Published:Updated:

`திம்பு நகர்.. பிரமாண்ட புத்தர்.. கொரோனா அச்சம்!’ - பூட்டானில் ஒன்பதாவது நாள் பயணம் #MyVikatan

பூட்டான்
பூட்டான்

"உங்கள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மிகக் குறைவாக இருக்கிறதே?" என்று கேட்டார். அன்றைய பூட்டான் மன்னர் ஜிக்மே சிங்கே வாங்சுக், "மொத்த தேசிய உற்பத்தியை விட மொத்த தேசிய மகிழ்ச்சி முக்கியமானது" என்று பதிலளித்தார்.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

பாரோ பள்ளத்தாக்கில் இறங்கி, மீண்டும் திம்பு பள்ளத்தாக்கில் ஏறினால், வடக்குப் பகுதியில் திம்பு நகரம் இருக்கிறது. திம்புவை அடைந்த போது மாலை ஏழு மணி. 3,291 கிலோ மீட்டர் தூரத்தை எட்டரை நாள்களில் கடந்திருக்கிறோம்.

பயணத்தின்போது 100 கிலோமீட்டர் வேகத்தைத் தாண்டவில்லை. இரவு 7 மணிக்குப் பிறகு பயணிக்கவில்லை. முடிந்தவரை உடற்பயிற்சி செய்தோம்.‌ பெரும்பாலும் நாங்களே சமைத்த உணவு. கொஞ்சம் கூட சோர்வு இல்லை. முதுகு, கை, கால் வலிகள் இல்லை. எந்த இடத்திலும் காவல்துறையினரால் நிறுத்தப்படவில்லை. தமிழ்நாட்டில் பார்ப்பதுபோல வேறெங்கும் காவலர்களைக் காணவில்லை. பூட்டானில் போக்குவரத்துக் காவலர்களைப் பார்க்க முடிந்தது. திம்பு, பூட்டான் நாட்டின் தலைநகரம். பாரம்பர்ய கட்டடங்களைக் காட்டிலும் மேற்கத்திய பாணிக் கட்டடங்கள் அதிகம்.

பூட்டான்
பூட்டான்

பூட்டான் ஏழை நாடு.‌ மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) என்ற அளவுகோலின் அடிப்படையில் நாட்டின் வருவாய் குறைவு. பகிர்ந்தளித்தல் நீதி சரியாக இருப்பதால், அதை விட வசதியான நாடுகளை விட மக்களின் வாழ்க்கைத் தரம் சிறப்பாக இருக்கிறது. 1972 ஆம் ஆண்டு பிரபல ஆங்கிலப் பத்திரிகையின் நிருபர் மும்பை விமான நிலையத்தில், பூட்டான் மன்னரைப் பேட்டி கண்டார். "உங்கள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மிகக் குறைவாக இருக்கிறதே?" என்று கேட்டார். அன்றைய பூட்டான் மன்னர் ஜிக்மே சிங்கே வாங்சுக், "மொத்த தேசிய உற்பத்தியை விட மொத்த தேசிய மகிழ்ச்சி முக்கியமானது" என்று பதிலளித்தார். 2008 -ஆம் ஆண்டு முடிசூட்டிக் கொண்டு தற்போதைய மன்னர் ஜிக்மே கேசர் நாம்கியல் வாங்சுக், 'மொத்த தேசிய மகிழ்ச்சி' யை தன் நாட்டின் வளர்ச்சிக் குறியீடாக அறிவித்தார். இந்த முன்மாதிரியை அனைத்து நாடுகளும் பின்பற்ற வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை அறிவுறுத்தியது. மகிழ்ச்சிக்கான குறியீடுகளை வகுத்தது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மக்களை இன்பமாக வைத்திருப்பது அரசின் கடமை என சாக்கியமுனி வள்ளுவன் வகுத்தான்.

பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்

அணியென்ப நாட்டிவ் வைந்து.

(நோயில்லாதிருத்தல், செல்வம், விளை பொருள், வளம், இன்பவாழ்வு, நல்ல காவல் இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு என்று கூறுவர்)

பூடான்
பூடான்

இந்தியாவுக்குள் பயணித்த போது, மக்களிடையே நிலவும் ஏற்றத் தாழ்வு நம் முகத்தில் அறைகிறது. அழகிய சீருடை அணிந்து, புத்தகப் பைகளைச் சுமந்து பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் ஒரு புறம். பள்ளிவேளையில் முதுகில் பைகளைச் சுமந்து கொண்டு குப்பைகள் பொறுக்கப்‌போகும் குழந்தைகள் ஒரு புறம். இந்திய நாட்டின் வளர்ச்சிக்கான குறியீடாக நாட்டின் மொத்த உற்பத்தியைக் காட்டுவது ஏமாற்று. எல்லாக் குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான கல்வியை அளிக்க முடியாத ஒரு நாட்டில், நுழைவுத் தேர்வுகளின் மூலம் கல்வியில் சமநிலையை ஏற்படுத்த முயலும் அரசை என்னவென்று சொல்வது?

பூட்டானில் எந்தப் பெரிய தொழிற்சாலைகளும் கிடையாது. வேளாண்மை, வனங்களின் மூலம் வரும் வருவாய் ஆகியவை 60 விழுக்காடு வருவாய் ஆதாரங்கள். இமயமலையின் அருவிகளைப் பயன்படுத்தி நீர் மின்சாரம் உற்பத்தி செய்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்கிறது.

புகையிலையை முழுவதுமாகத் தடை செய்திருக்கிறது. புகையிலையை வைத்திருப்பதே குற்றம். வருவாய்க்காக மது தயாரிக்கிறது. உலகச் சந்தையில் போட்டி போடும் அளவுக்கு ஒயின், விஸ்கி, பிராந்தி, வோட்கா, பியர் போன்ற எல்லா மது பானங்களையும் பூட்டான் தயாரிக்கிறது. காப்பி பிரியனான என்னால் பூட்டான் காப்பியை ரசிக்க முடியவில்லை. உணவகங்களில் பவுடர் பால் காப்பிதான்.

பூட்டான்
பூட்டான்

மூன்று நட்சத்திர விடுதியில் அன்றிரவு தங்கினோம். வசதியான அறை. இரவு, காலை இரண்டு வேளை உணவோடு சேர்த்து இரண்டு பேருக்கு 3,500 ரூபாய் வாடகை. குளிர்காலமாகையால் பாதி வாடகை.

காலை 'சாங்கங்கா லகாங்' புத்த ஆலயத்துக்குச் சென்றோம். பன்னிரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. பிறந்த குழந்தைகளை இங்கே எடுத்துக்கொண்டு வந்து பெயர் வைப்பார்கள். நம் ஊர்க் கோயில்களில் செய்வதைப்போல, குழந்தைகளுக்குக் கையில் கயிறு கட்டி விடுவார்கள். புத்தர் கோயில்களில் விதவிதமான நிறங்களில் கொடிகள் பறப்பதைப் படங்களில் பார்த்திருப்பீர்கள். குழந்தை பிறந்த தேதி, நேரம் ஆகியவற்றைப் பார்த்து குழந்தைக்கு எந்த நிறக்கொடி ராசியானது என்று பூசாரி சொல்வார். மூடநம்பிக்கைகளை எதிர்த்த அறிஞனுடைய வழிபாட்டிலும் மூடநம்பிக்கைகள் புகுந்துகொண்டன.

பூட்டான் கோயில்களுக்குள் நுழைய பேன்ட்டும் சட்டையும் அணிந்திருக்க வேண்டும். டிரவுசர், கையில்லாத டிஷர்ட்டுக்கு அனுமதி கிடையாது. முழுக்கை சட்டை அணிந்திருந்தால் மட்டுமே தக்த்சாங் கோயிலுக்குள் நுழைய அனுமதி. சுற்றுலா போகும் இடங்களில் நிறைய பேர் டிரவுசர் அணிந்து வருவதைப் பார்க்கலாம். சுற்றுலாவின்போது, அலுவலகத்துக்குப் போவதுபோல ஆடை அணியக்கூடாது. வண்ண வண்ணமான, இறுக்கமில்லாத உடைகள் அணிவது நாம் எந்தக் கட்டுப்பாட்டிலும் இல்லை என்பது போன்ற உணர்வைத் தரும். மனதின் இறுக்கத்தைத் தளர்த்தும். ஆனால் பேன்ட்டும் கை வைத்த டி-ஷர்ட்டும் அணிவது கடைகளுக்கும், வழிபாட்டு இடங்களுக்கும் போகும்போது சௌகரியமாக இருக்கும். டிரவுசர்களையும் கையில்லாத டி-ஷர்ட்டுகளையும் மாலை நேரங்களில் அல்லது தங்கும் விடுதிகளுக்குள் அணியலாம்.

கடைகள்
கடைகள்

திம்பு நகரின் அருகில் உள்ள குன்றின் மேல் பிரமாண்டமான புத்தர் சிலை இருக்கிறது. அதைப் பார்த்த பிறகு நினைவுப் பொருள்கள் வாங்குவதற்காகக் கடை வீதிக்குச் சென்றோம்.‌ இயந்திரத்தில் தயாராகக் கூடிய எந்தப் பொருளும் பூட்டானில் தயாராவதில்லை. விற்கப்படும் சிலைகள், மற்ற நினைவுப் பொருள்கள் அனைத்துமே இந்தியாவிலும் சீனாவிலும் தயாரிக்கப்பட்டவை. விலை அதிகம். உள்ளூர்க்காரர் வரைந்த ஓர் ஓவியத்தை வாங்கிக்கொண்டு புறப்பட்டோம்.

பூட்டான் சுற்றுப்பயணம் தட்பவெப்ப நிலையையும் இயற்கையையும் ரசிப்பதற்காகத்தான். பெரிய கட்டடங்களோ, புராதனச் சின்னங்களோ இங்கே கிடையாது. தேனிலவுக்குச் செல்ல சிறந்த இடம். வெளிநாடுகளுக்குச் சென்று வருவதற்கு இணையான அனுபவம் கிடைக்கும். குளிர் காலத்தில் இங்கே பனி பொழியும். போக்குவரத்து ஆபத்தானதாக இருக்கும். அந்தப் பருவத்தில் அந்தமான் தீவுகள் தேனிலவுக்கேற்ற இடம்.

புத்தர் சிலை
புத்தர் சிலை

மதியம் 12 மணிக்கு, வீடு நோக்கிய பயணத்தைத் தொடங்கினோம். வரும் வழியில் கொல்கத்தா, புவனேஸ்வர் விஜயவாடா ஆகிய நகரங்களைப் பார்க்கத் திட்டமிட்டிருந்தோம். கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மக்கள் நெருக்கமான பகுதிகளைத் தவிர்க்க முடிவு செய்தோம். இந்த மூன்று நகரங்களையும் எங்கள் பயணப் பட்டியலிலிருந்து எடுத்து விட்டோம்.

மாலை நான்கு மணி வாக்கில் பவுண்ட்ஷோலிங் நகரை அடைந்தோம். பூட்டானின் பசுமை எழிலை எங்கள் கண்களிலும் பூட்டான் மக்களின் இனிய உபசரிப்பை எங்கள் மனங்களிலும் சுமந்துகொண்டு பூட்டான் வாயிலைக் கடந்தோம். வாயிலின் மறுபுறம் தூசியும் சத்தமுமாக, குண்டும் குழியுமான சாலைகளோடு வாகன நெருக்கடியுடன் இந்தியா எங்களை வரவேற்றது.

- மருத்துவர் இரா.செந்தில் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், தர்மபுரி தொகுதி)

கட்டுரையாளரின் முந்தைய பயணக் கட்டுரைகளைப் படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்:

முதல் நாள் - https://www.vikatan.com/news/travel/travel-on-the-road-and-live-the-life

இரண்டாம் நாள் - https://www.vikatan.com/news/miscellaneous/story-of-william-lambton-who-measured-india

மூன்றாம் நாள் - https://www.vikatan.com/news/miscellaneous/william-henry-sleeman-suppressed-criminal-gangs-known-as-thuggee

நான்காம் நாள் - https://www.vikatan.com/lifestyle/travel/know-about-the-dhamek-stupa-at-sarnath-and-buddhas-preaching

ஐந்தாம் நாள் - https://www.vikatan.com/lifestyle/miscellaneous/reader-shares-gaya-travel-experience

ஆறாம் நாள் - https://www.vikatan.com/news/miscellaneous/phuentsholing-the-

ஏழாம் நாள் - https://www.vikatan.com/lifestyle/miscellaneous/a-travellerss-story-in-bhutan-amid-of-2-inches-high-snow

எட்டாம் நாள் - https://www.vikatan.com/lifestyle/miscellaneous/eighth-day-experience-in-bhutan-which-is-a-silence-place

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு