Published:Updated:

`ஏதோ குரோனாவாமே...’ - கிராமங்களை உயிர்ப்போடு வைத்திருக்கும் ஈர மனிதர்கள்!

கிராமம்
கிராமம்

பேருந்து வசதிகூட இல்லாத ஊராக இருந்தாலும், `அட, அவரு எங்க ஊருக்காரர்ப்பா' என்கிறபோது உண்டாகும் மகிழ்ச்சி ஈடில்லை.

உலகம் நிமிடத்துக்கு நிமிடம் முன்னேறிக் கொண்டிருக்கிறது. பெரும்பாலான மக்களை ஆண்ட்ராய்டு அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது. என்னதான் நவீனமும் நகரமும் வாழ்க்கையை ஆக்கிரமித்திருந்தாலும் தங்களுடைய சொந்த ஊரைக் கொண்டாடாத மக்கள் இருக்க முடியாது. எந்த அலுவலகமாக இருந்தாலும், ஒரே ஊர்க்காரர்கள் என்றால் ஒரு பிணைப்பு இருக்கவே செய்யும். பேருந்து வசதிகூட இல்லாத குக்கிராமமாக இருந்தாலும்கூட, `அட, அவரு எங்க ஊருக்காரர்ப்பா' என்கிறபோது உண்டாகும் மகிழ்ச்சிக்கு ஈடில்லை. டிரெண்டுக்கு ஏற்றாற்போல ஷார்ட்ஸ், டி- ஷர்ட், லெகின்ஸ் என்று அப்டேட் ஆகி, நகரத்தின் வாழ்க்கைக்குப் பழகியிருந்தாலும், சொந்த ஊரில் லுங்கியோடும் பாவாடை தாவணியோடும் வலம்வருவதே தனியழகுதான். கொரோனாவுக்காக முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட இரவு... மக்கள் கூட்டம் கூட்டமாக தங்கள் சொந்த ஊருக்குப் பயணத்தைத் தொடங்கினார்கள்.

கிராமம்
கிராமம்

அப்படி உயிரைப் பணயம் வைக்கும் அளவுக்குச் சொந்த ஊர்களிலும், கிராமங்களிலும் என்னதான் புதைந்திருக்கிறது?

200-க்கும் குறைவான குடும்பங்கள் வாழும் கிராமத்திலிருந்து பணிக்காகச் சென்னை வந்தவள் நான். மண்தரை, பொட்டல் காடு, எங்கள் மண்ணின் வளத்தை உறிஞ்சி, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பெருகியிருக்கும் சீமைக்கருவேல மரங்கள். இந்த டெக்னாலஜி உலகத்திலும் ஒரு ரூபாய் டெலிபோன் பூத், பழைய செய்தித்தாள்கள் நிறைந்திருக்கும் மணி அண்ணன் டீக்கடை, வீட்டில் எவ்வளவு இடமிருந்தாலும் வாசலில் காத்துக்கிடக்கும் பாட்டிகள்... இவற்றைத் தவிர எங்கள் ஊருக்கு என எந்தத் தனிச் சிறப்பும் கிடையாது. ஆனால், ஒரு வார விடுமுறை கிடைத்தாலும், எங்கள் குடிசைகளில் உலவும் காற்றை சுவாசிக்கவும், அமைதியை அனுபவிக்கவும்தான் மனது ஏங்குகிறது. ஓய்வெடுக்க வாஞ்சையுடன் அழைக்கும் கிராமங்களைத் தேடி மக்கள் ஓட, வாசனையை அள்ளித் தெளிக்கும் மண் மட்டும் காரணமில்லை. வெள்ளந்தியான மனிதர்களும் காரணம். எந்தச் சாதிக்காரர்களாக இருந்தாலும் அய்த்தை, அத்தாச்சி, மச்சான், அண்ணாச்சி என சொந்தங்கள் சூழ் உலகது. உறவுகள்தான் கிராமத்தின் சொத்து.

பள்ளிக்கூடத்துக்கே எட்டு கிலோமீட்டர் நடந்துசென்ற எங்கள் கால்களுக்கு, அடுத்த தெருவுக்குச் செல்ல கால் டாக்ஸி புக் செய்வதையும், பசிக்கு ஆப்களில் உணவுகளை ஆர்டர் செய்யும் கலாசாரத்தையும் பழக்கப்படுத்தியது நகர வாழ்க்கை. சிறு வயதில் எங்களுக்கு இது கனவாகத்தான் இருந்தது. கம்மாயில் குளித்த எங்களுக்கு சென்னையின் கடல் முதல் உயரமான கட்டடங்களில் குளிர்சாதனத்துக்குள் விற்கப்படும் மளிகைப் பொருள்கள் வரை அத்தனையும் ஆச்சர்யம்தான். எங்க ஊரில் முனியம்மா அப்பத்தா வீட்டுக்கு, சென்னையிலிருந்து வரும் அவரின் பேத்தியைப் பார்க்க சின்ன வயதில் வரிசையில் காத்துக்கிடந்தவர்களில் நானும் ஒருத்தி.

`சோர்வடையாம இருக்கணும்!' -
மாணவர்களுக்கு 3 நேரம் உணவு கொடுத்து அசத்தும் புதுக்கோட்டை கிராமம்

நகரத்தில் சொந்தம் இருந்தால் அவர்கள்தான் கிராமத்தில் மரியாதைக்குரியவர்கள். முனியம்மா பாட்டி தன் பேத்தியிடம் நகரம் பற்றி கேட்ட ஒரு மணி நேரக் கதையை, நாள்கணக்கில் எங்களிடம் ஒப்பிப்பார். அவரின் மிகைப்படுத்தலைவிட, சென்னை கூடுதல் அழகானது என்பதை சில வருடங்கள் கழித்து நேரில் பார்க்கும்போதுதான் உணர்ந்தேன். ஊரில் தேன்மிட்டாயையும், இலந்தை வடையையும் தின்றுவந்த எங்களுக்கு, தங்க நிற பேப்பர் சுற்றிய சாக்லேட்களை அறிமுகம் செய்தவர்கள் நகரவாசிகள்தான். எங்கள் ஊர் வளையல்காரர் விற்கும் அதே டிசைன் வளையலாக இருந்தாலும், பட்டணத்திலிருந்து வாங்கிக்கொடுத்தால் அதற்கு தனி மவுசு உண்டு. ' என் மவ கல்யாணமாகி நகரத்துக்குப் போகப்போகுது' என்று சொல்வதுதான் கிராமத்து அப்பாக்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சந்தோஷமே.

நான் வேலைக்காக சென்னை செல்கிறேன் என்றவுடன் ஊரே என்னைக் கொண்டாடியது. எனக்கும்கூட கனவு சிறகு முளைத்து. முனியம்மா பாட்டி ஓட்டிய அத்தனை படங்களும் கண்ணில் கலர் கலர் கனவுகளாக மிதந்தன. சென்னைக்கு ரயில் ஏறிய அந்த நிமிடம் வானில் பறந்தேன். சென்னை எனக்குப் புது வாழ்க்கையையும் நாகரிகத்தையும் அறிமுகம் செய்தது. சென்னையிலிருந்து முதல்முறை ஊருக்குத் திரும்பும்போது ஆடையிலிருந்து காலணி வரை முழுவதுமாக சென்னைவாசியாக மாறி, படித்த தோழிகளை பொறாமைகொள்ளச் செய்தது என்னவோ உண்மைதான். ஆனால், சிறுவயதிலிருந்து நான் பார்த்து வளர்ந்த அத்தனை பழக்க வழக்கங்களையும் நகர வாழ்க்கை என் மனதுக்கு தூரமாக்கியது. எப்போதும் எதைப் பற்றியும், யாரைப் பற்றியும் கவலைப்படாமல் ஓடிக்கொண்டே இருக்கும் இந்த நகரவாசிகளுடன் சேர்ந்து நானும் ஓடப் பழகினாலும், என் மனது என்னவோ இன்னும் கிராமத்தைவிட்டு வர மறுக்கிறது. சொந்த ஊரிலேயே வாழ்ந்தபோது அதன் அருமையை உணரவில்லைதான். நகரத்துக்குச் சென்றபின் உணவு முதல் உறவுகளின் அண்மைக்கு வரை ஏங்கியபோதுதான் ஊரை கொண்டாடத் தொடங்கினேன். என் ஊர் என்ற கர்வமும் அப்போதுதான் துளிர்விட ஆரம்பித்தது. அதற்கான காரணங்களையும் பகிர்கிறேன்.

 கிராமம்
கிராமம்
GEORGE ANTONY

காலை ஆறு மணிக்கு மேல் உறங்கியது இல்லை எங்கள் கிராமம். கலர் கலரான மின் விளக்குகளுடன் 120 டெசிபலில் இளையராஜா பாடலை அதிரவிட்டுக்கொண்டே வரும் தனியார் பேருந்தில் முண்டியடித்து ஏறி ஸ்பின்னிங் தொழிற்சாலை வேலைக்குச் செல்பவர்கள் ஒரு புறம் என்றால், மண்ணே உலகம் என்று பொட்டல் காட்டில் தன்னம்பிக்கையை விதைத்து உழுபவர்கள் இன்னொருபுறம். வாழ்க்கையில் எதற்காகவும், யாருக்காகவும் ஓடவேண்டிய தேவையில்லாத வாழ்க்கை. 25 ரூபாய் இருந்தால் ஒரு குடும்பம் அன்றைய பொழுதைக் கடத்திவிடலாம். பீட்சா என்றால் என்ன என்று தெரியாத எங்கள் ஊர்வாசிகளுக்கு பழைய சோறுதான் சொர்க்கம்.

ஆண்களும் பெண்களும் ஒரே இடத்தில் குளிக்கும் சமத்துவத்தை விதைத்த எங்கள் கிராமம், அடுத்த பாலினத்தவரை எதிர்கொள்ளும் கண்ணியத்தையும் கற்றுத்தந்தது.

ஒரு வீட்டில் இருக்கும் டி.வி-யில் ஒன்பது குடும்பங்கள் அமர்ந்து படம் பார்க்கும் சந்தோஷத்தை, ஏசி காற்றைப் பரவவிடும் திரையரங்குகள் என்றும் தந்ததில்லை. பம்பு செட்டு வழியாகப் பாய்ந்துவரும் நீர் தரும் சுகத்தை, நான்கு சுவர்களுக்குள் பெய்யும் ஷவர் மழை தந்ததில்லை. ஆண்களும் பெண்களும் ஒரே இடத்தில் குளிக்கும் சமத்துவத்தை விதைத்த எங்கள் கிராமம், அடுத்த பாலினத்தவரை எதிர்கொள்ளும் கண்ணியத்தையும் கற்றுத்தந்தது. என்னுடைய சிறுவயதில் துணி கடைகளுக்குச் சென்ற நினைவே எனக்கில்லை. 10 செட் ஆடைகளை கடைக்காரர் வீட்டுக்கே கொண்டுவருவார். அவரிடம் தவணைக்கு வாங்கும் அந்த ஆடை கொடுத்த சந்தோஷத்தை, இன்று மால்களில் மணிக்கணக்கில் தேடி எடுக்கும் ஆடை தரவில்லை. அடுத்தவர்களின் கஷ்டத்தை வேடிக்கை பார்த்துவிட்டு என்றும் கடந்து சென்றதில்லை. யார் வீட்டில் மரணம் நிகழ்ந்தாலும் மொத்த கிராமமும் 16 நாள்கள் ஸ்தம்பித்துவிடும். ஆனால், அப்பாவின் சடலத்தை தகனம் செய்துவிட்டு, மறுநாள் அலுவலகத்துக்கு இயல்பாய் வந்த நகரத்து நண்பனின் செயலை இப்போது வரை மனது ஏற்க மறுக்கிறது. ஓடிக்கொண்டே இருப்பவர்கள், உணர்வுகளை தொலைத்துக்கொண்டிருப்பதை அப்போதுதான் உணர்ந்தேன்.

கிராமம்!
கிராமம்!

மண்வாசனை சூழ்ந்த எங்கள் கிராமத்தில் மூச்சுவிட திணறும் அளவுக்கு என்றுமே புகை சூழ்ந்தது இல்லை. தன் படிப்புக்காகப் போராடும் எங்கள் கிராமத்து தேவதைகள், ஆடைச் சுதந்திரம் பற்றிப் பேசியது இல்லை. கிழிந்த பாவாடைகளில் பச்சை, மஞ்சள் என வெவ்வேறு நிற துணிகளைத் தைத்து உடுத்தும் ஆடைகளே வறுமைக்கும் ஆசைக்கும் இடையேயான அவர்களின் போராட்டத்தை நமக்குச் சொல்லாமல் சொல்லிவிடும். யாரும் உன் வயல், என் வயல் என்று வேறுபாடு பார்த்ததில்லை. இரவு நேரத்தில் கண் இமைத்து இமைத்து போராடும் மெர்க்குரி விளக்கின் அடியில்தான் ஆண், பெண் வேறுபாடற்ற எங்களின் பள்ளி நாள்களும் படிப்பினைகளும் கழிந்தன.

விடுமுறை நாள் என்றால் குமரிகள் ஜோடி சேர்ந்து தாயம் விளையாடுவதும், இளவட்டங்கள் ஒன்று சேர்ந்து காட்டுக்குள் கறி சமைப்பதும் எங்கள் கிராமத்தின் பொழுதுபோக்கு. ஸ்டெம்ப்பாக விறகு கட்டையை ஊன்றி கிரிக்கெட் விளையாடும் எங்களுக்கு, மட்டைப் பிடிக்கத் தெரியாத கடைக்குட்டிகள்கூட சச்சின் டெண்டுல்கர்தான். கபடி விளையாட்டில் காலை இழுத்து தள்ளியவர்கள்கூட அடுத்து சில நிமிடங்களில் கட்டி அணைத்து மாமன், மச்சான் ஆகிவிடுவார்கள். அதற்காக கிராமத்தில் பிரச்னைகளே இல்லை என்று சொல்லிடவிட முடியாது. ஆனால், அத்தனை பிரச்னைகளையும் மறக்கத்தான் திருவிழாக்கள் இருக்கிறதே... தீபாவளி கொடுக்காத சந்தோஷத்தை, ராட்டினங்கள் நிறைந்த எங்கள் ஊர் திருவிழாக்கள் கொடுக்கும். போட்டிகள், ஆடல், பாடல் என்ற அத்தனை கொண்டாட்டத்தில் அனைவருமே ஒன்றாகிக் கலந்திருப்போம். இது அத்தனையும்விட காடு, மேடு, பேருந்து என கிடைக்கும் இடங்களில் மனதுக்கு பிடித்தவர்களிடம் பார்வையிலேயே காதலைக் கடத்துவது இன்னும் ஒரு சுவாரஸ்யம். உள்ளூர் பேருந்தில் கூட்டமாக இருந்தால் நின்றுகொண்டே செல்ல வேண்டுமே என்று பேருந்திலிருந்து இறங்கிவிட்ட நான், சென்னையிலிருந்து மதுரைவரை நின்றுகொண்டே பயணம் செய்யும் சூழலும் வந்தது. ஆனால், மனம் முழுக்க மகிழ்ச்சி இருந்ததால் கால் வலியோ, களைப்போ தெரியவில்லை. கிராமங்களில் எல்லோருடனும் சொந்த பந்தமாக பழகிய எனக்கு, ரயிலில் அருகில் இருப்பவர்களிடம் பேசும்போது எங்கள் ஊரின் மொழிநடையும்கூட நாகரிகமற்ற ஒன்றாகப் பார்க்கப்படுவதுதான் இப்போது வரை மனதை கணக்கச் செய்யும் ஒன்றாக இருக்கிறது.

கிராமம்
கிராமம்

எங்கள் ஊரில் நான் செய்யும் எதையும் இதுவரை அநாகரிகமான ஒன்றாகப் பார்த்து என்னை ஒதுக்கியதில்லை. நகரத்தில் அழைக்கும்படி, மச்சி, நண்பா என்ற வார்த்தைகள் என் உணர்வுகளுடன் இன்னும் ஒட்டவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். கொரோனா நேரத்தில்கூட எங்கள் ஊரில் எந்த பிரிவினையும் இல்லை. படித்து பெரிய நிறுவனங்களில் பணியாற்றியவர்கள்கூட கிராமத்தின் அருமையை உணர்ந்து விவசாயம் செய்ய நிலத்தில் இறங்குகிறார்கள். பாட்டிகள் வெற்றிலையை மடித்து வாயில் போட்டுக்கொண்டு ’ஏதோ குரோனாவாமே...’ என்று புரணி பேசிக்கொண்டு கிராமங்களை சுவாரஸ்யமாக்குகிறார்கள். நகர வாழ்க்கை உண்மையில் பரந்து விரிந்ததுதான். நாதியற்றவர்களுக்குகூட பிழைப்பைக் கொடுக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனாலும், `எங்கள் ஊருடா இது' என்று சொல்லும் அளவுக்கான சந்தோஷம் நகரத்தில் இல்லை. வாழ்க்கையை வசதிகளால் நிறைப்பதைவிட, மகிழ்ச்சியால் நிறைப்போம்.

அடுத்த கட்டுரைக்கு