Published:Updated:

'பெண்கள் இதெல்லாம் செஞ்சா, மிமிக்ரியில் தூள் பண்ணலாம்!' - சேது டிப்ஸ்

'பெண்கள் இதெல்லாம் செஞ்சா, மிமிக்ரியில் தூள் பண்ணலாம்!' - சேது டிப்ஸ்
'பெண்கள் இதெல்லாம் செஞ்சா, மிமிக்ரியில் தூள் பண்ணலாம்!' - சேது டிப்ஸ்

'பெண்கள் இதெல்லாம் செஞ்சா, மிமிக்ரியில் தூள் பண்ணலாம்!' - சேது டிப்ஸ்


மிமிக்ரி என்றால் சேது என்கிற அளவுக்கு அதில் பிரபலமானவர், சேது சுப்ரமணியம். இவருடைய அப்பா சிவகங்கை சேதுராஜன் சுப்ரமணியன், தமிழ்நாட்டிலேயே முதல் மிமிக்ரி ஆர்டிஸ்ட் என்ற பெருமை பெற்றவர். அண்ணா, காமராஜர், எம்.ஜி.ஆர், ராஜீவ் காந்தி, இந்திரா காந்தி என அப்போதைய பிரபலங்கள், பெரும் தலைவர்களின் குரலை மிமிக்ரி செய்து, பெரும் புகழ் பெற்றவர் சேது அவர்களின் அப்பா. மேலும், அறிஞர் அண்ணாவால் 'பல குரல் மன்னன்' எனறு பாராட்டப்பட்டவர். 

தன் தந்தையின் குரல் வழியில் பயணிக்க ஆரம்பித்த சேது, அதில் தானும் சிறப்பான வெற்றிபெற்றிருக்கிறார். 

''பெரும்பாலும் ஆண்கள்தான் மிமிக்ரி துறையில் இருக்கிறார்கள். உண்மையில், பெண்களும் மிமிக்ரி திறமையில் சளைத்தவர்கள் அல்ல. சொல்லப்போனால், பெண்கள் பல குரலில் பேசும்போது, அது ஆண்கள் செய்யும் மிமிக்ரியை விட சுவாரஸ்யமாக இருக்கும்'' என்று ஆரம்பித்தார் சேது. 

''மிமிக்ரி திறமை கொண்ட பெண்கள் பலரை நான் அறிவேன். ஆனால், அந்தத் திறமையை அடுத்தடுத்த வெற்றி நோக்கி எடுத்துச் செல்லும் பயணத்தில், அவர்கள் சந்திக்கும் தடைகள் நிறைய. எனக்குத் தெரிந்து, 'அட' என அசத்தும்விதமாக மிமிக்ரி செய்த பெண்கள் பலர், நிகழ்ச்சிகளுக்காக நீண்ட தூரம் பயணம் செய்ய முடியாதது, திருமணம் ஆகி செட்டில் ஆவது, குடும்பத்தைப் பார்க்க வேண்டிய பொறுப்பு போன்ற காரணங்களால் தங்கள் மிமிக்ரி திறமையை மூட்டைகட்டி வைத்துவிட்டார்கள்.  

ஆனாலும், பெண்கள் இதை எல்லாம் தாண்டி வரவேண்டும். பயிற்சி, முயற்சி, தங்களுக்கான மேடைகளை எதற்காகவும் கைவிடக் கூடாது. இன்று சின்னத்திரை, பெரியதிரையில் சாதித்திருக்கும் பெண்கள் அனைவரும், அப்படி பல தடைகளுக்குப் பிறகு வெற்றியை அடைந்தவர்களே" என்றவரிடம், அவர் மனைவிக்கு மிமிக்ரி எந்தளவுக்குப் பிடிக்கும் எனக் கேட்டோம்.

''எங்கள் குடும்ப வழக்கப்படி மனைவி பெயரைச் சொல்லகூடாது (சிரிக்கிறார்). இருந்தாலும் சொல்றேன். ஐஸ்வர்யா. எனக்குப் பெண் பார்த்தபோது, 'மாப்பிள்ளை பிரபலமானவர்' என்றெல்லாம் என் ஜாதகத்துடன் விளம்பரமும் சேர்த்தே அனுப்பிவைக்கப்பட்டது. நான் என் மனைவியைப் பெண் பார்க்கச் சென்றபோது, ' 'கலக்கப்போவது யாரு?' நிகழ்ச்சியைப் பார்த்திருக்கீங்களா?' என்று கேட்டேன். 'இல்லை... நான் பார்த்ததே இல்ல' என்று சொல்லிவிட்டார். எனக்கு அவ்வளவு ஏமாற்றமாக இருந்தது. 

என் மனைவிக்கு மிமிக்ரியில் பெரிதாக ஆர்வம் இல்லை என்று, திருமணத்துக்குப் பிறகு, கிட்டத்தட்ட ஏழு வருடங்கள்வரை, என் மிமிக்ரி நிகழ்ச்சிகளுக்கு அவரை அழைத்துப் போனதில்லை. அதை ஒரு குறையாக, விஜய் டி.வி வரை அவர் புலம்ப, பிறகுதான் துபாய்க்கு ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்றேன்! 

என் மகன் ஆகாஷ் ஒன்றாம் வகுப்புப் படிக்கிறான். இப்போதே எங்கள் உறவினர்கள் பேசுகிற மாதிரியெல்லாம் பேசிக்காட்டி மிமிக்ரி செய்கிறான். ஆனால், எனக்கு அவன் இந்தத் துறைக்கு வருவதில் விருப்பமில்லை!"  

''என்ன காரணம்?"

''நாங்கள் பிரபலமாக இருக்கலாம். ஆனால் பொருளாதார பலம் அதற்கு இணையாக இருக்காது. ஏதோ வெளிநாட்டு நிகழ்ச்சிகளில் எல்லாம் நாங்கள் பணத்தை அள்ளி வருவதாக நினைக்கிறார்கள். உண்மையில், நாங்கள் பெறும் சன்மானம் மிகக் குறைவே. 

நிலைமை இப்படியிருக்க, சென்ற வருடம் சென்னை வெள்ளத்தின்போது என் குழந்தைக்கு நான் பால் வாங்கக் கடைக்குச் செல்ல, 'என்ன சார் நீங்க எல்லாம் பால் வாங்க வரலாமா?' என்று கேட்டு, செல்ஃபி எடுக்கச் சொல்லிக் கேட்டார்கள். 'சார்... குழந்தைக்கு வாங்கின பால் என் கையில இருக்கு' என்றேன். இப்படித்தான் ஒருமுறை முட்டை வாங்கச் சென்றபோது, 'என்ன சார் நீங்க முட்டை வாங்க வந்திருக்கீங்க?' என்று ஒருவர் கேட்டார். 

தி.மு.க ஆட்சி காலத்தில் ஒருமுறை அரசு சார்பில் பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்தார்கள். பெரியார் கேரக்டருக்கு நான்தான் டப்பிங் பேசியிருந்தேன். ப்ரிவியூவுக்குக் கூட என்னை அழைக்கவில்லை. கேள்விப்பட்டு நானாகச் சென்றேன். பெரியாரின் குரலில் பேசுவது கஷ்டம். உயிரைக் கொடுத்து பேசினேன். அதற்காக எனக்குக் கொடுத்த ஊதியம், ரூபாய் 300. இதுதான் எங்கள் வாழ்க்கை!" என்றார் சேது. 

- வே.கிருஷ்ணவேணி

அடுத்த கட்டுரைக்கு