Published:Updated:

``வெள்ளைப் பொய்கள் மட்டும் சொல்வேன்!'' - நடிகர் ராஜேஷ் #Motivation

ராஜேஷ்
ராஜேஷ்

என்னை நூற்றுக்கு 98 பேர் பாராட்டுறாங்க. ரெண்டு பேர் காமெடியா பார்ப்பாங்க. அதைப் பத்தி கவலைப்பட மாட்டேன்.

நடிகர் ராஜேஷ் 'கன்னிப் பருவத்திலே' படம் தொடங்கி 'சர்கார்'வரை நடித்துக்கொண்டிருப்பவர். சிறந்த குணச்சித்திர நடிகரான ராஜேஷ் மிகப்பெரிய நூலகத்தை தன் இல்லத்தில் வைத்திருக்கிறார். நூல்களைத் தொடர்ந்து வாசிப்பதுடன், சிறப்பான முறையில் பாதுகாத்தும் வருகிறார். 'வாழ்வை மாற்றிய வாக்கியம்' பகுதிக்காக அவரை சந்தித்தோம்.

''நான் ஏழாவது படிச்சப்போ எங்க வாத்தியார் அரிச்சந்திரன் கதையைச் சொல்லிட்டு, அந்தக் கதையின் நீதியாக, 'உண்மையே பேசு, நன்மையே நடக்கும்'னு சொன்னார். அந்த வாக்கியம் சின்ன வயசிலேயே மனசுல தங்கிப்போச்சு. அதிலிருந்து நான் உண்மையே பேசுவேன். எனக்கு நான் உண்மையா நடந்துக்குவேன். மத்தவங்க எப்படி நினைச்சுக்கிறாங்கங்கிறது எனக்குத் தெரியாது.

Rajesh
Rajesh

கல்லூரி வாழ்க்கைக்கு வந்ததும், காந்தியின் 'சத்திய சோதனை'யை வாசிச்சேன். அது எனக்குள்ள மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துச்சு. தொடர்ந்து காந்திய நூல்கள் தொடங்கி உலகளாவிய அறிஞர்கள் பலரின் வாழ்க்கை வரலாற்றையும் வாசிக்க ஆரம்பிச்சேன்.

'உண்மையைப் பேசுகிறவர்கள் எதையும் ஞாபகம் வெச்சுக்க வேண்டிய அவசியமில்லை'னு காந்தி ஒரு இடத்துல சொல்லியிருப்பார். இந்த வரி, அந்தக் கல்லூரிப் பருவத்துல என்னை ரொம்ப யோசிக்கவெச்சது. காரணம், பொய் பேசறவங்க, முன்பு என்ன சொன்னோம்ங்கிற கன்டினியுட்டி மாறாமல் பொய் பேசணும். ஒரு உண்மையை மறைக்க ஓராயிரம் பொய் சொல்ல வேண்டி வரும்.

உண்மையே பேசணும் நன்மையே நடக்கும்ங்கிறதைத்தான், என் வாழ்க்கை சித்தாந்தமாக வெச்சிருக்கேன். இதனால நான் எவ்வளவோ இழந்திருக்கேன். உறவு, நட்புனு எத்தனையோ இழப்புகளைச் சந்திச்சிருக்கேன். குறிப்பா, சினி ஃபீல்டுல உண்மையைப் பேசினதால பல பட வாய்ப்புகளை இழந்திருக்கேன்.

சில வேளைகள்ல, மனைவி, குழந்தைகள்கிட்ட சில பொய்களைப் பேச வேண்டி வரும். அது அவங்க நன்மையைக் கருதித்தான் இருக்கும். இதை ஆங்கிலத்தில் 'வெள்ளைப் பொய்'னு சொல்றாங்க. அந்தப் பொய் அவங்களுக்கு நல்லதாகத்தான் இருக்கும். அதை ஒரு குற்றம்னு சொல்ல முடியாது.

Actor Rajesh with Saritha
Actor Rajesh with Saritha

நம்ம வள்ளுவர் இதைத்தான் இப்படி சொல்றாரு.

'வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

தீமை இலாது சொலல்.'

உதாரணமா, நாம வெளியில் பல வேலைகள்னு அங்கிட்டு இங்கிட்டு அலைகிறோம். வீட்டுக்கு சாப்பிடவும் ஓய்வெடுக்கவும் வர்றோம்.

அவங்க, வீட்டுல காலையிலிருந்து இரவு வரைக்கும் எல்லா வேலைகளையும் செஞ்சிட்டு சாப்பாடு பரிமாறும்போது, 'இது நல்லாயில்ல, அது சரியில்ல'னு சொல்லக் கூடாது. அவங்க மனசு கஷ்டப்படும். எல்லாமே நல்லா இருக்குனு சொல்லிடுவேன். நட்பு வட்டத்துக்கும் இது பொருந்தும்.

'நல்லா இருக்கு'னு பல நூறு முறை சொல்லியிருப்பீங்க. அது மனசுல இருக்காது. ஒரே ஒரு தடவை 'நல்லா இல்லை'னு சொல்வீங்க. அது அப்படியே தங்கிப்போயிடும். அதுதான் மனசுல இருக்கும். அதனால, உண்மையைப் பேசுறேன்னு எல்லா உண்மையையும் பேசிடக் கூடாது. பேசுகிற வார்த்தையில உண்மை இருக்குற மாதிரி பார்த்துக்கணும்.

நான் பொய் பேசமாட்டேன். திரிச்சு சொல்ல மாட்டேன். அதனால என்ன இழப்புகள் வந்தாலும் இந்தத் தப்பை செய்ய மாட்டேன். இதன் விளைவு... மலைபோல் வரும் கஷ்டமெல்லாம் பனிபோல் விலகும்னு சொல்வாங்க. அது மாதிரி என் வாழ்க்கையில் வந்த கஷ்டங்களெல்லாம் விலகிப்போயிடுச்சு.

Actor Rajesh
Actor Rajesh

இப்போ நான் 70 வயசைத் தாண்டிட்டேன். 'இத்தனை வருஷ தமிழ் சினிமாவின் நீக்குப்போக்குகள் இவருக்கு ஓரளவுக்குத் தெரியும்'னு நினைக்கிறாங்க. திரைப்படத்துறையில் மட்டுமல்லாம, வெளியில, பொது அரங்குகள்லகூட என் மேல் ஒரு மரியாதை இருக்கு. அதை என்னால உணர முடியுது.

அப்போ எனக்கு 45 வயசு. ஒரு வாரப் பத்திரிகையில 'உண்மைக்கு மறுபெயர் ராஜேஷ்'னு தலைப்புக் கொடுத்து எழுதியிருந்தாங்க. அதைத்தான் நான் சம்பாதித்த சொத்தா நினைக்கிறேன். நான் எம்.ஜி.ஆர், சிவாஜி, கலைஞர், ஜெயலலிதானு நான்கு பேரின் அன்பையும் பெற்றதற்குக் காரணம் இந்தக் குணம்தான். பலரும் என்னை கௌரவமா நடத்துவதற்கு மிக முக்கியமான காரணம் என்னுடைய புத்தக அறிவும் உண்மையும்தான்.
actor rajesh

சிவாஜி சார் ஒருமுறை, 'ரொம்ப பயப்படுற, ரொம்ப யோசிக்கிற, கெட்ட பேர் வரக்கூடாதுன்னு பார்க்கிற. அதனாலதான் வளர்ச்சி இல்லாமல் இருக்கிற. அதனாலதான் நீ நல்ல பேரு வாங்கி இருக்கிற'ன்னு சொன்னார். என்னை நூற்றுக்கு 98 பேர் பாராட்டுறாங்க. ரெண்டு பேர் காமெடியா பார்ப்பாங்க. அதைப் பத்தி கவலைப்பட மாட்டேன். எல்லாத்துலயும் உள்ள நல்லதை மட்டும்தான் எடுத்துக்குவேன் அன்னப்பறவை மாதிரி. இது நடந்தால் சந்தோஷம், நடக்கலைன்னா ரொம்ப சந்தோஷம்னு போய்க்கிட்டே இருப்பேன்.

Actor Rajesh
Actor Rajesh
``ரிஸ்க் எடுக்காத முட்டாள்தனத்தைப் பண்ணிராதீங்க!'' - தம்பி ராமையாவின் உற்சாக டானிக் #Motivation

வாலிப காலம் வறுமையாக இருந்ததால எந்தக் கெட்ட பழக்கமும் என்கிட்ட வரலை. குடிப்பழக்கம், புகைப்பழக்கம் எதுவும் எனக்குக் கிடையாது. இன்று வரை சுத்தமான வாழ்க்கை வாழ்ந்திருக்கேன். அதுவும் குறிப்பா சினிமா ஃபீல்டுல உண்மையைப் பேசினதால நிறைய வாய்ப்புகளை இழந்திருக்கேன். எவ்வளவோ இழந்தாலும், இத்தனை காலம் கழித்தும் உண்மையால் கிடைக்கிற அறுவடை சந்தோஷமா இருக்கு. இப்போ கிடைக்கக்கூடிய மன நிறைவு, செல்வம் இவற்றையெல்லாம் திருப்தியா ஃபீல் பண்ண முடியுது. என் சாதனைகளைவிட, என் பொருளாதாரத்தைவிட நூறு மடங்கு மரியாதையையும் கௌரவத்தையும் இந்தச் சமூகம் எனக்குத் திருப்பித் தந்திருக்கு. அது எத்தனை கோடி செலவு செய்தாலும் பெற முடியாதது!'' என்கிறார் நடிகர் ராஜேஷ் நிறைவாக.

அடுத்த கட்டுரைக்கு