Published:Updated:

செல்வி அக்கா C/O கன்னியாகுமரி கடற்கரை!

செல்வி அக்கா C/O கன்னியாகுமரி கடற்கரை!
செல்வி அக்கா C/O கன்னியாகுமரி கடற்கரை!

செல்வி அக்கா C/O கன்னியாகுமரி கடற்கரை!

ந்தியாவின் தென்முனையில் தழும்பிக் கிடக்கிறது கன்னியாகுமரி. அலைகளிடம் தன் வாழ்வாதாரப் பொறுப்பை ஒப்படைத்து, கடலன்னையைப் பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மீன் வறுத்துத் தரும் செல்வியின் பொழுதுகள் எப்படியிருக்கும் தெரியுமா?! சூடான மீனும் குளிர்ந்த கண்களுமாகப் பேசுகிறார் செல்வி. அவரைச் சந்திப்பதற்கு முன், கன்னியாகுமரி ஒரு ரவுண்ட் அப். 

பள்ளி, கல்லூரிச் சுற்றுலா, ஹனிமூன், ஆன்மிகப் பயணம் என, உள்ளூர் முதல் உலக சுற்றுலாப் பயணிகள் வரை விரும்பி வரும் தலம், கன்னியாகுமரி. சூரிய உதயம், அஸ்தமனம் அழகை அள்ளித் தரும் விரிந்த கடற்கரை, பக்தர்கள் புனித நீராடும் சங்கிலித்துறையில் குளம்போல் காட்சியளிப்பது ஆச்சர்யம். கடலின் நடுவே சுவாமி விவேகானந்தர் மண்டபம், அருகே திருவள்ளுவர் சிலை. அங்கெல்லாம் அழைத்துச் செல்லும் படகுப் பயணம் தரும் சிலிர்ப்பும் சந்தோஷமும். பகவதி அம்மன் கோயில், காந்தியடிகள் அஸ்தி வைக்கப்பட்டதன் நினைவாக எழுப்பப்பட்ட நினைவு மண்டபம், காமராஜர் நினைவு மண்டபம், தனியார் மீன் கண்காட்சியகம், வரலாற்றுக் கூடம், மெழுகு மியூசியம், அம்யூஸ்மென்ட் பார்க்... ஒருநாள் முழுக்க சலிக்காமல் பொழுதைப் போக்கும் சுற்றுலாவாசிகளுக்கு அந்நாளின் ஃபினிஷிங் ஃபீல் கொடுப்பது, கன்னியாகுமரி ஸ்பெஷல் ஃபிஷ் ஃப்ரை! 

கன்னியாகுமரியின் மற்ற பிற அடையாளங்களாக பிஷ் ஃப்ரையும், கிழங்கும் மாறக் காரணம், இங்கு முதன்முதலாக மீன் கடை அமைத்த பிரான்சிஸ்கால் என்ற செல்வி. மாலை 5 மணி ஆகிவிட்டால், கடலில் கால் நனைத்துவிட்டு வருபவர்களைச் சுண்டியிருக்கும் மீன் வறுவல் வாசம். போலீஸ் ஸ்டேஷன் எதிரில் விவேகானந்தர் மண்டபம் போக  படகுத்துறைக்குச் செல்லும் வழியில் இடதுபுறமாக அமைந்துள்ள வரிசைக் கடைகளில் ஒன்றுதான் செல்வியின் ஃபிஷ் ஃப்ரை கடை. சுறுசுறுப்பாக மீனைக் கழுவியபடியே வாடிக்கையாளர்களை அழைத்துக்கொண்டிருந்த செல்வியிடம் பேசத்தொடங்கினோம்.

"எனக்குச் சொந்த ஊரு கன்னியாகுமரிதான். என் வீட்டுக்காரர் பேரு பர்னபாஸ். அவருக்குச் சொந்த ஊரு மேக்காமண்டபம். அவரு கட்டட வேலைக்குப் போவாரு. அப்படி ஒரு தடவை கேரளாவுக்கு வேலைக்குப் போனதுல பெரிய விபத்துல சிக்கிட்டாரு. அதுல அஞ்சு பேரு இறந்துட்டாங்க. என் வீட்டுக்காரர் 18 தையல் போடுற அளவுக்குப் பலமான அடியோட உயிர் பிழைச்சிட்டாரு. அதுக்கு அப்புறம் அவரால வேலைக்குப் போக முடியல. 

பொழப்புக்கு என்ன பண்ணுறதுனு தெரியாம கஷ்டப்பட்டோம். நாங்க வின்செட் தே பவுல் சபையைச் சேர்ந்தவங்க. அவங்கதான், 'ஒரு சின்னக் கடை போட்டு மீன் பொரிச்சி வித்தீங்கன்னா, டூரிஸ்டுங்க வாங்கிச் சாப்பிடுவாங்க, உங்களுக்குப் பொழைப்பு ஓடும்'னு சொன்னாங்க.

1985-ம் வருஷம் பகவதி அம்மன் கோயில் பக்கத்துல கடையப் போட்டோம். ஒரு நாளைக்கு 10 ரூபாய் வாடகை. அப்போ இவ்வளவு லாட்ஜ், ஓட்டல் எல்லாம் கெடையாது. ஒரே காடுபோலதான் இருக்கும். கடை தொடங்குன புதுசுல நல்லா வியாபாரம் ஆச்சி. ஒரு நாளைக்கு 200 ரூபா வரை மீன் வித்துச்சி. அப்போ கடலை எண்ணெய் ஒரு லிட்டர் 12 ரூபாதான். ஒரு கிலோ வத்தல் பொடி 6 ரூபாதான். அதுனால நெய் மீன், பாறை போலுள்ள மீனையும் 2 ரூபா, 3 ரூபாக்கு சீப்பா கொடுத்தோம். இப்போ மீனு, சமையல் பொருள்னு எல்லாமே விலையேறிப் போச்சி.

கன்னியாகுமரியில ஷூட்டிங் நடந்தா, கண்டிப்பா என் கடை ஃபிஷ் ஃப்ரை சாப்பிட அந்த ஆளுங்க வந்துடுவாங்க. பெரிய நடிகருங்க கடைக்கு வரமாட்டாங்க. அவங்களுக்காக ஆளுங்க வந்து வாங்கிட்டுப் போவாங்க. கடைசியா 'பைரவா' படத்துக்காரங்க இங்க வந்தப்போ எங்கிட்ட வந்து மீன் வாங்கிட்டுப் போனாங்க. வெள்ளக்காரங்க மீன் சாப்பிட வரும்போது, அவங்களுக்கு ரொம்ப ருசியா தெரிஞ்சா கூடுதலா 200 ரூபா தந்துட்டுப் போவாங்க. மலேசியாவுல இருந்து வருஷா வருஷம் ஒரு ரெகுலர் கஸ்டமர் வருவாரு. அவரு மலேசியப் பணத்துல 1000, 2000ம்னு தந்துட்டுப் போவாரு. 

நான்தான் இங்க மொதமொதலா மீன் கடை போட்டேன். இப்போ பக்கத்துல ரெண்டு, மூணு கடைகளும் முளைச்சிருக்கு. ஆனாலும் ஆண்டவன் புண்ணியத்துல தினமும் 2,000 ரூபாய்க்கு வியாபாரம் நடக்குது. டெய்லி கன்னியாகுமரி கடற்கரை மீன் சந்தையில மீனை வாங்கிட்டு வருவேன். ரொம்ப ஸ்டாக் வாங்கி வைக்கிறது இல்ல. இப்போ மசாலா சாமான் விலை கூடிப் போச்சி, மீன் விலையும் கூடிப் போச்சி. 20 ரூபா பீஸ் மீன் முதல் 150 ரூபா பீஸ் மீன் வரை விக்குது. பாறை, அய்ல, கிழங்கா மீன், சுறா, தேளி, சங்கரா, மசவு, சிலுக்கு, விளமீன்போல பல வெரைட்டி மீனை பொரிச்சி கொடுக்கிறோம். அதுகூட மரவள்ளிக் கிழங்குல வத்தல் பொடி போட்டு ப்ளேட் 20 ரூபாக்கு கொடுக்கிறோம். 

மீன் ருசிக்காக அஜினோமோட்டோ போடுறது கிடையாது. நல்ல மிளகு, சீரகம், பெருஞ்சீரகம், மஞ்சள் பொடி, உப்பு, வத்தல் பொடி போட்டு மீனைத் தடவி பாமாயில் எண்ணெயில பொரிச்சி எடுத்தா... கன்னியாகுமரி ஃபிஷ் ஃப்ரை ரெடி! கஸ்டமர்களை என்ன மொழிக்காரங்கனு கவனிச்சு, 'மீன் சாப்பிடுங்க சார்'னு அவங்க மொழியிலேயே கூப்பிட்டா, ஆர்வமாகி வருவாங்க. எனக்குத் தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், இங்கிலீசுனு எல்லா மொழி டூரிஸ்டுங்ககிட்டயும் சமாளிச்சுப் பேசத் தெரியும். படிச்சது எட்டாம் வகுப்பு. ஆனா பேசுறது ஆறு மொழி. எல்லாம் வயித்துப் பொழப்புக்குதான்!" 

எண்ணெயில் போட்டதும் சுள்ளென்று பொரியும் மீன்போல சடசடவெனப் பேசி முடித்தார் செல்வி. அதன் தொடர்ச்சியாகக் கேட்கிறது அலைகளின் பேரொலி!

- த.ராம்
படங்கள்: ரா.ராம்குமார்

அடுத்த கட்டுரைக்கு