Published:Updated:

கனவுகளை நனவாக்கி மாற்றம் விதைத்த 5 பெண்கள் #CelebrateWomen

கனவுகளை நனவாக்கி மாற்றம் விதைத்த 5 பெண்கள் #CelebrateWomen
கனவுகளை நனவாக்கி மாற்றம் விதைத்த 5 பெண்கள் #CelebrateWomen

பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளை எதிர்த்து மாற்றத்தின் அதிர்வுகளையும், சமூகத்தின் கண்டனங்களையும் சந்தித்த பெண்கள் பலர். இன்றைய பெண்கள் அனுபவிக்கும் பல உரிமைகளுக்கு விதை போட்டவர்கள். அப்படியான ஐந்து பேரை சர்வதேச மகளிர் தினத்தன்று நினைவுகொள்வோம் வாருங்கள்.

மூவலூர் இராமாமிர்தம்

தேவதாசி முறை ஒழிப்புக்காகத் தமிழகத்தில் முதன்முதலில் குரல் எழுப்பியவர். அதே சமூகத்தில் பிறந்திருந்தாலும், அந்த முறையைத் தீவிரமாக எதிர்த்தவர். ’நாகபாசத்தார் சங்கம்’ என்ற பெயரில் பொட்டறுப்பு சங்கம் அமைத்துச் செயல்பட்டவர். தேவதாசி சமூகம் என்ற பெயரையே ‘இசை வேளாளர்கள்’ என மாற்றியவர். 1920-ம் ஆண்டுகளில் காங்கிரஸ் பேரியக்கத்துக்காகத் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்த ஒரே பெண். தமிழகத்தின் முதல் மேடைப் பேச்சாளர். சமூகச் சீர்திருத்தவாதி. தந்தை பெரியார் காங்கிரஸ்ஸிலிருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கம் கண்டபோது, பெரியாருடன் தோளோடு தோள் நின்ற தோழி. ஒரு வகையில் பெரியாரின் சமகாலப் போராளி. தேவதாசி முறை ஒழிப்பு மசோதா கொண்டுவர முத்துலட்சுமி ரெட்டிக்குத் துணை நின்றவர்.


ருக்மா பாய்

1885-ம் ஆண்டில் இந்தியாவின் முதல் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதைச் செய்தவர் ருக்மா பாய். இங்கிலாந்து சென்று டாக்டருக்குப் படித்துக்கொண்டிருந்த ருக்மா, பால்ய வயதில் செய்துவைக்கப்பட்ட திருமணத்தை ரத்து செய்யக் கோரி வழக்குமன்ற படியில் ஏறினார். ஆனால், அது அவ்வளவு எளிதாக இல்லை. இந்த வழக்கு லண்டன் பிரிவு கவுன்சில் வரை சென்றபோதும், அவருக்கு விவாகரத்து கிடைக்கவில்லை. இந்து சம்பிரதாயத்தில் விவாகம் உண்டே தவிர, அதை ரத்து செய்ய இங்கு அனுமதியில்லை என்பதால், அவருக்கு ஆதரவும் இல்லை. இரண்டாண்டுகள் இழுத்தடிக்கப்பட்ட வழக்கில், அவருக்கு எதிராகவே தீர்ப்பு கிடைத்தது. விக்டோரியா மகாராணியின் அதிகாரத்தால் ருக்மாவுக்கு விடிவு கிடைத்தது. அதன்பின் கணவனுக்கு 2000 ரூபாய் ஜீவனாம்சம் அளிக்க வேண்டுமென கோர்ட் அளித்த ஆணையை மனதார ஏற்றார் ருக்மா பாய். அதன் பிறகே அவர் தன் மருத்துவப் படிப்பை முடித்து, இந்தியா திரும்பினார். இங்கிலாந்து சென்று மருத்துவம் பயின்ற முதல் பெண், இந்தியாவில் டாக்டராக பயிற்சி செய்த முதல் பெண் எனப் பல பெருமைகள் உடையவர்.


கமலாதேவி சட்டோபாத்யாயா

பால்ய வயதில் திருமணம் செய்துவைக்கப்பட்டவர். கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் கணவனை இழந்தவர். சரோஜினி நாயுடுவின் சகோதரர் ஹரீந்திரநாத் சட்டோபாத்யாவை மறுமணம் செய்துகொண்டவர். ஒத்துழையாமை இயக்கத்தின் மூலம் அரசியலில் காலடி எடுத்து வைத்தவர். முதன்முதலாகத் தேர்தலில் போட்டியிட்ட பெண் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர். ஒன்றுபட்ட மதராஸ் மாகாணத்தில் தான் பிறந்த மங்களூரில் போட்டியிட்டும், அவரால் வெற்றிபெற முடியவில்லை. பெண்கள் தேர்தலில் நிற்பதைச் சமூகம் ஏற்காததன் விளைவு அது. கல்லூரியில் படிக்கும் காலத்தில் நடிப்பில் ஏற்பட்ட ஆர்வத்தினால் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். அதற்கும் பலத்த எதிர்ப்பு இருந்தாலும், நாடகங்களில் நடித்த முதல் பெண் என்ற பெயரையும் பெற்றார். ஜெனீவாவில் நடைபெற்ற கல்வியாளர் மாநாட்டில் இந்தியப் பிரதிநிதியாகப் பங்குபெற்ற முதல் இந்தியர்.


மீனாம்பாள் சிவராஜ்

சென்னை மாநகராட்சியின் முதல் பட்டியலினப் பெண் துணை மேயராகப் பொறுப்பு வகித்தவர். சைமன் குழு வருகையை எதிர்த்துப் போராட்டம் நடத்தியவர்களுக்கு மத்தியில், அந்தக் குழுவை ஆதரித்துப் பேசி மேடையேறியவர். அதன் வழியாகப் பொது வாழ்க்கையில் ஈடுபட்டவர். சுயமரியாதை இயக்கத் தலைவர் ஈ.வெ.ராமசாமிக்கு ’பெரியார்’ என்ற பெருமைக்குரிய பட்டத்தை அளித்தவரும் இவர்தான். இந்தி எதிர்ப்புப் போரின் பிரதான போராளி. பெண் விடுதலை, தலித் விடுதலை இரண்டையும் தம் வாழ்நாள் சுவாசமாக்கி போராடியவர். சென்னை பல்கலைக்கழக செனட் உறுப்பினராக இருந்தவர். எழும்பூர் நீதிமன்றத்தில் 16 ஆண்டுகள் கௌரவ நீதிபதியாகவும் இருந்தவர்.

ரமாபாய் ரானடே

பெண்களுக்குக் கல்வி மறுக்கப்பட்ட காலத்தில் பிறந்த, எழுதப் படிக்கத் தெரியாத பெண்மணி ரமாபாய். 11 வயதில் திருமணத்துக்குப் பின், கணவரின் முயற்சியால் எழுதப் படிக்கக் கற்றவர். பின்னாளில் பெரும் கல்வியாளராக மதிக்கப்பட்டார். தாய்மொழியான மராத்தியையே எழுதத் தெரியாதவர், பொதுக்கூட்டம் ஒன்றில் ஆங்கிலத்தில் உரையாற்றிய முதல் பெண் எனப் புகழப்பட்டார். பெண்கள் முன்னேற்றம், ஆதரவற்ற பெண்களின் கல்வியை வலியுறுத்தியதோடு, 1902-ம் ஆண்டு புனேயில் 'சேவா சதன்' என்ற அமைப்பைத் தொடங்கியவர். பெண்களுக்கான ஆசிரியர் பயிற்சிப் பள்ளியையும் ஆரம்பித்து பெண் கல்விக்குப் பேருதவியாக விளங்கினார். பெண்களுக்கான வாக்குரிமைக்காக முதலில் குரலெழுப்பியவர்.

- ஜீவசுந்தரி பாலன்.