Published:Updated:

திருமண வைபோகம்..! #MyVikatan

திருமணம்
திருமணம்

கணவனோட சொந்தத்து திருமணமெனில், ஆபீஸ்ல ஆடிட், இன்ஸ்பெக்ஷன் கட்டாயம் இருக்கும். ``உங்கள மாதிரி நான் என்ன ஆபீஸில் சும்மாவா இருக்கேன்?”

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

திருமணம் என்பது எல்லோர் வாழ்விலும் கட்டாயம் நடந்தே தீர வேண்டியவற்றில் ஒன்று. ஏனெனில், 25 வயதுக்கு மேல் சொல் பேச்சு கேட்காமல் சிட்டுக்குருவி போல சந்தோஷமாக சிறகடித்துப் பறக்கும் மகனையோ, மகளையோ பலி வாங்க, சிறகுகளை ஒடித்து கூண்டில் அடைத்து ஜோசியம் சொல்ல வைப்பதுதான் பெற்றோரின் வேலை.

திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் வேற. சிலருக்கு பணப்பயிரா அமையுது. சிலருக்கு வறண்ட நிலத் தாவரமா இருக்கு. சிலருக்கு கரும்பா இனிக்குது. சிலருக்கு பாகற்காயா கசக்குது. எப்படி இருந்தாலும் பயிரைச் சுத்தி கொஞ்சம் அப்படி இப்படி களை முளைக்க மட்டும் விடாம மாமனாரும், மச்சினங்களும் சேர்ந்து களைக்கொல்லி அடிச்சிப்புடுறாங்க.

திருமணம்
திருமணம்
மாதிரிப் படம்

என்னதான் ஆயிரங்காலத்துப் பயிரா இருந்தாலும், நம்ம நெருங்கிய சொந்தங்கள் அறுவடையை என்னமோ வாரத்தின் நடுநாளான புதன்கிழமைதான் இரக்கமேயில்லாமல் வைப்பாங்க. அப்புறம் ரிசப்ஷன் வெள்ளிக்கிழமை இருக்கும். பத்திரிக்கையை கொடுக்கும்போதே, "வா! நீதான் தைரியமான ஆளாச்சே, வா பார்க்கலாம்"னு சொல்ற மாதிரி குடுப்பாங்க. சனிக்கிழமை வச்சா மண்டப வாடகை அதிகமா இருப்பதால் புதன்கிழமை வச்சிட்டு, "குடும்பத்தோட வாங்க"ன்னு குதர்க்கம் வேற.

எப்படிப் பார்த்தாலும் மூணு நாள் போச்சி. குடும்பத்தோட கெளம்பனும்னா, போருக்குக் கெளம்புறதே பரவாயில்லன்னு ஆயிடும். புள்ள குட்டிகளோட பள்ளியில விடுமுறை கேட்கும்போது, "என் மகனோட அண்ணனுக்கு கல்யாணம். போயே ஆகணும்னு கெஞ்சணும். அப்பயும் அங்க இருக்கும் டீச்சருங்க, "இவனுக்கு கல்யாணும்னா லீவு போடுங்க, இல்லாட்டி லீவ் போடாதீங்க"ன்னு மெரட்டுங்க.

நம்ம வீட்டுக்காரம்மா வேலையிலிருந்தால், பதில் இரண்டு வகைப்படும்.

(1) கணவனோட சொந்தத்து திருமணமெனில் ஆபீஸ்ல ஆடிட், இன்ஸ்பெக்ஷன் கட்டாயம் இருக்கும். ``உங்கள மாதிரி நான் என்ன ஆபீஸில் சும்மாவா இருக்கேன்?”

(2) மனைவியோட சொந்தக்காரங்களா இருந்தா, அது சனிக்கிரகம் அளவு தூரத்து சொந்தமாயிருந்தாலும் ``நல்லது, கேட்டதுக்கு நாம போனாதானே நாளைக்கு நமக்கு வருவாங்க. ஒங்க சொந்தத்துல மாதிரி பொழுதுனிக்கும் கல்யாணமும், எழவும் மாறி மாறியா வருது?“ னு பேச்சு வரும். அப்படியும் நாம போகலேன்னா, நம்ம கல்யாணத்துக்கு கருமாதி வரும்.

ஆண்கள் ஆபீசுக்கு லீவு கேட்டுப் போனால், அதே நாளில்தான் பாஸோட சொந்தக்காரங்க திருமணம் ஒண்ணு இருக்கும்.

பாஸ் : நானும் அன்னைக்கு லீவுங்க. நம்ம ரெண்டு பெரும் இல்லாம ஆபீஸ் எப்படி நடக்கும்?

பாஸ்
பாஸ்
மாதிரிப் படம்

நாம : (ரெண்டு பேரும் இருக்கும்போதே நடக்காது.) இல்ல சார் ரொம்ப சொந்தம்.

பாஸ் : ரிப்போர்ட்ஸ் எல்லாம் பெண்டிங் இருக்குது. கல்யாணத்த பார்த்துட்டு, பந்தியிலகூட உட்காராம உடனே கெளம்பி வந்துடுங்களேன்.

ஆனா, பாஸ் அவரோட தொலைதூரத்து திருமணத்துக்குப் போனாலும் நாலஞ்சி நாலு தொலஞ்சி போயிடுவாரு.

அந்தக் காலத்துல கல்யாணம் நடக்கும்போது, பொண்ணுங்க சிரிக்கவே சிரிக்காது. குமிஞ்ச தல நிமிராது. தாவாங்கொட்டையை புடிச்சி தூக்கிதான் தாலியே கட்டணும். பேசாது. அப்படியே பேசுனாலும் கேட்காது. ஒழுங்கா குரலை கேட்கவே ஒரு வாரம் ஆகும். அப்புறம் பேச ஆரம்பிச்சா வாயவே மூடாதுங்க.

அதுவும் பொண்ண கூட்டிட்டு போகும்போது, ஏதோ புள்ளைய கடத்துற மாதிரி குடும்பமே சேர்ந்து ஒப்பாரி வைப்பாங்க. அழுவலேன்னா, பாசம் கம்மினு சொல்லிடுவாங்கன்னு போட்டி போட்டுக்கிட்டு அழுவாய்ங்க. எழவு வீட்டில் பெண்கள் அழுகையே வராம அடுத்தவங்களை கட்டிப் புடிச்சிட்டு சீரியல் சீனையெல்லாம் நெனச்சி அழுவுற மாதிரி. சில பெண்கள் உமிழ் நீரை கண்ணீரா பூசிட்டு நடிச்சா, சிலதுங்க ஆஸ்கார் விருதுக்கு போட்டி நடக்குற மாதிரி எழவுல அழுவுங்க. உயிரோட இருக்கும்போது சாப்பாடு போடாம, மாமியார், மாமனார் செத்ததுக்கப்புறம் மருமகள் அழுவுறதெல்லாம் வேற லெவல். யாராவது ரெண்டு பேரு மருமகளை கைத்தாங்களா கூட்டிட்டு போய் சாப்பிட வச்சாதான் சாப்பிடுங்க.

ஆனா, இப்பெல்லாம் கல்யாணத்துக்கு போனா, ஏதோ அறுபதாம் கல்யாணத்துக்குப் போன மாதிரி இருக்கு. பெண்ணும் மாப்பிள்ளையும் பேச்சு போட்டில பேசுற மாதிரி மாறி மாறி பேசிட்டேதான் இருக்குதுங்க. அதுவும் பொண்ணு, "அதோ அந்த ஆளு எங்கப்பாகிட்ட நாற்பதாயிரம் கடன் வாங்கிட்டு தர மாட்றான். ஆனா வெள்ளைச்சட்டை போட்டுட்டு வந்துடறான்". "அதோ, அந்த பெண்ணுக்கு இவ்வளவு நீள முடியே கிடையாது. சௌரினு நினைக்கறேன்." "அந்த சொட்ட தலையன் என்ன பொண்ணு கேட்டு வந்தான். முடியாதுன்னு தொரத்தி உட்டுட்டோம்” அப்படீன்னு நான்ஸ்டாப்பா பேசிட்டு இருக்குங்க.

கல்யாணம் பண்ணுவதில் 90% மாப்பிள்ளைகள் என்ஜினீயரா தான் இருப்பாங்க. அவன்கூட படிச்ச பாதிபேரு "பொண்ணு மொக்கையா இருந்தா பரவாயில்லையே"ன்னு வேண்டிக்கிட்டே வந்துருப்பாங்க. வரும்போதே ஒரு கேக் ஒண்ணு, நுரை டப்பா, பேப்பரா கொட்டுற பட்டாசு இது மூணையும் வாங்கிட்டு வந்துட்டு ஏதோ ராக்கெட்ட அனுப்புன விஞ்ஞானிகள் மாதிரி 50 பேரும் நின்னு ஒரு போட்டோ.

அப்புறம் மாப்பிள்ளையும் பொண்ணும் சேர்ந்து பாடுவாங்க. அதுக்குள்ள சொரணை இருப்பவன் எல்லாம் துண்டை தூக்கிட்டு ஓடி வந்துடனும். மைக்க வாயோட ஒட்டி வச்சிக்கிட்டு கர் புர்னு சத்தத்தோட பாடுவதையெல்லாம் காது கேட்காதவனும், அந்த ஜோடிய பெத்தவங்கலும்தான் பார்த்து ரசிக்க முடியும்.

திருமணம்
திருமணம்
மாதிரிப் படம்

திடீர்னு கல்யாணத்துல கரகாட்ட கோஷ்டி ஆடிட்டே மணவறைக்குப் போகும். கடைசீல பார்த்தா, முன்னாடி குத்து போட்டதுதான் பொண்ணு, மாப்பிள்ளையா இருக்கும்.

அப்போதெல்லாம் கூரைப்புடவையில் மணப்பெண் பாந்தமா இருப்பாங்க. இப்போவெல்லாம் மணப்பெண் நைட்டிலயே வந்துடுதுங்க. இல்லாட்டி கவுனு. அப்பெல்லாம் மணமகன் சின்ன பையனா திருதிருனு முழிச்சிட்டு இருப்பான். இப்பெல்லாம் மணமகன் விருமாண்டி மீசை, ஹன்டில்பார் தாடியோடவே வலம் வர்றாங்க.

அதிக மக்கள்தொகையிருந்தா வல்லரசாகலாம்னு யாரோ இந்தியால சொல்லிட்டாங்க போல. கல்யாணத்துக்கு போயிட்டு வந்த பத்தாவது மாதம் மீண்டும் சொந்தாக்காரர் வந்து வாசல்ல நிப்பாரு.

நம்ம: "இப்ப என்னங்க?"

அவரு : "வளைகாப்பு புதன்கிழமை வச்சிருக்கோம்... கண்டிப்பா குடும்பத்தோட வரணும்".

அவரு வீட்டு வளைகாப்பு, பேரன் பொறப்பு , மொட்டை போடுறது எல்லாம் முடிச்சிட்டு வீட்டுக்கு வந்து படுத்தா, கதவைத் தட்டுவாங்க. கதவைத் திறந்தா மீண்டும் அவரு நிற்பார்.

நம்ம: "இப்ப என்னங்க?"

அவரு : "சின்ன பையனுக்கு கல்யாணம், புதன்கிழமை வச்சிருக்கோம். குடும்பத்தோட நீங்க கட்டாயம் வரணும்."

எது எப்படியோ. தண்ணியே இல்லேன்னாலும் இந்த ஆயிரங்காலத்து பயிர் மட்டும் இன்னும் வௌஞ்சிட்டேதான் இருக்குது.

- கு.அசோக் குமார்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு