Published:Updated:

``ரிஸ்க் எடுக்காத முட்டாள்தனத்தைப் பண்ணிராதீங்க!'' - தம்பி ராமையாவின் உற்சாக டானிக் #Motivation

தம்பி ராமையா

"படிச்சவன், படிக்காதவன், ஏழை, பணக்காரன், இளைஞன், முதியவர் யாராக இருந்தாலும் அவரவர் வயதுக்கும் தகுதிக்கும் தகுந்த மாதிரி கவலைகள் இருக்கத்தான்செய்யும். கவலை இல்லாத மனிதனே கிடையாது. ஆனால்..."

``ரிஸ்க் எடுக்காத முட்டாள்தனத்தைப் பண்ணிராதீங்க!'' - தம்பி ராமையாவின் உற்சாக டானிக் #Motivation

"படிச்சவன், படிக்காதவன், ஏழை, பணக்காரன், இளைஞன், முதியவர் யாராக இருந்தாலும் அவரவர் வயதுக்கும் தகுதிக்கும் தகுந்த மாதிரி கவலைகள் இருக்கத்தான்செய்யும். கவலை இல்லாத மனிதனே கிடையாது. ஆனால்..."

Published:Updated:
தம்பி ராமையா

"தெருத்தெருவா சுத்துனதுலயிருந்து தேசிய விருது வாங்கினது வரைக்கும் என் மனசை சமநிலையிலதான் வெச்சிருந்தேன். இப்படி இந்த மனசு சமநிலையில இருக்கிறதுக்கு ரெண்டு வாக்கியங்கள்தான் காரணம்'' என்று பேசத் தொடங்குகிறார், நடிகர் மற்றும் இயக்குநர் தம்பி ராமையா. வாழ்வை மாற்றிய வாக்கியம் பகுதிக்காக அவரைச் சந்தித்தோம்.

அந்த இரண்டு வாக்கியங்கள்...

Thambi Ramaiah
Thambi Ramaiah

''என் வாழ்க்கையைப் பொறுத்தவரை ரெண்டே ரெண்டு வாக்கியங்கள்தான். 'ரிஸ்க் எடுக்காதவனுடைய வாழ்க்கை முட்டாளுக்கு சொந்தம்' என்கிறார் ஓஷோ. இந்த வாக்கியம்தான் என்னுடைய எல்லா புதிய முயற்சிகளுக்கும் காரணம். போன உயிர் மட்டும்தான் திரும்ப வராது. மற்ற எல்லா விஷயங்களையும் திரும்ப மீட்கலாம். பணம், நிலம், உறவு, நட்பு எதுவாக இருந்தாலும் திரும்ப நம்மால மீட்க முடியும்.

தோல்வினு எதைச் சொல்றேன்னா, அது அவங்கவங்க மனதைப் பொறுத்தது. எங்க குடும்பத்துல, ஐந்து பிள்ளைங்களுக்கு அண்ணன் நான். தீபாவளிக்கு புதுச் சட்டை போட முடியலைங்கிறது, பட்டாசு வெடிக்க முடியலைங்கிறது, புதுப் படத்துக்குப் போக முடியலைங்கிறது எல்லாமே தோல்விதான் அந்த வயசுக்கு.

படிச்சவன், படிக்காதவன், ஏழை, பணக்காரன், இளைஞன், முதியவர் யாராக இருந்தாலும் அவரவர் வயதுக்கும் தகுதிக்கும் தகுந்த மாதிரி கவலைகள் இருக்கத்தான்செய்யும். கவலை இல்லாத மனிதனே கிடையாது. ஆனால், கவலைப்பட்டுக்கிட்டே இருக்கிறதும் வாழ்க்கை கிடையாது.

கிராமத்தை விட்டு புறப்படும்போது, உண்ண உணவு, உடுத்த உடை, உறங்குவதற்கு ஒரு வீடு இருந்தாப் போதும்னுதானே நினைச்சுப் புறப்படுவோம். இந்த மூன்றும் இருந்தால் போதும் வாழ்க்கைக்கு. இவற்றைத் தாண்டி நாம் ஆசைப்படும்போதுதான் வாழ்க்கையில் பிரச்னை வருது.

Thambi Ramaiah
Thambi Ramaiah

நம்மில் பெரும்பாலானவங்களுக்கு அவசியத்துக்கும் ஆடம்பரத்துக்கும் வித்தியாசம் தெரியாமப் போயிடுச்சு. அதுலதான் பலர் பிரச்னைகள்ல மாட்டிக்கிறாங்க. உயரத்துல இருக்கிறவங்க பலரும் துயரத்துல இருக்கிறாங்க. வெற்றியும் தோல்வியும் பொதுவுடைமை. உயிர் மட்டுமே தனியுடைமை.

வாழ்க்கையில, கிடைச்சதை வெச்சுக்கிட்டு அப்படியே இருக்கிற வரைக்கும் வாழ்வது சாதாரண மனிதனுடைய வாழ்க்கை. அதிலிருந்து மேலெழும்பி, நாம் எதையாவது சாதிக்கணும்னு நினைக்கிறது சாதனை மனிதர்களின் வாழ்க்கை. இருக்கிறது ஓர் உயிர். அது போறது ஒரே தடவை. அதற்குள்ளாக ஏதாச்சும் பண்ணிப் பார்ப்போமேங்கிற ஓர் உந்து சக்தி, ஓர் எண்ணம், ஒரு ஒளி ஒவ்வொரு மனுஷனுடைய மனசிலும் இருக்கணும். அப்படி இருந்தால்தான் மனுஷன். அப்படி இல்லைன்னா அவன் மனுஷனே கிடையாது.

அப்படி ரிஸ்க் எடுத்து வெற்றிபெற்ற மகிழ்ச்சியில் மமதை அடையாமலும், தோல்வி என்ற நிலையில் துவண்டுபோகாமலும் என்னை வைத்திருக்கும் இன்னொரு வாக்கியம், 'இந்த நிலையும் மாறும்' என்பதுதான். சின்ன வயசுல நான் படிச்ச ஒரு கதையில் வரும் நீதி, எனக்குள்ள பதிஞ்சிடுச்சு.

ஒரு ராஜா, தன் நாட்டு மக்களுக்கு ஓர் அறிவிப்பு செய்கிறார். 'இதுவரைக்கும் நாயன்மார்களும் ஆழ்வார்களும், திருவள்ளுவரும், சங்கத் தமிழ்ப் புலவர்களும் சொல்லாத ஒரு விஷயத்தைச் சொல்றவருக்கு ஆயிரம் பொற்காசுகள்'னு அறிவிச்சார்.

Thambi Ramaiah
Thambi Ramaiah

எத்தனையோ பேர் வந்து, ராஜா அறிவிச்ச அந்த தங்க வாக்கியப் போட்டியில கலந்துக்கிட்டு, ஆளாளுக்கு ஒண்ணைச் சொன்னாங்க. ஆனா, யார் சொன்ன வாசகமும் ராஜாவை திருப்திப்படுத்தலை. ராஜா வெறுத்துப்போயிட்டார். கிழிஞ்ச உடையுடன் ஒருத்தன் ராஜாவைப் பார்க்க வந்திருக்கான். அவனைக் காவலாளிகள் உள்ளே விடவே மறுத்திருக்காங்க. உப்பரிகையிலிருந்து பார்த்த அரசர், அவனை உள்ளே அனுப்பச் சொல்றார். அவன் உள்ளே வந்தான். அவனைப் பார்த்ததுமே எல்லாரும் சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க. இவன் எதுக்கு ராஜாவைப் பார்க்க வந்திருக்கான்னு கேவலமா பார்த்தாங்க. ஆனா, அவன் எந்தச் சலனமும் இல்லாமல் ராஜாகிட்ட போனான்.

'ராஜா, உங்களுக்கு முக்கியமான வாக்கியத்தைக் கொண்டு வந்திருக்கேன். அதை இந்த மோதிரத்தில் சுருட்டி வெச்சிருக்கேன். நீங்க இதை வெச்சுக்கோங்க. ஆனா, இப்ப இதைத் திறந்து பாக்கக்கூடாது. தாங்கமுடியாத கஷ்டம் வர்றப்ப பாருங்க'ன்னு சொல்லி கொடுத்துட்டுப் போயிட்டான்.

ராஜா கொஞ்சம் தெனாவட்டா இருக்கிறவரு. திடுதிப்புனு எதிரி நாட்டு அரசன் படையெடுத்து வந்து நாட்டைக் கைப்பற்றிட்டான். அரண்மனையை முற்றுகையிட ஆரம்பிச்சவுடனே ராணி, இளவரசர், குழந்தைகளெல்லாம் சுரங்கப்பாதை வழியாக வேறு இடத்துக்கு தப்பிச்சு போயிட்டாங்க. ராஜா போரிட்டுப் பார்த்தார். அவராலும் சமாளிக்க முடியாத கட்டத்தில், காட்டு வழியாகத் தப்பிச்சு ஓடிட்டார். பெரிய கஷ்டமாகிவிட்டது. பிள்ளைகள், ராணி, அரண்மனை, அந்தப்புரம்னு எதுவும் இல்லாம காடு, மலைனு போயி அலைஞ்சார்.

இப்படி ராஜா ரொம்பக் கஷ்டத்துல இருந்த ஒரு சூழல்லதான், அந்த மோதிரத்தைத் திறந்துபார்க்கிறார். அதுல இருந்தது... 'இந்த நிலையும் கடந்து போகும்'ங்கிற வாக்கியம்.

Thambi Ramaiyya
Thambi Ramaiyya

அந்த மலைக்காட்டிலிருந்த மலைவாழ் மக்களோடு கலந்து வாழ ஆரம்பிக்கிறார் ராஜா.

மலைவாழ் மக்களும் ராஜாவைக் கொண்டாடி, ஆதரித்து, அவருக்கு சாப்பாடு போட்டு, தங்கவெச்சு, பாதுகாப்பு அரணாக இருக்கிறாங்க. உடனே ராஜாவுக்கு ஒரு யோசனை தோணுச்சு. அங்குள்ள மலைப்பகுதி மக்களில் இளைஞர்கள் 500 பேரைத் தேர்வு செய்து, எல்லா போர்ப் பயிற்சிகளையும் அவங்களுக்குச் சொல்லிக்கொடுக்கிறார். அதில் எல்லோரும் பிரமாதமாகத் தயாராகுறாங்க. ஒரு நாள் திடீர்னு கிளம்பிப் போய், அந்த எதிரி நாட்டு அரசனுடன் சண்டை போட்டு வீழ்த்தி, தன்னுடைய நாட்டை மீண்டும் கைப்பற்றுகிறார்.

மரணத்தின் விளிம்பிற்கே போய் நாட்டை இழந்து, மனைவியைப் பிரிந்து, உடைமைகளை இழந்து, எல்லாம் இழந்த நிலையில் அந்த வாக்கியம் அவருக்கு மிகப்பெரிய உயிர் வாக்கியமாய் இருந்து அவரை காப்பாற்றியது. மீண்டும் அரியணையில் உட்கார்ந்தார். ராணியும் பிள்ளைகளும் வந்து சேர்ந்தனர்."