Published:Updated:

இணைய தலைமுறையினர் கவனத்துக்கு..! #MyVikatan

Representational Image
Representational Image ( Credits : Pixabay )

ஒரு மனிதன் வாழ்வதற்கு பொருள் தேவைதான். ஆனால், பொருளீட்டுவதற்காக என்றே வாழ முடியுமா? என்பது சிக்கலான கேள்விதான்!

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

இரண்டு கைகளிலும், ஆப்பிள்களை வைத்துக்கொண்டு, வலது கையில் இருந்த ஆப்பிளை சாப்பிட்டுக்கொண்டிருந்த குழந்தையிடம் அதன் தாயார், "எனக்கு ஒன்று கொடு" என்று கேட்டார். உடனே அந்தக் குழந்தை, இடது கையில் இருந்த ஆப்பிளையும் ஒரு கடி கடித்துவிட்டது!

இதைப் பார்த்த தாய்க்கு, பிறருக்கு கொடுக்கும் குணம் நமது குழந்தைக்கு இல்லையே என்று மிகுந்த மனவருத்தம் ஏற்பட்டது.

ஆனால் அடுத்த நொடி அந்தக் குழந்தை, ``அம்மா, இந்த ஆப்பிள் சுவையாக இல்லை. நீங்கள் இந்த ஆப்பிளையே சாப்பிடுங்கள். இதுதான் சுவையாக உள்ளது" என்று வலது கையிலிருந்த ஆப்பிளை அம்மாவிடம் கொடுத்ததாம்!

ஆம்! நேர்மையான, தெளிவான, சுயசிந்தனை கொண்ட மக்கள் உருவாக வேண்டும் எனும் சமூகத்தின் பெருங்கனவின் சிறு விதையின் வேராக என்றுமே அன்புதான் அமைகிறது!

Representational Image
Representational Image

கல்வி மாற்றத்தால் சமுதாய மாற்றம் நிகழுமா? அல்லது சமுதாய மாற்றத்தால் கல்வியில் மாற்றம் நிகழுமா? என்பது பெரும் விவாதத்திற்கு உரிய ஒன்றாக அமைந்துள்ள இன்றைய சூழலில், மனிதனின் பணிச்சுமையும், அதனால் மனச்சுமையும் தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளன!

சமுதாயத்தில் சிறப்பான, மேம்பட்ட விளைவுகளை உருவாக்க, சமூகம் வீட்டுச்சூழலின் நீட்டிப்பாக இருக்க வேண்டும். வீட்டிலும் சமூகத்திலும் மனிதர்களுக்குக் கிடைக்கும் மனப்பதிவுகளில் ஓர் ஒத்திசைவு அவசியம். இந்த ஒத்திசைவை சமூகத்தில் ஏற்படுத்தலும், எது வெற்றி என்பதில் மனிதர்களுக்குத் தெளிவை உண்டாக்குதலும் இன்றைய சூழலில் சவாலான ஒன்றாகும்! இதை யார் ஏற்படுத்துவது என்பதும் பெரும் விவாதத்திற்கு உரியதே!

வீடுகளிலும், பணிபுரியும் இடங்களிலும், சமூகத்திலும் மிகுதியாக நிறைந்துவிட்ட சிக்கல்களும், அழுத்தங்களும், வெம்மையும், வெறுமையும் சூழ்ந்திருக்கும் இன்றைய நிலையில், சற்று இளைப்பாற அனைவருமே இடம் தேடுகின்றனர்.

Representational Image
Representational Image

சக மனிதனிடமிருந்து அன்பான சொற்கள் மற்றும் கனிவான சிறு சிறு செயல்களையே ஒவ்வொருவரும் எதிர்பார்க்கிறோம். ஆனால், நாம் அதை பிறருக்குக் கொடுக்கிறோமா? என்பது ஒவ்வொரு மனிதனுமே சுயவிமர்சனம் செய்துகொள்ளவேண்டிய ஒன்று!

தனி மனிதர்களின் கண்ணாடி பிம்பமே சமூகமாகும். ``நீ எதை விதைக்கிறாயோ, அதையே அறுவடை செய்வாய்” என்பார்கள்!

அன்பு, கருணை, பொறுமை, நேர்மை போன்ற உயரிய குணங்கள் எல்லாம் படிப்படியாக வழக்கொழிந்துகொண்டே போகின்றன என்பது கசப்பான உண்மை. ஆனால், கடுகடுவென்ற முகமும் சுடு சொற்களும் எதையும் சாதிக்க சக்தியற்றவை.

கோபமாக கடும் சொற்களைப் பேசுவதால், நீங்கள் சமூகத்திற்கு ஒரு குப்பை வண்டியைப் பரிசாக அளிக்கிறீர்கள்.

Representational Image
Representational Image

சிற்சில நேர்வுகளில், புதிதாக சந்திக்கும் மனிதர்களிடம் பொறுமையாகவும் அன்பாகவும் சகிப்புத் தன்மையுடனும் நடந்துகொள்ளும் மனிதன், தன் குடும்பத்தாரிடமும், பணிபுரியும் இடத்திலேயும் அவ்வாறு நடந்துகொள்வதில்லை என்பது பெரும் நகை முரணே!

நமது முன்னோர்களின் ஜீன்களில் உள்ள அடிப்படையான பண்புகள் நமது வாழ்விலும் வெளிப்படும் என்பது உண்மையானால், தற்போது நம்முடைய குணநலன்கள் நமது எதிர்கால சந்ததியின் குணநலன்களாக வெளிப்படும்தானே. நினைத்துப்பார்க்கவே அச்சமாக உள்ளது!

மனிதன், தன்னைச் சுற்றி ஒரு வட்டம் போட்டுக்கொண்டு அதனுள்ளேயே வாழ்கிறான். நாம் கோபமாக இருந்தால்தான், உரக்கப் பேசினால்தான், பிறர் நம்மை மதிப்பார்கள் என்பது பெரும் பிழை.

சமூகம் அன்பைத் துறந்து, பொருளார்வம் கொண்டதாக மாறிக்கொண்டேவருகிறது. ஒரு மனிதன் வாழ்வதற்குப் பொருள் தேவைதான். ஆனால், பொருளீட்டுவதற்காக என்றே வாழ முடியுமா? என்பது சிக்கலான கேள்விதான்.

இந்த இடத்தில், பெரும் சிந்தனையாளர்களின் கேள்விகளை எப்போதுமே மனிதன் சௌகர்யமாக மறந்துவிடுகிறான்.

Representational Image
Representational Image

``உங்கள் சந்ததியினருக்கு நீங்கள் பெரும் பொருள் ஈட்டி வைக்கிறீர்கள் என்றால், உங்கள் சந்ததியின் திறமை மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதாலா? அல்லது அவர்களால் பொருளைச் சம்பாதிக்க முடியாது எனும் நம்பிக்கையாலா?"

இதற்கான பதில் அவரவர் சிந்தனைக்கே!

நீங்கள், உங்கள் சந்ததிக்காக ஈட்டிவைக்கவேண்டிய பெரும் செல்வம், பொருட்செல்வம் அல்ல அருட்செல்வமே. அதை எப்படிச் செலவிடுவது என்பதை உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள்!

கடினமான, சகிக்க முடியாத ஒரு சூழ்நிலையில், உங்கள் முகத்தில் ஏற்படும் ஒரு சிறு புன்னகைகூட அன்றைய தினத்தில் ஆயிரக்கணக்கான மனிதர்களின் முகத்தில் புன்சிரிப்பை உண்டாக்கும் என்பது நிதர்சனமான உண்மை.

உணவு நேரத்தில், சக மனிதர்களிடம் நாம் கேட்கும் ``சாப்பிட்டீர்களா?" எனும் சிறு கேள்விகூட அவர்கள் மேலுள்ள அபரிமிதமான அன்பை வெளிப்படுத்துவதாய் மாறிவிடுகிறது.

Representational Image
Representational Image

இதைவிட சிறந்த ஒரு பண்பு மனிதனிடம் இருக்க முடியாது. ஆனால், இந்தப் பண்பை வெளிப்படுத்த பல சந்தர்ப்பங்கள் கிடைத்தும், மனிதன் ஆமை ஓட்டுக்குள் தன்னைச் சுருக்கிக் கொள்வதுபோல தனக்குள்ளேயே சுருக்கிக்கொள்கிறான்.

அரிய செயல்கள் செய்பவரைப் பாராட்டக்கூட நிறைய பேருக்கு மனம் வருவதில்லை. மனித மனத்தின் உயர்வை, மற்றவர்களை நாம் பாராட்டும் முறையில் இருந்தும்கூட அறிந்துகொள்ளலாம் தானே. இன்றைய இளைய தலைமுறை, இணைய தலைமுறையாகவே உள்ளது.

"கற்றுக்கொள்ள கற்றுக்கொடுத்தல்" என்பது அவசியமான ஒன்றாகிவிட்டது.

இணைய தலைமுறைக்குக் கற்றுக்கொடுக்க, பெற்றோர்களுக்கு ஒருங்கிணைந்த மேம்பட்ட திறன்கள் தேவைப்படுகின்றன. நற்குண வளர்ப்பிற்கான புறத்தூண்டல்கள் எதுவுமின்றி, சுய ஆர்வத்தால் தூண்டப்பட்டே இன்றும் சிற்சில பெற்றோர்கள் செயல்பட்டுவருகின்றனர்.

இத்தகைய பெற்றோர்களுக்கு, நமது அன்பெனும், நமது பாராட்டெனும் புற ஊக்குவிப்புகள், மேம்பட்ட ஒருங்கிணைந்த அவர்களின் இயல்பூக்கத்தை அதிகரிக்கச் செய்ய வல்லவை!

Representational Image
Representational Image

நண்பர்களே, நீங்கள் எத்தகைய சூழ்நிலையில் இருந்தாலும், சக மனிதனிடம் உங்கள் அன்பை, சிறு புன்னகை மூலமும் சிறுசிறு செயல்கள் மூலமும், கருணையான பார்வைகள் மூலமும் பகிர்ந்துகொள்ளுங்கள்! அன்பை வெளிப்படுத்த என அன்றாடம் அதிகப்படியான நேரத்தைச் செலவிடுங்கள். உங்கள் குழந்தைகளிடம், பெற்றோர்களிடம், குடும்பத்தாரிடம், சமூகத்திடம் அன்பை, கருணையை, பொறுமையை, சொற்களாகவும் செயல்களாகவும் தொடர்ந்து வெளிப்படுத்துங்கள்.

உங்களிடமிருந்து வெளிப்படும் அன்பெனும் துளி, பெரும் ஆழியாக மாறுவதை உங்கள் கண்முன்னே நீங்கள் காண்பீர்கள்.தாயைப் பிரிந்த குழந்தையின் ஏக்கம் போல, அன்புக்காக இந்தச் சமூகம் ஏங்கிக்கிடக்கிறது. சமூகத்தின் ஏக்கத்தைப் போக்கவேண்டியது ஒவ்வொரு மனிதனின் பெருங்கடமை.

Representational Image
Representational Image

தனிமனிதர்கள் ஒன்றிணைந்ததுதான் சமூகம். மனித சமூகம் அன்பான மனிதர்களால் நிரம்பியிருக்குமாயின், பூமியே சொர்க்கப் பூங்காவனம்தான். இந்த உலகத்தை அமைதியாய் ஆள, அன்பைவிட சிறந்த ஆயுதம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை!

அன்பெனும் ஆயுதத்தைக் கையில் எடுங்கள்! வன்மையாய் உலகை ஆளுங்கள்!

- அகன்சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு