Published:Updated:

வெங்கட் இப்பல்லாம் ரொம்ப ஹேப்பி.. அது ஏன்? #MondayMotivation #MisterK

வெங்கட் இப்பல்லாம் ரொம்ப ஹேப்பி.. அது ஏன்? #MondayMotivation #MisterK
வெங்கட் இப்பல்லாம் ரொம்ப ஹேப்பி.. அது ஏன்? #MondayMotivation #MisterK

வெங்கட் ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் தரக்கட்டுப்பாட்டுப் பிரிவில் பணிபுரிகிறவன். முடிந்தவரை தன் வேலைக்கு நேர்மையாக இருப்பான். அன்றைக்கு, வேலை நேரம் முடிந்து வெளியே பைக் எடுக்க நடந்து சென்றுகொண்டிருந்தபோது, வேறொரு பிரிவில் பணிபுரியும் மணி, இவனுடன் பேசியபடியே வந்தான்.

“நாலு வருஷம் ஆச்சுல்ல.. நீ வேலைக்கு சேர்ந்து. ப்ரமோஷனுக்கு ரெடியாகு. ஆனா ஒருவிஷயம் சொல்லணும்” - என்றான் மணி,

“என்ன?”

“குவாலிட்டி ரிப்போர்ட் எழுதறப்ப, ரொம்ப ஸ்டிரிக்ட்டா இருக்க, ரிப்போர்ட் ரெடி பண்ண ரொம்ப  டைம் எடுத்துக்கறன்னு அன்னைக்கு அசிஸ்டண்ட் மேனேஜர் பேசிட்டிருந்தார். அத மட்டும் பார்த்துக்க”

அவ்வளவுதான். வெங்கட் அதன்பின், பலத்த யோசனையில் மூழ்கினான். ரிப்போர்ட் எழுதும்போது தவறு நேரக்கூடாது என்று ரொம்ப நேரம் எடுத்துக் கொள்கிறோமோ என்று யோசனையாகவே இருந்தது அவனுக்கு. அந்தப் பதற்றத்திலேயே முன்னை விட, ரிப்போர்ட் போட நேரமெடுத்துக் கொண்டான். 


வெங்கட்டின் பிரச்னை இதுதான். யாராவது எதாவது விமர்சனம் வைத்துவிட்டால் அதற்குப் பிறகு அதை நினைத்து வருந்திக் கொண்டே இருப்பான். வேலையிலும் சரி, தனிப்பட்ட விதத்தில் ‘நீ இப்படி நடந்துக்கற.. உன்னைப் பத்தி இப்படியெல்லாம் பேச்சு ஓடுது’ என்று யார்மூலமாவது  கேட்டுவிட்டால், அதன்பிறகு அதை நினைத்து வருந்திக் கொண்டிருப்பான்.

”அதையெல்லாம் இந்தக் காதுல வாங்கி, அந்தக் காதுல விட்ரணும் வெங்கட்டு” என்பார்கள் சில நண்பர்கள். ஆனாலும் இவனால் முடியாது.

ஒருநாள் ரயில்பயணத்தில் மிஸ்டர் Kஐச் சந்தித்தான் வெங்கட். கோவை சென்று கொண்டிருந்த ரயிலில், எல்லாருடமும் கலகலப்பாகப் பேசிக்கொண்டிருந்த மிஸ்டர் Kயிடம் ஒரு மணிநேரத்துக்கு மேலாக பல கதைகள் பேசி, இந்தப் பேச்சை எடுத்தான்.

“யாராவது என்னைப் பத்தி பேசினாங்கனு கேட்டாலோ, என்னை எதுவும் சொன்னாங்கனு தெரிஞ்சாலோ எனக்கு பதற்றமாகிடுது. அதையே நெனைச்சுட்டிருப்பேன். அரை நாள், முழுநாள்லாம் அந்த நினைப்பு ரொம்ப டென்ஷனைக் கொடுக்கும் மிஸ்டர் K"

”யாரோ உங்களைப் பத்தி புரளி பேசறதை நீங்க ஏன் கேட்கறீங்க?”

“அப்படி இல்லை. பேச்சு வாக்குல சொல்வாங்க. நேத்துகூட ஒரு ஃப்ரெண்ட் ஃபோன்ல பேசறப்ப, ‘ரொம்ப முக்கியமான நாட்களா பாத்து நீ லீவ் எடுத்துட்டு எஸ்கேப் ஆகறனு டிபார்ட்மெண்ட்ல உனக்கு ஒரு பேர் இருக்கு’ன்னான். இப்பவரைக்கும் கவலையாவே இருக்கு அதை நினைச்சா. அப்டிலாம் இல்ல. எனக்கு வேலை இருந்தா லீவெடுப்பேன் அவ்வளவுதான். ஆனா..”

மிஸ்டர் K சிரித்தான்: “சிம்பிள். நீங்க எல்லார் பேச்சையும் கேட்கறதுதான் இந்தப் பிரச்னைக்கு அடிப்படைக் காரணம் வெங்கட். கேட்க வேண்டாம்னு சொல்லல. அப்டி அவன் சொன்னான்; இவன் சொன்னான்னு சொல்லப்படறதுல பாதி உண்மையாவே இருக்காது. மீதில 90% திரிக்கப்பட்டிருக்கும். அதை நாம ரொம்பவெல்லாம் மனசுல போட்டு கொழப்பிட்டிருக்கணும்னு அவசியமில்ல
நேரடியா உங்களை உட்காரவெச்சு யாராவது அட்வைஸ் பண்றாங்களா... அதக்கூட யோசிக்கலாம்”

“சரிதான்.  ஆனா அப்டி சொல்றவங்கள எப்டி தடுக்கறது?”

“ஒரு ஐடியா சொல்றேன். ஃபாலோ பண்ணுங்க. இனி ஃபோன்லயோ, நேர்லயோ, ‘உன்னைப் பத்தி ஒரு பேச்சு இருக்கு. அப்டி இப்டினு யாரும் ஆரம்பிக்கறாங்கனு தெரிஞ்சாலே டக்னு கட் பண்ணிடுங்க. ‘என் மெய்ல் ஐடி தெரியும்ல சார். சின்ன அவசரத்துல இருக்கேன். விஷயம் என்னனு எனக்கு ஒரு மெய்ல் போடுங்க. படிச்சு என்னைக் கரெக்ட் பண்ணிக்கறேன். நீங்களே சொல்றதால எனக்கு அது நன்மையாதான் இருக்கும். அதை மெய்ல்ல படிச்சா இன்னும் பெட்டரா யோசிச்சு அந்த விஷயத்துல என்னை கரெக்ட் பண்ணிக்குவேன்’ அப்டினு சொல்லுங்க”

“மெய்ல்ல அனுப்பறதால என்ன மாற்றம்?”

“பேசறப்ப அதையும் இதையும் மாத்தி பேசலாம். ஆனா மெய்ல்ல அனுப்பறப்ப ரொம்ப கவனமா இருப்பாங்க. உங்களைப் பத்தி யாரோ சொன்னதை உங்களுக்கு எழுத்துபூர்வமா அனுப்ப யோசிப்பாங்க. வேலையப் பத்தின கமெண்டா இருந்து, அது ஜென்யூனா இருந்தா, அது உங்களுக்கு ஹெல்ப்கூட பண்லாம். பேசும்போது சொல்றவங்க மெய்ல்னா, முக்கால்வாசி வராது. அதுனாலயே உங்க டென்ஷன் குறையலாம்!”

அதற்குப் பிறகு ஒரு மாதமாக வெங்கட் அந்த டெக்னிக்கைத் தான் ஃபாலோ செய்கிறான். பெரும்பாலும் அவனுக்கு மெய்ல் வருவதே இல்லை. ‘உன் நல்லதுக்குச் சொல்ல வந்தா, என்னனு கூட கேட்காம மெய்ல் அனுப்பச் சொல்ற?’ என்று கோவப்பட்டிருக்கிறார்கள். ஒரே ஒருமுறை நண்பனிடமிருந்து மெய்ல் வந்திருந்தது. இவன் ரிப்போர்டில் தொடர்ந்து செய்யும் ஒரு சின்னத் தவறு குறித்து. அது இவனைத் திருத்திக் கொள்ள உதவியது. மற்றபடி இந்தப் புரளி பேசுபவர்களிடமிருந்து பெரிய எஸ்கேப்! 

இப்பவெல்லாம் வெங்கட் ரொம்ப ஹேப்பி!