Published:Updated:

`அந்தத் தாடியும் கொலுசும் திருநங்கை மகளும்!' - வைரலாகும் தனியார் நிறுவன விளம்பரம்

Ad
Ad ( Screenshot from YouTube Channel Bhima )

திருநங்கைகளின் பாலின மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல், வீட்டில் இருப்பவர்கள் நடந்துகொள்ளும் விதம்தான், திருநங்கைகளை அடையாளம் அற்றவர்களாகத் தெருவில் நிறுத்துகிறது.

விளம்பரங்கள் எப்போதும் மார்கெட்டிங் யுக்தியாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், மார்க்கெட்டிங் என்பதைக் கடந்து, மனதுக்கு நெருக்கமான விளம்பரங்கள் அவ்வப்போது வருவதுண்டு. மக்களும் அவற்றை ரசித்து வரவேற்பார்கள். அப்படி மக்களால் ரசிக்கப்பட்ட விளம்பரங்களை விருதுகள் மூலம் விகடனும் பெருமைப்படுத்தி இருக்கிறது.

அந்த வகையில் சில தினங்களாக வைரலாகி வரும் 'Pure as Love' என்ற பீமா ஜுவல்லரியின் விளம்பரம், இப்போது பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

பீமா ஜூவல்லரி
பீமா ஜூவல்லரி
Screenshot from YouTube Channel Bhima

பொதுவாக, நகைக்கடை விளம்பரங்கள் என்றாலே பெண்கள்தாம் மாடல்களாக இருப்பார்கள். அல்லது அந்த விளம்பரம் பெண்ணை மையப்படுத்தி எடுக்கப்பட்டதாக இருக்கும். ஆனால், முதன்முறையாக ஒரு நகைக்கடை விளம்பரத்தில், திருநங்கை ஒருவர் திருநங்கையாகவே நடிக்கும் ஒரு குட்டி கதையைக் காட்சிகளாக்கி, தன்னுடைய விளம்பரத்தில் பதிவு செய்து, ஒரு புதிய ஆரம்பத்தை பீமா ஜூவல்லரி முன்னெடுத்துள்ளது.

பெரும்பாலான திருநங்கைகளின் முதல் பிரச்னையே அவர்களின் வீட்டில் உள்ளவர்களின் புறக்கணிப்புதான். திருநங்கைகளின் பாலின மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல், வீட்டில் இருப்பவர்கள் நடந்துகொள்ளும் விதம்தான், திருநங்கைகளை அடையாளம் அற்றவர்களாக தெருவில் நிறுத்துகிறது.

தங்க நகை
தங்க நகை
Photo by vaibhav nagare on Unsplash

ஆனால், பீமா ஜுவல்லரியின் விளம்பரத்தில், ஓர் ஆண் தன்னை பெண்ணாக உணர்வதும், அதை வெளிப்படுத்திக்கொள்ள முயல்வதும், அவர் குடும்பத்தின் அன்பு, ஆதரவுக்கு இடையில் நிகழ்வது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த மாற்றங்களும், மனசும் விளம்பரத்தில் அழகியலுடனும், உணர்வுபூர்வமாகவும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. தங்கள் மகனின் ஹார்மோன் மாற்றத்தை புரிந்துகொண்டு, அவருக்குத் தங்கக் கொலுசை பரிசளிக்கிறார்கள் பெற்றோர். மேலும், உடலுக்குள்ளும், கேசம், ஆடை என புறத்தோற்றத்திலும் பெண்ணாக மாறும் தங்கள் பையனை, மாற அன்புடனும் மிகுந்த அக்கறையுடம் அரவணைத்துக்கொள்கிறார்கள்.

வழக்கமாக ஒரு திருநங்கைக்கு நிகழும் எந்த அவமானமும், புறக்கணிப்பும் நிகழாமல், பெண்ணாய் மாறியவளுக்கு குடும்பமே துணையாய் நிற்கிறது. காது குத்துவதில் தொடங்கி ஹேர்ஸ்டைல் செய்துகொள்வது வரை எல்லாவற்றையும் அம்மா, அப்பா, பாட்டி எல்லாரும் துணையாய் நின்று செய்து முடிக்கிறார்கள். குடும்பத்தின் கைப்பற்றிக்கொண்டு, அந்த திருநங்கை மகள் தன்னம்பிக்கையுடன் இந்த உலகை எதிர்கொள்கிறார். இறுதியில், தங்கள் திருநங்கை பெண்ணுக்கு ஆபரணங்கள் அணிவித்து திருமணத்திற்குத் தயார் செய்வதுபோன்று முடிவடைகிறது விளம்பரம்.

இந்த விளம்பரத்தில், ஒரு பெண்ணை திருநங்கையாக நடிக்கவைக்காமல், திருநங்கையான மிரா சிங்கானியாவையே நடிக்கவைத்தது இன்னும் சிறப்பு.

தங்கள் குடும்பத்தின் இப்படியான ஒரு மனமாற்றத்தையே ஒவ்வொரு திருநங்கையும் விரும்புகிறார். உடலில் நிகழும் ஹார்மோன் மாற்றத்தை புரிந்துகொள்ளாமல் தன் பிள்ளைகளை விரட்டி அடித்து, அவர்களை அவமானத்தின் சின்னமாக பார்க்கும், எத்தனையோ பெற்றோர்களுக்கு, இந்த விளம்பரம் நிச்சயம் ஒரு மனமாற்றத்தை ஏற்படுத்தும்.

மாற்றத்தை முன்னெடுப்போம்.

அடுத்த கட்டுரைக்கு