Published:Updated:

இந்த 21 நாள்களுக்கு நாம் கடைப்பிடிக்க வேண்டிய 21 மந்திரங்கள்! #21DayLockdown

வீட்டிலிருந்தே செய்யக்கூடிய அலுவலகப் பணிகளுக்கானது போக, நிச்சயம் நம்மிடம் நிறைய நேரம் மிச்சமிருக்கும். இதை எப்படி செலவிடப்போகிறோம்?

தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் மிக முக்கியமான பங்கு வகிக்கப்போகின்றன இந்த 21 நாள்கள்.

சமூகத்திலிருந்து விலகியிருத்தலான `சோஷியல் டிஸ்டன்ஸிங்'தான் நம்மிடம் உள்ள ஒரே பேராயுதம் எனும்போது, மத்திய அரசு உத்தரவிட்டுள்ள 21 நாள் நாடு தழுவிய ஊரடங்கு மிகவும் வரவேற்கத்தக்கது. அதேவேளையில், மக்களின் அத்தியாவசியத் தேவைகளை உறுதி செய்வதுடன், ஏழை - எளிய மக்கள், தினக்கூலித் தொழிலாளர்கள், வீடற்றவர்கள், ஆதரவற்றவர்களுக்கும் இந்த நாள்களில் வேண்டிய அனைத்தையும் மத்திய, மாநில அரசுகள் செய்யும் என்பதும் நம்பிக்கை கொள்வோம்.

இந்த 21 நாள்களும் வீட்டில் இருக்கப் போகிறோம். ஒவ்வொரு வார விடுமுறைக்குப் பிறகும், திங்கள்கிழமை தொடங்கும்போதும் நம்மில் பலரும் ஒரு சில மீம்களையும், வழக்கமான ஜோக்குகளையும் பகிர்வோம். அல்லது, அவற்றைக் கடக்கும்போது சிரிப்பை உதிர்ப்போம்.

"ரெண்டே வார்த்தைகளில் ஒரு ஹாரர் ஸ்டோரி...
நாளை திங்கள்கிழமை!"

இதுபோல் எத்தனையெத்தனை ஜோக்குகள். இவற்றுக்குப் பின்னால், `ஞாயிற்றுக்கிழமை நீடிக்கக் கூடாதா?!', `வீட்டிலேயே இன்னும் சில நாள்களைக் கழிக்கலாமே!' என்பன போன்ற ஏக்கம்தானே உள்ளே இருந்திருக்க வேண்டும்.

இப்படி ஏங்கும் நம்மில் பலருக்காகவேதான் `இந்த 21 நாள்கள்' என்று பாசிட்டோவோடும் ஊரடங்கை அணுகலாம்தானே?!

வீட்டிலிருந்தே செய்யக்கூடிய அலுவலகப் பணிகளுக்கானது போக, நிச்சயம் நம்மிடம் நிறைய நேரம் மிச்சமிருக்கும். இதை எப்படி செலவிடப்போகிறோம்?

21 நாள் லாக்டவுன்' தொடர்பான மனநல மருத்துவர் ருத்ரன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிந்த கருத்துகளும் ஆலோசனைகளும் கவனத்துக்குரியன. அதில் குறிப்பிடத்தக்க அம்சம்:

