Published:Updated:

குடுகுடுப்பைக்காரர்கள் - சாமக்கோடங்கிகளுடன் ஓர் இரவு! | #VikatanExclusive

குடுகுடுப்பைக்காரர்கள்
News
குடுகுடுப்பைக்காரர்கள்

குடுகுடுப்பைதான் இவர்களின் மூலதனம். வெள்ளெருக்குக் கட்டையைக் குடைந்து மேலே மாட்டுத்தோல் அல்லது உடும்புத்தோல் கட்டி பயம் பத்திரமாக அவரவர்களே செய்துகொள்கிறார்கள். மற்றவர்கள் தொடக்கூட அனுமதிப்பதில்லை.

ஊரின் எல்லைப்புறங்களில் ஒதுக்கப்பட்டு அகதிகளைப்போல வாழ்ந்த இருளர் பழங்குடிகளின் துயர வாழ்க்கையை பெருந்திரை வழியாக சமூகத்தின் பார்வைக்கு வைத்திருக்கிறது ‘ஜெய் பீம்’ படம். தினமும் இந்த மக்களைச் சாலைகளில் கடந்துபோனவர்கள்கூட, ‘அய்யோ இவ்வளவு கஷ்டமா இந்த மக்களுக்கு’ என்று ‘ஜெய் பீம்’ படத்தைப் பார்த்தபிறகு வருந்துகிறார்கள். சமூகப் புறக்கணிப்பு ஒரு பக்கம்... இன்னொரு பக்கம், எல்லாத் தடைகளையும் கடந்து அடுத்த கட்டத்துக்கு நகர நினைத்தால் சாதிச்சான்றிதழ் தராமல் அலைக்கழிப்பது ஒரு பக்கமென இந்த மக்கள் பல ஆண்டுகளாக தவித்துவருகிறார்கள்.

இருளர்
இருளர்

ஆனால், இருளர்கள் மட்டுமல்ல... பெரும்பாலான பழங்குடிகளின் நிலை அதுதான் என்பதுதான் எதார்த்த நிலை. இதுவரை பள்ளிக்கூடத்தின் பக்கம்கூட ஒதுங்காத பல பழங்குடி சமூகங்கள் தமிழகத்தில் இருக்கின்றன. இந்தத் தலைமுறை தட்டுத்தடுமாறி பள்ளிக்கூடங்களுக்குச் சென்றாலும், பிற சமூகக் குழந்தைகளோடு போட்டிபோட முடியாமல் ஒரு கட்டத்தில் மீண்டும் தங்கள பழங்குடி வாழ்க்கைக்குள்ளாகவே வீழும் நிலைதான் இருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

உதாரணத்துக்கு, குடுகுடுப்பைக்காரர்களைச் சொல்லலாம். மராட்டிய மன்னர்கள் தமிழகத்தை ஆட்சி செய்த காலங்களில் இம்மண்ணை நம்பி வந்தவர்கள் குடுகுடுப்பைக்கார்கள். மர நிழலில் தங்கி, நல்வாக்குச் சொல்லி வீடுகளில் யாசகம் பெற்றுச் சாப்பிடுவார்கள்.

ஜக்கம்மா, வள்ளியம்மா, எல்லையம்மா போன்ற பெண் தெய்வங்களை வணங்கும் இவர்கள், தமிழ், தெலுங்கு, மராட்டி, இந்தி கலந்த ஒரு மொழியைப் பேசுகிறார்கள். இந்த மொழிக்கு எழுத்து வடிவம் இல்லை. காட்டு நாயக்கர்களின் பிரிவைச் சேர்ந்தவர்களாக இவர்கள் அடையாளப்படுத்தப்படுகிறார்கள்.

குடுகுடுப்பைக்காரர்கள்
குடுகுடுப்பைக்காரர்கள்

குழுவாகக் கிளம்பி, ஓரிடத்தில் தங்கி, அந்த சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொழில் செய்வார்கள். சிவன், தன் சூலாயுதத்தால் நாவில் கீறி, தன் உடுக்கையையும் சீங்குழலையும் கையில் தந்து நீ சொல்லும் வாக்கில் நானிருப்பேன்... போய் பிழைத்துக்கொள் என்று அனுப்பி வைத்ததாக தொன்மக்கதை சொல்லும் குடுகுடுப்பைக்காரர்கள், நள்ளிரவில் எழுந்து, மயான முகப்பில் இருக்கும் அரிச்சந்திரன் கோயிலில் பூசை செய்துவிட்டு வாக்கு சொல்ல ஊருக்குள் வருவார்கள். வண்ணத் தலைப்பாகை, தோளில் நீளமான பை சகிதமாக வரும் இவர்களின் வார்த்தைகளுக்கு கிராமமே செவி கொடுக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒரு காலத்தில் கால்போன போக்கில் நடந்து நிழல் கண்ட இடத்தில் தங்கிய குடுகுடுப்பைக்காரர்கள் இப்போது ஒரிடத்தில் நிலையாகத் தங்கத் தொடங்கிவிட்டார்கள். வெகுஜன நீரோட்டத்தில் கலந்து அவர்களின் வாழ்க்கை பெருமளவு மாறிவிட்டாலும் அடுத்த கட்ட நகர்வுக்கான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.

குடுகுடுப்பைக்காரர்கள்
குடுகுடுப்பைக்காரர்கள்

ஆரணி கோட்டையைச் சூழ்ந்திருக்கும் அகழிக்குப் பின்புறமாக, சாலையை ஒட்டி பள்ளிக்கூடத் தெருவில் இருக்கிறது குடுகுடுப்பைக்காரர் குடியிருப்பு. எல்லையம்மன் கோயிலில் தொடங்கி வேப்பர மாரியம்மன் கோயிலோடு, ஒற்றை வரிசையில் முடிகிறது தெரு. இங்கு மொத்தம் 54 வீடுகள் இருக்கின்றன. அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் முற்காடாக கிடந்த இந்த இடத்தில் சிறு சிறு குடில்களைக் கட்டி தங்கினார்கள் மூத்த குடுகுடுப்பைக்காரர்கள். காலப்போக்கில் இவர்களின் குடியிருப்பை அங்கீகரித்து அரசு பட்டா வழங்கியது. மூத்தோர்கள் பலரும் இப்போதும் குடுகுடுப்பைத் தொழிலைத்தான் நம்பியிருக்கிறார்கள். சிலர், பிளாஸ்டிக் பொருள்கள் கொடுத்து பழைய துணிகளை வாங்கிவந்து தைத்து குறைந்த விலைக்கு சந்தைகளில் விற்கிறார்கள்.

முன்பெல்லாம் பெண்கள் ஊசி நூல் எடுத்துச்சென்று தெருத்தெருவாகச் சென்று கிழிந்த துணிகளைத் தைத்துத்தருவார்கள். அதற்கு கைமாறாக மீந்த உணவுகளோ, தானியமோ, சில்லரைக் காசுகளோ மக்கள் தருவார்கள். இப்போது இதுவும் மாறிவிட்டது. பிளாஸ்டிக் பொருள்கள் தந்து பழைய துணிகளை வாங்கிவந்து கிழித்து தைத்து சுருக்குபைகள் தைத்து பேன்ஸி ஸ்டோர்களில் மொத்தமாக விற்பனை செய்கிறார்கள்.

குடுகுடுப்பைக்காரர்கள்
குடுகுடுப்பைக்காரர்கள்

குடிசைகளெல்லாம் இப்போது காரை வீடுகளாக மாறிவிட்டன. ஒரு காலத்தில் குடுகுடுப்பைக்குச் செல்லும்போது மக்களிடம் பழந்துணிகளை யாசகம் பெற்று, தைத்து, அதை உடுத்தி வந்தார்கள். இப்போது எல்லோரும் நல்லுடை அணிகிறார்கள். பிள்ளைகள் பெரும்பாலும் பள்ளிக்கூடம் செல்கிறார்கள். ஆனாலும் தங்கள் மரபுகளை, பழக்க வழக்கங்களைக் கைவிடவில்லை இந்த மக்கள்.

குடுகுடுப்பைதான் இவர்களின் மூலதனம். வெள்ளெருக்குக் கட்டையைக் குடைந்து மேலே மாட்டுத்தோல் அல்லது உடும்புத்தோல் கட்டி பயம் பத்திரமாக அவரவர்களே செய்துகொள்கிறார்கள். மற்றவர்கள் தொடக்கூட அனுமதிப்பதில்லை.

பெரும்பாலும் பிள்ளைகள் அனைவருமே பள்ளிக்கூடம் செல்கிறார்கள். குடுகுடுப்பைக்காரர்கள் சமூகத்தில் பெண் குழந்தைகள் பிறக்கும்போதே திருமணம் நிச்சயித்துவிடுவார்கள். வயதுக்கு வந்ததுமே திருமணம் செய்துவிடுவார்கள். அந்த வழக்கமும் முற்றிலும் மாறிவிட்டது. இந்தக் குடியிருப்பில் 50க்கும் மேற்பட்ட பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள். அனைவருமே பள்ளிக்கூடம் செல்கிறார்கள்.

குடுகுடுப்பைக்காரர்களின் குழந்தைகள்
குடுகுடுப்பைக்காரர்களின் குழந்தைகள்

இத்தனை மாற்றங்கள் நிகழ்ந்தபிறகும் இவர்களின் வாழ்க்கையில் பெரிய ஏற்றமில்லை. இந்த சமூகத்தில் இருந்து எவரும் கல்லூரியை எட்டிப்பிடிக்க முடியவில்லை. அரசுப்பணிக்கு எவரும் வரவில்லை. காரணம், சாதிச்சான்றிதழ்.

குடுகுடுப்பைக்காரர்கள் காட்டு நாயக்கர்களில் ஒரு பிரிவினர். குமரி மாவட்டத்தில் வசிக்கும் குடுகுடுப்பைக்காரர்களை கணிக்கர்கள் என்று வகைப்படுத்தி பழங்குடியினர் சான்றிதழ் தருகிறார்கள்.

செங்கல்வராயனின் அப்பா குடுகுடுப்பைக்காரர். செங்கல்வராயன் பத்தாம் வகுப்பு வரை படித்திருக்கிறார். சாதிச்சான்றிதழ் கிடைக்காததால் அதன்பிறகு படிக்க வாய்க்கவில்லை. குடுகுடுப்பையை எடுத்துவிட்டார். அவரின் மகன் ராஜேந்திரன் எட்டாம் வகுப்பு வரை படித்தார். அவருக்கும் அதே பிரச்னை. அவரும் குடுகுடுப்பைத் தொழிலுக்கு வந்துவிட்டார். தலைமுறை கிடந்து உழல்கிறது.

படித்த குடுகுடுப்பைக்கார இளைஞர்கள்
படித்த குடுகுடுப்பைக்கார இளைஞர்கள்

தாஸ் பதினொன்றாம் வகுப்பு படிக்கிறார். பிரமாதமாகச் சிலம்பம் சுற்றுகிறார். மாநில அளவில் போட்டிகளில் பங்கேற்றிருக்கிறார். ஆனந்தராஜ் கால்பந்து வீரர். ரமேஷ் தடகளத்தில் பதக்கங்கள் வாங்கியவர். ஆனாலும் எல்லோருக்கும் அடுத்தகட்ட நகர்வுக்குத் தடையாக இருப்பது சாதிச்சான்றிதழ். அதிகாரிகள் பழங்குடிச் சான்றிதழ் தர மறுக்கிறார்கள். பல நூறு ஆண்டுகளாக யாசகம் பெற்று வாழ்ந்த சமூகம், விழுந்து எழுந்து தன்னை மாற்றிக்கொண்டு பொதுச்சமூகத்தில் கலக்கப் போராடுகிறது. அவர்களுக்கு சாதிச்சான்றிதழ் வழங்காமல் வஞ்சிப்பது நியாயமல்ல. அரசு இவர்களின் வாழ்க்கையில் கருணையால் ஒளியேற்ற வேண்டும்!