Published:Updated:

`பட்டுப்பாதை.. ஆலங்கட்டி மழை.. இரண்டு இஞ்ச் உயரப் பனி!' - பூட்டான் பயணம் #MyVikatan

பூட்டான்

``பனிக் கட்டிகள் உருகாமல் சாலையின் இரண்டு பக்கமும் வெள்ளை வெளேரென்ற பனிப் போர்வை. புகைப்படம் எடுப்பதற்காக காரை சாலையின் ஓரத்தில் நிறுத்தினேன். மீண்டும் காரை எடுத்தால் சக்கரம் சுற்றிக்கொண்டே இருந்தது."

`பட்டுப்பாதை.. ஆலங்கட்டி மழை.. இரண்டு இஞ்ச் உயரப் பனி!' - பூட்டான் பயணம் #MyVikatan

``பனிக் கட்டிகள் உருகாமல் சாலையின் இரண்டு பக்கமும் வெள்ளை வெளேரென்ற பனிப் போர்வை. புகைப்படம் எடுப்பதற்காக காரை சாலையின் ஓரத்தில் நிறுத்தினேன். மீண்டும் காரை எடுத்தால் சக்கரம் சுற்றிக்கொண்டே இருந்தது."

Published:Updated:
பூட்டான்

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

இரவு பவுண்ட்ஷோலிங் நகரில், தி ஆர்கிட் விடுதியில் தங்கினோம். உணவு வேளையின் போது மொஹில் அறிமுகமானார். இண்டிகோ விமான நிறுவனத்தின் பைலட். அவருக்கு வயது 55. மனைவிக்கு 53. சென்னையைச் சேர்ந்தவர்கள். சிலிகுரி விமான நிலையமான பாக்டோரா விமான நிலையத்தில் இறங்கி, இரண்டு சக்கர வாகனத்தை வாடகைக்கு எடுத்து ஓட்டி வந்திருந்தார்கள். பூட்டான் முழுவதையும் இரண்டு சக்கர வாகனத்தில் சுற்றுவது அவர்கள் திட்டம். 14 இரண்டு சக்கர வாகனங்கள் கொண்ட குழுவில் அவர்கள் இருந்தார்கள்.‌ சாகசப் பயணங்களை ஏற்பாடு செய்யும் ஒரு நிறுவனம் அவர்கள் பயணத்தை ஏற்பாடு செய்திருந்தது. சாகசத்துக்கு வயதில்லை!

பூட்டான்
பூட்டான்

வரவேற்புப் பணியில் இருந்தவர் எங்களுக்கு உதவ அவர் நண்பர் ராஜுவை வரவழைத்தார். ராஜு அனுமதி கடிதங்களுக்கு ஏற்பாடு செய்தார். 1600 ரூபாய் கட்டணம். காலை ஒன்பது மணிக்கு எங்கள் வாகனத்திற்கு மாசு சான்றிதழ் பெற்று, பின்னர் போக்குவரத்து அலுவலகத்தில் வாகன அனுமதி பெற்றோம். வாகன அனுமதி பெற, வாகனத்தின் ஓட்டுநரும், உரிமையாளரும் ஒருவராக இருக்க வேண்டும். மற்றொருவருடைய வாகனத்தை ஓட்டிச் செல்வதாக இருந்தால் உரிமையாளரின் அனுமதிக் கடிதம் வேண்டும்.

அனுமதிக் கடிதம் வாங்கும் இடத்தில் 50 பேர் நிற்கும் வரிசை இருந்தது. எங்களுடைய ஆவணங்களின் நகல்களோடு ஒரு பெண்மணியை ராஜு நிறுத்தியிருந்தார். வரிசையில் முப்பதாவது நபராக அவர் நின்றுகொண்டிருந்தார்.‌ ஒரு மணி நேரமாகும் என்று நினைத்தோம். பிறகுதான் தெரிந்தது நிற்கிற ஒவ்வொருவரும் பத்துப் பதினைந்து அல்லது அதற்கும் மேற்பட்டவர்களின் ஆவண நகல்களோடு வரிசையில் நின்றிருந்தார்கள். எங்களுடைய முறை வருவதற்கு மதியம் இரண்டரை மணி ஆகிவிட்டது. இந்த அனுமதிக்கு எளிய ஆன்லைன் வசதி செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும்.

அறையைக் காலி செய்து விட்டுப் புறப்படும்போது மாலை நான்கரை மணி. பூட்டானில் சாலை விதிகளை மிகச்சரியாகக் கடைப்பிடிக்கிறார்கள். இங்கிலாந்தில் மூன்று ஆண்டுகள் கார் ஓட்டிய அனுபவம் எனக்கு உண்டு. எனவே, தொடக்கத்தில் நான் கார் ஓட்டினேன். இருமருங்கிலும் கரும்பச்சை நிறத்தில் அடர்த்தியான காடுகள். பெரிய பாறைகளை வெட்டி அமைக்கப்பட்ட சாலை. ஆறு மாதங்களுக்கு முன்பு சைக்கிள் ஓட்டும் போது கீழே விழுந்து என் இடது கை மணிக்கட்டு எலும்பு உடைந்தது. அதற்கு அறுவை சிகிச்சை செய்து பிளேட் பொருத்தியிருந்தது. அந்த ப்ளேட் வலி கொடுத்ததால் இரண்டு வாரம் முன்பு மறுபடியும் அறுவை சிகிச்சை செய்து பிளேட்டை எடுத்து விட்டார்கள். இருந்தாலும் மிக லேசான வலி இருந்தது. மலைச்சாலையில் அடிக்கடி கியரை மாற்றும்போது கொஞ்சம் வலி கொடுத்தது.‌

பூட்டான்
பூட்டான்

இமயமலையில் ஓட்டும் போது மட்டும்தான் ஆட்டோமேட்டிக் கியர் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் தோன்றியது. திடீரென்று லேசான தூறல். கொஞ்ச தூரம் சென்றால் நன்றாக ஆலங்கட்டி மழை பொழிந்திருப்பது தெரிந்தது. கடும் குளிர்ப் பிரதேசமாக இருப்பதால் பனிக் கட்டிகள் உருகாமல் சாலையின் இரண்டு பக்கமும் வெள்ளை வெளேரென்ற பனிப் போர்வை. புகைப்படம் எடுப்பதற்காக காரை சாலையின் ஓரத்தில் நிறுத்தினேன். மீண்டும் காரை எடுத்தால் சக்கரம் சுற்றிக் கொண்டே இருந்தது! ஓர் இரண்டு இஞ்ச் உயரப் பனிதான். பயணம் புறப்படுவதற்கு இரண்டு வாரங்கள் முன்புதான் நான்கு டயர்களையும் மாற்றியிருந்தோம்.

ஒரு வழியாக காரை எடுத்தோம். பனி மிக ஆபத்தானது. ட்ரைவிங் மேனுவல் என்ற புத்தகத்தில் வெவ்வேறு வேகங்களில் கார் போகும் போது, பிரேக்கை அழுத்தினால் எவ்வளவு தொலைவில் நிற்கும் என்ற பட்டியலிருக்கும். ஈரமான சாலையில் அந்த தூரம் அதிகமாக இருக்கும். சாலையில் எண்ணெய் இருந்தால் இந்த தூரம் மூன்று, நான்கு மடங்காகும். இறுகிய பனியின் மேல் பிரேக் போட்டால் கார் நிற்காது. ஏதேனும் தடையில் இடித்து நின்றால்தான் உண்டு என்று அந்தப் புத்தகத்தில் இருக்கும்.

இந்தப் பாதை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சீனாவையும் இந்தியாவையும் இணைத்த பாதை. பட்டுப்பாதை என்று அழைக்கப்பட்ட இந்தப் பாதை, இந்தியத் துணைக்கண்டத்திற்கும் சீன நாட்டுக்குமிடையே வணிக, கலாசாரப் பாலமாக விளங்கியது. செல்லும் வழியில் பல அருவிகள். இமயமலையின் அருவிகளும் ஆறுகளும் மலைச் சிகரங்களின் மேலுள்ள பனி உருகுவதால் தோன்றுபவை.

திடீரென்று கார் சக்கரத்திலிருந்து சத்தம் வரத் தொடங்கியது. காரை நிறுத்தி பஞ்சர் ஆகிவிட்டிருக்குமோ என்று பார்த்தோம். பஞ்சர் இல்லை. நாங்கள் அதிக எடையில் பொருள்கள் கொண்டுவரவில்லை. உணவுக்காக வாங்கிய காய்கறிகள், பாத்திரங்கள், கேஸ் சிலிண்டர் இவற்றின் எடை இருந்தது. சில நண்பர்கள் கேட்டுக் கொண்டதற்காகப் புத்த கயாவில் புத்தர் சிலைகள் வாங்கியிருந்தோம். கூடுதல் எடை காரணமாக ஷாக் அப்சார்பர் அழுந்தி, சக்கரம் மேலே உராய்ந்துகொண்டிருந்தது. கார் டிக்கியில் இருந்த சிலைகளையும் புத்தகங்களையும் முன்னால் எடுத்து வைத்துக்கொண்டோம். அதற்குப் பிறகு சத்தம் வரவில்லை.

பூட்டான்
பூட்டான்

நாங்கள் பாரோ நகரத்தை அடைந்தபோது இரவு ஏழரை மணி. இரவிலும் அழகாகத் தெரிந்தது. பூட்டானின் பாரம்பர்யக் கட்டடக் கலையுடன் கட்டப்பட்ட கட்டடங்கள். பாரோ நகரம் கடல் மட்டத்திலிருந்து 7,200 அடி உயரத்தில் இருக்கிறது. இது ஊட்டியின் உயரம்தான். ஆனால், பூமத்திய ரேகையிலிருந்து மேலும் வடக்கில் இருப்பதால் கடும் குளிராக இருந்தது. 10 செல்சியஸக்குள்தான் வெப்பம் இருக்கும்.

சில்வர்பைன் விடுதியில் தங்கினோம். விடுதியில் நாங்கள் மட்டுமே தங்கியிருந்தோம். கடும் குளிராக இருந்ததால் விடுதியிலேயே சமைக்கச் சொன்னோம். அருமையான கோழிக் குழம்பும் சோறும் சமைத்துக் கொடுத்தார்கள். பூட்டான் மக்கள் அரிசிச் சோறு சாப்பிடுபவர்கள். தீட்டப்படாத அரிசி. சோறும், குழம்பும் மிகவும் சுவையாக இருந்தன. பேலியோவுக்கும் சமைப்பதற்கும் பூட்டானில் விடுமுறை விட்டுவிட்டோம்! என்ன எண்ணெய் பயன்படுத்துகிறார்கள் என்று சமையல்காரரைக் கேட்டோம். அவர் எண்ணெய் புட்டியைக்கொண்டு வந்து காட்டினார். சோயா பீன் எண்ணெய்.

அறைக்குள் ஹீட்டர் தேவைப்பட்டது. ஸ்வெட்டர் போட்டுக்கொண்டு, இரண்டு கம்பளிகள் போர்த்திக்கொண்டு தூங்கினோம்.

விடிந்ததும் பாரோ நகரைச் சுற்றிப் பார்க்க வேண்டும்.

- மருத்துவர் இரா.செந்தில் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், தர்மபுரி தொகுதி)

கட்டுரையாளரின் முந்தைய பயணக் கட்டுரைகளைப் படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்:

முதல் நாள் - https://www.vikatan.com/news/travel/travel-on-the-road-and-live-the-life

இரண்டாம் நாள் - https://www.vikatan.com/news/miscellaneous/story-of-william-lambton-who-measured-india

மூன்றாம் நாள் - https://www.vikatan.com/news/miscellaneous/william-henry-sleeman-suppressed-criminal-gangs-known-as-thuggee

நான்காம் நாள் - https://www.vikatan.com/lifestyle/travel/know-about-the-dhamek-stupa-at-sarnath-and-buddhas-preaching

ஐந்தாம் நாள் - https://www.vikatan.com/lifestyle/miscellaneous/reader-shares-gaya-travel-experience

ஆறாம் நாள் - https://www.vikatan.com/news/miscellaneous/phuentsholing-the-

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/