``இந்த மூன்று வாரத்தில் நாம் பயனுள்ள சுவையான வகைகளில் நம் நேரத்தைச் செலவிடலாம் என்பதே எல்லார்க்கும் முதலில் தோன்றும். முதல் வாரம் படம் பார்த்து, படித்து புதியாய் ஏதாவது வீட்டிலிருந்தபடியே செய்வது என்பது ஓரளவுக்குச் சரியாகப் போய்விடும். இரண்டாம் வாரம் கொஞ்சம் சலிப்பும் எரிச்சலும் வரும். வீட்டுக்குள்ளேயே ஒருவரையொருவர் குற்றம் காண்பது அதிகரிக்கும். வெளியே போக ஏக்கமும் பரபரப்பும் வரும். இதையும் தாங்கிக் கொள்ளலாம். மூன்றாவது வாரத்தில் தளர்வும் சோர்வும் வரும். ஏதும் செய்ய மனத்தில் ஈடுபாடு வராது. பிடித்த காரியங்கள் என்று நாம் நினைத்த படம் பார்ப்பது, இசை கேட்பது கூட அவ்வளவாகச் செய்யத் தோன்றாது. இது Depression மனச்சோர்வின் அறிகுறி என்றாலும் இதற்கு உடனடியாய் மனநல மருத்துவ உதவி தேவைப்படாது. ஆனால், இப்போதைய முடக்கம், இன்றைய உலக நிலவரத்தை நோக்கினால், நான்கு வாரங்களோ ஆறு வாரங்களோ நீடிக்கலாம் என்பதால், மனம் சோர்வடையாமல் இருக்க தினசரிக்கு ஓர் அட்டவணை அவசியம். பிடித்த காரியங்களை முதல் வாரத்திலேயே முழுமூச்சாய் இடைவிடாமல் செய்து சலிப்பதைவிட தினமும் இந்த நேரம் படிக்க, இந்த நேரம் படம் பார்க்க என்று ஒதுக்கிக் கொண்டால் நான்கு வாரங்களைக் கடப்பது கடினம் என்றாலும் சாத்தியம்..."
மனநல மருத்துவர் ருத்ரன்

மனநல மருத்துவர் ருத்ரன் சொல்வது மிகவும் சரி. சரி, இந்த 21 நாள்களும் நம்மை நாமே எங்கேஜிங்காக எனர்ஜெட்டியாக வைத்துக்கொள்ள 21 யோசனைகளைப் பார்ப்போம். இவை எல்லாம் சிம்பிளாகத் தெரியலாம். சிலருக்கு `சில்லி'யாகவும் தெரியக்கூடும். எதுவுமே பார்க்கும்போதும் கேட்கும்போதும் அப்படித்தான் தோணும். கொஞ்சம் செயலில் இறங்கினால்தான் `சுவை' தெரியும்.

போராட்டங்கள் என்றாலே அக்கப்போராகப் பார்க்கும் பலரையும் வீதியில் இறங்கி உரிமைக்காகப் போராடுவதன்மூலம் கிடைக்கும் `கிக்'கு எப்படிப்பட்டது என்பதை ஜல்லிக்கட்டு உள்ளிட்ட போராட்டங்களில் முதன்முறையாக முழக்கம் எழுப்பியோர் உணர்ந்திருப்பர். ஆம், செயலில் இறங்குவது மட்டுமே எளிய விஷயங்களின் மேன்மையைப் புரிந்துணரும் வழி.

1) நிறைய பேசுவோம்!

Representational Image
Representational Image
Image Credit: Freepik

ஸ்மார்ட்ஃபோன் யுகத்தின் முழுமுதற் பின்னடைவு என்றால், நாம் நம் உறவுகளிடம் பேசுவதே மிகவும் குறைந்துவிட்டதுதான். அவசியமோ, அவசியமில்லையோ, சீரியஸோ, ஜாலியோ... எதுவாக இருந்தாலும் நிறைய பேசுவோம். இதுவரைப் பகிர்ந்துகொள்ளாத நம் சுவையான அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2) பாசிட்டிவ் போற்றுவோம்!

Sticky notes
Sticky notes
Image Credit: Freepik

நம் மனத்தை பாசிட்டிவாக - நேர்மறை சிந்தனை நிரம்பியதாக வைத்துக்கொள்வதற்கு எது தேவையோ அதைச் செய்வோம். இந்த பாசிட்டிவ் அப்ரோச்தான் நம்மையும் நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் காக்கும். இதற்காக, உத்வேகமூட்டும் வாக்கியங்களைத் தேடிப் பிடித்து, சார்ட் - பேப்பர்களில் எழுதி வீட்டில் ஆங்காங்கே ஒட்டினாலும் தப்பில்லை.

