Published:Updated:

உதவும் ஆண்களை, 'இது தேவையா?' என நினைக்கும் பெண்களுக்கு... சில வார்த்தைகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
உதவும் ஆண்களை, 'இது தேவையா?'  என நினைக்கும் பெண்களுக்கு... சில வார்த்தைகள்!
உதவும் ஆண்களை, 'இது தேவையா?' என நினைக்கும் பெண்களுக்கு... சில வார்த்தைகள்!

உதவும் ஆண்களை, 'இது தேவையா?' என நினைக்கும் பெண்களுக்கு... சில வார்த்தைகள்!

'அன்புள்ள கிருத்திகா அவர்களுக்கு...

விகடன் இணையதளத்தில் நீங்கள் எழுதிய கட்டுரைகளை வாசித்து வருகிறேன். நன்றாக உள்ளது. அதில் ஆண்களை கெட்டவர்களாகச் சித்தரிக்காமல் இருப்பது எனக்குப் பிடித்த விஷயம். சமீபகாலமாக குழப்பமான மனநிலையில் உள்ளேன். காரணம், நண்பன் ஒருவன் எனக்கு ஃபோன் செய்தான். அவனது புலம்பல்கள் என்னை மிகவும் குழப்பம் அடையச் செய்துவிட்டன.'

இப்படி ஆரம்பித்தது அந்தப் பெரிய கடிதம். அதன் சாராம்சம்... ஆண்கள் செய்யும் சமூக சேவைகளைப் பெண்கள் 'வெட்டி வேலை' என்று குறிப்பிடுவது, அலுத்துக்கொள்வது, சமயங்களில் சண்டைகூட போடுவது. யாருக்காவது உதவச் சென்றால், 'உங்களுக்கு ஏன் இந்த வெட்டி வேலை?' என்று சொல்வதே பல வீடுகளில் வழக்கம் என்பது அவரின் வாதம்.

அது அவரின் அனுபவம்  மட்டுமல்ல. பல ஆண்களின் அனுபவமாக இருக்கிறது. சமூக அங்கீகாரம் இல்லாமல் மனதுக்குப் பிடித்த நன்மைகளைச் செய்யும் பல ஆண்கள் அவர்களது வீடுகளில், 'அவருக்குப் பொழைக்கத் தெரியல' என்றே புரிந்துகொள்ளப்படுகிறார்கள். சனிக்கிழமை மது விடுதிகளை நோக்கிப் போகும் ஆண்களைக்கூட சகித்துக்கொள்ளும் மனம்... இப்படி 'வெட்டி' நல்ல வேலை செய்பவர்களை சகித்துக்கொள்வதில்லை.

'யார் எப்படி இருந்தாலும் நாம் நம் வீடு, நம் குடும்பம் என்று இருந்தால் போதும்' என்ற மனப்பான்மை பலருக்கு சிறு வயதில் இருந்தே ஊட்டப்படுகிறது. இளைய சமுதாயம் முதன்முறையாக ஜல்லிக்கட்டுக்காகக்த் திரண்டதைத் தவிர கிட்டத்தட்ட 30 வருடங்களாகப் போராட்டம், சமூக சிந்தனை என்பதே இல்லாமல் மழுங்கடிக்கப்பட்டு இருக்கிறோம்.

முன்பெல்லாம் எங்கள் ஊரில் ஒரு சொலவடை உண்டு. 'கழுதை  நின்றால்கூட கதிர் அரிவாளுக்குதான்' ஒட்டு என்பார்கள். அவர்களின் கம்யூனிஸ்ட் ப்ரியம் அது. ஊரில்  எப்படியும் கருப்பு சட்டை அணிந்த தி.க கட்சியினர் 10 பேர் இருப்பார்கள். நான்கு சுய மரியாதை திருமணங்களாவது நடக்கும். மாரியம்மன் கரகாட்டம் ஒரு பக்கம், பெரியார் மீட்டிங் மறுபக்கம் என்று பேலன்ஸ்  ஆகும் சமூகம்.

இப்போது எல்லாம் மழுங்கடிக்கப்பட்டு பக்தி, திருவிழா என்று எங்கோ போய்க்கொண்டு இருக்கிறோம்.  ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகத் திரண்ட தமிழகத்தின் உணர்வைக்கூட எழுச்சி என்று சொல்லலாமே தவிர போரட்டத்துக்கான எந்த முகாந்தரமோ, கூட்டமைப்போ இல்லை. இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்குப் பின் வேறு எந்த மக்களின் போராட்டமும் பார்க்காமல்  ஜாதிக்கட்சி மீட்டிங் மட்டுமே  பார்த்த ஒரு சமூகம் உருவாகிவிட்டது. இப்போதுதான் மீண்டும் பேச்சாளர்களை மீட்டுக் கொண்டு இருக்கிறோம்.

சில மேலை நாடுகளில் பள்ளிகளில் 'கம்யூனிட்டி சர்வீஸ்'  எனும்  சமூக சேவை பாடத்திட்டத்தில் கட்டாயமாக்கபட்ட ஒன்று... அப்ளிக்கேஷனில் ஒரு கேள்வியும் இருக்கும். 'சமூகத்தில் இருந்து எல்லாம் பெற்றுக்கொண்டாயே... அந்தச் சமூகத்துக்கு என்ன திரும்பப் செய்தாய்?' என்பதாக அது அமைந்திருக்கும்..

நாம் என்பது யார், 'நான்' என்பது எப்படி கட்டமைக்கப்படுகிறது என்று கொஞ்சம் யோசிப்போம்.  பிறப்பு, பெற்றோர், வளரும் இடம், பள்ளி, நண்பர்கள், மொழி, அறிவு, கல்வி, சமூகம், சுற்றியுள்ள கட்டமைப்புகள், வசதி, சமூக மனிதர்கள்... என்று  குடும்பம் 20% என்றால் சமூகம் 80%.

உண்ணும் உணவு, உடை, இருக்கும் இடம், போகும் பேருந்து, படிக்கும் பள்ளி, ஏன்... நிற்கும் இடத்தில் இருந்து எரியும் சுடுகாடு வரை சமூகம் இல்லாமல் நாம் இல்லை. நம்மில் ஒவ்வொரு பகுதியும் சமூக எண்ணங்களில் சேர்ந்தே கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. அப்படி இருக்கும்போது, 'நம் வீடு சுத்தமாக இருந்தால் போதும். தெருவில் குப்பை போடலாம்' என்ற மனப்பான்மை நிறையக் குடும்பங்களில் காணப்படுகிறது. ஆணோ, பெண்ணோ ஒரு குப்பையை எடுத்து குப்பைத் தொட்டியில் சேர்ப்பதில் இருந்து, விபத்தில் சிக்கிய ஒருவருக்கு உதவுவதுரை, 'பெரிய இதுன்னு நினைப்பு, வேற வேல இல்லை' என்ற சொல் குடும்பத்தில் இருந்தே விழுகிறது. அதையும் தாண்டி சேவை மனப்பான்மையுடன் பலர் உள்ளனர். என்றாலும், அவர்கள் வீட்டில் அவர்களுக்குக் கிடைக்காமல் போகும் புரிதலையும், கிடைக்கும் 'மரியாதை'யையும் எண்ணிப் பார்த்தால்... கொஞ்சம் பரிதாபமாகத்தான் இருக்கிறது.

பெண்ணுக்கோ ஆணுக்கோ சக மரியாதை மிக அவசியம். முக்கியமாக ஆணுக்கு அன்பை விட மரியாதையே மிக அதிகம் தேவைப்படுகிறது. அவனின் வேட்டையாடும் குணம் இயற்கையில் ஓர் ஈகோ-வை கொடுக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் மரியாதை பெறுதலில் அந்த ஈகோ சமாதானப்படும். இல்லாவிடில் உள்ளுக்குள் ஒரு மிருகம் கனன்றுகொண்டே இருக்கும். அதை அணைக்க முடியாமல் தடுமாறுவார்கள்.

ஆனால் நம் குடும்பங்களிலோ மரியாதை எனப்படுவது பணம் சம்பாதிப்பது என்பதன் அடிப்படையிலேயே கொடுக்கப்படுகிறது. வேறு ஏதாவது நல்லது செய்யும் எண்ணமோ, சமூகச் செய்லபாடுகளோ கொண்டு இருந்தால், 'பிழைக்கத் தெரியாத பயல்', 'வெட்டி வேலை' என்று தூற்றப் படுகிறார்கள். பெரும்பாலானவர்களின் நிலை இதுதான்.

சமூக எண்ணம் என்றில்லை, சில இலக்கிய முன்னெடுத்தல், கூட்டங்களில் பங்கேற்றல், சொந்த விருப்பத்தின் பேரில் சிறு சிறு உதவிகள் செய்தல் போன்றவற்றுக்கும் பெரும்பாலும் குடும்பத்தில் இருந்து ஆதரவு கிடைப்பதில்லை. ஒரு பெண் கூட எளிதில் வந்துவிடலாம் போல, இந்தக் காலத்தில் ஆண்கள் சந்திக்கும் சிக்கல்கள் பயங்கரமாக இருக்கின்றன.

பெண்ணுக்கு சம உரிமை கொடுக்க வேண்டும் என்று பெரும் அலையாக குரல் எழுந்து வருகிறது. மத்திய வர்க்கக் குடும்பங்களில் பெண்கள் மேலே வருவதும் கண்கூடு. ஆனால் குடும்பத்தில் ஓர் ஆணைச் சிதைத்து விட்டுதான் பெண் மேலே வர முடியுமானால் அந்தக் குடும்பத்தில் பங்குகொள்ளும் பெண்ணின் வாழ்வும் சிதைக்கப்படுகிறது. இங்கு சிதைப்பு என்பது ஆணுக்கான மரியாதை.

மற்றோரு நண்பர் அவர். 'மனைவி வேலைக்குப் போகிறார்.  கணவர் ரிட்டயர்மென்ட் வாங்கிவிட்டார். ஆனால் அந்தக் கணவர் எது சொன்னாலும் வீட்டில் யாரும் பொருட்படுத்துவதில்லை. அப்படியே குரல் உயர்ந்தாலும், அவரை வார்த்தைகளில் சிதைக்கிறார்கள்' என்று தனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தைப் பற்றிச் சொல்லிப் புலம்பினார்.  பெண்ணை நிலைகுலைய வைக்க கெட்ட வார்த்தை எப்படி ஆயுதமோ... அதுபோல ஆணுக்கான வார்த்தை... 'வீட்டில் சும்மாதானே இருக்கீங்க?' என்பது. எந்த ஆணும் இதில் சுருண்டுவிடுவான் என்று பெண்ணுக்குத் தெரியும். தெரிந்தே சிதைப்பாள். அடுத்து, 'வெட்டி வேலை செய்யுறதே  இந்தாளுக்குப் பொழப்பா  போச்சு' என்று, சமூக எண்ணத்துடன் வெளியே செல்லும் ஆண்களைப் பழிப்பது.

ஒரு பெண்ணைப் பற்றிப் புரிந்துகொள்ள ஆணுக்கு எப்படி சொல்லித்தர வேண்டுமோ, அதுபோல ஆணைப் பற்றியும் புரிதல் தேவையாய் இருக்கிறது. ஒரு சொல் பெண்ணை எவ்வளவு தொந்திரவாக்குமோ, அதேபோல ஆணையும் காயப்படுத்தச் செய்யும். சமூக எண்ணம் என்பது பொதுவானது. அதை ஒவ்வொரிடமும் இயற்கையாக வளரவிட வேண்டும்..

வாழ்வென்பது மிக அழகானது. குறிப்பாக, அடுத்தவருக்கு சிறு உறுத்தலும் இல்லா வாழ்வு என்பது, உண்மையில் சாதனை. அதை சொல்லித் தருவதை விட்டுவிட்டு, குழந்தைகளுக்கு என்ன என்னவோ திணித்துக்கொண்டு இருக்கிறோம்.

பெரிதாக எதுவும் செய்யத் தேவையில்லை. நாம் ஒவ்வொரு  நாளும் உறங்கும் முன், 'நமக்கு இத்தனை கொடுத்த  சமூகத்துக்கு நாம் என்ன பங்களிப்பை இன்று வழங்கினோம், நாளை வழங்கப் போகிறோம், பங்களிப்பவர்களை எப்படி ஊக்கப்படுத்துகிறோம்' என்ற கேள்விகளுக்கான பாஸிட்டிவ் பதில்களுடன் கண்கள் அயர்ந்தால் போதும். கொடுத்தால் பல மடங்கு திரும்பத் தரும்... இவ்வாழ்வு!

'வெட்டி வேலை'க்கு வீட்டு ஆண்களைக் கொடுக்கலாம்தானே?!

- கிருத்திகா தரன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு