Published:Updated:

அனிமல் பட்டிஸ்டா, ஃபீனாம் அண்டர்டேக்கர், டாக்டர் ஜான் சினா! - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அனிமல் பட்டிஸ்டா, ஃபீனாம் அண்டர்டேக்கர், டாக்டர் ஜான் சினா! - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்
அனிமல் பட்டிஸ்டா, ஃபீனாம் அண்டர்டேக்கர், டாக்டர் ஜான் சினா! - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்

நமக்குள் ஆலம் போல் ஆழ பதிந்திருக்கும் சில நினைவுகளை, காலம் இப்படி வேரோடு பிடுங்கியெடுக்கையில் ரணமாய் வலிக்கும்தானே. 90'ஸ் கிட்ஸின் வாழ்க்கையில் WWF/WWE எப்படி இரண்டறக் கலந்திருக்கிறதென ஃப்ளாஷ்பேக் ஜாங்கிரியை சுற்றி ஆசுவாசமாவோம்...

மீபத்தில் நடந்த ரெஸல்மேனியாவில், `டாக்டர் ஆஃப் தகனாமிக்ஸ்' லுக்கில் வந்த ஜான் சினாவைப் பார்க்கையில் ``பத்து வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்த பங்காளி நீ" என, கண்கள் குளமாகின. இன்று ரெட்டை மொட்டைகளாகத் திரியும் ஷான் மைக்கேல்ஸையும் ட்ரிப்பிள் ஹெச்சையும் பார்க்கையில், துக்கம் தொண்டையை அடைக்கிறது. இரண்டு அடிகளுக்கே சோர்ந்துபோகும் அண்டர்டேக்கரைப் பார்க்க முடியாமல், சேனலை மாற்றிவிடுகிறேன். நமக்குள் ஆலம்போல் ஆழப்பதிந்திருக்கும் சில நினைவுகளை, காலம் இப்படி வேரோடுப் பிடுங்கி எடுக்கையில் ரணமாய் வலிக்கும்தானே! 90'ஸ் கிட்ஸின் வாழ்க்கையில் WWF/WWE எப்படி இரண்டறக் கலந்திருக்கிறது என ஃப்ளாஷ்பேக் ஜாங்கிரியைச் சுற்றி ஆசுவாசமாவோம்...

``என்ன இப்பெல்லாம் ரெண்டு படி ஏறினாலே மூச்சுவாங்குது. ஒருவேளை வயசாகிடுச்சோ!"

- தோழர் வேதா

நான் பார்க்கத் தொடங்கியபோது WWF, WWE-யாக மாறியிருந்தது. ஆட்டிட்யூட் எரா முடிவடைந்து, ரூத்லெஸ் அக்ரெஷன் எரா ஆரம்பமாகியிருந்தது. ஆனால், ``அண்டர்டேக்கருக்கு ஏழு உயிருடா'', ``ட்ரிப்பிள் ஹெச்தான் கேன் முகத்துல ஆசிட் ஊத்தினது", ``ஸ்டோன்கோல்ட்தான் வெச்சிருந்த பீரை ஊத்தி ரிக்கிஷியோட பம்மை கொளுத்திட்டான்டா!" என ஆச்சர்யக்குறி வாக்கியங்களாகப் பேசிக்கொண்டிருப்பார்கள். நான் பார்க்கத் தொடங்கியபோது, ஜான்சினா, பட்டிஸ்டா, ரேன்டி ஆர்டன், ப்ராக் லெஸ்னர் எல்லாம் புதுவரவுகள். அந்தக் காலத்தில் அண்டர்டேக்கர்தான், WWE-ன் ரஜினி! இந்தக் காலத்திலும்தான். கெட்டவர்களான ட்ரிப்பிள் ஹெச், கர்ட் ஆங்கிள், எட்ஜ், ஜே.பி.எல் போன்றோரின் வில்லத்தனங்களைப் பார்க்கும்போதெல்லாம் முட்டை மந்திரித்து வைத்துவிடலாமா என்றிருக்கும்.

``யாருடா இவன், சோத்துக்கே வழியில்லாத அண்டர்டேக்கர் மாதிரி இருக்கான்!"

- தோழர் சந்தானம்

கழுத்தில் பூட்டு, செயின் மாட்டிவரும் பழைய ஜான் சினாதான் எவ்வளவு அழகு. ஜான் சினாவின் முகத்தில் ஆப்பிளைக் கடித்து `ப்ளிச்' என துப்பிய கர்லிடோ கரீபியன் கூல் உங்கள் நினைவில் இருக்கிறாரா? வில்லாதி வில்லன் ட்ரிப்பிள் ஹெச்சும் தலைவன் ஷான் மைக்கேல்ஸும் மீண்டும் DX-ஆக இணைந்தார்களே, அவர்கள் செய்யும் அட்டகாசம் எல்லாம் வேறு லெவலில் இருக்குமே. காளை மாட்டின் `மே...' சத்தத்தோடு நீளமான காரில் வந்து இறங்கும் ஜே.பி.எல், 619 ரே மிஸ்டிரியோ, லெஜண்ட் கில்லர் ரேன்டி ஆர்டன், க்ரீஸ் மாஸ்டர்ஸ் மாஸ்டர் பீஸ், க்ரீஸ் பெனாய்டு என எத்தனை வீரர்கள் நம்மை மகிழ்வித்தார்கள். நினைவில் இருக்கும் பெயர்களை எழுதவே, ஒரு கட்டுரை போதாது. க்ரீஸ் பெனாய்டு மற்றும் எட்டி குரேரோவின் திடீர் மரணமும் அதையொட்டி கண்கலங்கிய வீரர்களையும் பார்த்து நாமும் கண் கலங்கினோமே.

வயசான ரிக் ஃப்ளையர் ஏன் எல்லோரிடமும் வம்பிழுத்து, ரத்தக்களரியுடன் வீடு திரும்ப வேண்டும், கோபமானால் இரும்பு முள் சுற்றிய பேஸ்பால் பேட்டைத் தூக்குவாரே மெக்ஃபோலி, அதைக்கொண்டு அவர் மற்றவர்களை அடித்ததைவிட, மற்றவர்கள் அவரை அடித்ததுதானே அதிகம்! அந்த ஐந்து செகண்டு இருட்டில், அண்டர்டேக்கர் எங்கிருந்து எழுந்துவந்து சரியாக எதிரியின் பின்னால் வந்து நிற்கிறார், யோசித்திருக்கிறீர்களா... `நம் ஊர்க்காரன்டா’ எனப் பெருமைப்படவைத்த தி கிரேட் காளியை கடைசியில் காமெடி பீஸாக மாற்றிவிட்டார்கள். நீளமான முடி வைத்திருந்த சி.எம்.பன்க் என்ன ஸ்டைலிஷ்! ராயல் ரம்பிள் பார்க்கும்போது நாமும் நம்பர் எண்ணுவது, சர்வைவர் சீரிஸின்போது ரா அல்லது ஸ்மாக்டவுன் என இரண்டில் ஒரு டீமுக்கு சப்போர்ட் பண்ணுவது, பிரமாண்டத்துக்காகவே ரெஸல்மேனியாவுக்குக் காத்திருப்பதெல்லாம் எவ்வளவு அருமையான நினைவுகள்!

``தலையணை என்பதெல்லாம் தலைக்கென்று நினைத்திருந்தேன்."

- தோழர் சுஷ்மிதா சென்

டென் ஸ்போர்ட்ஸில் திங்கள்கிழமை ரா, செவ்வாய்க்கிழமை ஸ்மாக் டவுன், புதன்கிழமை பாட்டம் லைன், வியாழக்கிழமை ஆஃப்டர் பர்ன், வெள்ளிக்கிழமை வெலாசிட்டி, சனிக்கிழமை எக்ஸ்பீரியன்ஸ், ஞாயிற்றுக்கிழமை ஹீட்! திங்கள் மற்றும் செவ்வாயில் ஒளிபரப்பான ரா மற்றும் ஸ்மாக் டவுனில் அரைத்த மாவைத்தான் மற்ற ஐந்து நாளும் உட்கார்ந்து அரைத்துக்கொண்டிருப்பார்கள். ஆனாலும், அலுக்காமல் அதில் தோசை சுட்டுச் சாப்பிட்டவர்கள் இந்த 90'ஸ் கிட்ஸ். என் வீட்டுத் தலையணைக்கு வாய் இருந்திருந்தால், `என்னை விட்ருடா' என ஹைபிட்சில் அலறியிருக்கும். எத்தனை ஸ்மாக்குகளை வாங்கியிருக்கிறது அது. ப்ச்ச்ச்... அதன் பிறகு, `ப்ளீஸ் டோன்ட் ட்ரை திஸ் அட் ஹோம்' என WWE நிர்வாகம் பொதுநலத்துடன் வீடியோ வெளியிட்டதால், `ஹோம்லதான ட்ரை பண்ணக் கூடாது, ஸ்கூல்ல ட்ரை பண்ணலாம்ல' எனப் பள்ளியில் ஸ்மாக் போட ஆரம்பித்துவிட்டேன். 

ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது, பள்ளி நேரம் முடிந்ததும் வகுப்பறைக்குள் WWE விளையாடுவதை வாடிக்கையாக வைத்திருந்தோம். எனக்கு கிக்-அப் செய்யவரும் என்பதால், நான்தான் எப்போதும் ஷான் மைக்கேல்ஸ். சொல்லப்போனால், நான் ஷான் மைக்கேல்ஸின் வெறித்தன ரசிகன் என்பதால்தான் கிக்-அப் செய்யவே கற்றுக்கொண்டேன். நோட்டு அட்டையில் ஜிகினா பேப்பர்களை ஒட்டி சாம்பியன்ஷிப் பெல்ட் ரெடிசெய்வது என் வேலை. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு பெல்ட் புதிது புதிதாய் ரெடி செய்து, அதற்காக சண்டையிட்டுக்கொள்வோம். அப்படி ஒரு பொன்மாலைப்பொழுதில் ரெஸ்லிங் செய்துகொண்டிருக்கையில், நண்பன் ஒருவன் எங்கிருந்தோ ஓடிவந்து என் வயிற்றில் கோல்டுபெர்க் ஸ்பியர் போட்டான். வயிற்றைப் பிடித்துக்கொண்டு சுருண்டு விழுந்தேன். ஆனால், என்னைக் கண்டுகொள்ளாமல், கொலை கேஸில் உள்ளே சென்றுவிடுவோம் என்ற பயம் துளியும் இல்லாமல், என் நண்பன் போட்டது `கோல்டுபெர்க் ஸ்பியரா, எட்ஜ் ஸ்பியரா அல்லது ரைனோ ஸ்பியரா' எனப் பட்டிமன்றம் நடத்த ஆரம்பித்துவிட்டார்கள். 

``வாழ்க்கைங்கிறது ஒரு வட்டம்டா!"

- தோழர் திருமலை

ஆறாம் வகுப்பு படிக்கையில், ஒருநாள் அதேபோல் ரெஸ்லிங் விளையாடிக்கொண்டிருந்தோம். பரீட்சை அட்டைதான் ஸ்டீல் சேர், எடுத்து முதுகிலேயே சாத்துச் சாத்தெனச் சாத்துவோம். ஆசிரியரின் டேபிள்தான் `டாப் ரோப்'. அதில் ஏறி நின்று க்ரீஸ் பெனாய்டு, எடி குரேரோ போன்று குதிப்போம். அதெல்லாம் பெரிதாய் வலிக்கவே வலிக்காது. WWE-யே பொய்தான் எனத் தெரிந்திருந்ததால், நாங்களும் வலிக்காத மாதிரிதான் அடித்துக்கொள்வோம். ஆனால், இந்த சப்மிஷன் லாக்குகள் மட்டும் எப்போதும் ஏழரை! லாக் போட்டால் வலி உயிரை எடுக்கும். அன்று என் நண்பன் ஒருவனுக்கு ஆர்வமிகுதியில் `வால்ஸ் ஆஃப் ஜெரிக்கோ' லாக்கைப் போட வலியில் துடித்துவிட்டான். அன்று முழுவதும் `கைப்புள்ள' வடிவேலுவைப் போன்றுதான் நடந்து திரிந்தான். எக்காரணம்கொண்டும் அவன் ஹெச்.எம் ரூம் பக்கம் சென்றுவிடக் கூடாது என்பதே எங்களுக்கான பெரிய டாஸ்க். இரண்டு முறை செல்ல முயற்சி செய்தவனை, வழியிலேயே வைத்து காலில் விழுந்தெல்லாம் சமாதானம் செய்து, கடைசியாக அண்டர்டேக்கர் போஸ்டர் ஒன்று வாங்கிக் கொடுத்து வீட்டுக்கு சிரித்த முகத்தோடு அனுப்பிவைத்ததை நினைத்துப்பார்த்தால் சிரிப்பாய் இருக்கிறது. ஆனால், இன்னொரு சம்பவத்தை நினைத்தால் இன்னும் கோபம் கொப்புளிக்கிறது!

WWE டிரம்ப் கார்டுகள் சேகரிப்பதும் எங்கள் கேங்கின் தலையாயக் கடமையாக இருந்தது. கோலி, சில்லாக்கு விளையாட்டில் பாயின்ட்களாக, டிரம்ப் கார்டுகள்தான் கைமாறும். விளையாடி நிறைய ஜெயிப்பதும் தோற்பதுமாக இருப்பார்கள். விளையாட்டில் கார்டை இழப்பதை என்றுமே என் மனம் விரும்பியதில்லை. காசு கொடுத்து வெவ்வேறு ஆண்டு மற்றும் கம்பெனி கார்டுகளைக் கட்டுக்கட்டாய் வாங்கி, அதை ரப்பர்பேண்டு போட்டு அடுக்கிப்பார்ப்பதில்தான் எனக்கு அளவற்ற மகிழ்ச்சி. எளிதில் கிடைக்காத அரிய கார்டுகளை, கார்டுக்கு ஒரு ரூபாய் வீதம் எல்லாம் கொடுத்து வாங்கியிருக்கிறேன். ஆனால், ஒரு பயபுள்ள எனது அத்தனை கார்டையும் ஆட்டையப்போட்டு என் மகிழ்ச்சியில் ஓட்டையைப் போட்டது. என் கண் முன்னாலேயே சில்லாக்கு விளையாட்டில் அந்த கார்டு கைமாறியபோது இதயமே நொறுங்கிப்போனது. கார்டு எங்கிருந்து முதலில் கைமாறியது என கண்டுபிடிக்க, தெருத்தெருவாய் சைக்கிளை எடுத்து அலைந்து, கடைசியில் ஆட்டையைப்போட்டதே என் நெருங்கிய நண்பன்தான் எனத் தெரிந்தது, இன்றுவரை அதைப் பற்றி அவனிடம் கேட்டதில்லை. ரெஸ்ட் இன் பீஸ்!

``குத்தினது நண்பனா இருந்தா, செத்தாக்கூடா வெளியில சொல்லக் கூடாது."

- தோழர் சுந்தரபாண்டியன்

இப்போது வாரம் தவறாமல் WWE பார்த்துவருகிறேன். அம்யூஸ்மென்ட் பார்க்கினுள் படமாக்கப்பட்ட சூப்பர் ஹீரோ படம்போல் கலர்ஃபுல்லாக இருக்கிறது. முன்பெல்லாம் ஸ்டேஜே ரத்தக்காடாக காட்சியளிக்கும். கமென்டரி மேடை சல்லிச்சல்லியாய் உடைந்து கிடக்கும். இப்போது சண்டையில் ரத்தம் என்பதையே பார்க்க முடியவில்லை. ஒரு ரெஸ்லிங் ரசிகனாக இவை ஏமாற்றம் அளித்தாலும், கத்தியின்றி ரத்தமின்றி நடக்கும் மல்யுத்தத்தைப் பார்க்க மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு