Published:Updated:

நார்வே வானத்தில் அரங்கேறிய பச்சை ஒளிக்கீற்றின் ஆனந்தத் தாண்டவம்! - ஒரு சிலிர்ப்பனுபவம் #MyVikatan

Representational Image
Representational Image

``அந்த அழகான shades எங்கிருந்து வருகின்றன. அவை, அதன் பின், நாள் முழுவதும் எங்கே சென்று மறைகின்றன என சிறுவயதில் யோசித்ததுண்டு! ’’

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

வானம் எப்போதுமே ஆச்சர்யமானது! அள்ள அள்ளக் குறையா அட்சய பாத்திரம் போல, இந்த வானம் அதன் கீழ் வாழ்வாதாரம் தேடும் எவருக்குமே அடைக்கலம் கொடுக்கும் அன்புத் தாய்... காணும் திசையாவும் காட்சிதரும் வானத்தின் மீதும், அதில் தன் வாழ்வாதாரத்தைத் தேடும் பறவைகள் மீதும் எனக்கிருக்கும் வாஞ்சை வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது!!

Representational Image
Representational Image

சூரியன் உதயமாகும்போது அல்லது அடிவானத்தில் அஸ்தமனமாகும் போது, பிரகாசமான பலவர்ண நிறங்கள் வானம் முழுவதும் விசிறியடித்தாற்போல் விந்தை காட்டும். அந்த அழகான shades எங்கிருந்து வருகின்றன. அவை, அதன் பின், நாள் முழுவதும் எங்கே சென்று மறைகின்றன என சிறுவயதில் யோசித்ததுண்டு!

இவ்வாறு, இப்பிரபஞ்சத்தின் எந்த திசையில், எந்த மூலையில் இருந்தாலும் காணக்கிட்டும் இவ்வதிசய வர்ணஜாலம்; உலகின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இன்னும் அற்புதமாக, பிரமாண்டமாக, magically தோற்றம் பெருகிறது என அறிந்ததும், அங்கு சென்று அந்த அற்புத கணங்களை தரிசிக்க வேண்டுமென தள்ளப்பட்ட உந்துதலால் போன வருடம் நவம்பர் மாதம் நார்வே நாட்டின் வடக்கு நோக்கிப் பயணப்பட்டேன்.

Representational Image
Representational Image

நான் வசிக்கும் இடத்திலிருந்து ferry மற்றும் காரிலேயே செல்லலாம் என்றாலும் அவ்வளவு நேரம் ஆவலை அடக்கிக் கொண்டிருக்குமா இந்த அற்ப மனது? அதனால் Norwagian Airlines மூலமாக வான்வழி சென்றடைந்தேன்.

நார்வேயின் வடதுருவத்திலிருக்கும் ட்ரொம்ஸோ எனும் ஒரு சிறிய, இயற்கை அன்னையால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு மிக அழகிய நகரில் எனது 4 நாள் பயணத்திற்கான தங்குமிடத்தை Air B&B மூலமாக book செய்தேன். இந்தப் பயணம் பற்றிய இன்னும் பல சுவாரஸ்யமான விஷயங்களை இன்னுமொரு கட்டுரையில் எழுதுகிறேன். ஏனெனில், இந்த நான்கு நாள் பயணத்தில், என் வாழ்வின் மிக மிக அற்புதமான கணத்தை ஒரு நாள் வாழ்ந்து வந்தேன். ஆம். Aurora என அழைக்கப்படும், பலருக்கும் பகற்கனவாகவே இருந்து போகும் அந்த Northern Lightsன் அதிசய காட்சியை, ஒரு நாள் நான் தரிசித்தேன்.

Representational Image
Representational Image

இக்காட்சியைக் காண சிறந்த வழி, கண்ணாடி இக்லூஸில் (glass igloos) இரவைக் கழிப்பதே. ஆனால் that will cost you a fortune. ஆகவே, அதை அடுத்த தடவைக்கு ஒத்தி வைத்துவிட்டு, ஒரு நடுத்தர ஓட்டலில் தங்குமிடத்தை அமைத்துக் கொண்டேன். அங்கிருந்து சிறிது தூரம் நடந்து சென்றால் மலையடிவாரத்தில் (அதிஷ்டமிருந்தால்) Northern lights எனும் அதிசயத்தைப் பார்க்கலாம் என்றார்கள்..

முதல் மூன்று நாள்களும், அந்த உறைய வைக்கும் கடும் குளிரில், உதறலோடு, கால்கடுக்கக் காத்திருந்ததுதான் மிச்சம். மாமரத்தின் மேலே அணிலை ஏறவிட்ட நாய் போல வானத்தை அண்ணாந்து பார்த்துப் பார்த்து, கண்கள் பூத்து கடைசியில் ஏமாற்றத்தோடு, என் அதிஷ்டத்தை நொந்து கொண்டே ஹோட்டல் அறை திரும்பினேன்.

Representational Image
Representational Image

நான்காவது நாள், அதே எதிர்பார்ப்போடும், உற்சாகத்தோடும் to try out my luck எனக் கடைசியாக ஒரு தடவை புறப்பட்டேன்... பகல் முழுதும் அலைந்து திரிந்தாலும் அந்த அலுப்பு சலிப்பு எதுவும் இல்லாமல், அன்றிறவு, ஆதவன் மறைந்து விட்ட ஒரு ரம்யமான இருள் சூழ் இரவில்.., அருகிலிருந்த ஒரு மலையடிவாரத்திற்குச் சென்றேன். அந்தப் பகுதியில் தங்கியிருந்த இன்னும் சில சுற்றுலாப் பயணிகளும் வந்திருந்தார்கள். மீண்டும் அதே அணில் ஏறவிட்ட நாய் போல, மேல் நோக்கி, வான் நோக்கி, அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்த போது, அந்த அதிசயம் நிகழ்ந்தது!! பல வருட தவத்தின் பலனாய் பக்தைக்குக் காட்சி தரும் பகவானைப் போல, சூரியன் ஒளிந்த, காரிருள் படர்ந்த, தெளிந்த வானத்தில், ஓர் ஓரத்தில், பச்சை, ஊதா, மற்றும் நீலம் எனக் கண்ணைப் பறிக்கும் நிறங்களில் தன் ஆட்டத்தை ஆரம்பித்தன அந்த அரோரா ஒளிவிளக்குகள்... Northern Lights!!

மெல்லிய வர்ணத்தில், ஓர் இடத்தில் தோன்றி மெல்ல மெல்ல, அந்த இருள்சூழ் வானத்தில் அடர்ந்த வர்ணக் கோலப்பொடியை கை நிறைய அள்ளித் தூவினாற் போல், தனது ஆட்டத்தை ஆரம்பித்தன அரோரா ஒளிக்கீற்றுகள்..!!

ஒரு கணம் ஸ்தம்பித்து, நான் காண்பது கனவல்ல என சுதாகரித்து, அந்த சொர்க்கலோக காட்சியைப் பரவசத்தோடு மெய் மறந்து வாய் பிளந்து பார்வையால் விழுங்கத் தொடங்கினேன்!!

Representational Image
Representational Image

சரி, இந்த Northern lights என்றால் என்னவென்று சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன்.. அரோரா பொரியாலிஸ் (Aurora Borealis) எனும் அறிவியல் (scientific name) பெயரில் அழைக்கப்படும் இந்த அற்புத ஒளி, பூமியிலிருந்து, வளிமண்டலத்தில் நுழைந்து ஆக்சிஜன் மற்றும் நைட்ரஜன் போன்ற வாயுக்களுடன் மோதுகின்ற, சூரியனிலிருந்து வெளியாகும் மின்சாரம் சார்ஜ் செய்யப்பட்ட துகள்களுக்கு இடையிலான மோதல்களால் ஏற்படும் நம்பமுடியாத ஒரு ஒளி காட்சியாகும்.

சூரிய ஒளி துகள்கள் (solar winds) பூமியின் காந்தப்புலத்தில், அதிக வளிமண்டலத்தில் நுழைந்து அயனியாக்கம் செய்வதன் காட்சி விளைவாகவே இந்த Northern lights உருவாகுகின்றன!. அவற்றின் தீவிரம்; சூரியனின் செயல்பாடு மற்றும் இந்தத் துகள்களின் முடுக்க வேகம் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும். சில நேரங்களில் இந்த solar winds வலுவானது; சில நேரங்களில் அது பலவீனமாக இருக்கும். solar winds போதுமான வலிமையுடன் இருக்கும் நேரங்களில் மட்டுமே நாம் Northern Lightsகளைப் பார்க்க முடியும்.

Representational Image
Representational Image

பொதுவாக அவை பச்சை நிறத்தில் இருக்கும். ஆனால், எப்போதாவது ஊதா, சிவப்பு, இளஞ்சிவப்பு, ஆரஞ்சு மற்றும் நீலம் போன்ற நிறங்களிலும் தோற்றம் பெரும். பச்சை நிறத்தில் இருக்கும் மிகவும் பொதுவான அரோரா நிறம் பூமியிலிருந்து 60 மைல் தொலைவில் அமைந்துள்ள ஆக்சிஜன் மூலக்கூறுகளால் உற்பத்தி செய்யப்படுகிறது. அரிதான சிவப்பு அரோராக்கள் 200 மைல் வரை உயரத்தில், ஆக்சிஜனால் உற்பத்தி செய்யப்படுகின்றன. நைட்ரஜன் வாயுக்கள் நீல அல்லது ஊதா நிற அரோராவை உருவாக்குகிறது.

Witnessing Magic எனப் பல தேவதைக் கதைகளில் படித்திருக்கிறேன். கண் முன்னே கனவிலும் நம்ப முடியா அதிசயம் நிகழ்வதை எல்லாம் தேவதைக் கதைகளில் மட்டுமே பார்த்தும் படித்தும் வந்த நான், வாழ்வில் முதன்முறையாக அந்த அதிசயம் நிஜத்தில் கூட நிகழலாம் என உணர்ந்த தருணம் அது!! உடம்பிலுல்ல அத்தனை செல்களும் சிலிர்த்துப் போன தருணம் அது!! என் கால்கள் தரையிலிருக்க நான் அழகான வர்ணங்களால் நிறம் தீட்டப்பட்ட ஒரு கனவுலோகத்தில் கரைந்து போன தருணம் அது!!! வர்ணனைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு வண்ண ஜாலம் அது....

Representational Image
Representational Image

ஓரிரு நிமிடங்களே நீடித்த அந்த வண்ண விளக்குகளின் நடன அரங்கேற்றம் மெல்ல மெல்ல கரைந்து ஒரு கட்டத்தில் காணாமல் போனது. இருள் நிறைந்த அந்த வானத்தில் எங்கிருந்தோ ஒளிந்திருந்த தேவதைக் கூட்டங்கள் ஒளிக் கீற்றுகளை வீசியடித்து விட்டு மறைந்து சென்றதுபோல, மீண்டும் ஒரு அமைதி சூழ்ந்து கொண்டது. அந்த இடத்தில் என்னைத்தவிர இன்னும் சிலர் நின்றிருந்தனர். அனைவர் கண்களிலும் தூக்கம் தொலைந்து ஏக்கம் நிறைந்திருந்தது. இன்னும் கொஞ்சநேரம் இருந்தா தான் என்ன என உள்ளம் புலம்பியபடியே வான்நோக்கிப் பார்த்துக்கொண்டிருந்தோம். சிறிது நேர எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிய, அவ்விடத்தை விட்டு நகர்ந்து மீண்டும் ஹோட்டல் அறை திரும்பினேன்.. மீண்டுமொருமுறை இந்த magical moments-இல் கரைந்து உருக இவ்விடம் வருவேன் என எண்ணியபடியே மறுநாள் காலை மீண்டும் Norwegian Airlines மூலமாக டென்மார்க் நோக்கிப் பயணப்பட்டேன்....

- றின்னோஸா

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு