Published:Updated:

போர், பஞ்சம், பகை... போதும் இந்த அரசியல் அவலங்கள்! - உலக அகதிகள் தின பகிர்வு!

போர், பஞ்சம், பகை... போதும் இந்த அரசியல் அவலங்கள்! - உலக அகதிகள் தின பகிர்வு!
போர், பஞ்சம், பகை... போதும் இந்த அரசியல் அவலங்கள்! - உலக அகதிகள் தின பகிர்வு!

இதில் மிகவும் அதிர்ச்சியான தகவல் என்னவென்றால், அகதிகளில் சரிபாதி அளவு குழந்தைகளாக இருக்கிறார்கள். இந்தக் குழந்தைகளில் சிலர், அகதிகளாக நாடு விட்டு நாடு சென்ற பெற்றோர்களுக்குப் பிறந்தவர்களாக இருக்கிறார்கள். எனவே, இவர்கள் பிறந்ததிலிருந்தே அகதிகளுக்கான வாழ்க்கைமுறையால் துன்பத்தை அனுபவிக்கிறார்கள். மற்ற குழந்தைகள், பெற்றோர்களோடு அகதிகளாகவும், பெற்றோர்களை போரிலோ, வன்முறையிலோ இழக்கிறார்கள்.

விடியற்காலையில் எழுந்தவுடன் வீட்டருகே ஒரு நடைப்பயிற்சி, எதிர் வரும் மனிதர்களிடம் ஒரு நலம் விசாரிப்பு, தூரத்து மரங்களிலிருந்து இரை தேடக் கிளம்பும் பறவைகளை ரசித்தபடி வீடு வந்து சேர்ந்ததும் `பரபர' காலைத் தொடங்குகிறது. குழந்தைகளை எழுப்பி, பள்ளிக்குக் கிளப்பி, டிபன்பாக்ஸில் சாதம் நிரப்பி அனுப்பிவைத்து, அவரவர் அலுவலகத்துக்குக் கிளம்புவதும், மாலையில் அலுவலகம் முடிந்து வீடு வந்து கண்ணயர்வதுமான தினசரி வாழ்க்கையைக்கூட `என்னடா வாழ்க்கை'யென நாம் அலுத்துக்கொள்கிறோம். இதே உலகின் பல பகுதிகளில், சுமார் 7 கோடி மக்கள் தங்களுக்கென வீடு, உறவு, நாடு ஏதுமற்ற அகதிகளாக வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைத்துப் பார்த்திருக்கிறோமா?

போர், பஞ்சம், பகை... போதும் இந்த அரசியல் அவலங்கள்! - உலக அகதிகள் தின பகிர்வு!

பஞ்சம், அரசியல் குழப்பம், இனப்பகை, மதவாதப் போர்கள் போன்றவைதான் மக்கள் அகதிகளாக இடம்பெயர்வதற்கு முக்கியக் காரணங்களாக இருக்கின்றன. ஆப்பிரிக்க நாடுகளில் வறட்சி, உணவுப் பஞ்சம், வேலைவாய்ப்பின்மை மிகப்பெரிய பிரச்னைகளாக உள்ளன. இதன் காரணமாக பலரும் அகதிகளாக வேறு நாடுகளுக்குப் பிழைக்கச் செல்கிறார்கள். சிரியா மீதான ஏவுகணைத் தாக்குதல்களால் வாழ்விடங்களையும் உறவினர்களையும் பறிகொடுத்தவர்கள் அங்கு இருந்து உயிர் தப்பி, அகதிகளாக வெளியேறுகிறார்கள். அவர்களில் 40 சதவிகிதத்தினர் சிரியாவைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். காங்கோ, துருக்கி, லெபனான், ஜோர்டான், கென்யா, எத்தியோப்பியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மக்களும் அகதிகளாகப் பல்வேறு நாடுகளில் தஞ்சமடைந்துள்ளார்கள்.  

போர், பஞ்சம், பகை... போதும் இந்த அரசியல் அவலங்கள்! - உலக அகதிகள் தின பகிர்வு!

அகதிகளின் வாழ்க்கை மிகவும் கொடுமையானது. சொந்தமாக வீடு கிடையாது. உத்தரவாதமான வேலையோ, சம்பளமோ கிடைக்காது. வாழ்ந்துவந்த சமூகத்தை இழக்கிறார்கள். குடும்ப உறவுகளை, நண்பர்களை இழக்கிறார்கள். முக்கியமாக, அடுத்த வேளை செலவுக்குக்கூட என்ன செய்வதெனத் தெரியாத சூன்யமான நிலையில்தான் நாட்டைவிட்டு இடம்பெயர்கிறார்கள். இதில் பலரும் தங்களிடம் உள்ள நகை, பணம் அனைத்தையும் இடம்பெயர்வதற்கான கூலிக்காக மட்டுமே கொடுப்பதும் உண்டு. அகதிகளாகத் தஞ்சமடைந்த நாட்டில் உணவு, வீடு போன்ற அடிப்படைத் தேவைகளுக்கே போராட்டமாக இருக்கும். குழந்தைகளுக்குப் பால், பிஸ்கட், ஊட்டச்சத்து மாவுகள் சரிவரக் கிடைக்காததால் குழந்தைகளை வளர்ப்பது சவாலான ஒன்று. 

ஐ.நா.சபை அகதிகள் ஏஜென்சியின் கணக்கெடுப்புப்படி, 2018-ம் ஆண்டில் உலகம் முழுவதும் 7 கோடியே 8 லட்சம் மக்கள் அகதிகளாக வாழ்கிறார்கள். இவர்களில், 2 கோடியே 59 லட்சம் மக்கள் தங்களது பாதுகாப்புக்காக அகதிகளாக வாழிடத்தைவிட்டு வெளியேறுகிறார்கள். 4 கோடியே 13 லட்சம் மக்கள் ஒரே நாட்டுக்குள் வலுக்கட்டாயமாக இடமாற்றம் செய்யப்படுகிறார்கள். மீதமுள்ளவர்கள், வேறு காரணங்களுக்காக அகதிகளாக வாழ்கிறார்கள். உலகம் முழுவதும் உள்ள அகதிகளில் மூன்றில் ஒரு பங்கினர் சிரியா, ஆப்கானிஸ்தான், தெற்கு சூடான், மியான்மர் மற்றும் சோமாலியா ஆகிய ஐந்தே ஐந்து நாடுகளிலிருந்து வெளியேறியவர்களாக இருக்கிறார்கள். 

போர், பஞ்சம், பகை... போதும் இந்த அரசியல் அவலங்கள்! - உலக அகதிகள் தின பகிர்வு!

இதில் மிகவும் அதிர்ச்சியான தகவல் என்னவென்றால், அகதிகளில் சரிபாதி அளவு குழந்தைகளாக இருக்கிறார்கள். இவர்களில் சிலர், அகதிகளாக நாடுவிட்டு நாடு சென்ற பெற்றோர்களுக்குப் பிறந்தவர்களாக இருக்கிறார்கள். எனவே, இவர்கள் பிறந்ததிலிருந்தே அகதிகளுக்கான வாழ்க்கைமுறையால் துன்பத்தை அனுபவிக்கிறார்கள். மற்ற குழந்தைகள், பெற்றோர்களோடு அகதிகளாகவும், பெற்றோர்களைப் போரிலோ, வன்முறையிலோ இழக்கிறார்கள். அதன் பிறகு நாடுவிட்டு நாடோ அல்லது பிறந்து வளர்ந்த ஊரைவிட்டோ வேறிடம் சென்று வளர்கிறார்கள்.

வளரும் குழந்தைகளுக்குப் பள்ளிப்படிப்பு தடைப்படுகிறது. குழந்தைப்பருவ சந்தோஷங்களையும் இழக்கிறார்கள். அந்தக் குழந்தைகள் அகதிகளேயானாலும் அவர்களுக்கும் மருத்துவர்களாக, விஞ்ஞானிகளாக, ஆசிரியர்களாக உருவாக வேண்டுமென்ற ஆசைகளும் உண்டு. சிரியாவைச் சேர்ந்த அகதிச் சிறுவன் ஒருவன், `நான் படித்து பெரிய விண்வெளி வீரனாக வேண்டும். மற்ற கோள்களுக்குச் சென்று பார்க்க வேண்டும்' என்றெல்லாம் ஆதங்கப்படுகிறான். உண்மையான ஆதங்கம்தானே... அகதிகளாக அலையவிடாத மனிதர்கள் நிரம்பிய கோள் ஏதாவது இருக்கிறதா எனப் பார்க்கத்தோணும்தானே?

போர், பஞ்சம், பகை... போதும் இந்த அரசியல் அவலங்கள்! - உலக அகதிகள் தின பகிர்வு!

அகதிகளுக்கான துயரங்களில் பெருந்துயரம், தஞ்சமடைந்தவர்களை திடீரென அந்த நாடு வெளியேற்றத் தொடங்கிவிடுவது. எங்கிருந்து வந்தார்களோ அதே நாட்டுக்குத் திருப்பியனுப்பும் வேலையைச் செய்யும். ஆனால், அங்கே நிலவரம் சரியாகியுள்ளதா, திரும்பிச் சென்றால் அவர்களால் வாழ முடியுமா என்பதைப் பற்றியெல்லாம் யோசிப்பதேயில்லை. ஐரோப்பிய யூனியனில் தஞ்சமடைந்த சிரியா, துருக்கி நாட்டு அகதிகளை அந்தந்த நாடுகளுக்கே திருப்பியனுப்ப முடிவெடுத்தபோது ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள், எதிர்த்து போராட்டங்கள் நடத்தினார்கள். 

வியட்நாம் போருக்குப் பிறகு அகதிகளாக அமெரிக்காவுக்கு வந்தவர்களை, கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு, வியட்நாமுக்கே திருப்பியனுப்ப அமெரிக்க அதிபர் உத்தரவிட்டார். 40 ஆண்டுகளாக அமெரிக்காவிலேயே, அமெரிக்க பிரஜையாகவே வாழ்ந்தவர்களால் திரும்பவும் வியட்நாமுக்குச் சென்று எப்படி வாழ முடியும் என்றெல்லாம் யோசிக்கவில்லை. இன்னொரு கொடுமை என்னவென்றால், வியட்நாம் இவர்களை ஏற்க மறுத்ததுதான். 

போர், பஞ்சம், பகை... போதும் இந்த அரசியல் அவலங்கள்! - உலக அகதிகள் தின பகிர்வு!

அகதிகள், யாருமே அகதிகளாகப் பிறப்பதில்லை... மனிதநேயமில்லாத உலகத்தால் அகதிகளாக்கப்படுகிறார்கள். போர்களை நடத்தி நாட்டின் எல்லையை விரிவுபடுத்துவதைவிட, மனிதநேயத்தை விரிவுபடுத்தினால் அகதிகள் உருவாகாமல் தடுக்கலாம். உலகின் இன்னொரு பகுதியில் பஞ்சம், வறட்சியால் வாடும் மக்களுக்கு, வளர்ச்சியடைந்த நாடுகள் உதவிக்கரம் நீட்டினால் அங்கு உள்ள மக்களும் அகதிகளாக அலைந்து திரியாமல் நிம்மதியான வாழ்க்கையை வாழலாம். ஐ.நா சபையின் அகதிகள் ஏஜென்சி (UNHCR), அகதிகளின் பாதுகாப்பு, உணவு, உடை, தற்காலிக உறைவிடம், குழந்தைகளின் கல்வி போன்ற உதவிகளைச் செய்துவருகிறது. மனிதநேயமிக்க தனிநபர்கள், நிறுவனங்கள், என்.ஜி.ஓ-க்கள் முடிந்தவரை உதவிகள் செய்கிறார்கள். இந்த உலகம் அனைவருக்குமானது என்பதை உலக அகதிகள் தினமான (ஜூன் 20) இன்றேனும் சிந்திப்போமா?
 

Vikatan
அடுத்த கட்டுரைக்கு