Published:Updated:

`டைம் இல்லன்னு அடிக்கடி சொல்றவங்களா நீங்க?' - உங்களுக்குத்தான் இந்தப் பதிவு #MyVikatan

Representational Image
Representational Image ( Credits : Pixabay )

ஒரு வேலையைச் சிறப்பாகச் செய்து முடிக்க நேரம் என்பதைவிட மனம் என்பது மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

``உங்களுக்கு மட்டும் எப்படி நேரம் கிடைக்கிறது?" என்ற ஆச்சர்யமானக் கேள்வியையோ, ``எனக்கு இதற்கெல்லாம் எங்கு நேரம் இருக்கிறது?" என்ற அங்கலாய்ப்பையோ சாதனைகள் புரிந்த வெற்றியாளர்கள் சக மனிதர்களிடமிருந்து கட்டாயம் எதிர்கொண்டு இருப்பர்.

"எனக்கு நேரமே இல்லை" என்று ஒருவர் கூறுவது அந்த வேலையைச் செய்ய மறுப்பதற்கான நாகரிக புறக்கணிப்பாகவும், நான் திறமையற்றவனோ, சோம்பேறியோ இல்லை என்ற நியாயப்படுத்தலாகவும் இருக்கிறது!

ஒரு வேலை முக்கியமானது என்றால் அல்லது அந்த வேலை நமது மனதுக்கு மகிழ்வைத் தருகிறது என்றால் நாம் நிச்சயமாக அந்த வேலையை நேரம் ஒதுக்கிச் செய்வது இயல்பே. எனவே, நேரமில்லை என்பது, மனமில்லை என்ற உண்மையின் ஒரு நாகரிகப் புறக்கணிப்பான சொல்லாகவே இன்றுவரை இருந்து வருகிறது!

Representational Image
Representational Image

ஒரு சிலர் அரும்பெரும் வேலைகளையும் சாதனைகளையும் தொடர்ந்து செய்துகொண்டே இருக்க, அவர்களுடன் அதே சமூக, பொருளாதார நிலையில் இருக்கக்கூடியவர்கள் எனக்கு நேரமில்லை என்று கூறுவது ஏற்புடையதா? என்பது உங்களின் சிந்தனைக்கே!

ஒரு வேலையைச் சிறப்பாகச் செய்து முடிக்க நேரம் என்பதைவிட மனம் என்பது மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது.

நாம் செய்யக்கூடிய வேலைகள் நமக்குப் பிடித்தமானவையாக இருப்பின், நம் மனதுக்கு மகிழ்வூட்டக் கூடியவையாக இருப்பின் அந்த வேலைகளை நாம் தொடர்ந்து செய்வோம். மனமுவந்து செய்யும் இத்தகைய வேலைகளால் நமக்கு பேரும் புகழும், பொருளும் கிடைக்க ஏராளமான வாய்ப்புகள் உண்டு. இந்தப் புள்ளியில்தான் நேர மேலாண்மையின் அடிப்படைத் தத்துவமே அடங்கியுள்ளது.

அடிப்படையில் நாம் செய்யக்கூடிய வேலைகளைப் பல வகையாக பிரிக்கலாம்.

1. அடிப்படை வேலைகள்:

பல் துலக்குதல், குளித்தல் போன்ற அடிப்படையான வேலைகள் இதில் அடங்கும். இவற்றை நாம் தவிர்க்கவே முடியாது. இந்த வேலைகளுக்கான நேரமானது, காலையில் நாம் எழுந்திருக்கும் நேரத்தைப் பொறுத்து ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.

2. முக்கிய வேலைகள்:

சில வேலைகள் அன்றைய தினத்துக்கான அல்லது அந்த வாரத்துக்கான முக்கியமான வேலைகளாக இருக்கும். உயர் அலுவலர் அளித்த ஒரு வேலையை அன்றைய தினத்தில் முடித்தல், நெருங்கிய உறவுகளின் பிறந்தநாள் உள்ளிட்ட சிறப்பு தினங்கள் கொண்டாடுதல், விஷேசங்களுக்கு செல்லல், கரன்ட் பில் கட்டுவது, காஸ் சிலிண்டர் புக்கிங் போன்றவை முக்கிய வேலைகளுள் அடங்கும்.

Representational Image
Representational Image

3. அவசரமான வேலைகள்:

இந்த வேலைகள் வருவது முன்கூட்டியே நமக்குத் தெரியாது. இவை திடீரென நமக்கு உருவாகக் கூடியவை. இவை குறித்து நம்மால் முன்பே திட்டமிட முடியாது. யாரையேனும் எமர்ஜென்சியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லல், இறப்பு வீடுகளுக்குச் செல்லல், நண்பர் அல்லது உறவினர்களுக்கான அவசர உதவிகள், நமது நிறுவன நலனுக்காக அவசரமாக முடிக்க வேண்டிய முன் திட்டமிடப்படாத பணிகள் உள்ளிட்டவை இந்த அவசரமான வேலைகளில் அடங்கும்.

4. அன்றாட வேலைகள்:

இது நாம் தினசரி செய்யக்கூடிய நம்முடைய வாழ்வுக்கு ஆதாரமான வேலையான நம்முடைய பணியாகும். சமையல், வீட்டு வேலைகள், குடும்பத்தாருடன், நண்பர்களுடன் நேரம் செலவிடல் உள்ளிட்டவையும் அன்றாட வேலைகளாகும்.

5. உற்சாகமூட்டும் வேலைகள்:

நண்பர்களுடன் அல்லது குடும்பத்தாருடன் அரட்டை, சினிமா, பொழுதுபோக்கு, பார்க், பீச், ஹோட்டல் போன்றவற்றுக்கு செல்லுதல் உள்ளிட்ட வேலைகள் நமக்கு மனதுக்கு உற்சாகம் அளிக்கக்கூடிய வேலைகள் ஆகும்.

6. ஆத்மார்த்தமான வேலைகள்:

பிறருக்கு உதவுதல், உயிரினங்களிடம் அன்பு காட்டுதல், பிறர் பிரச்னைகளைக் காதுகொடுத்துக் கேட்டல் போன்றவை ஆத்மார்த்தமான வேலைகளிலும் அடங்கும்.

Representational Image
Representational Image

7. மனமகிழ் வேலைகள்:

நம்முடைய கற்பனை ஆற்றல், ஆக்கத்திறன், சிந்தனைத்திறன் போன்றவற்றுக்குத் தீனி போடக்கூடிய வேலைகள் மனமகிழ் வேலைகள் ஆகும். விளையாட்டு, எழுத்துப்பணி, வரைதல், வண்ணம் தீட்டுதல், கைவினை வேலைகள் உள்ளிட்டவை இதில் அடங்கும்.

இவ்வாறு பல்வேறு வேலைகள் நமக்கு இருப்பினும், எந்த வேலையை நாம் எப்போது, எவ்வாறு செய்கிறோம் என்பதே நமது வாழ்வில் வெற்றி தோல்விகளை நிர்ணயிப்பதாய் உள்ளது. எனவே, ஒவ்வொரு தனிமனிதனுக்கும் நேர மேலாண்மை என்பது மிகவும் அவசியமான ஒன்றாகவே அமைந்துள்ளது.

நம்முடைய நேரத்தை சிறப்பாக மேலாண்மை செய்ய சில குறிப்புகள்:

வேலைத்திட்டம்:

வெற்றிகரமான வாழ்க்கைக்கு வேலைத்திட்டம் அவசியம். ஆனால், திட்டமிட்டு வாழ்தல் எல்லா சூழ்நிலைகளுக்கும் பொருந்தாது.

மேற்கண்டவற்றுள் ஒரு சில வேலைகள் அன்றைய தினம்தான் உருவாகும். அவை குறித்து நம்மால் முன்பே திட்டமிட இயலாது. அவ்வாறு திட்டமிட்டு வாழ்வதும் நடைமுறைக்கு சாத்தியமில்லை. ஆனால், குறிப்பிட்ட ஒரு சில வேலைகள் குறித்து நம்மால் முன்பே திட்டமிட முடியும். அவை என்ன என்பதை நாம் உணர்ந்து, அவற்றுக்கு நாம் ஒதுக்க உள்ள நேரத்தையும் நாம் உரிய முறையில் திட்டமிட்டுக் கொள்ளுதலே வேலைத் திட்டத்தில் அடிப்படையான ஒன்றாகும்.

Representational Image
Representational Image

நேரக் கள்வர்கள்:

``நண்பர்களை நேரக் கள்வர்கள்" என்பார் கவிக்கோ அப்துல் ரகுமான். ஆனால், தற்போது நண்பர்களைவிட நம்முடைய பெரும் நேரக் கள்வனாக இருப்பது நமது மொபைல் போன்தான்.

போனை நாம் பயன்படுத்தக்கூடிய நேரத்தைக் கூடுமானவரை குறைத்துக்கொள்வது நமது நேர மேலாண்மையின் சிறப்பான ஓர் அம்சமாக இருக்கும். மொபைல் போனைப் பொறுத்தவரை "குறைவான நேரத்தில் நிறைவான பணி" என்பதை நம் தாரக மந்திரமாக வைத்துக்கொள்ளலாம்.

உள்ளார்ந்த ஈடுபாடு:

உள்ளார்ந்த ஈடுபாட்டை நமக்கு யாரும் ஊட்ட முடியாது. நாம் விரும்பினால் மட்டுமே அது சாத்தியம். நமக்கு ஈடுபாடு இல்லாத, வேறொருவர் சிறப்பாகச் செய்யக்கூடிய வேலைகளை நாம் செய்து முடிப்பது என்பது இயலாதது.

இவ்வாறான வேலைகளை நாம் கடினமான உழைப்பைக் கொட்டி செய்தாலும், அதில் சலிப்பே மிஞ்சும். எனவே, முதலில் நமக்கு எந்த வேலையில் ஈடுபாடு மற்றும் திறன் உள்ளது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். நமக்கு உள்ளார்ந்த ஈடுபாடு உள்ள வேலைகளை நாம் செய்யும்போது, அவற்றை நாம் எளிதாகவும் விரைவாகவும் செய்ய முடிவதுடன், அதனால் வெற்றியும் மன மகிழ்வும் ஏற்படுகிறது.

Representational Image
Representational Image

நேர்த்தி:

சிலர் தாம் செய்யக்கூடிய வேலை எதுவாயினும் அவற்றை மிக நேர்த்தியாகச் செய்வர். நேர்த்தி என்பது நேரத்தை மிச்சப்படுத்த கூடிய மிகச்சிறந்த உத்திகளுள் ஒன்றாக இருக்கிறது.

நம்முடைய அறை, மேசை, நாம் வசிக்கும் மற்றும் பணியாற்றும் இடங்கள் உள்ளிட்டவற்றை நாம் நேர்த்தியாக வைத்துக் கொண்டாலே நமது பெரும்பாலான நேரம் மிச்சப்படும்.

உதாரணமாக, நேர்த்தியாக உரிய இடங்களில் பொருள்களை நாம் வைத்திருந்தால், குறிப்பிட்ட ஒரு பொருளை நாம் தேட எடுத்துக் கொள்ளக்கூடிய நேரம் பெருமளவு குறைந்துவிடும். எனவே நேர்த்தியால் வெற்றிகள் கிடைப்பது மட்டுமல்லாது, நமது நேரம் பெருமளவு சேமிக்கப்படும் என்பது உறுதி.

விழிப்பு:

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு உயிர்க் கடிகாரம் உள்ளது என்பர். நாம் காலையில் கண்விழிக்கும் நேரத்தை அந்த உயிர்க்கடிகாரமே தீர்மானிக்கிறது. ஆனால் அந்த உயிர்க் கடிகாரத்தின் உந்துசக்தியாக நமது எண்ணமே அமைகிறது. இரவு உறங்கப் போகையில், காலையில் எத்தனை மணிக்கு கண்விழிக்க வேண்டும் என நாம் எண்ணுகிறோமோ, அந்த நேரத்துக்கு நம்மால் கண் விழிக்க இயலும். நாம் அன்றாடம் கண்விழிக்கும் நேரத்தைப் பொறுத்து நம்முடைய வேலைகளுக்கான நேரமும் தீர்மானிக்கப்படுகிறது. எனவே, நமது உயிர்க்கடிகாரத்தை நாம் பயன்படுத்துவதைப் பொறுத்து நமக்கு நேரமானது குறைவாகவோ அதிகமாகவோ கிடைக்கிறது.

Representational Image
Representational Image

கவனம்:

நாம் செய்யக்கூடிய வேலையை எந்த அளவு கவனச்சிதறல் இன்றி நம் செய்கிறோமோ, அந்த அளவுக்கு அந்த வேலை வெற்றிகரமாகவும் விரைவாகவும் முடிய வாய்ப்புண்டு. ஒரு வேலை செய்துகொண்டிருக்கும்போது மற்ற வேலைகளில் நம்முடைய கவனத்தை சிதற விடுவது எந்த ஒரு வேலையும் திறனுடன் செய்ய இயலாத நிலையை ஏற்படுத்தும். எனவே, கவனச்சிதறல் இன்றி பணியாற்ற பழகிக்கொள்வது நேரத்தை மிச்சப்படுத்தும் ஒரு மிகச்சிறந்த உத்தியாகும்.

சுருக்கம் மற்றும் தெளிவு:

பேச்சிலோ, எழுத்து வடிவிலோ நாம் கூற விரும்பிய கருத்தை முடிந்தவரை சுருக்கமாகவும் அதேநேரம் தெளிவாகவும் கூற பழகிக்கொள்ளல் வேண்டும்.

ஒன்றேமுக்கால் அடி திருக்குறளில் பெரும் கருத்துகளைக் கூற முடிந்தது எனில், நாம் முயன்றால் நமது எண்ணங்களை சுருக்கமாகவும் தெளிவாகவும் கூறமுடியும்தானே. எனவே, நம்முடைய நேரத்தை தேவையின்றி வீணடிப்பதை விட்டுவிட்டு சுருக்கமாகவும், அதே நேரத்தில் தெளிவாகவும் நமது கருத்துகளை வெளிப்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும்.

மேலாண்மை:

அனைத்து வேலையுமே நாமேதான் செய்ய வேண்டும் என்பதில்லை. எந்த வேலையை யார் சிறப்பாகச் செய்வார்கள் என்பதை அறிந்து அவர்களுக்கு அந்த வேலையைக் கொடுப்பதே சிறந்த நிர்வாகம் என்பர். நம்முடன் இருப்பவருக்கு எந்த வேலை பிடிக்குமோ, எந்த வேலையை அவர்கள் விரும்பிச் செய்வார்களோ அந்த வேலையை அவர்களுக்கு அளிப்பதன் மூலம் அவ்வேலை சிறப்பாக நடைபெறும். அவர்களுடைய பணித் திறனும் மேம்படும், நம்முடைய நேரமும் மிச்சப்படுத்தப்படும்.

Representational Image
Representational Image

தொழில்நுட்பம்:

மேம்பட்ட தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்துவது நம்முடைய பணி சிறக்கச் செய்வதோடு மட்டுமல்லாமல், நம்முடைய நேரத்தைப் பெருமளவு மிச்சப்படுத்த மிகச் சிறந்த உத்தியாக அமையும். ஆயினும், தொழில்நுட்பத்திலேயே பெரும்பான்மை நேரத்தைக் கடத்திக்கொண்டிருக்காமல், தேவையான இடங்களில் தேவையான தொழில்நுட்பங்களை மிகப்பொருத்தமாக நாம் உபயோகிக்கும்போது, அவை நமது பணியைச் சிறக்கச் செய்வதுடன், நம்முடைய நேரத்தையும் பெருமளவு மிச்சப்படுத்த நமக்கு கை கொடுக்கும்.

சிறு துளி:

5 நிமிடம் அல்லது 10 நிமிடம் வாட்ஸ்அப் பார்ப்பது போன்ற வேலைகளைத் தொடர்ந்து அடிக்கடி செய்து கொண்டிருக்கும்போது, அந்த ஐந்து பத்து நிமிடங்கள் ஒன்று சேர்ந்து நமது ஒரு நாளின் பல மணி நேரத்தை சாப்பிட்டுவிடும். எனவே, உபயோகமற்ற வேலைகளுக்கான நேரம் சிறிதாக இருக்கும்போதே சுதாரித்துக்கொள்வது சிறந்தது. பெரு வெள்ளமாக நமது நேரம் வீணாவதற்கு முன்பு, சிறு துளியாக அது வீணாகத் தொடங்கும்போதே தற்காத்துக்கொள்ள வேண்டும்.

Representational Image
Representational Image

நேரத்தை மேலாண்மை செய்துகொண்டே இருந்தால் எப்படி வாழ்வது, எப்போது வாழ்வது என்ற கேள்வி எழுவது இயல்புதான்.

உதாரணமாக, நாம் ஒரு கார் ஓட்டத் தொடங்கும்போது நம்முடைய முழுக்கவனமும் அதிலேயேதான் இருக்கும்.

ஆனால், முழுமையாகக் காரோட்டி பழகிவிட்ட பின்பு வாகனம் ஓட்டும்போது நம்முடைய கால்கள் மற்றும் கைகள் அனிச்சை செயல் போல இயங்க ஆரம்பித்துவிடும்.

அது போன்றேதான் நேர மேலாண்மையும்.

நாம் முதலில் குறிப்பிட்ட சில நாள்கள் திட்டமிட்டு நேரத்தை மேலாண்மை செய்வதைக் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். நாளடைவில் அதுவே நம்முடைய மனதுக்குப் பழகிவிடும்.

இயல்பான ஒன்றாகவும் அனிச்சை செயலாகவும் மாறிவிடும்.

எனவே, நேர மேலாண்மையை சிறப்பாகப் பின்பற்ற வேண்டி, முதலில் சில நாள்களுக்காவது நமது நேரத்தை திட்டமிட்டு மேலாண்மை செய்ய ஆரம்பிக்க வேண்டும். இதன் மூலம் நமது நேரம் சிறப்பாக மேலாண்மை செய்யப்படுவது அனிச்சை செயலாக மாறத் தொடங்கும்!

அதன் விளைவாகச் சிறப்பான நேர மேலாண்மை நமக்கு கைவரத் தொடங்கி, நமது வாழ்வில் வெற்றிக்கு மேல் வெற்றி ஈட்டுவதன் மூலம் நேரமில்லை என்னும் நாகரிக புறக்கணிப்பு நம்மிடமிருந்து காணாமல் போய்விடும்!

- அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு