டை மட்டும் கட்டி முடித்திருப்பதாகச் சொன்னார்.

``ஓட்டு வீடுங்களா?” என்றேன்.

“அதுக்கெல்லாம் வசதி வேணும். குடிசை வீடுதான். இதைப் புதுசா வேயவே எண்பதாயிரம் ஆகிடுச்சு!” என்று அந்த எழுபது வயதுக் கலைஞரிடமிருந்து அயர்ச்சியானதொரு பதில் வருகிறது.

கஜா பறித்த கலையை மீட்டோம்!

புதுக்கோட்டை ஜே.ஜே.கல்லூரிப் பேருந்து நிறுத்தத்துக்குச் சற்றுத் தள்ளி இருக்கும் கடையக்குடியில் புதிதாக வேயப்பட்டிருக்கும் ஒற்றைக்குடிசை, கஜா புயலுக்கு கிருஷ்ணனின் குடும்பம் பறிகொடுத்த மூன்று குடிசைகளுக்கு மாற்று. எத்தனை அரசுகள் மாறினாலும் கிருஷ்ணன் போன்ற எண்ணற்ற மக்கள் கலைஞர்களுக்குக் குடிசைகள் மட்டுமே நிதர்சனமாக இருக்கிறது.

பறையிசைக் கலைஞரான குருவும் அவர் நண்பர்களும் அவர்களுக்குக் கிடைத்த பொருளுதவியை வைத்து 80 தோல்பாவைகள் வரை தற்போது கிருஷ்ணனுக்காக மீட்டுருவாக்கம் செய்து கொடுத்திருக்கிறார்கள். இழந்தவற்றில் இது சொற்பம்தான். இந்தப் பாவைகளை வைத்து நிகழ்ச்சி செய்து அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தில்தான் கிருஷ்ணனும் அவர் குடும்பத்தினரும் மொத்தத்தையும் மீட்டெடுக்க வேண்டும்.

“ஓரளவுக்கு அவர்களுடைய பாவைகளை மீட்டுக் கொடுத்துவிட்டோம். இனிமேல் வாய்ப்புகளை எப்படி உருவாக்கித் தரப்போகிறோம் என்றுதான் தெரியவில்லை!” என்று கையைப் பிசைந்தபடி குரு சொல்கிறார். அந்த வார்த்தைகளில் அவலம் நிறைந்த உண்மையின் அடர்த்தி!

- ஐஷ்வர்யா,  படங்கள்: க.பாலாஜி