Published:Updated:

ஐபுரோ த்ரெடிங் டூ பாடி மசாஜ்! - இது கேர்ள்ஸ் கார்னர்

ஐபுரோ த்ரெடிங் டூ பாடி மசாஜ்! - இது கேர்ள்ஸ் கார்னர்
ஐபுரோ த்ரெடிங் டூ பாடி மசாஜ்! - இது கேர்ள்ஸ் கார்னர்

புரோ த்ரெடிங், ஃபேசியல், ப்ளீச், ஹேர் ஸ்பா, ஹேர் கலரிங், ஹேர்கட், பெடிக்யூர், மெனிக்யூர், வேக்ஸிங், பாடி மசாஜ்னு பார்லர்ல கொடுக்குற சர்வீஸ் லிஸ்ட் ரொம்ப பெருசு. பயப்படாதீங்க. இதெல்லாம் வெறும் டீசர் தான். மெயின் பிக்சர் படிப்படியா வரும் பதறாம கேளுங்க!

பசங்க ரெடியாக 10 நிமிஷம் போதும். ஆனா பொண்ணுங்க ரெடியாக  மணிக்கணக்காகும்னு டையலாக் மட்டும் பேசினா போதாது. அதுக்கான ஆய்வுகளை தோண்டி எடுத்து கிளறிப் பாக்கணும்னு யாருக்காச்சும் தோணி இருக்குமா?!

* பாக்க வரைஞ்ச ஓவியம் மாதிரி இருக்கணும்னா அதுக்கு பத்து கோட்டிங்ல பளபளப்பாக்குற மேக்கப் உதவாது. வரைஞ்ச மாதிரி இருக்குற புருவங்கள் முகத்துக்கு ரொம்ப முக்கியம். வில் போன்ற புருவங்கள்னு பாடல்கள்ல வர்ணிச்சா மட்டும் போதுமா?. வில் போல செதுக்க வேண்டாமா?  பெண்களோட முதல் மேக்கப் டாஸ்க்  ஐபுரோ த்ரிடிங். ஆனா இது வெறும் டைட்டில் கார்டு தான். 'ஐபுரோ பண்ணிட்டு வரேன் மம்மி'னு தான் பார்லருக்கு கிளம்புவாங்க.ஆனா அடுத்தடுத்து தான் களேபரங்கள் ஆரம்பிக்கும்.

*  ’மேடம் ஐபுரோ த்ரெடிங் பண்ணதுக்கே நீங்க இவ்ளோ க்யூட்டா இருக்கீங்களே , சிம்பிளா ஒரு ஃபேசியல் பண்ணிங்கனா பாக்க செம க்யூட்டா இருப்பீங்க’னு அடுத்த ஆயுதம்  நம்மை தாக்க  ரெடியா இருக்கும். எவ்ளோ செலவு ஆகும்னு கேட்டா, ’உங்க பட்ஜெட்டுக்குள்ள அடங்கிடும்’னு சொல்லும் போது தான்  ’ஆசையை அடக்காதே’னு புதிய தத்துவம் ஒன்று மூளைக்குள் நோட்டிஃபிகேஷன் கொடுக்கும்.

*  ஃபேசியல்னு சொல்லிட்டீங்க. என்ன ஃபேசியல் பண்ணிக்குறீங்கனு கேட்பாங்க. கொலப்பசியில இருக்கும் போது மெனுகார்டை நீட்டுற ஹோட்டல்  சர்வர் மாதிரி அந்த கேள்வியை எதிர்கொள்வது தான் ரொம்ப கஷ்டம். அடிக்கடி பார்லர் போகும் பழக்கம் இருந்தால், பழக்க தோஷத்தில் பக்காவாக எதையோ சொல்லி தப்பித்துவிடலாம். ஆனால் பார்லருக்குப் புதுசு என்றால் லிஸ்டைப் பார்த்ததும் தலை கிறுகிறுத்துப் போய்விடும்.
சாதா சருமம. எண்ணெயில தோய்ந்த சருமம், தொட்டத்துகெல்லாம் கோவிச்சுக்குற சருமம்னு நம்ம பட்டுமேனிக்கு பல வகைகள் இருக்காம். அட...நார்மல் ஸ்கின், ஆயில் ஸ்கின், சென்ஸிடிவ் ஸ்கின் தான். பயப்படாதீங்க. இந்த வகையறாவுக்குள்ள எது நம்மோடதுனு கண்டுப்பிடிச்சப் பிறகு தான் கச்சேரி களைகட்டும்.


பேர்ள் ஃபேசியல், கோல்டு ஃபேசியல், சில்வர் ஃபேசியல், டைமண்டு ஃபேசியல்னு கழுத்துல காதுல போடுற ஆபரணங்களை எல்லாம் ஃபேசியல்னு சொல்லி பீதியை கிளப்புவாங்க. மிரட்சியில் இருந்து நீங்கள் மீள்வதற்குள்ளாகவே அடுத்தப் பட்டியலை பக்குவமாய் வாசிக்க ஆரம்பித்துவிடுவார்கள். ஒயின் ஃபேசியல், பீர் ஃபேசியல், வோட்கா ஃபேசியல், விஸ்கி ஃபேசியல்னு சொல்லும் போதே தலையே கிறுகிறுத்துடும். மட்டையாக்குற பானங்கள் முகத்துக்கானு முழி பிதுங்கும் போதே, மார்கெட்டில் கிடைக்கும் கொத்தமல்லி, புதினாவில் ஆரம்பித்து காய்கறி, பழங்கள் பெயரில் எல்லாம் ரெசிப்பிக்கு பெயர் வைப்பது போலவே வாயில் நுழையாத பெயர்களை ஃபேசியலுக்கு வைத்து அதையெல்லாம் முகத்தில் பூச ரெக்கமெண்ட் செய்வார்கள். கரணம் தப்பினால் மரணம் போல தான். லைட்டாக நீங்கள் ஆசைக்குழிக்குள் விழுந்து மண்டையை ஆட்டி ஓகே செய்தால் போதும் . சந்தேகமே வேண்டாம். பர்ஸ் காலி!

* ஃபேசியல் பட்டியலுக்கே மூச்சு முட்டுதே என்றெல்லாம் அழப்படாது. ’இவ்விடம் வைத்து செய்யப்படும்’ என்ற போர்டு மட்டும் தான் காணக்கிடையாது. மற்றபடி நல்லா இருக்கும் கூந்தலுக்கும் செம்மண் போன்ற நிறத்தை அப்புவது, நகங்களை சுரண்டி எடுத்து பாலிஷ் போடுவது, பாதங்களை பதமாக கழுவி சுத்தம் செய்வது, என பார்ட் பார்டாக உடம்பு முழுக்க செய்து கொள்ள சர்வீஸ்கள் ஏராளம். என்னதான் ஹோட்டலுக்குப் போனாலும் ஒரு லிமிட்டுக்கு மேல சாப்பிட முடியாது. அதனால் ஓரளவுக்காவது பில் நம்ம கண்ட்ரோலுக்குள் அடங்கிவிடும். ஆனால் பார்லர் சர்வீஸ் நம் கைக்குள் சுருக்கிவிடமுடியாத கட்டுக்கடங்காத ஏரியா.
இவ்ளோ நேரம் சொன்னதெல்லாம் கூட  மெயின் பிக்சர் இல்ல மக்களே!. இதுவும் வெறும் டிரெயிலர் தான். பில்லைப் பாத்துட்டு பயந்து மயக்கம் வந்ததுனா டென்ஷன் ஆகாதீங்க. கம்ப்ளீட் பாடி மசாஜ் செய்து கொண்டு இரண்டு மணிநேரம் நிம்மதியாய் தூங்கலாம். டாட்!

- பொன்.விமலா