3) வாசிப்பை நேசிப்போம்!

Book Reading
Book Reading
Image Credit: Freepik

விஷுவல் மீடியமின் ஆதிக்கம் அதிகரித்ததாலும், மிக எளிதாக படைப்புகளை உள்வாங்குவதற்கு நவீன ஊடகங்களை நாடியதாலும் நம்மில் பலரிடமும் இருந்த புத்தக வாசிப்பு என்னும் பழக்கம் மறைந்து வருகிறது. 2K கிட்ஸ் பலருக்கும் சுத்தமாக இல்லாமலேயே இருக்கிறது. நம்மைச் சிந்திக்கத் தூண்டுவதில் புத்தக வாசிப்புக்கு மட்டுமே பெரும் பங்குண்டு. ஏனைய வடிவங்களால் மகிழ்ச்சியோ பலனோ கிட்டினாலும், நம் சிந்தனைத் திறனை மேம்படுத்துவதில் வாசிப்புபோல் வரவே வராது. எனவே, வாசிப்பை நேசிக்கக் கிடைத்திருக்கும் இந்தத் தருணத்தைத் தவறவிட வேண்டாம்.

4) இண்டோர் கேம்ஸில் களிப்போம்!

Card Games
Card Games
Image Credit: Freepik

வீட்டிலிருக்கும் 70, 80, 90ஸ் கிட்ஸ் பலருக்கும் ராஜா ராணி முதல் பல்லாங்குழி வரை எத்தனையோ இண்டோர் கேம்கள் தெரிந்திருக்கும். இப்போது ட்ரெண்டிங்கில் இருக்கின்ற இண்டோர் கேம்களும் ஏராளம். வயது வித்தியாசம் பார்க்காமல் வீட்டில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியாக விளையாடவும் நேரம் ஒதுக்கலாம். குறிப்பாக, குழந்தைகளுடன் அவ்வப்போது விளையாடுவது அவசியம்.

5) இலக்குகளை நிர்ணயிப்போம்!

Finance Management
Finance Management
Image Credit: Freepik

பொருளாதார வீழ்ச்சி நிலவும் நேரங்களில்தான் பல நிறுவனங்கள் தங்களது எதிர்காலத் திட்டத்தை தீவிரமாக வகுக்கும். செலவின குறைப்பு தொடங்கி புதிய வழிமுறைகளை நாடுவது வரை பல முக்கிய முடிவுகள் எடுக்கும் காலகட்டமாக மாற்றிக்கொள்வர். அதுபோலவே, நாமும் நம் கரியர் - தொழில் - வேலை சார்ந்த இலக்குகளை நிர்ணயிப்பது, அதற்கான திட்டங்களை வகுப்பதில் கவனம் செலுத்துவோம் இப்போது.

6) ஓ.டி.டி-யுடன் உறவாடுவோம்!

Netflix
Netflix
Image Credit: Freepik

நெட்ஃப்ளிக்ஸ், ப்ரைம், ஹாட்ஸ்டார் என அணிவகுக்கும் ஓ.டி.டி ப்ளாட்ஃபார்மில் கொட்டிக் கிடக்கின்றன நல்ல நல்ல படைப்புகள். உள்ளூர் தொடங்கி உலக சினிமா வரை எல்லாம் மொழிகளிலும் அற்புதமான படங்கள், சீரிஸ்கள் நிரம்பியிருக்கின்றன. தனிமையில் இருப்போர் வெப் சீரிஸும், வீட்டில் கும்பலாகத் திரைப்படங்களும் கண்டு களிக்கலாம். நம்மை மகிழ்விக்கக் கூடிய சினிமாவைத் தேர்ந்தெடுத்துப் பாருங்கள்.

7) ஜன்னலைத் திறந்து வைப்போம்!

Windows
Windows
Image Credit: Freepik

நம் வீட்டு ஜன்னல்களைப் பகலில் நன்றாகத் திறந்து வைக்கலாம். இதுவரைப் பேசியதில்லை என்றாலும், இதுபோன்ற பேரிடர் நேரங்களில் உறவுகளைத் தாண்டியவர்களின் அன்பும் ஆதரவும் மிக மிக அவசியம் என்பதால், பக்கத்து வீட்டாருடன் ஜன்னல் வழியாக உரக்கப் பேசுங்கள். அவ்வப்போது சைகையில் பேசி நெருக்கத்தைக் கூட்டுங்கள். எட்ட நின்று பேசுதலும் உறவை வலுப்படுத்தும் என்பதை மறக்காதீர்கள்.

`21 நாள் லாக் டவுன்... விதியை மீறினால் என்ன தண்டனை?' - உள்துறை அமைச்சகத்தின் கைட்லைன்ஸ்

8) புதிதாக ஒன்றைக் கற்போம்!

Indoor Plants
Indoor Plants
Image Credit: Freepik

வீட்டிலிருக்கும் இந்தக் காலகட்டத்தில் புதிதாக ஏதாவது ஒன்றைக் கற்கலாம். சமையல், மாடித் தோட்டம், செடி வளர்க்கும் முறை, துணியைக் கச்சிதமாக மடித்து அயன் செய்வது, வீட்டை அலங்கரிப்பது... இப்படி எதுவேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். வீட்டில் யார் வேண்டுமானாலும் யாரிடமும் கற்கலாம். குறிப்பாக, குழந்தைகளிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருப்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

9) நண்பர்கள் எங்கேஜிங்காக இருப்போம்!

Facebook
Facebook
Image Credit: Freepik

சமூகத்தில் இருந்து விலகியிருத்தல் என்பது ஒட்டுமொத்தமாக ஒதுங்கிப்போய் விடுவது கிடையாது. உடலளவில் இடைவெளியுடனும் தற்காப்புடனும் இருப்பதுதான் முக்கியம். இப்போது கிடைத்திருக்கிற நேரங்களில் நண்பர்கள், உறவினர்களுடன் எங்கேஜிங்காக இருக்க வாய்ப்பாகப் பயன்படுத்துங்கள். சமூக வலைதளங்கள், ஸ்மார்ட்ஃபோன்கள் வசதியுடன் அவ்வப்போது தொடர்பில் இருந்து நட்பை வலுப்படுத்துங்கள்.

10) கதைகள் பேசுவோம்!

Story Telling
Story Telling
Image Credit: Freepik

வீடுகளில் கதை சொல்லும் பழக்கமே வழக்கொழிந்து வருவது வருத்தத்துக்குரியது. நமக்குத் தெரிந்த கதைகள் மற்றவர்களுக்குச் சொல்வோம். நாமும் வீட்டிலிருப்போரிடம் கதைகள் சொல்லவைத்துக் கேட்போம். குறிப்பாக, குழந்தைகளுக்குக் கதை சொல்லும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளலாம்; அவர்களையும் கதைச் சொல்லச் சொல்லிப் பழக்கலாம்.

11) கலைகள் கற்போம்!

Origami
Origami
Image Credit: Freepik

பெரிய பெரிய அளவில்கூட வேண்டாம், சின்னச் சின்ன அளவிலும் கலைகளை எளிதில் கற்றுத் தேர்ந்திட முடியும். யூடியூபில் கொட்டிக் கிடக்கும் கிராஃப்ட் வழிமுறைகள், ஓரிகாமி ஐடியாக்களைக் கொண்டு, குழந்தைகளுடன் இணைந்து கலைப் பொருள்களைச் செய்யலாம். ஓவியங்கள் வரையலாம். ஓவியங்களை நட்பு வட்டத்துக்குள் பகிர்ந்து லைக்ஸ் அள்ளலாம். நம் குழந்தைகளின் கலை சார்ந்த ஆக்கங்களுக்கு உறுதுணையாக இருந்து, அவற்றை ஆன்லைனிலேயே காட்சிப்படுத்தலாம்.

12) வீட்டு வேலைகள் செய்வோம்!

Cooking
Cooking
Image Credit: Freepik

ஒர்க் ஃப்ரம் ஹோம் ஒருபக்கம் என்றால், ஒர்க் இன் ஹோம் இன்னொரு பக்கம் செய்ய வேண்டும். இதுவரை செய்யவில்லை என்றாலும்கூட இனியாவது செய்யலாம். துணி துவைப்பது, சமைப்பது, வீட்டைச் சுத்தப்படுத்துவது என அனைத்து வீட்டு வேலைகளிலும் அனைவருமே பங்களிக்க வேண்டும்.

13) உடல்நலன் பேணுவோம்!

Yoga
Yoga
Image Credit: Freepik

அவசர வாழ்க்கையில் அதகளம் காட்டும் நம்மில் எத்தனைபேர் உடம்பில் அழுக்கு முற்றிலும் அகல தினமும் குளிக்கிறோம்? சரியான முறையில் பற்களை துலக்குகிறோம்? எளிய உடற்பயிற்சிகளைச் செய்கிறோம்? இதுபோன்ற அவசியமாக எளிய முறைகளில் உடல்நலன் பேணுவதைப் பழக்கமாக்க இந்தத் தருணத்தைப் பயன்படுத்தலாம்.

14) காக்கை, குருவிகளுடன் பழகுவோம்!

Representational Image
Representational Image
Image Credit: Freepik

ஊரடங்கு சமயங்களில் காக்கா, குருவிகளுக்கும் உணவுகள் கிடைப்பதில் சிக்கல் வரும். ஜன்னலோரமும், பால்கனியிலும் பறவைகளுக்கான உணவும் நீரும் வைக்கலாம். பறவைகளுடன் பழக்கத்தைக் கூட்டலாம். இதைவிட இதயத்துக்கு இதம் தரும் செயல் வேறெதுவும் இருக்காது. குறிப்பாக, நம் தெருக்களின் காப்பான்களான நாய்களுக்கு அவ்வப்போது உணவளிக்கத் தவறாதீர்கள். அவற்றுக்கும் இது மோசமான காலகட்டம்.

`Flatten the curve' சவால்... இத்தாலியோடு ஒப்பிட்டால் இப்போது இந்தியாவின் நிலை என்ன?! #Corona

15) நன்றாக உறங்குவோம்!

Sleeping
Sleeping
Image Credit: Freepik

வாழ்க்கையின் பல தேவைகளுக்கான ஓட்டங்களால் நம்மில் பலரும் இதுவரை சரியாகத் தூங்காமலிருந்துப்போம். இனி வரும் காலங்களிலும் தூக்கங்களைத் தொலைக்க வேண்டி வரலாம். `கைப்புள்ள தூங்குடா' என்று நமக்கு நாமே சொல்லிக்கொண்டு இயன்றவரை நன்றாக - ஆழமாக உறங்கலாம். ஆழமான உறக்கத்துக்குப் பின் கிடைக்கும் புத்துணர்வில் இன்னும் வேகமாக ஓடமுடியும்.

16) எண்ணத்தை எழுதுவோம்!

Diary Writing
Diary Writing
Image Credit: Freepik

நம்மில் பலருக்கும் பேங்க் சலான் ஃபில் பண்ணும்போதுகூட ஒருவித அந்நியத்தன்மையை உணர்கிறோம். ஆம், பேனாவுடனான நம் பிணைப்பு இல்லாமல் போனதன் விளைவு இது. மொபைலில் எழுதுவது அதிகமாகிவிட்டது. பேனாவால் பேப்பரில் எழுதும்போது கிடைக்கும் சுகத்தை விவரிக்க முடியாது. இந்த 21 நாள்களில் ஒவ்வொரு இரவிலும் டைரி போல் ஏதாவது எழுதுங்களேன். அது, நம் தனிப்பட்ட சரித்திரத்தின் சுவடாகவும் எதிர்காலத்தில் மாறலாம். அட்லீஸ்ட்... சமூக வலைதளங்களிலாவது எழுதலாம்.

17) டிக் டாக்கிலும் கலக்குவோம்!

Tiktok
Tiktok

டிக் டாக் பற்றிய நிறைய நெகட்டிவ் செய்திகள் வந்துகொண்டிருந்தாலும், பெர்ஃபார்மன்ஸில் அசத்துவோருக்கான அற்புதக் களமாகவே அந்தச் சமூக வலைதளம் திகழ்கிறது. நம் வீட்டில் யாருக்கு நடிப்புக் கலையில் ஈடுபாடு இருக்கிறதோ அவருடன் இணைந்து டிக் டாக்கலாம். பாடுவதில் விருப்பம் உள்ளவர்கள் ஸ்மூல் போன்ற தளங்களில் பாடி அசத்தலாம்.

18) மினிமலிசம் நாடுவோம்!

Representational Image
Representational Image
Image Credit: Freepik

உணவு, உடை, உறைவிடம் ஆகிய அடிப்படைத் தேவைகளுடன், வாழ்க்கை முறையிலும் `மினிமலிசம்' எனும் கோட்பாட்டைக் கடைப்பிடிக்க முற்படுவதோ அல்லது தேவையானபோது அதைப் பின்பற்ற முயல்வதோ நல்லது. ஏனெனில், பேரிடர் காலங்களில் நீண்ட நாள்கள் வீட்டில் சமாளிப்பதற்கு மினிமலிசம் மேக்ஸிமம் பலன் தரலாம்.

19) கெட்டதை விட்டொழிப்போம்!

Quit Smoking
Quit Smoking
Image Credit: Freepik

குடிப்பழக்கம், புகைப்பிடித்தல் போன்ற கெட்ட பழக்கம் உள்ளவர்கள், இந்தப் பழக்கங்களிலிருந்து விடுபட முடியாதவர்களுக்கு இந்த 21 நாள்களும் மிகச் சிறந்த வாய்ப்பாக கருதிக்கொள்ளலாம். வீட்டில் எங்கேஜிங்காக இருந்துகொண்டு இந்தப் பழக்கங்களில் இருந்து முற்றிலும் விடுபட முயற்சியைத் தொடங்கலாம்.

20) தனிமையில் இனிமை காண்போம்!

Music
Music
Image Credit: Freepik

பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் சுழன்று வருவோருக்கு அவ்வப்போது தனிமையும் அவசியம். அந்தத் தனிமை நமக்கே நமக்கானதாக இருக்கலாம். இசையில் லயிப்பதாகவும் இருக்கலாம். ஜன்னலோரம், பால்கனி, மொட்டைமாடியில் தனிமையில் வானத்தைப் பார்த்துக்கொண்டே இதமான சூழலுடன் உங்கள் குறித்து யோசியுங்கள். உங்களை இன்னும் ஆழமாக கண்டறியலாம்.

21) உதவிகள் செய்வோம்!

Representational Image
Representational Image
Image Credit: Freepik

இந்த ஊரடங்கை தங்கள் பொருளாதாரச் சூழலால் எதிர்கொள்ள முடியாமல் நம் வீட்டருகே பலர் இருக்கலாம். அவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்வோம். நம் வீட்டருகே இருக்கும் வீடற்றவர்கள், ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கியும் உதவலாம். ஆம், இதுதான் மனிதம் வளர்க்கும் காலம்.

இவைதான் இந்த 21 நாள்களுக்கான 21 மந்திரங்கள். அப்புறம், உங்களது யோசனைகளையும் கருத்துப் பகுதியில் பகிரலாம்.

இவற்றில் எதைச் செய்தாலும் நாம் ஒரு விஷயத்தை மட்டும் மறந்துவிடக் கூடாது. அது... நம், நம் மக்களின் பாதுகாப்பு!

வீட்டில் பாதுகாப்பாக இருப்போம்... கொரோனாவை வெல்வோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு