Published:Updated:

வீட்டுக்குள் முடங்கியிருந்தாலும் செய்வதற்கு இத்தனை விஷயங்கள் இருக்கிறதா?- பட்டியலிடும் பாரதி பாஸ்கர்

பாரதி பாஸ்கர்
பாரதி பாஸ்கர்

`வீட்டுக்குள் முடங்கியிருப்பதால் மட்டுமே மன அழுத்தம் வருமா?’ என்றால் வராமல் தடுப்பது நம் செயல்பாடுகளில்தாம் இருக்கிறது. அதற்கு ஓர் உதாரணம் சூழலுக்கு ஏற்ற நகைச்சுவை உணர்வை ரசிப்பது.

கொரோனா பாதிப்பு உலக மக்கள் அனைவரின் இயல்பு வாழ்க்கையையும் முடக்கிவிட்டது. இந்தியா உட்பட பெரும்பாலான நாடுகளிலும் மக்கள் வீட்டுக்குள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர். இந்தியாவில் தற்போது நடைமுறையில் இருக்கும் 21 நாள்கள் ஊரடங்கு, வீட்டில் இருந்தபடியே வேலை, அனைத்துவிதமான போக்குவரத்துகளும் துண்டிப்பு இதெல்லாம் இதுவரை இந்தத் தலைமுறை கண்டிராத மாற்றம். அனைத்துத் திசைகளிலும் ஒலிக்கும் கொரோனா பற்றிய செய்திகள், வீட்டுக்குள்ளேயே முடக்கம் இதெல்லாம் நமக்கு மன அழுத்தத்தையும் இறுக்கத்தையும் ஏற்படுத்திவிடக்கூடாது.

``தற்போதைய 21 நாள்கள் தனிமையிலும் இனிமை காண முடியும். இது நமக்குக் கிடைத்திருக்கும் அற்புதமான தருணம்” என்கிறார் தன்னம்பிக்கை பேச்சாளர் பாரதி பாஸ்கர். இந்த இக்கட்டான சூழலையும் இனிமையாய்க் கழிக்க ஆலோசனைகள் வழங்குகிறார்.

People practice social distancing in thailand
People practice social distancing in thailand
AP / Sakchai Lalit

``முதலில் நாம் எல்லோரும் கொரோனா பற்றிய பேச்சையும் சிந்தனையையும் தவிர்க்க வேண்டும். ஒரு விஷயம் பற்றிய அறிவு மட்டுமே அதுகுறித்த பயத்தைப் போக்கும். அறியாமைதான் பயத்தை உண்டாக்கும். அரசின் அறிவுரைப்படி 21 நாள்கள் நம்மைத் தனிமைப்படுத்திக்கொண்டால் கொரோனா வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படாது. `கொரோனா எப்படிப் பரவுகிறது? இந்த நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?’ எனத் தெரிந்துகொண்டு அதைக் கடைப்பிடித்தால் கொரோனா ஏற்பட வாய்ப்பில்லை. இப்படி வாழ்க்கையில் எல்லா விஷயங்களுக்கும் அறிவால் விடைதேடினால், பயம் எப்படி வரும்?

நேற்று முன்தினம் இங்கிலாந்து இளவரசர் சார்லஸுக்குக் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. இந்த உலகில் சகல வசதிகளுடனும் பாதுகாப்புகளுடனும் வாழும் சார்லஸ் உட்பட பெரிய பிரபலங்கள் முதல் சாமானிய மனிதர்கள்வரை பலருக்கும் வேறுபாடின்றிக் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இயற்கையின் முன் எல்லோருமே சமம்தான். இயற்கையைவிட்டுத் தொடர்ந்து விலகியோ அல்லது அதற்குத் தொந்தரவு செய்துவந்தாலோ, அதற்கான தண்டனையை மனிதர்களுக்குக் கொடுத்துத்தான் இயற்கை தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் என்பதை நான் நம்புகிறேன். இந்தப் பெரும் உண்மையைத் தற்போது மீண்டும் ஒருமுறை இயற்கை நமக்கு உணர்த்தியிருக்கிறது. எனவே, ஈகோ, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பாகுபாடு, ஏற்றத்தாழ்வுகள் அனைத்தையும் விடுத்து எளிமையான மகிழ்ச்சியான வாழ்க்கை முறைக்கு நாம் வாழப் பழகவும், மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ளவும் சிறப்பான தருணமாக இந்தச் சூழலைப் பார்க்கிறேன்.

ஊரடங்கு விதிக்கப்பட்டதால் வெறிச்சொடிய சென்னை அண்ணா சாலை
ஊரடங்கு விதிக்கப்பட்டதால் வெறிச்சொடிய சென்னை அண்ணா சாலை

சோர்வாக இருந்தாலோ, மன அழுத்தம் ஏற்பட்டாலோ... `கொஞ்சம் வெளியில போய் ஃப்ரெண்ட்ஸைச் சந்திச்சுட்டு வா’ என்றுதான் குடும்பத்தினர் சொல்வார்கள். தற்போது கோடை வெயிலுக்குக் காற்று வாங்கக்கூட வீட்டைவிட்டு வெளியில் செய்ய முடியாத சூழல் மிக இக்கட்டானதுதான். `வீட்டுக்குள் முடங்கியிருப்பதால் மட்டுமே மன அழுத்தம் வருமா?’ என்றால் வராமல் தடுப்பது நம் செயல்பாடுகளில்தாம் இருக்கிறது. அதற்கு ஓர் உதாரணம் சூழலுக்கு ஏற்ற நகைச்சுவை உணர்வை ரசிப்பது.

தற்போதைய கொரோனா பரபரப்புகளையும் மறந்து சிரிப்பதற்கான வாய்ப்புகளைச் சமூக வலைதளங்கள் உருவாக்கியிருக்கின்றன. தற்போது உலக நிகழ்வுகளைத் தெரிந்துகொள்ளவும், தொலைவிலுள்ள நண்பர்களைத் தொடர்புகொள்ளவும் தினமும் ஃபேஸ்புக் பயன்படுத்தக் குறிப்பிட்ட நேரம் ஒதுக்குகிறேன். `பிக் பாஸ்’ நிகழ்ச்சியைப்போல `முதல் நாள் காலை 8 மணி’ என்று தங்கள் போட்டோவுடன் ஃபேஸ்புக்கில் சிலர் நேற்று பதிவிட்டிருந்ததைப் பார்த்ததும் என்னை மறந்து சிரித்தேன். `மீன் குழம்புவெச்ச சட்டியைக் கழுவாமல் பொங்கல் வைப்பதும், இந்த நேரத்தில் வீட்டைவிட்டுச் செல்வதும் ரொம்ப தவறு ப்ரோ’ என்று ஒருவர் குறிப்பிட்டதைப் பார்த்துச் சிரித்தேன்.

வொர்க் ஃப்ரம் ஹோம்
வொர்க் ஃப்ரம் ஹோம்

நமக்கெல்லாம் பழக்கமில்லாத `வொர்க் ஃப்ரம் ஹோம்’ முறையில், தினமும் ஜூம் ஆப்பில் (Zoom App) நம் அலுவலக ஊழியர்களுடன் அன்றாடப் பணிகள் குறித்து உரையாடுவதிலேயே ஏகப்பட்ட காமெடிகள். இதுகுறித்து யூடியூப்பில் சில காமெடிகளைப் பார்த்தேன். டிவி பார்த்துக்கொண்டிருக்கும் ஒருவர் ஜூம் மீட்டிங் அழைப்பு வந்ததுமே அவசர அவசரமாகச் சட்டையை மாட்டிக்கொண்டு முகம் மட்டுமே தெரியும்படி அதில் பேசுகிறார். மீட்டிங் முடிந்து எழுந்திரிக்கும்போதுதான் அவர் லுங்கியில் இருப்பது தெரிகிறது. இதைப் பார்த்து வெகுநேரம் சிரித்தேன். கவுண்டமணி, வடிவேலுவைப் பயன்படுத்திக் கொரோனா குறித்து வெளியாகும் மீம்ஸ் சிலவற்றைப் பார்த்தும் சிரித்தேன்.

நேற்று காலை பாத்திரம் கழுவிக்கொண்டே, காதில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு பல லட்சம் ரூபாய் பரிமாற்றம் தொடர்பான என் வங்கிப் பணிக்கான உரையாடலை மேற்கொண்டேன். மதியம் என் அலுவலக மேலதிகாரியுடன் பேசிக்கொண்டிருந்தபோது என் வீட்டு குக்கர் விசில் சப்தம் இடைமறித்துக்கொண்டே இருந்தது. இதையெல்லாம் பிறகு நினைத்துப் பார்த்து சிரித்தேன். சிரிப்பும் சந்தோஷமும் நம் வாழ்க்கையில் இரண்டறக் கலந்துள்ளதுதான். அதை உணர்வதற்கு 21 நாள்கள் பெரிதும் உதவும் என்று நான் கருதுகிறேன்” என்கிற பாரதி பாஸ்கர், தற்போதைய ஊரடங்கு காலத்தைப் பயனுள்ள வகையில் கழிக்க எளிய வழிமுறைகளைப் பட்டியலிடுகிறார்.

1. எத்தகைய மாற்றங்களும் முதலில் வீட்டில் இருந்துதான் தொடங்க வேண்டும். `சமையலறை தம்பதிக்குள் காதலை வளர்க்கும் அழகான இடமும்கூட’ என்று மருத்துவர் சிவராமன் அடிக்கடி கூறுவது நினைவுக்கு வருகிறது. ஆண், பெண் வேறுபாடின்றி, சமையல், பாத்திரங்கள் கழுவுவது உட்பட வீட்டு வேலைகள் அனைத்தையும் முடிந்தவரையில் பகிர்ந்து செய்யலாம். நேற்று ஒரு மருத்துவர் ஃபேஸ்புக்கில் இப்படிப் பதிவிட்டிருந்தார். ``இன்னைக்கு என் மனைவிக்கு உதவலாம் எனப் பாத்திரங்கள் கழுவும் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். தினமும் பல அறுவை சிகிச்சைகளையும் சிரமமின்றிச் செய்துவிடும் எனக்கு வீட்டு வேலைகள் செய்வதுதான் பெரும் சிரமமாக இருந்தது. இந்த நடைமுறை உண்மையை ஊரடங்குக் காலத்தின் முதல் தினமே உணர்த்துவிட்டேன்.” ஒருநாளைக்கே இப்படியா? அன்றாடம் வீட்டு வேலைகளைச் செய்துவிட்டு, அலுவலகம், குழந்தை வளர்ப்பு உட்பட பல பணிகளைச் செய்யும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை உணர்ந்து, அவர்களின் சுமைகளைக் குறைக்க வேண்டிய பொறுப்பை ஆண்கள் பகிர்ந்துகொள்ள வேண்டிய தருணம் இது.

குடும்பம்
குடும்பம்

2. நான்கு பேர் இருக்கும் வீட்டிலேயே ஒவ்வொருவரும் ஒவ்வொரு நேரம் சாப்பிட்டு, வேலைக்குப் போய், தனித்தனி வாழ்க்கை முறைக்குப் பழக்கப்பட்டுவிட்டோம். அதனால் உறவுகளுக்குள் அன்பும் விட்டுக்கொடுக்கும் குணமும் குறைந்துகொண்டே வருகிறது. இந்த இடைவெளிகளைச் சரிசெய்ய குடும்ப உறவுகளுக்குள் நெருக்கம் ஏற்பட, தற்போதைய 21 நாள்கள் மிகச் சிறந்த வாய்ப்பு. வீட்டில் இருந்தே வேலை செய்வதால், நமக்கான ஓய்வு நேரமும் சற்றுக் கூடுதலாகக் கிடைக்கும். அந்த நேரத்தில் குடும்ப உறவுகளுடன் பேசிப் பழகி ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு அன்பை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும். அதைவிடுத்து, இப்போதும்கூட ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் ஈகோ உணர்வுடனோ அல்லது சண்டைபோட்டுக்கொண்டோ, பேசிக்கொள்ளாமலோ இருப்பது கொரோனாவைவிடவும் பெரிய ஆபத்து.

3. `இனிது இனிது ஏகாந்தம் இனிது’னு அவ்வை சொல்லியது மிகவும் முக்கியமானது. நாம் செய்யும் நல்லது, கெட்டதை நம் மனம் உணர வேண்டியது முக்கியம். அதற்குத் தனிமையில் நம் மனசாட்சியிடம் நாமே நியாயமான கேள்விகளைக் கேட்டுக்கொள்வதுடன், நம்மைச் சுயபரிசோதனை செய்துகொள்ள இது மிகச் சிறந்த வாய்ப்பு. எதற்குமே ஓர் எல்லை உண்டு. அதுபோல மன அழுத்தத்தையும் மன இறுக்கத்தையும் ஏற்படுத்தாத அளவுக்குத் தனிமையைக் கடைப்பிடித்தால் பல புத்தகங்கள் மற்றும் அறிவுரைகளைப் பெற்று கிடைக்கும் புத்துணர்ச்சியைக் குறிப்பிட்ட நேரத் தனிமை கொடுக்கும்.

தனிமை
தனிமை
Pixabay

4. தற்போதைய 21 நாள்களில், நம் அன்றாட வாழ்க்கையில் சிறு மாற்றம் வந்துவிட்டதே தவிர, வாழ்க்கை முறையே மாறிவிடவில்லை என்பதை அழுத்தமாக மனதில் கொள்ள வேண்டும். காலை தூங்கி எழுவது முதல் வேலை நேரம், சாப்பிடும் நேரம், தூங்கும் நேரம் ஆகியவற்றை எப்போதும்போல செய்வதுடன், தற்போதைய சூழலில் ஒவ்வொரு பணிக்கான நேர அட்டவணை தயார் செய்து அதைச் சரியாகக் கடைப்பிடித்தால் இந்தக் காலகட்டம் அர்த்தமுள்ளதாகவே அமையும்.

5. நம் நேரத்தை அபகரித்துக்கொள்ளாத வகையில், சோர்வைப் போக்கிக்கொள்ள மட்டுமே தினமும் சற்று நேரத்துக்கு மட்டும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த வேண்டும். மாறாக, அதிலேயே மூழ்கியிருப்பதைத் தவிர்க்க வேண்டும். அதன் வாயிலாக வதந்திகளைக் கிளப்பிவிடுவதைத் தவிர்க்கும் சமூக பொறுப்பையும் உணர வேண்டும்.

குடும்பம்
குடும்பம்

6. கைப்பட டைரி எழுதுவதுபோன்ற சூழல்கள் அரிதாகிப்போன இந்தக் காலத்தில், அந்த வழக்கத்தை மீண்டும் தொடர்வதற்கு தற்போதைய 21 நாள்களை, நான் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறேன். தினமும் நான் செய்ய நினைப்பது, செய்தது, செய்யாமல்போன சில விஷயங்களுக்கான காரணங்கள், ஒவ்வொரு நாளில் நிகழ்ந்த முக்கியமான தருணங்களை குறிப்பாக எழுத ஆரம்பித்திருக்கிறேன். இது, பிற்காலத்தில் என்னை மதிப்பிட்டுக்கொள்ளவும், கடந்த கால நினைவுகளை ஆராய்ந்து பார்க்கவும் உதவும். இதை மற்றவர்களும் செய்துபார்க்க வலியுறுத்துகிறேன்.

பாண்டா கரடி, பிரிட்டிஷ் மியூசியம்,  ஜப்பான் சுமோ- வீட்டுக்குள் இருந்தபடி உலகம் சுற்றலாம்!

7. அலுவலகத்தில் சமூகத்தில் மதிப்புமிக்க நபர்களாக இருந்தாலும், வீட்டில் எல்லோருமே சாமானிய மனிதர்களே. அதை உணர்ந்து தரையில் அமர்ந்து குழந்தைகளுடன் விளையாடலாம். உறவுகளிடம் மனம்விட்டுப் பேசலாம். குழந்தைகள் வெளியில் விளையாடுவதற்கு வாய்ப்பற்ற தற்போதைய சூழலில், வீட்டிலுள்ளவர்கள் ஒன்றாக அமர்ந்து கேரம், தாயம், பரமபதம், கண்ணாமூச்சி உள்ளிட்ட சூழலுக்கு ஏற்ற விளையாட்டுகளை விளையாடலாம். வரையறைக்கு உட்பட்ட அளவில் குழந்தைகளின் சேட்டைகளையும் குறும்புகளையும் ரசிக்கப் பழகினால் நாமும் உள்ளத்தால் குழந்தையாக மாறலாம்.

8. புத்தகம் வாசிப்பது குறைந்துவரும் இன்றைய காலகட்டத்தில் இப்போதாவது புத்தக வாசிப்புக்குத் தினமும் ஒருமணிநேரமாவது ஒதுக்கலாம். புத்தகக் கண்காட்சியில் நாம் வாங்கிக் குவித்த புத்தகங்களை முதலில் தொகுத்துப் பட்டியலிட்டு, தினமும் படிக்க வேண்டிய பக்க அளவுகளைக் குறித்துக்கொண்டு அதைச் சரியாகக் கடைப்பிடித்தால், 21 நாள்களுக்குப் பிறகு புத்தக வாசிப்பும் நம் அன்றாட பணிகளில் ஒன்றாக மாறிவிடும். யுவல் நோஹ் ஹராரியின் (Yuval Noah Harari) சேப்பியன்ஸ் (Sapiens) புத்தகம் மற்றும் தி.ஜானகிராமனின் சிறுகதைகளின் முழுத் தொகுப்பை (காலச்சுவடு பதிப்பக வெளியீடு) இப்போது படித்துவருகிறேன்.

`கொரோனா எப்படிப் பரவுகிறது? இந்த நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?’ எனத் தெரிந்துகொண்டு அதைக் கடைப்பிடித்தால் கொரோனா ஏற்பட வாய்ப்பில்லை. இப்படி வாழ்க்கையில் எல்லா விஷயங்களுக்கும் அறிவால் விடைதேடினால், பயம் எப்படி வரும்?
பாரதி பாஸ்கர்

9. விலகியிருக்கும் உறவுகளிடம் தற்போதைய சூழலில் தொலைப்பேசி, வீடியோ கால், சமூக வலைதளங்கள் வாயிலாக அன்புப் பரிமாற்றத்துடன் நலம் விசாரித்து மீண்டும் நெருக்கத்தை அதிகரித்துக்கொள்ள நல்ல வாய்ப்பு இது. இதுபோல, அவரவர் விலகியிருந்த நல்ல விஷயங்களை மீண்டும் தொடர்வதற்கு இந்தக் காலகட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

10. நாம் செய்யும் தவறுகளையும் செய்ய வேண்டிய விஷயங்களையும் ஆராய்ந்து சரிசெய்ய, நடைமுறைப்படுத்தவும் இது சரியான தருணம்.

இப்படித் தற்போதைய வீட்டுச் சூழலிலும் நாம் செய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய உண்டு. இந்த உலகத்தில் போனால் கிடைக்காதது நேரம் மட்டுமே! ஊரடங்கு உள்ள 21 நாள்களுக்குப் பிறகும்கூட இந்த உலகிலும், நம் வாழ்விலும் சில இன்ப, துன்பங்கள் நிகழக்கூடும். ஆனால், இந்த 21 நாள் அனுபவம் மீண்டும் கிடைக்காது. `வாய்ப்புகளில் இருக்கும் கஷ்டத்தைப் பார்க்கிறவங்க தோல்வியடையிறாங்க. அந்தக் கஷ்டத்திலும் இருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்பவர்கள் ஜெயிக்கிறாங்க’ – நடிகர் விஜய் கூறிய இந்தக் குட்டி ஸ்டோரி, தற்போது உட்பட வாழ்க்கையின் எல்லாச் சூழல்களுக்கும் பொருந்தக்கூடிய அருமையான தன்னம்பிக்கை வார்த்தை.

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

21 நாள்களுக்குப் பிறகு வெளியுலகத்துக்கு வரும்போது, வீட்டில் முடங்கியிருந்த நாள்களை அர்த்தமுள்ள வகையில்தான் கழித்திருக்கிறோம் என்ற உணர்வு ஒவ்வொருவருக்கும் வர வேண்டும். இல்லையெனில், மிகப்பெரிய வாய்ப்புகளை இழந்திருப்போம். மீண்டும் நம் அலுவலகப் பணிகளைத் தொடர ஆரம்பிக்கும்போது, பிறர்மீதுள்ள கோபம், வெறுப்பு உள்ளிட்ட தேவையற்ற எல்லா பழைய விஷயங்களையும் மறந்துவிட்டு, எல்லோரிடமும் அன்பு செலுத்த ஆரம்பிக்கலாம். நிதானமே நம்மை வழிநடத்துவதாக இருக்கும் பக்குவத்துக்கு மாறலாம். இந்தப் பழக்கம் நம் வாழ்க்கையை வசந்தமாக்கும்" என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் பாரதி பாஸ்கர்.

அடுத்த கட்டுரைக்கு