Published:Updated:

காலில் விழுந்து மன்றாடிய அம்மா; நூறு முறை சிறை! - பெட்டிக்கடைக்காரரின் வாழ்க்கைப் பாடம் #MyVikatan 

காலில் விழுந்து மன்றாடிய அம்மா; நூறு முறை சிறை! - பெட்டிக்கடைக்காரரின் வாழ்க்கைப் பாடம் #MyVikatan 
காலில் விழுந்து மன்றாடிய அம்மா; நூறு முறை சிறை! - பெட்டிக்கடைக்காரரின் வாழ்க்கைப் பாடம் #MyVikatan 

"இப்போது நாம் சந்திக்கப்போகிற நபர் பெயர் பாபு. கோவை 100 அடி சாலையில் அமைந்துள்ள ஒரு பிரபல நகைக்கடைக்கு அருகில் மிகச்சிறிய பெட்டிக்கடை வைத்திருக்கும் பாபுவை,  பாபு என்றால் அங்கு யாருக்கும் தெரியாது. 'பெரிய பூச்சி' என்று கேட்க வேண்டும். ஒடுங்கிய குள்ளமான உருவம், வழித்துச் சீவப்பட்ட தலை, இருக்கிறதா… இல்லையா என்று தெரியாதபடி உள்ளடங்கி ஒளி இழந்து போயிருக்கும் கண்களுமாக நித்தமும் பரிதாபத்தை  சிந்தியபடி உயிர்வாழும் பெரிய பூச்சி என்கிற பாபுவை நாம் ஏன் சந்திக்க வேண்டும்?

காலில் விழுந்து மன்றாடிய அம்மா; நூறு முறை சிறை! - பெட்டிக்கடைக்காரரின் வாழ்க்கைப் பாடம் #MyVikatan 

ஏனென்றால், இவர் 100 முறை சிறைக்குச் சென்றிருக்கிறார். என்னங்க ஜெயிலுக்குப் போனதை ஏதோ… கின்னஸ் சாதனை செஞ்ச மாதிரில்ல சொல்றீங்க என நீங்கள் கேட்கக்கூடும். சாதனையாளர்களை மட்டுமே வாழ்வின் முன்மாதிரிகளாகப் பார்த்துப் பழக்கப்பட்ட  நம் சமூகத்துக்கு வாழ்வின் நெறிதவறி வழிமாறிச் சென்றால் என்ன நடக்கும்? என்பதுவும் தெரிய வேண்டும். அதற்கு, பாபு பெரிய பூச்சி ஆன கதையை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

"தன்னுடைய சிறு வயதில் அப்பா, அம்மா, தம்பி, தங்கை எனச் சகல உறவுகளோடு சந்தோஷமாக ஆரம்பித்திருக்கிறது பாபுவின் வாழ்வு. சாதாரண சிறுவனுக்குரிய குறும்புத்தனங்களும் கனவுகளுமாக பாபு பள்ளிக்கூடத்துக்குச் சென்றிருக்கிறார். ஒன்றாம் வகுப்புகூட முடிக்கவில்லை. அதற்குள் காலம் தன் விளையாட்டை ஆரம்பித்துவிட்டது. டெய்லரான அவரின் அப்பாவுக்கு வேலை இல்லை. குடும்பத்தைக் கோவையில் விட்டுவிட்டு பெங்களூருக்குச் சென்றவர், சில மாதங்கள் பணம் அனுப்பியிருக்கிறார். அதன்பின்பு, அவரிடமிருந்து பணமும் வரவில்லை. தொடர்பும் இல்லை. குடும்பத்தை வறுமை சூழ்ந்து சூறையாடத் தொடங்கியது.

பாபுவின் அம்மா கோவையில் கிடைத்த கூலி வேலைகளுக்கெல்லாம் செல்ல ஆரம்பித்திருக்கிறார். எவ்வளவு கஷ்டப்பட்டாலும் பிள்ளைகளைப் படிக்க வைத்துவிட வேண்டும் என்பதுதான் அவரது இலக்கு. ஆனால், எந்த வேலையும் தெரியாமல் புதிதாக வேலைக்குச் சென்ற அவருக்குக் கிடைத்த சொற்ப வருமானம் சாப்பாட்டுக்கே போதவில்லை. அந்த இக்கட்டான சூழல், பாபுவுக்குப் படிப்பின் மீதிருக்க வேண்டிய நாட்டத்தைப் பணத்தின் மீது மாற்றிவிட்டது. ஒரு நாள் வகுப்பறையில், தன் டீச்சரின் பர்ஸ் நிறைய பணத்தைப் பார்த்த பாபுவின் மனம்  அதை எப்படியாவது திருடிவிட வேண்டும் என்று துடித்தது. டீச்சர் அசந்த நேரம்பார்த்து பர்ஸைத் தூக்கிக்கொண்டு பறந்த பாபு, பயத்தில் அதன்பின் பள்ளிக்கூடம் பக்கம் திரும்பவே இல்லை. அதற்கு தன் அம்மாவிடம் ஆயிரம் பொய்க் காரணங்கள் சொன்னார். திருட்டுத்தனமும் பொய் பேசுவதும் இரட்டைப் பிறவிகளாகப் பாபுவிடம் பிறப்பெடுத்தது.

காலில் விழுந்து மன்றாடிய அம்மா; நூறு முறை சிறை! - பெட்டிக்கடைக்காரரின் வாழ்க்கைப் பாடம் #MyVikatan 

அந்தக் குணநலன்கள் கொண்ட சிறுவர்களோடு சேர்ந்து சுற்ற ஆரம்பித்த பாபு கொஞ்சம் கொஞ்சமாக பிக்பாக்கெட் திருடனாக மாறினார். அம்மாவுக்கு விஷயம் தெரிந்தது. அழுது புரண்டார். பாபுவின் காலில் விழுந்து மன்றாடினார். ம்ஹூம் பாபு அவற்றையெல்லாம் காதில் வாங்கிக்கொல்லவில்லை. பிக்பாக்கெட்டை விடவில்லை. சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் ஆரம்பித்து… வேலூர், பாளையங்கோட்டை, சென்ட்ரல் ஜெயில் எனச் சிறை பழக்கமானது; உறவுகள் தூரமானது. பாபுவுக்கு அவருடைய பிக்பாக்கெட் அடிபொடிகள் பெரிய பூச்சி என்று பெயர் சூட்டினார்கள். கை நிறைய பணம், போதை, சிறை என வாழ்வின் பெரும்பகுதியைக் கழித்துவிட்ட பெரிய பூச்சி. 100 முறை சிறைக்குச் சென்று திரும்பிய பிறகு, வேறு வழி இல்லாமல் தன் கடைசிக் காலத்தில் மனம் திருந்தியிருக்கிறார்.

ஆனாலும் என்ன பயன்? இப்போது அவருக்கென யாருமில்லை. அம்மாவும் அப்பாவும் இறந்துபோய்விட்டார்கள். தங்கை திருமணம் முடித்துச் சென்றுவிட்டார். இவர் இப்போது தனி மரம். தான் கடை வைத்திருக்கும் மரத்தடிதான் அவர் உலகம். நினைவிலெடுத்து ஆறுதலடைவதற்குக்கூட அவரிடம் நல்ல நினைவுகள் இல்லை. எதை நினைத்தாலும் மனம் வலிக்கும்; உயிர் துடிக்கும்.