Published:Updated:

ஆடை தீண்டல் முதல் பேருந்து சீண்டல் வரை... 2018 பெண்கள் தினத்திலாவது மாறுமா..?

ஆடை தீண்டல் முதல் பேருந்து சீண்டல் வரை... 2018 பெண்கள் தினத்திலாவது மாறுமா..?
ஆடை தீண்டல் முதல் பேருந்து சீண்டல் வரை... 2018 பெண்கள் தினத்திலாவது மாறுமா..?

ஆடை தீண்டல் முதல் பேருந்து சீண்டல் வரை... 2018 பெண்கள் தினத்திலாவது மாறுமா..?

இந்தச் சமூகம் பெண்களுக்கு எனப் பல்வேறு சிறப்புகளைச் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 'பெண்கள் நாட்டின் கண்கள்' என்கிற பழமொழி எல்லாம் 'தேன்' என எழுதிய காகிதம் போல, சுவையும் மணமும் அற்றதாகவே உள்ளது. பெண் குழந்தைகளாகிய நாங்கள் பிறந்தது முதல் அன்றாடம் சந்திக்கும் அவலங்கள் ஏராளம். அப்படி எந்தெந்த அவலங்களைச் சந்திக்கிறோம் என்பனவற்றைப் பட்டியலிட்டால் மெகா சீரியல்களை மிஞ்சும். அவற்றில் சில...

* ஒரு பெண் குழந்தை பிறந்து ஓரிரு வயது வரையில்கூட அரை ஆடைகளைச் சுதந்திரமாக அணிய முடியாது. ஏனெனில், அந்தப் பச்சிளம் குழந்தையின் உடலைப் பார்த்தாலும் காமம் முளைத்துவிடும் சில ஆண்களும் இருக்கின்றனர்.

* 'ஓடி விளையாடு பாப்பா' என்று சொன்னது பெண் குழந்தைகளுக்கு அல்ல. ஏனெனில், தெருவில் விளையாட ஆசைப்பட்டால், நகைகளுக்காகவோ, பாலியல் இச்சைக்கோ ஆசைப்படுபவர்களுக்குப் பலியாவோம்.

* கூட்டமான பேருந்தில் நின்றுகொண்டு பயணம் செய்தால், பின்னால் உரசுவார்களோ என்பதற்காக அடுத்த பேருந்துக்கு காத்திருக்க வேண்டும்.

* வகுப்புத் தோழனுடன் வீட்டருகே நின்று பேசினாலும் பார்க்கிறவர்கள் தப்பாக எண்ணிவிடுவார்களோ என்ற பயத்திலேயே ஆண் தோழர்களைத் தவிர்ப்போம்.

* வீட்டுக்கு உள்ளேயே என்றாலும் இரவு பத்து மணிக்கு மேல் பெண் தோழியிடமே தொலைபேசியில் பேச அஞ்சுவோம்.

* அப்பாவின் மீது கால் போட்டு உறங்க வேண்டும் என்கிற ஆசை இருந்தாலும், 'வயசுக்கு வந்த பெண்ணின் லட்சணமா' எனத் திட்டுவார்களே என ஆசையைத் துறப்போம்.

* சின்ன வயசுல தலையில் தூக்கிவெச்சுட்டு சுத்தின அண்ணன், இப்போ தோல் மேலே கை போட்டாலே மனசுக்குள்ளே நடுக்கம் வரும்.

* கோயில் திருவிழாக்களில் துப்பட்டாவைப் பிடிச்சு இழுத்துருவாங்களேனு கூட்டம் கலைஞ்சதுக்கு அப்புறமா போவோம்.

* நைட்டி போட்டுட்டு இருக்கும்போது அவசரமா வெளியில் வரனும்னாலும் தேடிப்பிடிச்சு துண்டை மேலே போட்டுட்டு வருவோம்.

* வேற சாதிப் பையனை லவ் பண்ணிருவோம்னு படிச்சுட்டு இருக்கும்போதே கல்யாணம் பண்ணச் சொல்லுவாங்க. அதுக்கும் தலையை அசைப்போம்.

* இப்பவும் பல கிராமங்களின் வீடுகளில் கழிப்பறை இல்லாததால, விடியறதுக்கு முன்னாடியே ஆண்களின் கண்ணுக்குப் படாம காட்டுக்குப் போய்ட்டுவருவோம்.

* தெரு ஓரத்துல தண்ணி எடுக்கும்போதும், மொட்ட சுவத்துல உட்கார்ந்து இருக்கிற பசங்க பார்த்துடக் கூடாதுனு தலையைக் குனிக்சுக்கிட்டே தண்ணி வேகமா நிறையணும்னு சாமியை துணைக்குக் கூப்பிடுவோம்.

* வண்டியில் போயிட்டு இருக்கும்போது, நம்ம வண்டியை மோதுற மாதிரியே போற பசங்களுக்குப் பயந்து வேகம் குறைச்சு அவங்களை வெற்றியாளர் ஆக்குவோம்.

* பால்கார அண்ணன் பால் ஊத்தும்போது கையைத் தடவுறதால, பால் வாங்க போக மாட்டேனு அடம்பிடிப்போம்.

* பசங்க பண்ற கேலிகளைச் சொன்னால், வீட்டு வாசலைத் தாண்ட விடமாட்டாங்களோனு மனசுக்குள்ளயே தினம் தினம் அழுவோம்.

இன்னும் சொல்ல நிறைய இருக்கு. தொடரும் போட்டு நிறுத்தறோம். ஆனால், இது அடுத்த ஆண்டிலும் தொடரக் கூடாதுன்னு வேண்டுறோம். முடிச்சுவைக்க ஒரு காலம் வரணும். அப்போதுதான் நாங்க உண்மையான மகளிர் தினத்தைக் கொண்டாட முடியும். அப்போதுதான் மகளிர் தினம் உருவானதற்கான உண்மையான பயனும் கிடைக்கும்.

  - வித்யா காயத்ரி, மாணவப் பத்திரிகையாளர்.

அடுத்த கட்டுரைக்கு