Published:Updated:

"நானும் இந்நேரம் நடிகனாகியிருப்பேன்!"- இது `பீம்சிங்’ ஸ்டூடியோ செங்கேணியின் கதை!

இரண்டு நாள்களுக்கு முன் அவரின் காஞ்சிபுரம் மகளிடமிருந்து போன். "அப்பா பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டார், கால் உடைஞ்சிடுச்சு, உங்ககிட்ட பேசணும்கிறார்" என்றார்.

அமேசான் பிரைமில் வெளியாகி அமோக வரவேற்பைப் பெற்றிருக்கிறது ‘ஜெய்பீம்.’ படத்தில் கதாநாயகியின் கேரக்டர் பெயர் செங்கேணி.

’செங்கேணி’ என்கிற பெயர் என் காதுகளில் கேட்டு சரியாக ஒரு வருடம் இருக்கும். அப்போதிருந்தே எனக்குத் தெரிந்த அந்தச் செங்கேணியின் கதையை எழுத வேண்டுமென நினைத்துக் கொண்டிருந்தேன். இந்த ஒரு வருடத்தில் அந்தச் செங்கேணியின் வாழ்க்கையிலும் என்னென்னவோ நடந்துவிட்டன. இப்போதும் அதை எழுதாவிட்டால் பிறகு எப்போது எழுதுவது?

நான் சொல்லப்போகிற செங்கேணியின் கதையும் நிஜ சம்பவங்களே. கதைக்குள் போகலாமா?

சென்னை வில்லிவாக்கம் ரயில் நிலையத்தின் எதிரே இருக்கும் காய்கறி மார்க்கெட்டைக் கடந்தால் வருவது தேவர் தெரு. இந்தத் தெருவிலுள்ள சிங்காரம் பிள்ளை ஆரம்பப் பள்ளியில் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக வாட்ச்மேனாக இருந்தவர் மணி. அந்த ஏரியாவில் இவரைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது.

வில்லிவாக்கம் ரயில் நிலையம்
வில்லிவாக்கம் ரயில் நிலையம்

மணியின் மனைவி அந்தப் பள்ளியிலேயே சத்துணவு உதவியாளராக இருந்து இறந்து போய்விட்டார். மணிக்கு இரண்டு மகள்கள், மூத்த மகளைக் காஞ்சிபுரம் அருகே ஒரு கிராமத்திலும் இளைய மகளைச் சென்னையிலும் திருமணமும் செய்து கொடுத்துவிட்டார்.

எனவே மணி தங்குவதும் பள்ளியில்தான். பகலில் அலுவலக வேலைகளைச் செய்பவர், இரவு பள்ளியின் வகுப்பறை ஒன்றில் படுத்துக்கொள்வார்.

என்னுடைய அண்ணி அந்தப் பள்ளியில் ஆசிரியை என்கிற வகையில் எனக்கு அறிமுகமானார் மணி. நானும் ஆரம்பத்தில் வில்லிவாக்கம்வாசியாக இருந்ததால் அந்தப் பக்கம் சென்று வரும்போது அவரை அடிக்கடி சந்திப்பேன். மார்க்கெட் போய் வரும் வேளைகளில் என்னுடைய இருசக்கர வாகனைத்தைப் பள்ளி அருகே நிறுத்திவிட்டு, கொஞ்ச நேரம் அவருடன் பேசிவிட்டு அப்படியே டீ, டிபன் வாங்கிக் கொடுத்துவிட்டு வருவேன்.

நாளாக ஆக எங்களுடைய நட்பும் வளர்ந்து கொண்டே போனது. அவர் என்னைவிட பதினைந்து வயது மூத்தவரும்கூட. ஒருகட்டத்தில் நான்கு நாள் அந்தப் பக்கம் போகவில்லையென்றால், ’எங்க போயிட்டீக, ஊர்ல இல்லையா?’ எனக் கேட்பார்.

கடந்த ஆண்டின் ஒருநாள் அலுவலகம் முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மாலை வேளையில் பள்ளியின் வாசலில் தரையில் உட்கார்ந்தபடி மாலைப் பேப்பரைக் கூர்ந்து வாசித்துக் கொண்டிருந்தார். "என்ன மணியண்ணே, பேப்பர்ல என்ன போட்டிருக்கான்?" என்றபடி என் வண்டியை நிறுத்தினேன்.

"பீம்சிங் புள்ள செத்துட்டாராம். கண்ணன் சார். நூட்டன் (நியூட்டன்) ஸ்டூடியோல நான் வேலை பார்த்தப்ப சாப்பாடு எடுத்துப் போய்க் கொடுத்திருக்கேன்" என, பிரபல சினிமா ஒளிப்பதிவாளர் பி.கண்ணன் மறைவுச் செய்தியைக் காட்டினார்.

அவ்வளவு நாள் மணியுடன் நான் பேசிக்கொண்டிருந்தும், சினிமாவுடன் நெருங்கிய தொடர்புடைய பத்திரிகைத் துறையில் நான் இருந்தும் மணியின் இந்த சினிமாத் தொடர்பு குறித்து அதுவரை எனக்குத் தெரியாது.

"என்ன மணியண்ணே சொல்றீக; இதைச் சொல்லவே இல்ல" என அப்படியே உட்கார்ந்ததுதான் தாமதம் "முதல் முதலா நான் வேலைக்குப் போனதே அங்கதான். ஆபீஸ் பாய் வேலை, ஸ்டூடியோ கீழ்ப்பாக்கத்துல இருந்தது. அவங்க வீடு ஆழ்வார்பேட்டை. சைக்கிள்லயே போய் மதியச் சாப்பாடு எடுத்துட்டு வந்து தருவேன். ஸ்டூடியோ வேலைங்கிறதால சினிமா சூட்டிங்கை நல்லா வேடிக்கை பார்ப்பேன். எல்லா நடிகர்களும் அங்க வந்து போவாங்க. நாலஞ்சு வருசம் இருந்திருப்பேன். அதுக்குள்ள வீட்டுல கல்யாணம் முடிவு பண்ணிட்டாங்க. மறைமலைநகர்ல என் கல்யாணம் நடந்தது. கல்யாணத்துக்கு ஸ்டூடியோவுல பத்திரிகை வச்சதும் ஒரு பிரிக்காத ரூபாய் நோட்டுக் கட்டை அப்படியே தந்தாங்க. வருஷம் ரொம்ப ஆகிட்டதால எவ்வளவுன்னு சரியா ஞாபகத்துல இல்லை.

ஒளிப்பதிவாளர் கண்ணன்
ஒளிப்பதிவாளர் கண்ணன்

கல்யாணத்துக்குப் பிறகுதான் ஸ்டூடியோ வேலையை விட்டுட்டு இந்தப் பள்ளிக்கூடத்துக்கு வந்தேன். இன்னொரு விஷயம் தெரியுமா, அங்க சேரும் போது என் பேரு மணி கிடையாது. என் அப்பா அம்மா எனக்கு வச்ச பேருதான். செங்கேணி, எங்க குலதெய்வத்தின் பேரு. ‘செங்கேணி’யா ஷாட்டா உன்னை எப்படிய்யா கூப்பிடறது? எல்லாருக்கும் புரியற மாதிரி ’மணி’ன்னு வச்சுக்கோ’ன்னு அங்கதான் மாத்தி விட்டாங்க. பிறகுதான் மணிங்கிற இந்தப் பேரே நிலைச்சிடுச்சு. ஆனா அப்ப பெல்ஸ்ஸெல்லாம் போட்டு டிப் டாப்பா இருப்பேன். இங்கயே இருந்தா நீயும் நடிகனாகிடலாம்னெல்லாம் சொன்னாங்க. ஒருவேளை அப்படி இருந்திருந்தா இந்நேரம் நானும் சினிமாவுல நடிச்சிட்டிருந்திருப்பேனோ என்னவோ’’ என நீண்டுகொண்டே போனது அவருடைய கடந்த கால நினைவுகள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்போது ஒரு கோரிக்கையையும் என்னிடம் வைத்தார். "உங்களுக்குத்தான் சினிமாக்காரங்க எல்லாரையும் தெரியுதே, ஒரு தடவை என்னை லெனின் சார்கிட்ட கூட்டிட்டுப் போங்களேன், பார்க்கணும்போல இருக்கு. நேர்ல பார்த்தா அவர் என்னை ஞாபகம் வச்சிருப்பார்" என்றார். "போவோம் மணியண்ணே, சொல்றேன்" எனச் சொல்லி வைத்தேன். அதன் பிறகும் சிலதடவை தன் கோரிக்கையை அவர் நினைவூட்டுவதும், நான் போகலாம் எனத் தலையாட்டி வைப்பதும் தொடர்ந்து கொண்டே இருந்தது.

நாள்கள் கடந்தன. வில்லிவாக்கத்திலிருந்து வடசென்னைப் பகுதிக்கு நான் இடம் பெயர்ந்தேன். ஆனாலும் வாரத்தில் ஒருநாளாவது அந்த வழியாக வந்து மணியைப் பார்த்துவிட்டு வந்துவிடுவேன். என்னுடைய ரேஷன் பொருளை அவருக்கு வாங்கித் தருவேன். ’சின்னப் பொண்ணு கஷ்டப்படுறா’ என அடிக்கடி சொல்வார். அந்த மகளுக்குக் கொடுப்பார் என நினைக்கிறேன்.

கடைசியாக நான்கைந்து மாதங்களுக்கு முன் ஒரு சனிக்கிழமை மதிய வேளையில் சென்றேன். இருவரும் ரேஷன் கடைக்குச் சென்றோம். பொருள்களை வாங்கிக் கொடுத்தேன். ’ஸ்கூல்ல இருங்க, டீ வாங்கிட்டு வர்றேன்’ என வாங்கி வந்தார். வழக்கமாக டீக்கடை சென்றுதான் சாப்பிடுவோம். கொரோனா புண்ணியத்தில் கடையில் அமர்ந்து டீ சாப்பிட அனுமதி இல்லாததால் பள்ளியில் வைத்து டீ சாப்பிட்டுவிட்டு அடுத்த சில நிமிடங்களில் அங்கிருந்து கிளம்பிவிட்டேன்.

மணி என்கிற செங்கேணி
மணி என்கிற செங்கேணி

இரண்டு மூன்று நாள்கள் கழித்து மறுபடியும் அலுவலகம் முடிந்து திரும்பிய ஒரு மாலை வேளையில் பள்ளிக்குச் சென்றேன்.

உள்ளே இருந்தவர், என்னைப் பார்த்ததும், வேகமாக கேட் அருகே வந்தவர், "நீங்க கிளம்பிடுங்க, ஸ்கூல்ல களவு போயிடுச்சு. ஒரு லட்ச ரூபாய்னு சொல்றாங்க. என்னைத்தான் சந்தேகப்படுறாங்க, பொண்ணு, மருமகன் எல்லாரையும் போலீஸ் ஸ்டேஷன் கூட்டிட்டுப் போனாங்க, நீங்க கிளம்பிடுங்க" எனப் பதற்றத்துடன் கூறினார்.

டீக்கடையில் விசாரித்தால், கொஞ்ச நாள் முன்பாக அதே பள்ளியின் வளாகத்தில் கொண்டு வரப்பட்ட அதே குழுமத்தின் மெட்ரிகுலேஷன் பள்ளியில் கதவை உடைத்துப் பணம் திருடப்பட்டதாகச் சொன்னார்கள். அவ்வளவு பெரிய வளாகத்தில் அறுபது வயதை நெருங்கிக்கொண்டிருக்கும் ஒரு முதியவர் மட்டும் தனியே இருக்கையில் எப்படிப் பணத்தைப் பள்ளியில் வைத்துச் சென்றார்கள் எனத் தெரியவில்லை.

அடுத்த நாள் மணியைப் பள்ளியிலிருந்து அனுப்பிவிட்டார்கள் எனக் கேள்விப்பட்டேன். "என் வீட்டம்மா இங்கதான் செத்தா. நானும் செத்தா இந்தப் பள்ளிக்கூடத்துலதான் சாகணும்" என அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தவரை ஒரேயொரு சம்பவம் வெளியில் அனுப்பிவிட்டது.

"என்ன நடந்ததென அவரிடம் கேட்கலாம்" என மறுநாள் காலையில் மணியின் சின்ன மகள் வீட்டுக்குச் சென்றேன். "தாத்தா காஞ்சிபுரம் போயிட்டாரு" என்றான் அவரின் பேரன். சரியெனத் திரும்பிவிட்டேன்.

அடுத்த சில மணி நேரத்தில் எனக்கு வில்லிவாக்கம் காவல்நிலையத்திலிருந்து போன். சென்றேன்.

இந்தச் சம்பவம் நடந்து நான்கு நாள்கள் அழைக்காதவர்கள் மணியின் வீட்டுக்குச் சென்று வந்த சில மணி நேரத்தில் அழைத்ததுமே எனக்குப் புரிந்தது, அந்தச் சம்பவம் தொடர்பாகத்தான் அழைக்கிறார்கள் என்று.

ஆனால் அழைத்த காவலர்களோ, "உங்க வண்டி நம்பர் என்ன, இதுக்கு முன்னாடி எத்தனை தடவை ட்ராஃபிக் ரூல்ஸை மீறியிருக்கீங்க?" என விசாரணையை வேறு கோணத்திலிருந்து தொடங்கினார்கள். (நான் சென்னை மாநகரப் போக்குவரத்துக் காவல் பணியில் சில ஆண்டுகள் தன்னார்வலராக இருந்தவன்)

வில்லிவாக்கம் காவல் நிலையம்
வில்லிவாக்கம் காவல் நிலையம்

"ஸ்டெர்ய்ட்டா மேட்டருக்குப் போயிடலாம் சார். என் அண்ணி அந்த ஸ்கூல் டீச்சர். மணி பத்து வருஷத்துக்கு மேலா எனக்குத் தெரியும். இப்ப விஷயத்தை நானும் கேள்விப்பட்டேன். அன்னைக்கு வழக்கம்போல ரேஷன் வாங்கித் தந்துட்டுப் போனேன். இப்ப காலையிலகூட அவரு வீட்டுக்குப் போனேன். அவர் பெரிய மகள் வீட்டுக்குப் போயிட்டதாச் சொல்றாங்க" என எல்லாவற்றையும் சொல்லி முடித்ததும், விசாரித்த (?) காவலர்கள், ஆய்வாளர் அறைக்குச் சென்றனர். பிறகு வெளியில் வந்தவர்கள் "சரி சார், நீங்க கிளம்புங்க" என என்னை அனுப்பிவிட்டார்கள். ’இங்க கயிறுதான் மிஞ்சும்போல, இதெல்லாம் ஏன் பஸ்ஸுல ஏத்துற’ என்கிற வடிவேலு காமெடி அவர்களுக்கு நினைவுக்கு வந்ததா தெரியாது, எனக்கு வந்தது. பிறகு பணம் கொள்ளையடித்தவரைக் கண்டுபிடித்துவிட்டதாகவும் கேள்விப்பட்டேன்.

மணியிடம் கேட்ட போது, "வழக்கம் போல் காலையில் எழுந்து வந்து பார்த்தப்ப கதவின் பூட்டு உடைச்சிருந்தது. என் மதி அப்ப வேலை செய்யாமப்போயிடுச்சு. உடனடியா ஹெட்மாஸ்டருக்குத் தகவல் சொல்லாம விட்டுட்டேன். பக்கத்துல இருந்த சிலர் 100க்கு போன் பண்ணிட்டாங்க. எவ்வளவு பணம், யார் எடுத்தா ஒண்ணுமே தெரியலை. இத்தனை வருஷத்துல ஒருநாளும் இப்படி நடந்ததில்லை. ஐயா (கரஸ்பாண்டண்ட்) வந்து எங்கிட்ட கேட்டார், நான் என்ன சொல்லன்னு பேசாம இருந்தேன். ’இவனை அனுப்பிடுங்க’ன்னு சொல்லிட்டார். சம்பளமா மூணு ஐந்நூறு தாள் தருவாங்க. அதுபோதும்னு இருந்தேன். பணத்துக்கு ஆசைப்பட்டேன்னு எல்லாருமே நினைச்சிட்டாங்கன்னு நினைக்கிறப்பதான் வருத்தமா இருக்கு" எனக் கண் கலங்கினார்.

ஜெய் பீம் - சினிமா விமர்சனம்

அதன் பிறகு ஒருநாள் மார்க்கெட்டில் வழக்கம்போல் டீ சாப்பிடும் கடையில் சந்தித்த போது, "பாதிநாள் பெரிய பொண்ணு வீட்டுலயும் மீதி நாள் இங்கயுமா இருக்க வேண்டி இருக்கும்போல. நீங்க எங்காச்சும் தங்க இடம் கிடைக்கற மாதிரி வேலை பாருங்களேன்" என்றார். ஐ.சி.எஃப் அதிகாரி ஒருவர் வீட்டில் ஒரு வேலை இருப்பதாக அங்கு வேலை பார்க்கும் எங்கள் இருவருக்கும் அறிமுகமான சரவணன் போய்க் கேட்டதற்கு, "வீட்டுல இருக்கிற வயதானவங்களுக்குக் காவலுக்கு ஆள் வேணும்; இவரைப் பார்த்தா இவரைப் பாதுகாக்கவே ஆள் தேவையிருக்கும் போல" எனச் சொல்லிவிட்டாராம் அந்த அதிகாரி.

கடைசியாக கடந்த மாதம் பார்த்தேன். "வேலை எதுவும் செட்டாகாட்டி இங்க இருக்க முடியாது. காஞ்சிபுரம்தான் போகணும். பள்ளிக்கூடத்தையும் இந்தத் தேவர் தெருவையுமே சுத்திட்டிருந்தவன் அங்க எப்படி இருக்கப்போறேன்னுதான் தெரியலை" என்றார். மாசத்துல ஒருநாள் வந்துட்டுப் போங்க என்றேன். "ஒருதடவை வந்துட்டுப் போனா 500 ரூபாய் ஆகிடுது" எனச் சிரித்தார்.

இரண்டு நாள்களுக்கு முன் அவரின் காஞ்சிபுரம் மகளிடமிருந்து போன். "அப்பா பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டார், கால் உடைஞ்சிடுச்சு, உங்ககிட்ட பேசணும்கிறார்" என்றார். போனை வாங்கி அழுத மணி "மறுபடி வில்லிவாக்கம் வருவேனா தெரியலை. ஆபரேஷன் பண்ணணும்னு சொல்லிட்டாங்க. பயமா இருக்கு. லெனின் சாரையும் நாம போய்ப் பார்க்கவே இல்ல" என ஏதேதோ பேசினார்.

"தைரியமா இருங்க மணியண்ணே, எல்லாம் சரியாகிடும்" என்றேன்.

"நீங்க பேசறது ஆறுதலா இருக்கு, நீங்க ஒரு எட்டு வந்துட்டுப் போக முடியுமா?" என்றார்.

"தீபாவளி முடியட்டும் வருகிறேன்" எனச் சொல்லியிருக்கிறேன்.

தீயது அழிந்து நன்மை ஜெயித்த நாள் எனத் தீபாவளியைக் குறிப்பிடுகின்றன புராணங்கள். விடிந்தால் தீபாவளி. மணிக்கும் நன்மை உண்டாகி, அவர் குணமடையட்டும்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு