Published:Updated:

`பசியாற சோறு!’ - ஆதரவற்றோருக்காகப் பம்பரமாகச் சுழலும் கோவை ஆட்டோக்காரர் #MyVikatan

`பசியாற சோறு!’ - ஆதரவற்றோருக்காகப் பம்பரமாகச் சுழலும் கோவை ஆட்டோக்காரர்  #MyVikatan
`பசியாற சோறு!’ - ஆதரவற்றோருக்காகப் பம்பரமாகச் சுழலும் கோவை ஆட்டோக்காரர் #MyVikatan

`தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்’  என்று பாரதி பாடிவிட்டுச் சென்று ஆண்டுகள் பல உருண்டோடிவிட்டன. வயிற்றைக் கடந்து, நாம் வளர்ச்சியை நோக்கி நடைபோட ஆரம்பித்துவிட்டோம். ஆனாலும், ஏழைகளின் வயிறு முற்றாக நிரம்பியபாடில்லை. இன்றும் காய்ந்த வயிற்றோடு கையேந்தும் மனிதர்கள் நம் கண்முன்னே நடமாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். கோயில்களில், தேவாலயங்களில், மசூதிகளில் தங்கள் வயிற்றை நிரப்பிக்கொள்ள எத்தனை எத்தனை கைகள் ஏந்தியபடி இருக்கிறன? அப்படியான கைகளைப் பற்றிக்கொண்டு அவர்களுக்கு `பசியாற சோறு’ போடுகிறார் கோவையைச் சேர்ந்த ராஜா சேது முரளி.  

`பசியாற சோறு!’ - ஆதரவற்றோருக்காகப் பம்பரமாகச் சுழலும் கோவை ஆட்டோக்காரர்  #MyVikatan

கல்யாண வீடுகளிலும், விசேஷ வீடுகளிலும் மீதமாகும் உணவை வீணாகவிடாமல் சேகரித்து வந்து கோவை ஜி.ஹெச்சில்  வெளியூரிலிருந்து வந்து சிகிச்சைக்காகத் தங்கியிருக்கும் மக்களுக்கு `பசியாற சோறு’ என்கிற பெயரில் விநியோகித்து வந்த ராஜாசேது முரளியின் சேவை கோவை மக்களுக்குப் பிடித்துப்போய்விட, அவரிடம் வீணாகும் உணவுகளை மட்டுமல்லாமல் பணமாகவும், பொருளாகவும் கொடுத்து ஏழைகளுக்கு உதவச் சொல்ல ஆரம்பித்தார்கள். யார் யார்.. எவ்வளவு கொடுத்தார்கள்? அதில் என்ன பொருள் வாங்கப்பட்டுள்ளது அவை யாருக்குக் கொடுக்கப்படுகிறது என்கிற விவரங்களையெல்லாம் தானே பேசி வீடியோவாக எடுத்துச் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பிவிட்டு சமூக ஊடகங்களிலும் வெளியிடுகிறார். அநாதை குழந்தைகளுக்குக் காதணி விழா நடத்துவது, வறுமையின் பிடியில் இருக்கும் குழந்தைகளின் படிப்புக்கு உதவுவது, ஏழைப் பெண்களுக்கு வளைகாப்பு நடத்துவது என ராஜா சேதுமுரளியின் சேவை நாளுக்கு நாள் விரிவடைந்துகொண்டே இருக்கிறது.  

`பசியாற சோறு!’ - ஆதரவற்றோருக்காகப் பம்பரமாகச் சுழலும் கோவை ஆட்டோக்காரர்  #MyVikatan

இந்தப் பயணம் எப்படி ஆரம்பித்தது என்று ராஜா சேதுமுரளியைக் கேட்டால், ``சின்ன வயசிலேயிருந்து எங்க வீட்ல கஷ்டம்தான் என்கூட பொறந்தது மொத்தம் அஞ்சு பேர். அப்பா, பயங்கர குடிகாரர். கூலி வேலைக்குப் போய்தான் எங்க அஞ்சுபேரு வயிற்றையும் எங்க அம்மா நிரப்பினாங்க. பல நாள் சாப்பாடு இல்லாம பசியில தண்ணியைக் குடிச்சுட்டுப் படுத்திருக்கேன். பசியின் கொடூரம் என்னன்னு எனக்கு நல்லா தெரியும். பெரிய ஆளாகி நிறைய சம்பாதிச்சு, நிறைய பேருக்கு சோறு போடணும்’ங்கிறது என் லட்சியம். ஆனால், வறுமையின் காரணமா பெரிய அளவில் படிக்கலை. ஆட்டோ ஓட்டுறதுதான் தொழில். அதில் கிடைக்கிற வருமானத்தில் என்னாலான சின்னச் சின்ன உதவிகளைச் செஞ்சுட்டு இருந்தேன்.  

கருத்துவேறுபாட்டால் திடீர்’னு என் மனைவி என்னைவிட்டு பிரிஞ்சுட்டாங்க. என்கூட பிறந்தவங்களும் தனித்தனியா வாழ்க்கையின் பாதையில போய்ட்டாங்க. வீட்ல நானும் அம்மாவும் மட்டும்தான். மிச்ச சொச்ச வாழ்க்கையை பிறருக்குப் பயனுள்ளதா மாத்தணும்னு நினைச்சேன். ஜி.ஹெச்ல சாப்பாட்டுக்கு வழி இல்லாம கஷ்டப்படுவங்களைப் பார்க்கும்போது மனசு உருத்துச்சு. கல்யாண வீடுகள்லயும், விஷேஷ வீடுகள்லயும் எவ்வளவோ உணவு மிச்சமாகுது அதை வீண் பண்ணாம இவங்களுக்கு வாங்கிட்டு வந்து கொடுத்தா நல்லா இருக்கும்லன்னு தோணுச்சு. என்கிட்ட ஆட்டோவும் இருக்கிறதால அது ரொம்ப ஈஸியா இருந்துச்சு. நான் போய்கேட்ட யாரும் இல்லை’ன்னு சொல்லாம மீதமாகுற உணவுகளைக் கொடுத்தாங்க... அதுல ஆரம்பிச்ச பயணம்தான் இந்தப் பசியாற சோறு. ஏழைகளின் வயிறு நிறைஞ்சா.. என் மனசு நிறையும்” என்று நெகிழ்ச்சியுடன் முடிக்கிறார்.