Published:Updated:

பெண்களிடம் இந்த 10 குணங்கள்தான் ப்ளஸ். ஆமாவா... இல்லையா?

பெண்களிடம் இந்த 10 குணங்கள்தான் ப்ளஸ். ஆமாவா... இல்லையா?
பெண்களிடம் இந்த 10 குணங்கள்தான் ப்ளஸ். ஆமாவா... இல்லையா?

ஆதி காலத்தில் இருந்தே பெண்களை அடிமைப்படுத்துவது ஆண்களுக்கு அத்துபடியான கலை. தங்களை வீரதீரம் படைத்தவர்களாக கருதிக்கொண்டு பெண்களைத் தாழ்வுப்படுத்தி வருகிறார்கள். ஆனால், பெண்கள் ஆண்களைவிட நிறைய விஷயங்களில் சிறப்பு வாய்ந்தவர்கள் என்பது நிரூபிக்கப்பட்ட நிதர்சனம். அந்த வகையில் பெண்களை பளிச்சிட வைக்கும் 10 குணங்களைப் பார்ப்போமா?

1 ‘கற்க கசடற’ என்று வள்ளுவர் சொன்னாரே, அதற்கு உதாரணமானவர்களே பெண்கள்தான். எதையும் பெண்கள் எளிமையாகக் கற்றுக்கொள்வார்கள். கற்றல் திறன் எல்லோருக்கும் பொதுவானதுதான் என்றாலும், ஆண்களுக்குப் பொறுமை குணம் குறைவு. ஆகையால்தான், வகுப்புகளில் பெரும்பான்மை பெண்களே முதலிடம் பிடிக்கிறார்கள்.

2 சுகாதார விஷயத்தில் பெண்கள் எப்போதும் பல படிகள் மேலே என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஒரு வீட்டையோ, அலுவலகத்தின் குறிப்பிட்ட ஓர் இடத்தையோ பார்க்கும்போதே அந்த இடத்தில் இருப்பவர் ஆணா, பெண்ணா என்று சொல்லிவிடலாம். பெண்கள், தன்னைச் சுற்றியுள்ள எல்லாமே சுத்தமாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவார்கள்.

3 இன்டெர்வியூ என்றாலே எல்லாருக்கும் ஒரு பயம் வரும். பெண்களுக்கும் அந்த பயம் உண்டுதான். ஆனால், அதை வெளிக்காட்டாமல் கூலாக கையாள்வதில் சமர்த்தர்கள். அதனால்தான், செல்லும் இடங்களில் எல்லாம் வெற்றி பெறுகிறார்கள். அது மட்டுமா? அவர்கள் எந்த விஷயத்திலும் முன்தயாரிப்புடன் செல்வார்கள்.

4 ரொம்ப மெச்சூர்டாக செயல்படுவதும் பெண்கள்தான். அவர்கள் தன்மானத்தைக் காத்துக்கொள்வதில் பெரும் பங்காற்றுவார்கள். 'நாங்க அப்படியில்லையா' என்று ஆண்கள் கோபப்படலாம். பெண்களுக்கு எப்போதுமே உயர்வாக இருக்க வேண்டும் என்கிற எண்ணம் இருக்குமாம். இதை நான் சொல்லலைங்க. ஆய்வு சொல்கிறது.

5 எந்த ஒரு விஷயத்திலும் பெண்கள் தெளிவான உறுதிகொண்டவர்களாக தோற்றம் அளிப்பார்கள். ஆனால், ஆண்கள் கொஞ்சம் குழப்பவாதிகள். ஓர் செயலில் ஈடுபடுவதற்கு முன்னரே யோசித்து, அதற்கு தகுந்தபடி செயல்படுவதே பெண்களின் வெற்றிகளுக்குக் காரணமாக இருக்கிறது.

6 பிறருக்கு மரியாதை செலுத்துவதிலும் பெண்கள் மேலானவர்கள். தன்னைவிட வயதில் குறைந்தவர்களாக இருந்தாலும், அவர்களிடம் மரியாதையோடு செயல்படுவதையே விரும்புவார்கள். தேங்க்ஸ், ப்ளீஸ் போன்ற வார்த்தைகளைத் தயங்காமல் சொல்வார்கள். இந்த விஷயத்தில் ஆண்கள் ரொம்பவே வீக்.

7 அறிவியல், கணிதம் சார்ந்த கல்விகளில் பெண்கள் லேசுபட்டவர்களல்ல. தங்களுக்குப் பிடிக்காத சப்ஜெக்ட்டாக இருந்தாலும், அதிலும் தேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்றே விரும்புவார்களாம்.

8 பொதுவாக, எதிர்ப்பு சக்தி பெண்களுக்குத்தான் அதிகம் என்கிறது அமெரிக்க ஆய்வு ஒன்று. அவர்களது உடலில் உற்பத்தியாகும் ஹார்மோன்கள், நோய்க்கிருமிகளை எளிதில் அழித்துவிடுமாம். அதனால்தான், மனதளவிலும் சக்தி வாய்ந்தவர்களாகப் பெண்கள் இருக்கிறார்கள்.

9 பெற்றோர்கள் மீது அக்கறை செலுத்துவதில் பெண்களுக்கே முதலிடம் என்றால் மிகையாகாது. 36 சதவிகிதப் பெண்கள், பெற்றோர்களுக்கு மிகுந்த ஆதரவு அளிப்பார்கள். ஆனால், 16 சதவிகித ஆண்களே பெற்றோர்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துவார்களாம்.

10 சேமிப்பு என்று வந்துவிட்டால், அதிலும் பெண்கள்தான் சிறந்தவர்கள். ஆண்களுக்கு அதில் பக்குவம் குறைவு என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். மேக்கப், டிரெஸ்ஸிங், காஸ்மெடிக்ஸ் என்று பெண்கள் செலவு செய்தாலுமே, பிற்காலத் தேவைக்கும் பயன்படும் வகையில் பணத்தை சேமிப்பார்கள். ஆனால், ஆண்கள் இப்போதைக்கு இது என்பதிலேயே இருப்பார்கள். சேமிப்புக்கும் ஆண்களுக்கும் தூரம் அதிகம்.

நண்பர்களே... எந்த வேலையை எடுத்தாலும் அதில் சாதிக்கும் மன உறுதி பெண்களுக்கு எப்போதும் உண்டு. இதுபோல இன்னும் நிறைய விஷயங்களில் பெண்கள் மேம்பட்டவர்கள். ஆகையால், பெண்களை அடிமைப்படுத்தும் எண்ணத்தை இனியாவது மூட்டைக் கட்டுங்கள்.

திறமையில் ஆணென்ன பெண்ணென்ன? எல்லாம் ஓரினம்தான்!

- பா.பிரியதர்ஷினி
(மாணவப் பத்திரிக்கையாளர்)