Published:Updated:

பிக் பாஸ் வீட்டுக்குள் நீங்கள் யார்? #MondayMotivation #MisterK

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பிக் பாஸ் வீட்டுக்குள் நீங்கள் யார்? #MondayMotivation #MisterK
பிக் பாஸ் வீட்டுக்குள் நீங்கள் யார்? #MondayMotivation #MisterK

பிக் பாஸ் வீட்டுக்குள் நீங்கள் யார்? #MondayMotivation #MisterK

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

’நேரம் காலை 8 மணி. இங்கே இவர்கள் பிக் பாஸ் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்’ 

மேலே உள்ள வாக்கியத்தை மனதுக்குள் - எந்தக் குரலில் -  என்ன மாடுலேஷனில் படித்தீர்கள்? பிக் பாஸில் வரும் குரலிலா? ஓகே.. அப்படியென்றால் நீங்களும் என்னைப் போல பிக் பாஸ் பார்க்கிறீர்கள் அல்லவா? சரி.. அப்படியென்றால் இந்தக் கட்டுரை உங்களுக்குப் புரியும். நான்  மிஸ்டர் K.

இது என்ன மாதிரி நிகழ்ச்சி, இது தேவையா, இல்லையா போன்ற கேள்விகளையெல்லாம் விடுத்து, கொஞ்சம் பேசுவோம். ஒரு வீடு. அங்கே 15 பேர். அறிமுகமானவர்கள், அறிமுகம் இல்லாதவர்கள் என்று கலந்து கட்டிய ஒரு குழு. எல்லாரிடமும் மைக். எல்லா இடங்களிலும் கேமரா. என்ன பேசினாலும், என்ன செய்தாலும் வெளி உலகிற்குத் தெரிந்துவிடும். இது அவர்களுக்கும் தெளிவாகத் தெரிந்த ஒரு விஷயம். 

முதல் ஒருநாள் அல்லது இரண்டு நாள்கள்தான் அவர்கள்  ‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’யாக இருந்தார்கள். அதற்குப் பிறகு சிலர் 'நான் யாரு.. நான் யாரு.. நான் ராஜா.. நான் ராஜா'  எனவும், சிலர் ‘நான் யாரு எனக்கேதும் தெரியலையே’ எனவும் பல ரூபங்களுக்கு மாறத் தொடங்கினர். 

ஏன்? 

அவர்களுக்கு, அவர்கள் பேசுவதும் அவர்கள் செய்கைகளும் வெளியில் தெரியும் என்று தெரியும். ஆனாலும், அதை அவர்கள் பார்ப்பதில்லை. அதனால் அவற்றின் விளைவுகளை அறிவதில்லை.  அவர்களைப் பற்றி என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று தெரியாததால், அவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ’மத்தவங்க என்ன நினைக்கறாங்கனு கவலைப்படாத’ என்போமே.. அந்த நிலையில் இருக்கிறார்கள்.

சிலர் ஒரு பிம்பத்தில் சிறைபட்டுக் கிடக்கிறார்கள். எங்கேயும் அவர்களுக்கு ஒரு ‘அட்டென்ஷன்’ தேவைப்படுகிறது. அது கிடைக்காதபோதோ அல்லது அவர்கள் பார்வையில் ‘தங்களைவிட குறைவாக’ சிலரை அவர்கள் எண்ணும்போதோ, அந்த சிலரின்மீது ஆதிக்கம் செலுத்தத் தொடங்குகிறார்கள். 

சிலருக்கு ‘நான் இவர்களை விட எந்த விதத்தில் குறைவு?’ என்கிற எண்ணம் இருக்கிறது. அது சரியும்கூட.  யாரும் யாருக்கும் குறையுமில்லை; கூடுதலுமில்லை. ஆனால், அதற்காக கொஞ்சம் அதிகப்படியாக கவனமீர்க்கும் செய்கைகளைச் செய்துகொண்டிருந்தால், அது கவனம் கலைக்குமே தவிர ஈர்க்காது. 

ஒரு சிலருக்கு, எந்தச் சலனமும் இல்லாமல் நதிபோல ஓடிக்கொண்டிருக்கும் ஒருவர்மீது பொறாமையோ.. அல்லது ‘அவர் மட்டும் ஏன் அப்படி இருக்கிறார்?’ என்ற எண்ணமோ வருகிறது. அவர்கள் கூடி ஒரு சதியாலோசனை நடத்துகிறார்கள். சதியாலோசனை என்ற வார்த்தை சரியா என்று தெரியவில்லை. ஒருவகையில், அந்த ‘நதிபோல ஓடிக்கொண்டிருக்கும்’  நபருக்கு நன்மை விளைவிக்கக்கூட இருக்கலாம்.  ‘அந்த ஒருவர், இருக்கத் தயங்கும் இடத்தில் அவரை இருத்துவோம். அதில் அவர் தாக்குப்பிடிக்கிறாரா என்று பார்ப்போம்’ என்கிறார்கள். கிட்டத்தட்ட Comfort Zoneல் இருக்கும் உங்களை துறை மாற்றும் செயல்தான் அது. கிட்டத்தட்ட ஜெயிக்கப் பிறந்தவர்கள் கடந்து வந்த பாதைதான்.  

இன்னொருவரைப் பற்றி உள்ளே இருப்பவர்கள் ‘வெள்ளந்தி; எங்களை மகிழ்வித்துக் கொண்டிருந்தார்’ என்று உருகுகிறார்கள். ஆனால் அவர் வெளிப்படையாக ஒருவர் மீது வெறுப்பை உமிழ்ந்து கொண்டே இருந்தார். எல்லாக் கேள்வியையும் கேட்கும் உரிமை இருக்கும் நிகழ்ச்சி நடத்துனரோ, ‘பிக் பாஸ்’ உள்பட எவருமோ ‘அப்படி இருப்பது தவறு. ஒருவரை கார்னர் செய்யாதீர்கள்’ என்று சொல்லவில்லை. ஒருவரின் குணாதிசயத்தைக் குறித்த விமர்சனம் வைக்க வேண்டாம் என்பதாகக்கூட இருக்கலாம். தவிர, அவர் எல்லாரையும் ‘இமிடேட்’ செய்கிற மாதிரி குறை சொல்லிக் கொண்டே இருந்தார். ‘உள்ளே அவர்தான் எனக்கு மகிழ்ச்சி அளித்துக் கொண்டிருந்தார்’ என்று சொன்ன ஒருவரையே ‘அய்யய்யே தொந்தரவு தாங்கலைப்பா’ என்று சலித்துக் கொண்டிருந்தார். அதனாலேயே மக்களின் வாக்கு அவருக்கு கிடைக்காமல் போயிற்று. அவருடன் இருந்தவர்களுக்கு இந்த விஷயம் 360 டிகிரி கோணத்தில் தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் உண்மையான பிக் பாஸாகிய மக்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள். 

சரி இவர்களில் நீங்கள் யாராக இருக்கிறீர்கள் என்று எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா? ஒவ்வொரு சமயமும், சிலரின் ஒவ்வொரு செய்கைகளிலும்  ‘அட.. அந்த விஷயத்துல நான் இதே மாதிரிதானே இருந்தேன்.. அப்ப என்னையும் இப்டித்தான் திட்டிருப்பாங்களோ’ என்று தோன்றியதா? சிலர் செய்யும் செய்கைகளைப் பார்த்து, ‘அட.. நாமும் இப்படி சரியாகத்தான் செய்திருக்கிறோம்’ என்று தோன்றியதா?  எல்லாம் கலந்து கட்டிய வடிவம்தான் நாம்.  ஆனால் எந்த நேரத்தில், எப்படி இருக்கிறோம் என்பதுதான் வேறுபடுகிறது. 

எதற்கும் கவலைப்படாமல், சிலருக்குப் புரியாவிட்டாலும், பலருக்கும்  பிடிக்கிற மார்டன் ‘ஆர்ட்’ போல இருந்தால் தொல்லையில்லை.   அவர்களுக்கு உள்ளே இருப்பதில் பெருமையும் இல்லை. வெளியே இருப்பதில் சிறுமையும் இல்லை. சொல்லப்போனால் அவர்கள்தான் பல சந்தர்ப்பங்களில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் செய்ய வேண்டிய செயலைச் செய்கிறார்கள். காரணம், எல்லாவற்றையும் அவர்கள் மூன்றாவது கோணத்தில் அலசுகிறார்கள். 

உங்கள் வீட்டில், உங்கள் நண்பர்கள் மத்தியில் என்று எப்போதும் உங்களை யாரோ கண்காணித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். பிற இடங்களாவது பரவாயில்லை; நீங்கள் இருக்கும் அலுவலகத்தில், நிச்சயம் நீங்கள் ஒரு பிக் பாஸ் விளையாட்டில்தான் இருக்கிறீர்கள்.

ஓடவும் முடிவதில்லை. ஒளியவும் முடிவதில்லை. ரெஸ்ட் ரூம் தவிர எல்லா இடங்களிலும் கேமராக்கள். தலைமைப்பொறுப்புகள் மாறிக் கொண்டே இருக்கின்றன. நம் எல்லா செய்கைகளும் கணக்கு வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. எலிமினேஷன்களுக்காக நம் பெயரை யாரோ சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ‘இல்லையே அவரு கரெக்ட்தான்’ என்று நமக்காக யாரோ ஓட்டுப் போட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். நாம் செய்ய வேண்டிய வேலையை, நமக்காக எவரோ செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். எவரோ செய்ய வேண்டிய வேலைகளை, நாம் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்து கொண்டுதான் இருக்கிறோம்.  யாரோ ஒருவருடைய  அமைதி, நம்மை அச்சுறுத்துகிறது அல்லது நம் அமைதி யாரையோ அச்சுறுத்துகிறது.  ‘என்னை எப்படியாவது வெளியே அனுப்பிடுங்கய்யா’ என்று அவ்வப்போது நம் மனது அரற்றிக்கொண்டுதான் இருக்கிறது. எதற்கும் கவலைப்படாமல், என்ன செய்கிறார் என்பதே தெரியாமல் ‘இவர் நம்ம ஆஃபீஸ்தானா?’ வகையறா ஆட்களும் நமக்கு மத்தியில் வேலை செய்துகொண்டுதான் இருக்கிறார்.  கொடுக்கப்படும் டாஸ்க்-குகளை நம்மால்  முடிந்த நியாயத்தில் முடிக்கிறோம். ஆனாலும் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுடன் நெருக்கமாக இருப்பவர்களுக்குத்தான் சிறந்த பட்டங்கள் சென்றடைகின்றன. அப்படியே நமக்குக் கிடைத்தாலும் அதற்கான கைதட்டல்களில் நமக்கே திருப்தி இருப்பதில்லை.  

‘உடனே கன்ஃபெஷன் ரூமுக்கு வாங்க’ என்ற குரல் ‘ஹெச். ஆர் கேபினுக்கு வாங்க’-வாக  அவ்வப்போது கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது. கன்ஃபெஷன் ரூமுக்குள் நாம் ‘ரொம்ப கான்ஃபிடென்ஷியலாக’ச் சொல்லும் விஷயம் அடுத்தநாளே யாருக்குத் தெரியக்கூடாதோ அவர் உள்பட எல்லாருக்கும் தெரிந்து விடுகிறது. ‘கன்ஃபெஷன் ரூமு’க்குள் நமக்கு கிடைத்த திட்டை ‘சும்மா பேசிட்டிருந்தோம் மாமா’ லெவலில் வெளியே வந்து டீல் செய்கிறோம். ‘எல்லாரையும் பிக் பாஸ் லிவிங் ரூம்ல அசெம்பிள் ஆகச் சொல்றார்’ போல ‘எல்லாரையும் கான்ஃப்ரன்ஸ் ரூமுக்கு மீட்டிங்கிற்கு வரச் சொன்னாங்க’ என்று சக நண்பன் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறான்.

‘நாய் குரைப்பதெற்கெல்லாம்’ கவலைப்படாமல், நாம் வேலை செய்யும்போது, சிலர் கண்மூடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அல்லது அவர்கள் வேலை செய்யும்போது நாம் கண்மூடிக் கொண்டிருக்கிறோம். எலிமினேஷன் ஆகி வெளியே போய் குடும்பத்தைப் பார்க்கலாம் என்று ஏங்குகிறோம். எலிமினேஷன் கிடைத்தால், ‘மறுபடி கூப்டுவீங்க.. நானும் வருவேன்’ என்கிறோம்;   அல்லது வேறு ஒரு பிக் பாஸ் வீட்டுக்குச் செல்ல கையெழுத்துப் போடுகிறோம்.    

ஆனால், எப்போதும் இன்னொருவர் செய்யும்போது அதிலுள்ள குற்றம் குறைகள் நமக்குப் புலப்படுகிற அளவுக்கு, நாம் செய்யும்போது நமக்கே புலப்படுவதில்லை. ஆக, இவர்களில் யார் நாம் என்பதைவிட, எந்தச் சூழலில் நாம் யாராக இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். அந்தக் கலை வாய்க்க நேர்ந்தால்.. நாம் நிச்சயம் வின்னர்தான்! 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு