Published:Updated:

'இது மகளிர் மட்டும் மொபைல் காபி ஷாப்!' - மது சரண்

'இது மகளிர் மட்டும் மொபைல் காபி ஷாப்!' - மது சரண்
'இது மகளிர் மட்டும் மொபைல் காபி ஷாப்!' - மது சரண்

'இது மகளிர் மட்டும் மொபைல் காபி ஷாப்!' - மது சரண்

சென்னை, தி.நகரில் உள்ள ஜீவா பூங்காவில், மகளிர் தினத்தை முன்னிட்டு, மகளிர் மட்டுமே நடத்தும், நடமாடும் காபி ஷாப் வண்டி அனைவரையும் கவர்ந்தது. 'மாமி ஹவுஸ்ஃ ஆப் காபி' என்ற பெயரில் விற்பனை சூடு பறக்க, அந்தச் சூட்டோடு கடையின் உரிமையாளரான மது சரணிடம் பேசினோம்.

 ''நான் 16 வருடங்களாக தொழில் முனைவோராக இருக்கிறேன். நான் முதலில் படித்தது காமர்ஸ். பிறகு, பொறியியல் படித்தேன். 2000-ம் வருடம் STC (SOFT TESTING COMPANY) என்ற சாப்ட்வேர் கம்பெனியைத் தொடங்கினேன். அதில், 800 பெண்கள் வேலை செய்கிறார்கள், கிராமப்புறப் பகுதிகளில் இருந்து வரும் பெண்களுக்கு மற்றவர்களுடன்

தொடர்புகொள்வதில் தயக்கம் இருக்கிறது. அந்தத் தயக்கத்தை போக்கவே, பெண்கள் தனியாக தொழில் தொடங்கும் வகையில், பயிற்சி அளித்து பணியில் சேர்க்கிறோம். வறுமையால் யாரும் முடங்கிவிடக் கூடாது. 2009-ம் ஆண்டு சாஃப்ட்வேர் கம்பெனி தொடங்க வங்கியில் 30 லட்சம் கடன் கேட்டபோது, 93 ஆவணங்களை கேட்டார்கள். அவர்கள் கேட்ட ஆவணங்ககளைக் கொடுத்தும், இரண்டு லட்சம்தான் கடன் கிடைத்தது. இப்போது போல, அப்போது வங்கியில் கடன் வாங்குவது எளிதாக இல்லை. இந்தச் சம்பவமும் சுயதொழிலில் பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை எனக்குள் உருவாக்கியது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் பல்வேறு சிறப்புத் தொழில்கள் உள்ளன. அந்தத் தொழில்களைக் கண்டறிந்து, அதில் பெண்களை தொழில் முனைவோராக உருவாக்க வேண்டும் என்பது எனது லட்சியம்'' என்ற மது சரண், நடமாடும் காபி கடை ஐடியா பற்றி தொடர்ந்தார்.

''ஒவ்வொரு மகளிர் தினத்துக்கும் ஒரு புதிய திட்டத்தை மகளிருக்காக தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த நடமாடும் ஹவுஸ் ஆஃப் காபி கடையை இந்த முறை ஆரம்பித்து இருக்கிறோம். இதற்காக, மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து 25 வாகனங்களை வாங்கி இருக்கிறோம். முதல் கட்டமாக, சென்னையின் தி,நகர், அண்ணா நகர், நங்கநல்லூர், வேளச்சேரி, பழைய மகாபலிபுரம் என ஐந்து இடங்களில் இந்தத் திட்டத்தை தொடங்குகிறோம். ஒரு காபி 11 ரூபாய். மக்கள் அதிகம் வரும் இடங்களில் இந்த வாகனம் வலம் வரும். ஒரு நாளைக்கு ஆயிரம் கப் காபி விற்பனை செய்யும் இலக்கு வைத்திருக்கிறோம். முழுக்க முழுக்க பெண்கள் மட்டும்தான் இந்த வாகனங்களில் இருப்பார்கள்.

ஒரு வாகனத்தில் மூன்று நபர்கள் இருப்பார்கள். ஒரு பெண் பில் போடவும், இன்னொருவர் காபியும் போட்டுத் தருவார். ஓட்டுநர் பணியில் மட்டும் ஆண் அமர்த்தப்பட்டுள்ளார். லாபத்தைவிட வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் காபி தரமானதாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறோம். ஊறுகாய், ஊதுவத்தி போன்ற சின்னச் சின்ன தொழில்களை வீட்டுடன் நடத்திவரும் பெண்களை, அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்ல வேண்டும். தொழில் தொடங்குபவர்களுக்கு நாங்கள் மீடியேட்டரா மட்டுமே இருப்போம். அவர்களுக்குத் தேவையான சந்தேகங்களை அளிக்கிறோம். இந்த காபியை வள்ளுவர் கோட்டம் பகுதியில் உள்ள ஓர் இடத்தில் சுகாதாரமாக தயாரிக்கிறோம். காபியைத் தயாரிக்கும் பணியில் உள்ளவர்களுக்கு குறைந்தபட்சம் மாதம் 15,000 ரூபாய் வருவாய் கிடைக்கும். காலை 5.30 மணிக்கு விற்பனையைத் தொடங்குகிறோம். விற்பனைக்கு செல்லும்போது சுத்தமான இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும் என உறுதியுடன் சொல்லி இருக்கிறோம். இந்த மொபைல் காபி கடையை இன்னும் விரிவுபடுத்தப்பட வேண்டும். பொறியியல் படித்த மாணவிகள் நிறைய பேர் போதிய வேலைக்கான திறன் இல்லாமல் முடங்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை உருவாக்க வேண்டும். 'ரீவர்' என்ற எங்களின் தொண்டு நிறுவனம் மூலம் இதுபோன்ற மேலும் பல விஷயங்களை செய்ய இருக்கிறோம். வருங்காலத்தில் எந்த ஒரு பெண்ணும் பொருளாதாரத்துக்காக யாரையும் எதிர்பார்த்து நிற்க மாட்டார்கள். தங்கள் உழைப்பால் தேவையை நிறைவேற்றிக்கொள்வார்கள்'' என்கிற மது சரண் குரலில் ஒலிக்கிறது நம்பிக்கை.

காலந்தோறும் பெண்கள் உழைப்பில் ஆண்களுக்கு இளைத்தவர்கள் இல்லை என நிருப்பித்தே வருகின்றனர். இப்போது அவர்கள் வெவ்வேறு களங்களிலும் பயணிக்கத் தொடங்கிவிட்டனர். அவர்களின் பயணம் சிறக்கட்டும்.

- அ.பா.சரவணகுமார், எம்.வஸிம் இஸ்மாயில்
மாணவப் பத்திரிக்கையாளர்கள்

அடுத்த கட்டுரைக்கு