Published:Updated:

`டீ' கடை நடத்தி 26 நாடுகள் மனைவியுடன் பயணம் செய்த விஜயன் மரணம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மாரடைப்பால் மரணம் அடைந்த விஜயன்
மாரடைப்பால் மரணம் அடைந்த விஜயன்

கொச்சியில் டீக்கடை நடத்தி கிடைக்கும் வருமானத்தில் மனைவியுடன் உலக நாடுகளுக்கு சுற்றுலா சென்று மக்கள் மத்தியில் பிரபலமடைந்த விஜயன் மாரடைப்பு காரணமாக நேற்று மரணமடைந்தார்.

கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த விஜயன்(76) என்பவர் எர்ணாகுளம் காந்திநகரில் ஸ்ரீ பாலாஜி காஃபி ஹவுஸ் என்ற பெயரில் சாயா (டீ) கடை நடத்தி வந்தார். இவரும் இவரது மனைவி மோஹனா ஆகியோர் கடையிலிருந்து கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு சுமார் 26 நாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்துள்ளனர். சாயாக் கடையில் சம்பாதிக்கும் பணம் மட்டுமல்லாது கூடுதலாகக் கடன் வாங்கிக் கொண்டு வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது வழக்கம். வெளிநாடுகளுக்கு சென்று வந்த பிறகு கடனைத் திருப்பி அடைப்பதுடன், மீண்டும் சம்பாதித்துக் கொண்டு மறுபடியும் மனைவியுடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வார்கள். நடிகர் மோகன்லால் இவர்களைப் பார்ப்பதற்காக இவர்களது டீக்கடைக்கு வந்திருக்கிறார். கேரளத்தில் பிரபலமான இந்த முதிய தம்பதிகள் 2007-ம் ஆண்டு முதல் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்திருக்கிறார்கள்.

நடிகர் மோகன்லாலுடன் விஜயன் தம்பதி
நடிகர் மோகன்லாலுடன் விஜயன் தம்பதி

ஆரம்பத்தில் ரோட்டோரத்தில் டீக்கடை விற்கும் தொழிலைத் தொடங்கினார் விஜயன். சுற்றுலா செல்லும் ஆர்வம் காரணமாக 1988-ம் ஆண்டு இமயமலைக்குச் சென்றுவந்தார். எங்கு சுற்றுலா சென்றாலும் மனைவியுடனே சென்றுவந்தார். சுற்றுலா செல்வதற்காக டீக்கடையில் இருந்து தினமும் 300 ரூபாய் தனியாக எடுத்து வைப்பார்கள். எல்லா வேலைகளையும் இந்த தம்பதிகள் மட்டுமே செய்வார்கள். இவர்கள் கடையில் வேலைக்கு ஆட்கள் வைப்பதில்லை. இவர்கள் சுற்றுலா செல்லும்போது கடை மூடியேகிடக்கும்.

அமெரிக்கா, சிங்கப்பூர், பிரேசில் என இவர்கள் சுற்றிய நாடுகள் ஏராளம். இவர்கள் சுற்றிய நாடுகளில் அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் மிகவும் பிடித்தமானவை என தெரிவித்திருந்தனர். 25 வது நாடாக நியூசிலாந்துக்கு சுற்றுலா சென்றிருந்தனர். ஒவ்வொரு நாடுகளுக்கும் சென்று வந்த பிறகும் அந்த நாட்டைப் பற்றிய கதைகளை டீ ஆற்றும் போது வாடிக்கையாளர்களுக்கு சொல்லிவிடுவார்கள். இவர்களின் சுற்றுலா கதையைக் கேட்பதற்கு என்றே பெரும் ரசிகர் பட்டாளமே உண்டு.

சுற்றுலாவில் விஜயன் - மோகனா தம்பதி
சுற்றுலாவில் விஜயன் - மோகனா தம்பதி

ஒவ்வொரு நாடுகளிலும் இவர்கள் எடுத்த புகைப்படங்களை பிரேம்போட்டு டீக்கடையில் வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு நாட்டிலும் தான் செலவு செய்யும் பணத்திற்கான பில்களையும் பத்திரமாக வைத்திருப்பார். பலர் அந்த பில்களை ஆச்சர்யமாக பார்ப்பதும் உண்டு. கொரோனா காரணமாக வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லாமல் இடைவெளி விட்டு இந்த தம்பதியினர் கடந்த மாதம் ரஷ்ய நாட்டிற்கு சுற்றுலா சென்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இரண்டுவார சுற்றுலா முடித்து ஊர் திரும்பினர். அவர் கடை திறந்த உடனே கதை கேட்க ரசிகர்களும் திரண்டுவிட்டனர். அடுத்த முறை ரஷ்யா செல்லும் போது அதிபர் புதினை சந்திப்பேன் என அவர்களிடம் தெரிவித்தார் விஜயன். வழக்கமாக சுற்றுலா செல்லும்போது தனது மனைவி மோகனாவை மட்டும் அழைத்துச் செல்வார். ஆனால் இந்த முறை ரஷ்ய சொல்லும்போது தனது மகளையும், மகளின் கணவர் மற்றும் பேத்தியும் அழைத்துக்கொண்டு சென்றிருந்தார். சுற்றுலாவின் போது குளிர் ஏற்பட்டதுதான் தனக்கு சிரமமாக இருந்ததாக தெரிவித்திருந்தார்.

டீக்கடையில் விஜயன்
டீக்கடையில் விஜயன்

ரஷ்ய பாராளுமன்றம், ரெட் ஸ்கொயர், மாஸ்கோ என பல பகுதிகளில் சுற்றி வந்தது பற்றி வாடிக்கையாள ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டார் விஜயன். "பயணம் எதுவுமே ஏற்கனவே முடிவு செய்து செல்வது அல்ல. எல்லாம் அது பாட்டுக்கு நடக்கும். இனி உள்ள அயணங்களும் அது போல தான் நடக்கும். போக வேண்டும் என்று தோன்றும் போது புதிய இடத்திற்கு யாத்திரை செல்ல தயாராவேன்" என்று கூறியிருந்தார். இந்த நிலையில் விஜயன் நேற்று மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். சுற்றுலா ரசிகர்கள் விஜயனுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு