Published:Updated:

எலும்பு முதல் ஸ்டைலஸ் வரை... பேனாவின் பரிணாம வளர்ச்சி!

1884-ம் ஆண்டு, இன்று நாம் அனைவரும் பயன்படுத்தும் `Fountain Pen' கண்டுபிடிக்கப்பட்டது. 1888-ம் ஆண்டு `பால்பாயின்ட்'. 1960-ம் ஆண்டு, நாற்பொருள்களில் மைகளை நிரப்பிப் பயன்படுத்தும் `Felt Tip Pen' நடைமுறைக்கு வந்தது. தற்போது டேப்ளெட்டுகளில் பயன்படுத்தும் `ஸ்டைலஸ்' வரை நீண்டிருக்கிறது எழுதுகோலின் வளர்ச்சி.

எலும்பு முதல் ஸ்டைலஸ் வரை... பேனாவின் பரிணாம வளர்ச்சி!
எலும்பு முதல் ஸ்டைலஸ் வரை... பேனாவின் பரிணாம வளர்ச்சி!

`த்தியைவிடக் கூர்மையானது பேனா முனை', ஏவுகணையைவிடச் சக்திவாய்ந்தது நாம் பயன்படுத்தும் சொல்' என, பேனா மற்றும் சொற்களின் முக்கியத்துவத்தை நம் வாழ்வில் பலமுறை உணர்ந்திருப்போம். சொற்களின் கண்டுபிடிப்புக்கு முன், ஆதிகால மனிதர்கள் சைகை மூலமாகத்தான் கருத்துகளைப் பரிமாறி வந்தனர். பிறகு, படங்கள் வரைந்து தங்களின் கருத்துகளைப் பதிவுசெய்தனர். நாளடைவில் இடத்துக்கு ஏற்ப மொழி நடைமுறைக்கு வந்தது. ஆதிகால மனிதர்கள் உபயோகப்படுத்திய உருவப்படங்களிலிருந்தே எழுத்துகள் உருவாக்கப்பட்டன. அவரவரின் கருத்துகளைப் பதிவுசெய்யவும் பரிமாறிக்கொள்ளவும் உதவுவது, பேனாக்கள்தான். அதன் பரிணாம வளர்ச்சியும் உலகின் நம்பர் ஒன் பேனா உற்பத்தியாளர் பற்றியும் பார்க்கலாம்.

தோற்றம்:

ஆதிகால மனிதர்களின் முதல் எழுதுகோல், எலும்பு, மரக்கட்டை அல்லது யானைத் தந்தத்தால் ஆனது. சுமார் 4,000-ம் ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில் பாபிலோனிய மக்கள், ஈரப்பதமிக்க களிமண் மேற்பரப்பில் இத்தகைய எழுதுகோல்களைப் பயன்படுத்தி எழுதியுள்ளனர். சுமார் 3000-ம் ஆண்டுகளுக்கு முன்பு, எகிப்திய மக்கள் பாப்பிரஸ் மெட்டிரியலின் மேல் `நாணல்' கொண்டு எழுதியுள்ளனர். கி.பி.1300-ம் காலகட்டத்தில், மரப்பலகையின்மேல் மெழுகுத்துகள்களை நன்கு தேய்த்து, அதன்மேல் நாணல் பயன்படுத்தி எழுதியுள்ளனர் ரோமானியர்கள்.

நாம் திரைப்படங்களில் பார்த்துப் பழகிய பறவையின் சிறகைக்கொண்டு எழுதிய காலகட்டம் 5-ம் நூற்றாண்டு. காகம், வாத்து, ஆந்தை அல்லது பருந்தின் முதன்மைச் சிறகை எடுத்து, 180 டிகிரி வெப்பமுள்ள மணலிலிட்டு நன்கு கடினப்படுத்த வேண்டும். பிறகு, சிறகின் அடிப்பகுதியில் சிறு பிளவு உண்டாக்கி, மையில் நனைத்துப் பரவலாக எழுத ஆரம்பித்தனர்.

பிறகு, உலோகத் தகடுகளைக் கூர்மைப்படுத்தி, அதைப் பிளந்தும் விதவிதமாக வடிவமைத்தும் மையில் நனைத்து எழுத ஆரம்பித்தனர். இப்படித்தான் பேனாவின் அலகு (Nib) உருவானது. 18-ம் நூற்றாண்டில் எலும்பு, உலோகங்கள் மற்றும் பிளாஸ்டிக்கால் கைப்பிடியை உருவாக்கி எழுதுகோலின் அலகோடு இணைத்து, முதல் முழு வடிவப் பேனாவை உபயோகப்படுத்த ஆரம்பித்தனர். இதைத் தொடர்ந்து, பேனாவுக்கு மூடி, பிஸ்டன், இன்க் டியூப், கார்ட்ரிட்ஜ் போன்ற சிறப்பம்சங்களைப் பொருத்த ஆரம்பித்தனர்.

1884-ம் ஆண்டு, இன்று நாம் அனைவரும் பயன்படுத்தும் `Fountain Pen' கண்டுபிடிக்கப்பட்டது. 1888-ம் ஆண்டு `பால்பாயின்ட்'. 1960-ம் ஆண்டு, நாற்பொருள்களில் மைகளை நிரப்பிப் பயன்படுத்தும் `Felt Tip Pen' நடைமுறைக்கு வந்தது. தற்போது டேப்ளெட்டுகளில் பயன்படுத்தும் `ஸ்டைலஸ்' வரை நீண்டிருக்கிறது எழுதுகோலின் வளர்ச்சி.

உலகின் நம்பர் ஒன் நிறுவனம்:

பேனா உலகில் புதுமையைப் புகுத்தியவர் ஜார்ஜ் சாஃபோர்டு பார்க்கர். 1863-ம் ஆண்டு, நவம்பர் மாதம் பிறந்த பார்க்கர், தந்தி பயிற்றுநராகப் பணிபுரிந்து வந்தார். அதேசமயத்தில் Fountain பேனாக்களைச் சரிசெய்யும் வேலையையும் செய்துவந்தார். அப்போதுதான் பேனாவிலிருந்து அடிக்கடி மை வழியும் குறையை முற்றிலுமாகத் தீர்க்க வேண்டும் என நினைத்தார். வழக்கத்தில் இருந்த பேனாக்களில் `Plug' பொருத்தி பிரச்னைக்குத் தீர்வுக்குக் கொண்டுவந்தார். 1888-ம் ஆண்டு, தான் வடிவமைத்த பேனாவுக்கு முதல் காப்புரிமையைப் பெற்றார். பார்க்கரின் படைப்புகள் பெருமளவில் அனைவரையும் கவர்ந்தன. இவரின் ஓய்வில்லா உழைப்பே, உலகின் நம்பர் ஒன் பேனா தொழிற்சாலை வரை உயர்த்தியது.

தொடர்ந்து `பால் பாயின்ட் பேனா', `குவிங்க்', `பார்க்கர் 51' போன்ற பேனாக்களை அறிமுகம் செய்து எழுதுகோல் தயாரிப்பில் புதிய முத்திரைகளைப் பதித்தார் பார்க்கர். அனைவரும் பயன்படுத்தும் சாதாரணப் பொருள்தான். ஆனால், `பேனா என்றாலே பார்க்கர்' என்று உலக மக்கள் அனைவரின் மனதிலும் பதியும் அளவுக்குப் பல புதுமைகளைப் புகுத்தி சாதனை படைத்த ஜார்ஜ் பார்க்கர், 1937-ம் ஆண்டு காலமானார்.