Published:Updated:

`மெட்டி ஒலி முதல் மொட்டைமாடி பட்டம் வரை!' - லாக் டெளன் நீட்டிப்பின் விளைவுகள் #MyVikatan

நெட் ஆன் செய்து வேலை பார்க்கலாம் என நினைக்கும்போது அந்த பரலோகத்து பரந்தாமர், பால்காரர் அவதாரமெடுத்து வருவார். வாங்கி அப்படி வைத்துவிட்டு அடுத்த வேலை பார்க்கலாம் என்றால்...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

நாடு முழுவதும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மே-17 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது நோய் பாதிப்பைக் குறைக்க சிறந்த நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்து வீட்டில் இருக்க வேண்டும். நார்மல் வாழ்க்கையில் ஒரு காமன்மேன் இன்னும் என்னென்ன கன்டினியு செய்ய வேண்டியிருக்கும் என்பது குறித்த ஜாலி பதிவு.

Representational Image
Representational Image

#வீட்டில்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் இன்னும் கன்டினியு ஆகும். காலையில் எழுந்து வாக்கிங் செல்பவர்கள் எல்லாம் மொட்டைமாடியிலயே cat வாக் போக வேண்டியதுதான். இன்னும் கொஞ்ச நாளைக்கு நாம்தான் பாக்கெட் பால் வாங்கிக் கொடுக்க வேண்டும். அந்த கபசுரக் குடிநீரைக் குடிக்கிறதை நினைத்தால் ``போற உசுரு பொட்டுனு போயிறக் கூடாதா’’ என்று நினைக்கத் தோன்றுகிறது.

``கத்தாலங்காட்டு வழி ரேஷன் கடை ரோட்டு வழி’’ என்று இந்த மாதமும் ரேஷன் வாங்க நாம்தான் போக வேண்டும். அதை நினைத்தால்தான் கொஞ்சம் கேராக இருக்கிறது. மளிகை லிஸ்ட்டில் பிள்ளையார் சுழியே ரவைதான். ஒரு கிலோ வாங்கி ஸ்டாக் வைத்திருப்பார்கள். அதை பரோட்டா சூரி போன்று சாப்பிட்டே தீர வேண்டும்.

சாயங்காலம் டீ வைத்துக் கொடுத்தால் ``இந்த டீயை மனுஷி குடுப்பாளா’’ என்று மனைவியிடமிருந்து மரியாதை மைனஸ் டிகிரிக்குப் போகும். இன்னும் சில நாளில் அலாரத்துக்கே அம்னீசியா வந்த ராத்திரி 2 மணிக்கு படுத்து பகல் 12 மணிக்கு அலாரம் வைத்து எழுவோம். ராத்திரி 2 மணிக்கு பயமில்லாமல் பாத்ரூம் போன கடைசி தலைமுறை நாம்தான்.

#மனைவியில் அன்பு மிரட்டல்கள்..

`அப்பன் புத்தி அப்பிடியே இருக்கு, புது டிஷ் கொஞ்சம் டேஸ்ட் பண்ணுங்க, நான் ஒருத்தி போயிட்டன்னா நிம்மதியா இருப்பீங்க, உனக்கெல்லாம் எதுக்கு கல்யாணம்' - என்பன போன்ற அர்ச்சனை சொற்களை இன்னும் லாக்டவுன் முடியும்வரை கேட்டாக வேண்டும். சண்டை வந்தால் சமாதானப்படுத்த ஹோட்டலுக்குக் கூட்டிக்கொண்டு போகமுடியாததால் கொரோனா சிம்டம்ஸ் வந்த மாதிரி கொய்ட்டாக இருக்க வேண்டும். அம்மாவுக்கும் மனைவிக்கும் இடையே "பார்கே பார்கே" என்று சொல்லி மாணிக்கமாக இருக்கும் நம்ம மனசை கும்கியாக்க முயற்சி பண்ண வேண்டும்.

பக்கத்து வீட்டுப் பெண்ணை பார்த்தால்கூட ஒத்துக்கொள்வார்கள் போலும். ஆனால் பத்து நிமிடம் தொடர்ந்து போன் பார்த்தால் பொங்கிவிடுவார்கள். அதனால் அளவோடு பார்த்து வளமோடு வாழ். எப்போதும் எஸ்.ஐயைப் பார்த்த ஏட்டு மாதிரி பவ்யமாக இருந்தால் உடம்புக்கு நல்லது. லீவு முடிஞ்சதும் அங்க போலாம், இங்க போலாம் என்று அரசியல்வாதி மாதிரி வாக்குறுதிகள் கொடுத்து முட்டுக் கொடுக்க வேண்டும்.

Representational Image
Representational Image

#குழந்தைகளை சமாளித்தல்..

காளகேயர்களையே விரட்டி அடிக்கும் வல்லமை நம்மிடம் இருந்தாலும் குழந்தைகளைச் சமாளிக்க முடியாத கைப்புள்ளையாகத்தான் இருப்போம். தூங்குகிற நேரம், கேம் விளையாடும் நேரம் தவிர போகோவும் சுட்டி டிவியும்தான் ஓடும். கண்ணை இரும்பாக்கிக்கடா கிரிகாலா- என்கிற மாதிரி அதையேதான் ஐம்பதாவது முறையாக அலுக்காமல் பார்க்க வேண்டும்.

``சோறு போட தாயிருக்கா ஆனா சாப்பிடு சாப்பிடுனு சொல்ல தந்தை இருக்கான்’’ என்கிற கைகாய்ந்து, தட்டுகாய்ந்து, கடைசியாக என் மண்டை காய்ந்துவிடும்.

``இன்னும் காத்து வரல, இப்ப போகாது’’ என்று பட்டம் செய்யத்தெரியாமல் ஜகா வாங்க முடியாது.. யூ டியூபில் பார்த்தாவது பட்டம் செய்வது எப்படி என்று கற்றுக் கொண்டு பட்டம் விடும்வரை நம்மை விடமாட்டார்கள்.

டூவீலரைக் கழுவுவது போலவும், பத்து பாத்திரம் தேய்ப்பது போலவும் குழந்தைகளை குளிப்பாட்டி விடுவது ஒரு கலை. அதைவிட அவர்களை தூங்க வைக்க முடியாமல் நாம் தூங்கிவிடுவது பெரிய கலை.

இவை சின்னத்திரை சீரியல் மாதிரி தொடரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

#Work from home

நெட் ஆன் செய்து வேலை பார்க்கலாம் என நினைக்கும்போது அந்தப் பரலோகத்து பரந்தாமர், பால்காரர் அவதாரமெடுத்து வருவார். வாங்கி அப்படி வைத்துவிட்டு அடுத்த வேலை பார்க்கலாம் என்றால் அதை யார் காய்ச்சுவது என்று கேட்டு நம்மைக் காய்ச்சி எடுப்பார்கள்.

இப்ப விடுறா பார்க்கலாம் என்று வேலை செய்ய ஆரம்பித்தால் ஐந்தாவது நிமிடத்தில் குழந்தைகள் வந்து நிற்பார்கள். ``அம்மா என்னை கொண்டு போய் டாய்லெட்ல விடச் சொன்னாங்க’’ என்று வந்து குழந்தை நிற்கும்.

கான்ஃபரன்ஸ் காலில் இருக்கும் போது, ``யாருப்பா இது’’ என்று HR ஐ பார்த்து குழந்தைகள் சொல்லும்போது நம்ம வேலைக்கே வெடி வைக்கும் தருணமாகத் தோன்றும்.

முறுக்குக் கடிக்கும்போது நாக்கைக் கடித்த குரலில், சார் அந்தச் சம்பளம் என்று லைட்டாக பிட்டை போட வேண்டும். அப்படி ஸ்மூத்தாகப் பேசும்போதுதான் மிக்ஸி ஓடும். பாடி கட்டாத பஸ்ஸு மாதிரி உளுந்து மாவு கிரைண்டரில் அரையும். சிங் சாங்கின் டிவி வால்யூம் டெல்லி வரை கேட்கும். இந்த வாட்டத்தைத் தடுத்து ஓட்டத்தைப் போக்க இனியாவது முயல வேண்டும்.

Representational Image
Representational Image

#இணையத்தில்

இரவு 8 மணியானால் பாட்டுப் பாடும் வெள்ளியங்கிரி அங்கிள் போன்று ஆறு மணியானால் கொரோனா எண்ணிக்கை இன்று எவ்வளவு என்று ஆர்வமாகப் பார்த்து அப்டேட் செய்ய வேண்டும். ஐபிஎல்லில் ஆர்.சி.பி டீம் போன்று நம்ம ஊர் கடைசி இடத்தில் இருக்கவே மனசு நினைக்கும். வேகமாக டவுன்லோடு ஆன படங்களெல்லாம் இப்போது நிதானமாக ஆகலாமா வேண்டாமா என்கிற ரேஞ்சில் டவுன்லோடு ஆகும்.

பச்சை மண்டலத்தில் இருப்பவர்கள் உங்களை எல்லாம் பார்த்தால் பாவமாக இருக்கு என்று சொல்வார்கள்.

ஆரஞ்சு மண்டலத்தில் இருப்பவர்கள் சிவப்பில் இருப்பவர்களைப் பார்த்து. "என்னா தம்பி என்ன ஆச்சு" என்று வடிவேலு மாதிரி கேட்கவும்.. சிவப்பில் இருப்பவர்கள் இதுவும் கடந்து போகும் என்று ஜென் நிலையில் இருப்பார்கள்.

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிச்சிட்டேன் என்று சொல்லுகிற ஐந்நூறாவது வீடியோ வாட்ஸ் அப்பில் வெளியாகலாம். நைட்டு ஒரு மணிக்கே விடியற்காலை வீரவணக்கம் என்று குட்மார்னிங் மெசேஜை அப்டேட் செய்வதைப் பொறுத்துக்கொள்ள வேண்டும். டிக்டாக்கில் இன்னும் என்னென்ன வரப்போகுதோ என்று தோன்றும். Friend லிஸ்டில் இருக்கிற எல்லோரும் கவிதை எழுதுவார்கள். புக்கே முழுசாகப் படிக்காமல் அட்டைப்படத்திலுள்ள வரிகளைப் போட்டு படிச்சுவிட்டேன் என்று சொல்லும் கூட்டம் அதிகரிக்கும்.

#வெளி இடத்தில்..

நம்ம ஜாதகத்தில உள்ள கட்டமெல்லாம் வட்டமான மாதிரி எங்க போனாலும் வட்டம்தான்.

மளிகைக் கடையில், "குடையைப் பிடித்து வட்டத்திலடைத்து நிற்கச்சொல்லுகிற உலகம்" என்று அசரீரி ஒன்று கேட்கும். மதுரை மல்லியைக் கொண்டு வரும்போது மூக்கைப் பிடிக்கும் வடிவேலு மாதிரி தம் கட்ட வேண்டும்.

வெளியூரில் இருந்து வந்தவனை கறி விருந்தின் முதல் பந்திக்கு வந்து உட்கார சேர் கிடைக்காதவரை பார்ப்பதுபோல பார்க்க வேண்டும். மொட்டை மாடியிலிருந்து விதவிதமான வாசனை வரும்.

மாற்றான் வீட்டு மட்டனுக்குத் தனி மணமுண்டு என்பது போல் இருந்தாலும் நாம் வழக்கம்போல கரித்துணியின் கருகுன வாடையவே கடைப்பிடிப்போம்.

Representational Image
Representational Image

#வாழ்க்கை ஒரு வட்டம்தான்..

ஒவ்வொரு விதிக்கும் அதற்கு சமமான அதே விதியுண்டு என்று புரிய வைத்திருக்கிறது லாக்டெளன். உடைந்த பர்னிச்சரைப் பார்த்து சொல்லும் நேசமணி மாதிரி அதேதான் அதேதாங்கிற மாதிரி..

*மெட்டி ஒலி சீரியல் பார்க்க வேண்டும்.

*sleepless, speakless ஐ இன்னும் நல்லா பழகிக்கணும்

*டிவியில் போடும் சில படங்களை தியேட்டர் ஆபரேட்டர் மாதிரி திரும்பப் திரும்பப் பார்க்க வேண்டும்.

*ஹெட்போனுக்கும் சார்ஜருக்கும் ஓய்வு இல்லை. பணிக்காலம் நீட்டிக்கப்படுகிறது.

*சலூன் கடையை எப்ப சார் திறப்பீங்க என்று கேட்டு மனைவி கையால் வடகொரிய அதிபர் மாதிரி முடி வெட்டிக் கொள்வது தொடரும்.

*டிஸ்கோ சீப்பில் தலை சீவுபவனை பேன் சீப் எடுத்து சீவ வைத்துவிட்டது என்று கொரோனா மேல் கொலைவெறி வரும்.

*மனைவியுடன் எந்த ரூபத்தில வேண்டுமானாலும் சண்டை வரலாம். அதை சமாளிக்கிற சங்கிமங்கியாக இருக்க வேண்டும்.

*மலையாள, கேரளா, தெலுங்கு படங்கள் 2019 வரை பார்த்தாச்சு. இனி 2018ஐ தேட வேண்டும்.

*முந்தாநாள் டவுன்லோடு செய்து பார்த்த படத்தை உலக தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக என்று சொல்லும் கம்பீரக் குரலை Calm ஆக கேட்க வேண்டும்.

*பெட்ரோல் விலை மாற்றமில்லை என்று வரும் செய்தியைக் கடுப்பில்லாமல் படித்துக் கடக்க வேண்டும். (கச்சா எண்ணெயே கவுந்து கெடக்கு பாஸ்)

*ஏரோப்ளேன் எங்கு வருகிறதென்று பார்த்த காலம் போய்.. ட்ரான் கேமரா ஹெலிகாப்டர் எங்கள் வீட்டு வழியாகப் போச்சே என்று பெருமையாக போனில் சொல்லலாம்.

*வித்தியாசமான கருட புராண தண்டனைகளின் பேசிக் மாடல்களை போலீசார் அத்துமீறுவோர் மீது பயன்படுத்தலாம்.

*காலையில் தாயம் ஆட ஆரம்பித்து பாம்புக் கடி வாங்காமல் விளையாட வேண்டும். விக்கெட்டு விழும் என்று இந்நேரம் ஐபிஎல் பார்த்து கத்திக்கொண்டு இருக்க வேண்டிய நாம் தாயம் விழுகுது பார் என்று வாழ்க்கை நம்மை சொல்ல வைத்துவிட்டது.

Representational Image
Representational Image

#நோயை வெல்வோம்

இதையெல்லாம் சோகமான சுமையாய் நினைத்தாலும் நோயை விரட்ட ஒத்துழைக்க வேண்டியது நம் கடமை. உரிமைக்கான பிரச்னையில் சக மனிதர்களை இழக்கக் கூடாது. வந்தே மாதரம் போன்று இன்று ஒன் டே மாத்தரம் (ஒருநாள்) வெளியே போகாமல் உறுதிமொழி எடுத்து ஒவ்வொரு நாளும் பழக வேண்டும். அத்தியாவசியத்துக்கு மட்டும் வெளியே போகலாம். ஆனால் அநாவசியமா போக வேண்டாம். இந்த நாட்களின் அவஸ்தைகளை விற்றால்தான் மகிழ்ச்சியான நாட்களை வாங்க முடியும். ``கடந்த காலம் நிகழ்காலத்துக்குக் கற்றுத் தரும் பாடம்தான் வரலாறு" என்பார் எஸ்.ரா.

இதைக்கொண்டு எதிர்காலத்தை திட்டமிடுவோம். நம் வாழ்க்கை நம் மனதில்..!

-மணிகண்ட பிரபு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு