Published:Updated:

``சிவாஜி சாருக்கே அந்த அங்கீகாரம் கிடைக்கலை, நாமெல்லாம் எம்மாத்திரம்?'' - ஒய்.ஜி.மகேந்திரன் #Motivation

ஒய்.ஜி.மகேந்திரன்
ஒய்.ஜி.மகேந்திரன்

`` `வாழ்வை மாற்றிய வாக்கியம்'னு கேட்டா நிறைய சொல்லலாம். இருந்தாலும், என் பால்ய காலத்திலிருந்து என் மனசுல தங்கிப்போய் என்னை வழிநடத்துற வாசகத்தைச் சொல்றேன்.

நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் நாடகத்துறையில் 100-க்கும் அதிகமான நாடகங்களை அரங்கேற்றி 8,000-க்கும் அதிகமான மேடைகளைக் கண்டவர். திரைப்படத் துறையிலும் நகைச்சுவை நடிகராக, குணச்சித்திர நடிகராக அங்கீகாரம் பெற்றவர். `வாழ்வை மாற்றிய வாக்கியம்' பகுதிக்காக அவரைச் சந்தித்தோம்.

ஒய்.ஜி.மகேந்திரன்
ஒய்.ஜி.மகேந்திரன்

`` `வாழ்வை மாற்றிய வாக்கியம்'னு கேட்டா நிறைய சொல்லலாம். இருந்தாலும், என் பால்ய காலத்திலிருந்து என் மனசுல தங்கிப்போய் என்னை வழிநடத்துற வாசகத்தைச் சொல்றேன்.

நான் வாழ்க்கையில எதையும் ரொம்ப ரொம்ப ஈஸியா எடுத்துக்கிட்டுப் போயிடுவேன். எதுக்கும் பெருசா அலட்டிக்க மாட்டேன். எப்பவுமே ரொம்ப ஜாலியா இருந்து பழக்கப்பட்டவன். எந்த ஒரு கஷ்டமான சூழ்நிலையிலும் முடிந்த அளவு சமாளிப்பேன். முடியாத நிலைமை, மூழ்கி அடிக்கிற மாதிரி இருந்தா, தலையைத் தூக்கிக்கொண்டு வெளியில் வந்துடுவேன்

10, 12 வயசுல விவரம் தெரிய ஆரம்பிச்ச பிறகு, எனக்கு ரொம்பவும் பிடிச்சுப்போன வரிகள்னா, கண்ணதாசன் பாடல்களின் நிறைய வரிகளைச் சொல்லலாம். அவரின் பாடல்கள் சொன்ன அளவு வாழ்க்கை சித்தாந்தம், இன்பம், துன்பம், கவலை, கண்ணீர், துயரம், நம்பிக்கை, களிப்பு, வெற்றி, தோல்வி, விரக்தி, தத்துவத்தை எல்லாம் வேற எதுவும் சொல்லலைன்னு அடிச்சு சொல்வேன்.

வாழ்க்கையின் எல்லா பரிமாணங்களையும் பாடியிருக்கார் கவிஞர். பிறப்பு முதல் இறப்புவரை எல்லா விஷயங்கள் பற்றியும் அவர் எழுதியிருக்கார். அவர் எழுதாத விஷயங்கள், தொடாத அத்தியாயங்களே கிடையாது. தன் அனுபவத்திலிருந்து மனித சமூகத்துக்குத் தேவையான கருத்துகளைச் சொல்லியிருப்பார். அதனால, கண்ணதாசனின் பாடல் வரிகள் பலவும் எல்லோருக்குமே ஒரு மிகப்பெரிய பாடசாலையாக மாறி பாடம் நடத்தக்கூடியவை...

கண்ணதாசன்
கண்ணதாசன்

நான் எனக்கான பாடமாக எடுத்துக்கிட்டது, ஸ்ரீதர் இயக்கிய `சுமைதாங்கி' படத்தில் இடம்பெற்ற `மயக்கமா கலக்கமா' பாடல்! எனக்கு மிகவும் பிடிக்கும். அந்தப் பாடலில் வரும் வரிகள்...

`உனக்கும் கீழே உள்ளவர் கோடி,

நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு'

அந்தப் பாட்டை நான் என் சின்ன வயசிலிருந்தே கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலின் வார்த்தைகள் அப்படியே என் மனசுல ஒட்டிக்கொண்டன. என்னைப் பொறுத்தவரை நம்பர் ஒன் டைரக்டர்னா ஸ்ரீதர் சாரைத்தான் சொல்லுவேன். அதே மாதிரி, இசைன்னா எனக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசைதான். பாடல்னா கண்ணதாசன்தான்.

மேலே சொன்ன வரிகளைத்தான் வாழ்க்கையின் தடைகள், போராட்டங்கள், போராட்டங்களுக்கு அடுத்து கிடைக்கும் தோல்விகள் இவற்றின் போதெல்லாம் நான் நினைச்சுக்குவேன். என் நெஞ்சுக்கு நெருக்கமான இந்த வரிகள் என்கூடவே பயணிப்பவை.

என்றைக்கும் இந்தப் பாடல் வரிகள் ஏற்புடையதாக இருக்கும்.

ஒய்.ஜி.மகேந்திரன்
ஒய்.ஜி.மகேந்திரன்

சினிமாவில், நாடகத்தில் எனக்குக் கிடைக்க வேண்டிய இடம் கிடைக்காமல் போயிடுச்சு அல்லது நமக்குக் கிடைக்க வேண்டிய பொருள், பணம், புகழ் இதெல்லாம் நாம் நினைச்ச அளவு கிடைக்காமல் போயிடுச்சேனு மனசு தளர்ந்து போகும்போதெல்லாம் இந்தப் பாடல்தான் நினைவுக்கு வரும். `உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு' என்ற இந்த வரிகள், என் திருப்தியின்மைக்கு மருந்தா அமையும்.

ஒரு நடிகனாக ரொம்ப கஷ்டப்பட்டு நடிச்ச படம் ஓடாது. பக்கத்து தியேட்டர்ல குப்பையாக ஒரு படம் பிரமாதமா ஓடிக்கிட்டிருக்கும். அப்படியெல்லாம் இருக்கும்போது `என்னா வாழ்க்கை இது'ங்கிற மாதிரி ஒரு சலிப்பு உணர்வு வரும். நல்ல படம், நல்லாத்தான் நடிச்சிருப்போம். `ஆனா ஏன் இந்தப் படம் ஓடலை?'ன்னு ஆதங்கம் வரும்போது, நம்ம மனசுல பொறாமை, காழ்ப்புணர்ச்சி இதெல்லாம் தோணுவது இயற்கை. அப்படித் தோணும்போதெல்லாம், `மடையா நீ நினைக்கிற மாதிரி கிடையாது. அங்க ரோட்டுல பாருடா... உன்னைவிட 100 மடங்கு திறமையுள்ளவன் பாண்டி பஜார்ல நடந்து போயிக்கிட்டிருக்கான்'னு பொட்டுல அடிச்ச மாதிரி சொல்லும் இந்தப் பாடல் வரிகள்.

சிவாஜி
சிவாஜி

நாடகங்கள் போடும்போது ஒரு சில நாடகங்கள் சக்ஸஸ் ஆகும். ஒரு சில நாடகங்களுக்கு நாம் எதிர்பார்த்த பாராட்டும் ஆதரவும் கிடைக்காது. சில சமயம் எங்க நாடகத்தைவிட சிறப்பாக இருந்த இன்னொரு சபாவின் நாடகம் எந்த விதத்திலும் கண்டுகொள்ளப்படாமல் போயிருக்கும். சிலரின் நாடகங்களுக்கு மேடையே கிடைச்சிருக்காது. நோட்டு புக்கிலேயே அதன் வாழ்க்கை முடிந்துபோயிருக்கும்.

நாம இங்கே இருந்துகிட்டு அங்க இருக்கிறவங்களைப் பார்த்து பொறாமைப்பட்டு வருத்தமும் வேதனையும் படுவோம். ஆனா, தூரத்துல இருந்து நம்மைப் பார்த்து ஒருவன் பொறாமைப் பட்டுக்கிட்டிருப்பான். இதை முழுசா உணரும்போது வாழ்க்கையில எந்தப் பிரச்னையுமே பெருசில்லைனு புரிய ஆரம்பிக்கும்.

அவ்வளவு ஏன்... சிவாஜி சாருக்கு இணையான நடிகர் இந்த உலகத்துல உண்டா. இனி பிறக்கத்தான் முடியுமா? அவதாரப் புருஷன். அவருக்கே அவருக்குரிய அங்கீகாரம் கிடைக்கலை. `இந்திய சிறந்த நடிகருக்கான விருது, இந்தியாவின் சிறந்த நடிகருக்குக் கிடைக்கவே இல்லை'னு மறைந்த வியட்நாம் வீடு சுந்தரம்கூட ஒரு பேட்டியில சொல்லியிருந்தார். இதுதான் வாழ்க்கை. இருக்கிறதை வெச்சு திருப்தி அடைந்து கொள்ளணும்ங்கிறதுதான் இங்கு முக்கியம். இந்த விஷயத்தை ரொம்ப அழகாக கண்ணதாசன் சொல்லுவார்."

அடுத்த கட்டுரைக்கு