Published:Updated:

இந்த வருடம் இவர்களுக்குப் பிடித்த புத்தகம் இவைதானாம்! #2016Rewind

இந்த வருடம் இவர்களுக்குப் பிடித்த புத்தகம் இவைதானாம்! #2016Rewind
இந்த வருடம் இவர்களுக்குப் பிடித்த புத்தகம் இவைதானாம்! #2016Rewind

இந்த வருடம் இவர்களுக்குப் பிடித்த புத்தகம் இவைதானாம்! #2016Rewind

விடைபெறும் தருணத்தில் இருக்கிறது 2016. நினைவு கூறல்களும், விமர்சனங்களும் சுய பரிசோதனைகளும் இணைய வெளியை நிறைத்துவரும் சூழலில்,  வாசிப்பில் தோய்ந்த சில பிரபலங்களிடம் இந்தாண்டு வாசித்ததில் உங்களைப் பெரிதும் கவர்ந்த புத்தகம் எது என்ற கேள்வியை முன் வைத்தோம். 

எழுத்தாளர் மருதன்

’மரணத்துக்குப் பிறகே வாழ்வு’

பிரைமோ லெவி ஓர் இத்தாலியர். வேதியியல் துறையில் படித்துப் பட்டம் பெற்றவர். இயற்கையை நேசித்தவர். மலையேற்றத்தில் ஆர்வம் கொண்டவர். அவர் ஒரு யூதரும்கூட என்பதால் இத்தாலிய பாசிஸ்ட் படைகளால் கைது செய்யப்பட்டு போலந்திலுள்ள ஆஷ்விட்ஸ் வதைமுகாமில் அடைக்கப்பட்டார். பதினோரு மாதங்களை அங்கே கழித்தபிறகு லெவி விடுவிக்கப்பட்டார். வேதியியல், வாசிப்பு, எழுத்து என்று விட்ட இடத்திலிருந்து மீண்டும் வாழ்வைத் தொடர அவர் முயற்சி செய்தார். அதில் பெருமளவு வெற்றியும் பெற்றார் என்றாலும் 68 வயது நிறைவடைதற்கு மூன்றரை மாதங்களுக்கு முன்பு தன் வீட்டு மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

இந்த ஆண்டு நான் படித்த நூல்களில் முக்கியமானது, பெரேல் லாங் எழுதிய Primo Levi: The Matter of a Life. பிரைமோ லெவியின் வாழ்வை அவருடைய படைப்புகளோடும் அவருடைய படைப்புகளை அவருடைய வாழ்வோடும் ஒப்பிட்டு ஆராய்ந்து இந்நூலை எழுதியிருக்கிறார் பெரேல் லாங். அவர் தற்கொலைதான் செய்துகொண்டாரா அல்லது மாடியிலிருந்து தவறி விழுந்து இறந்தாரா என்னும் கேள்விக்கு இன்றுவரை தீர்மானமான விடையில்லை. லாங்கின் புத்தகம் அவருடைய மரணத்தை ஆராய்வதில் இருந்து தொடங்கி, வதைமுகாம் அனுபவங்கள், அவருடைய வேதியியல் ஆர்வம், படிப்பு, பிறப்பு என்று அப்படியே பின்னோக்கிப் பயணம் செய்கிறது. புத்தகத்தின் இறுதிப் பகுதி, முன்னுரை. லெவியின் வாழ்வை மரணத்திலிருந்து தொடங்கி தலைகீழாகத் திருப்பிப்போட்டு லாங் ஆராயும்போது பல புதியவெளிச்சங்கள் கிடைக்கின்றன. ஒரு படைப்பாளரையும் அவர் படைப்புகளையும் எப்படி ஆராயவேண்டும் என்பதற்கு இந்தப் புத்தகம் ஓர் அற்புதமான உதாரணம்.

எழுத்தாளர் பவா.செல்லத்துரை

இறுதி யாத்திரை   

எம்.டி.வாசுதேவன் நாயரின் மிக முக்கியமான படைப்பாக இன்றளவும் பேசப்படும் ‘விலாப யாத்ரா’ அதன் வெளியீட்டிற்குப்பிறகான முப்பத்தைந்து வருடங்களுக்குப்பிறகு தமிழுக்கு வந்திருக்கிறது. இந்த கால இடைவெளி அதிகமானதுதான். 

சொற்கள் இதன் கடந்த காலத்தை நினைவுபடுத்தி ஒரு பழம்பெரும் நதியைப் போல நகர்ந்தாலும் கரை நம்மை இன்றைக்கு போல உயிர்ப்பாக்குகிறது. புறக்கணிப்பின் அதீத வலியை வார்த்தைகளற்ற மௌனத்தால் இதைவிட எப்படி நிரப்பி விட முடியும் எனத் தெரியவில்லை. இந்நாவலில் ஜீவன் மட்டுமல்ல உடலும் அவர் சொந்த வாழ்வின் வழியே வந்தவை என்பதால் இதன் மேற்பூச்சற்ற எழுத்து நம் ஜீவனைப் பற்றி ஒரு பசுங்கொடியைப் போல மேலெழுகிறது.

காலம்தான் இந்நாவலின் நாயகன். எழுதி முடிக்கையில் அது ஒரு பனிக்கட்டி மாதிரி உருகிக் கரைந்து காணாமல் போகிறது. சொந்த தகப்பனால் புறக்கணிக்கப்படும்  மகனின் துயரம் தோய்ந்த மனநிலை பத்து பக்கங்களில் படிப்பவனை ஊசி முனை கொண்டு துளைத்து எடுக்கிறது. இடை வெளிகளினூடேதான் என் வாசிப்பு அத்தியாயங்களைக் கடந்தது. இந்நாவிலின் ஒவ்வொரு அத்தியாயமும் சீட்டுக் கட்டுகள் போல் சரிந்து மீண்டும் ஒழுங்குடனும் ஒழுங்கற்றும் காலத்தைப் போல அடுக்கப்படுகிறது. நிகழ்காலமும் கடந்த நாட்களும் சீட்டுக்கட்டை விட லாவகமாக நம் முன் அடுக்கி காட்டப்படும் உத்தி, எம்.டி.வி. என்ற மகத்தான படைப்பாளியின் எழுத்தின் உயரத்தை ஒரு தமிழ் வாசகனுக்கு மேலெழுந்து காண்பிக்கிறது.

கடந்த வருடத்தின் வெயில் காலத்தில் ஆரம்பித்து இக்குளிர்காலம் வரை இதை நான் வாசித்தேன். எம்.டி.வி. என்ற எழுத்தாளனின் பெயரும் இக்கதைகளில் விரியும் மனிதர்களின் பெயர்களுமே இதை வேறொரு மொழியில் எழுதப்பட்ட நாவல் என நினைவுப்படுத்தியது.

கே.வி.ஷைலஜாவின் இயல்பான மொழிபெயர்ப்பு மூலத்திற்கு அதிகபட்ச நியாயம் செய்திருக்கிறது. படைப்பாளிக்கு மட்டுமே இக்கால விளையாட்டு சொந்தமா என்ன? வாசகனுக்கும் கூட

கல்வியாளர்  பிரின்ஸ் கஜேந்திரபாபு 

கவிஞர் தமிழ்ஒளி காவியங்கள்

இந்தாண்டு மிகச்சிறந்த பல நூல்கள்  வந்துள்ளன. என்னை மிகவும் பாதித்த, கவர்ந்த புத்தகம், கவிஞர் தமிழ் ஒளி காவியங்கள். கவிஞர் தமிழ் ஒளி நூற்றாண்டு விழாக்குழு தொகுத்து வெளியிட்டுள்ள இந்த புத்தகம் சமூகத்தின் எதார்த்த சூழலை மிகவும் காத்திரமாகவும் உக்கிரமாகவும் பேசுகிறது. 1924-ல் பிறந்து, 1965ல் மறைந்த கவிஞர் தமிழ் ஒளி,  தமிழகம் கவனிக்காமல் போன முக்கியப் படைப்பாளுமைகளில்  ஒருவர்.   பாரதியாரையும் பாரதிதாசனையும் தம் மானசீகக் குருவாகக் கருதி வாழ்ந்த இவரது எழுத்துகள், சாதிய ஒடுக்குமுறைகளையும் அதனால் சமூகத்தில் உருவான பாகுபாடுகளையும் தீவிரமாக பேசக்கூடியவை. பொதுவுடமை சித்தாந்தம் இளைஞர்களை எவ்விதம் ஈர்த்தது, சமூக சமத்துவத்துக்காக போராடிய இளைஞர்கள் எவ்விதம் கொலை செய்யப்பட்டு தியாகிகளாக மாற்றப்பட்டார்கள் என்பதையெல்லாம் தமிழ் ஒளி தம் காவியங்களில் விரிவாக பேசுகிறார். குறிப்பாக வீராயி காவியம்,  இன்று மிகப்பெரும் சமூகக் கேடாக வளர்ந்து வரும் ஆணவக் கொலைகளைப் பற்றிப் பேசுகிறது. ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒரு உயர்சாதி இளைஞனை காதலிக்கிறாள். இதைச் சகிக்காதவர்கள் குடிசையோடு வைத்து அவர்களைக் கொளுத்துகிறார்கள். இதைப்  படிக்கும்போது இதயம் நடுங்குகிறது.  மாதவியை நாயகியாக வைத்து எழுதப்பட்ட மாதவி காவியம்  புதிய கோணத்தில் தமிழர்களின் வாழ்க்கையை பண்பாட்டை அணுகும் முயற்சி. எதிர்கால சமூக மாற்றங்களை மிகவும் தீர்க்கதரிசனத்தோடு எழுதியுள்ள தமிழ் ஒளி, காவியங்களால் என்  மனதில் நீக்கமற நிறைந்திருக்கிறார். 

கவிஞர் யுகபாரதி

அசுரன்

இந்தாண்டு நான் வாசித்த நூல்களில் என்னை மிகவும் பாதித்த நூல் அசுரன். அசுரர்கள் பற்றிய நெடுங்கால கட்டமைப்புகளை அசுரர்களின் பார்வையில் நின்று தகர்த்தெறிந்த இந்த நூல் பெரும் தாக்கத்தை எனக்குள் நிகழ்த்தியது. ஆனந்த் நீலகண்டனால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு, நாகலட்சுமி சண்முகத்தால்  மொழி மாற்றம் செய்யப்பட்ட இந்த நூல் ராவணனின் கதையைப் பேசுகிறது. திராவிட அரசியலைப் பின்புலமாகக் கொண்டு அசுரர்கள் பற்றிய பிம்பங்களுக்கும், திட்டமிட்ட பரப்புரைகளுக்கும் ராவணனின் குரலில் பதில் பேசுகிறது இந்த நூல். தமிழ்ச்சூழலில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த நூலாக நான் அசுரனைக் கருதுகிறேன்.  

வரும் புத்தகக் கண்காட்சிக்கு இன்னும் பல பிரபலங்களின் புத்தகப்பரிந்துரைகள் வெளிவரும் என்று ஆவலோடு காத்திருக்கிறார்கள் புத்தகப் பிரியர்கள்! 

- வெ.நீலகண்டன்

அடுத்த கட்டுரைக்கு