Published:Updated:

`அழகான ஓரங்கள்; அபாயகரமான சாலைகள்..!' -பூட்டான் டு தமிழ்நாடு பயணம் #MyVikatan

பயணம்

``பயணங்கள் விடுமுறையைக் கழிக்க, நம் மனச்சுமைகளிருந்து சிறிது விடுபட சிறந்த அனுபவங்கள். மனித இனத்தின் வரலாறு என்பது மனித இனத்தின் பயணங்களின் வரலாறு"

`அழகான ஓரங்கள்; அபாயகரமான சாலைகள்..!' -பூட்டான் டு தமிழ்நாடு பயணம் #MyVikatan

``பயணங்கள் விடுமுறையைக் கழிக்க, நம் மனச்சுமைகளிருந்து சிறிது விடுபட சிறந்த அனுபவங்கள். மனித இனத்தின் வரலாறு என்பது மனித இனத்தின் பயணங்களின் வரலாறு"

Published:Updated:
பயணம்

ஜெய்கோனிலிருந்து சிலிகுரி வரையிலான சாலையின் இருபுறமும் தேயிலைத் தோட்டங்கள். வழியில் ஜல்தோரா தேசியப் பூங்கா இருக்கிறது. இது ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களின் சரணாலயம். இந்தியக் காண்டாமிருகம் அழிந்து வரும் உயிரினம். இந்தியா முழுவதிலும் வெறும் 2,000 காண்டாமிருகங்கள் மட்டுமே இப்போது உயிர் வாழ்கின்றன. ஜல்தோரா பூங்காவில் 163 காண்டாமிருகங்கள் இருக்கின்றன.

மேற்கு வங்காளத்தின் இந்தப் பகுதியைக் கடந்தவுடன் பீகார். எங்கள் பயணத்தின் மிகக்கடுமையான வாகன நெருக்கடியை பீகாரில் சந்தித்தோம். 26 கிலோ மீட்டர் தூரத்தைக் கடப்பதற்கு இரண்டு மணி நேரமானது. எங்களுக்கு எதிரே வரும் லாரிகள் 26 கிலோமீட்டர் தூரத்துக்கு நின்றுகொண்டிருந்தன. பல லாரிகளில் ஓட்டுநர்கள் இருக்கையில் இல்லை. சில பேர் சமைத்துக் கொண்டிருந்தார்கள். பல மணிநேரமாக இந்த நெருக்கடி இருந்திருக்க வேண்டும்.

பீகார்
பீகார்

பீகார் நீர்வளம் மிக்க மாநிலம். கங்கை ஆறும் அதன் துணை ஆறுகளும் இமயத்திலிருந்து ஓடிவரும் எண்ணற்ற ஆறுகளும் ஓடும் நிலப்பகுதி. சாலையின் இருபுறமும் நெல், கோதுமை வயல்கள். நீர் வளமும், நில வளமும் நிறைந்த இந்த மாநிலத்தில் ஏழ்மை தாண்டவமாடுகிறது. வழியில் பார்த்த பெரிய தொழில் சாணி வறட்டி உற்பத்திதான். எல்லா ஊர்களிலும் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். அவர்களும் வறுமையிலிருப்பவர்களாகவே தோன்றினார்கள். மனித வாழ்க்கையின் ஏற்றத்துக்கு நிலவளம், நீர்வளம் இவற்றைவிட மனவளம்தான் அதிகம் தேவை.

``கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு

மாடல்ல மற்றை யவை" - என வள்ளுவன் வகுத்தான். கல்வி எனும் செல்வத்தைக் குறைவின்றித் தந்த சமூகம் தமிழ்ச் சமூகம்.

பீகாரைக் கடந்து ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு வரும்போது பென்னாகரம் வட்டத்துக்குள் வந்துவிட்ட உணர்வு ஏற்பட்டது. பென்னாகரம் வட்டம் போன்ற மேடு பள்ளமான நில அமைப்பு. பள்ளங்களில் மட்டும் நீர் ஆதாரம், பசுமை, வானம் பார்த்த பூமி. எளிமையான பழங்குடிமக்கள். சொற்ப சம்பளத்துக்காக ஏன் இவர்கள் ஆயிரக்கணக்கான மைல்கள் பயணம்செய்து சென்னையிலும், கோயம்புத்தூரிலும், திருப்பூரிலும் பணியாற்றுகிறார்கள் என்பது இவர்கள் ஊரைப் பார்த்தால் புரிகிறது.

``கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்

சிங்க மராட்டியர்தங் கவிதை கொண்டு சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்"

என்று பாரதி பாடியது கனவு மட்டுமல்ல. அது ஓர் அரசியல், பொருளாதாரத் தத்துவம். நாடு என்ற அரசியல் அமைப்பில் ஒவ்வொரு குடிமகனும் தன்னால் முடிந்த பங்களிப்பைச் செய்கிறான். அரசின் கடமை, அனைவருக்கும் ஒரே மாதிரியான வாழ்க்கைத் தரத்தை அளிப்பது.

பீகார்
பீகார்

பன்றிகளையும் கழுதைகளையும் தமிழ்நாட்டுத் தெருக்களில் பார்த்து பல பத்தாண்டுகள் ஆகின்றன.‌ பீகாரில் இப்போதும் பார்க்கலாம். தெரு விளக்குகளைப் பார்க்கவில்லை. சாலை ஓரங்களில் செய்தித்தாள் வாசிப்பவர்களைப் பார்க்கவில்லை. கடைகளில் செய்தித்தாள்களும் பத்திரிகைகளும் தொங்குவதையும் பார்க்கவில்லை. ஆந்திராவுக்கு வடக்கே பேருந்து வசதி மிக மிகக் குறைவு. இந்தியாவின் மற்ற எந்த மாநிலங்களிலும் தமிழ்நாட்டுக்கு இணையான பேருந்து வசதிகள் கிடையாது.

வட இந்திய மாநிலங்கள் பலவற்றில் தேசிய நெடுஞ்சாலைகள், தமிழ்நாட்டு மாவட்டச் சாலைகளின் தரத்திலேயே இருக்கின்றன. பல இடங்களில் நான்கு வழிச் சாலைகள் அமைக்கும் பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களைக் கடந்தால் மீண்டும் மேற்கு வங்காளம். கோரக்பூருக்குத் தெற்கே ஒடிசா மாநிலத்தில் நுழைகிறோம். அங்கிருந்து நான்குவழிச்சாலை. நெடுஞ்சாலையையொட்டி இருக்கிற ஊர்களில் வளர்ச்சியைக் காண முடிந்தது.

கொரோனா தொற்று பற்றிய அச்சத்தின் காரணமாக, ஊர் திரும்பும்போது எந்தப் பெரிய நகரத்துக்குள்ளும் செல்லவில்லை. மக்கள் நெருக்கமுள்ள இடங்களைத் தவிர்த்தோம். சில்கா ஏரியை மட்டும் பார்த்தோம். 1165 சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள ஆழம் குறைந்த ஏரி. பல இடங்களில் சில அடிகள் ஆழம் மட்டுமே. கடலிலிருந்து மணல் திட்டுகளால் பிரிக்கப்பட்ட, உவர் நீர் தன்மை கொண்ட ஏரி போன்ற கடற்காயல். ஒரு மணிநேரம் படகு சவாரி செய்து விட்டு மீண்டும் பயணத்தைத் தொடங்கினோம்.

அடுத்தது ஆந்திரப்பிரதேசம். ஆந்திரா வந்துவிட்டாலே நம் ஊருக்கு வந்துவிட்ட உணர்வு ஏற்படுகிறது. தேசிய நெடுஞ்சாலை விசாகப்பட்டினம் நகரின் நடுவே செல்கிறது. விசாகப்பட்டினம் துறைமுக நகரம். தொழிற்சாலை நகரம். நகரைக் கடந்தபின் கண்ணயர்ந்து விட்டேன். விழித்துப் பார்த்தபோது இருபுறமும் பச்சைப் பசேலென்ற நெல்வயல்கள். தென்னை, வாழை மரங்கள். இது கிழக்கு கோதாவரி மாவட்டம். ராஜமுந்திரி நகரைக் கடந்தபோது சில கிலோமீட்டர்கள் தொலைவுக்கு இருபுறமும் நர்சரிகள். சிறிய செடிகள் முதல், ஏழு, எட்டு அடி உயரமுள்ள மா, கொய்யா, தென்னை போன்ற மரக்கன்றுகளையும் விற்கிறார்கள். ரோஜா, போகன்வில்லா போன்ற பூச்செடிகளும் மற்ற அழகுச் செடிகளும் விற்பனைக்கு இருக்கின்றன.

சில்கா ஏரி
சில்கா ஏரி

பெருமளவில் பருத்தி வேளாண்மை நடைபெறுகிறது. நாங்கள் பயணித்த பகுதிகளிலேயே அதிக பொருளாதார வளர்ச்சி அடைந்த பகுதி இதுவே. கிருஷ்ணா, கோதாவரி என்ற இரண்டு மிகப்பெரிய ஆறுகளின் வடிகால் பகுதி இது.

இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதி பொருளாதார வளர்ச்சி குன்றி இருந்தது. 1820 ஆம் ஆண்டிலிருந்து 1853 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், ஏழு ஆண்டுகள் மட்டுமே விவசாயிகளால் தங்கள் தேவைக்கேற்ற வேளாண் பொருள்களை உற்பத்தி செய்ய முடிந்தது. மற்ற ஆண்டுகளில் ஒன்று பெருவெள்ளம் அல்லது வறட்சி. மக்கள் தொகை 7,38,308 லிருந்து 5,60,041 ஆகக் குறைந்து போனது. ஆங்கிலேய அரசுக்கு இந்தப் பகுதியிலிருந்து கிடைக்க வேண்டிய வருவாய் குறைந்துவிட்டது.

வருவாய் குறைந்ததற்கான காரணங்களை ஆய்வு செய்வதற்காக சர் ஆர்தர் காட்டனை, அப்போதைய சென்னை மாகாண கவர்னர் இப்பகுதிக்கு அனுப்பினார். ஆர்தர் காட்டன் ஒரு பொறியியல் நிபுணர். மிகப் பெரிய ஆறுகள் ஓடும் பகுதியில் வேளாண்மைத் தொழில் நசிந்திருப்பதைப் பார்த்தார். தவலேசுவரம் என்ற இடத்தில் கோதாவரி ஆற்றின் குறுக்கே ஓர் அணையைக் கட்டினார். அந்த இடத்தில் ஆற்றின் குறுக்களவு ஆறு கிலோமீட்டர். அதேபோல குண்டூருக்கு மேற்கே கிருஷ்ணா ஆற்றின் குறுக்கேயும் அணை கட்டினார்.

அன்று முதல் இப்பகுதியில் வேளாண்மை தழைத்தோங்கியது. ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் மொத்த நெல் மற்றும் மிளகாய் உற்பத்தியில் 50 விழுக்காடும், பருத்தி உற்பத்தியில் 33 விழுக்காடும் இப்பகுதியில் நடைபெறுகிறது.

கடலோர ஆந்திரப் பகுதிகளில், நிலவுடைமையாளர்களாக கம்மா நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். வேளாண் தொழிலில் ஈட்டிய பணத்தைப் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து பெரும் வணிகர்களாகவும் தொழிலதிபர்களாகவும் வளர்ச்சி பெற்றிருக்கிறார்கள். இவர்களுடன் திருமண உறவுகள் கொண்டிருக்கும் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த கம்மா நாயுடுகள் இவர்களைப் போலவே பருத்தி ஆலைகள் வைத்து வளர்ச்சியடைந்தார்கள். இதனுடைய தாக்கம் ராஜபாளையத்தில் வாழும் கம்மா நாயுடுகளுக்கும் இருப்பதைக் காணலாம்.

பீகார்
பீகார்

தங்கள் வாழ்க்கையை மாற்றிய ஆர்தர் காட்டனை, கம்மா சமுதாயத்தினர் கடவுளெனவே போற்றுகிறார்கள். இங்கே உள்ள ஓர் ஊரின் பெயர் 'காட்டன்ரெட்டிப்பாளையம்'. தவலேசுவரத்தில் ஆர்தர் காட்டனுக்குச் சிலை வைக்கப்பட்டிருக்கிறது. என். டி.ராமராவ் முதலமைச்சரானவுடன், ஹைதராபாத்தின் உசேன் சாகர் ஏரிக்கரையில் ஆர்தர் காட்டனுக்குச் சிலையெழுப்பினார். ஆந்திராவின் மிகப்பெரிய ஆளுமைகளின் சிலைகள் வரிசையாக அமைக்கப்பட்டிருக்கும் இடம் அது.

கூடுரில் இரவு தங்கினோம். காலை புறப்பட்டு திருப்பதி, சித்தூர் வழியாக வேலூர் அருகில் தமிழகத்தில் நுழைந்தோம். சந்தேகத்துக்கிடமின்றித் தமிழகம் மற்ற மாநிலங்களை விட அதிக வளர்ச்சியடைந்திருக்கிறது. குறிப்பாக கிராமங்கள் வளர்ச்சியடைந்திருக்கின்றன. இருப்பினும், மேலை நாடுகளை ஒப்பிடும்போது நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகம்.

மாலை நான்கரை மணிக்கு வீடு வந்து சேர்ந்தோம். 13 நாள்கள் பயணம் எந்தச் சிரமமுமின்றி இனிமையாக முடிந்தது. 6051 கிலோமீட்டர் பயணித்திருந்தோம். மூன்று இரவுகள் பூட்டானில் தங்கினோம்.

எரிபொருளுக்காக ரூபாய் 31,865. சுங்கக் கட்டணம் ரூபாய் 5567. தங்குவதற்காக ரூபாய் 46,380. உணவு மற்றும் இதரச் செலவுகள் ரூபாய் 56,000. எங்கள் நான்கு பேருக்கும் சேர்ந்து 13 நாள்கள் பயணத்துக்கான மொத்தச் செலவு ரூபாய் 1,40,000. ஒரு நாளைக்கு ஒருவருக்கு 3000 ரூபாய்தான் செலவாகியிருக்கிறது. இந்தச் சிறிய செலவுக்கு, நாங்கள் பெற்ற அனுபவங்கள் விலைமதிக்க முடியாதவை. உணவு முறையும், தினசரி உடற்பயிற்சியும் எங்களைச் சோர்வில்லாமல் வைத்தது.

``இந்தியாவில் கார் பயணம் எளிதானதா?" என்ற கேள்விக்கான பதில் சிக்கலானது. கேசவன் மிகச்சிறந்த ஓட்டுநர். மது புகையிலை போன்ற தீய பழக்கங்கள் எதுவும் கிடையாது. காபி, டீ கூட அதிகம் குடிக்க மாட்டார். தினமும் காலையில் உடற்பயிற்சி செய்வார். விளையாடுவார். மிகக் கவனமாக வண்டி ஓட்டினார். ஆனால், இந்தியச் சாலைகள் பாதுகாப்பானதாக இல்லை. ஒருமுறை சாலையின் நடுவில் வளர்க்கப்படும் செடிகளிலிருந்து ஒரு எருமை மாடு சடாரென்று குறுக்கே வந்து விட்டது. கேசவன் சமாளித்து ஓட்டி விபத்தைத் தவிர்த்தார். ஒரு மாலை வேளையில் இரண்டு கைகளிலும் இரண்டு குப்பிகளைப் பிடித்துக்கொண்டு 10 அல்லது 12 வயதுச் சிறுமி ஒருவர் சாலையின் குறுக்கே ஓடினார்.

மருத்துவர் செந்தில்
மருத்துவர் செந்தில்

கூகுள் மேப் இல்லையென்றால் வழியில் இருப்பவர்களைக்கேட்டுத்தான் வழியறிந்து கொண்டிருக்க முடியும். பல இடங்களில் வழிகாட்டிப் பலகைகள் இல்லை. இரவு நேரத்தில் இந்தியச் சாலைகள் அபாயகரமானவை.‌ சாலை ஓரங்களைத் தெளிவாகக் காட்டக்கூடிய பிரதிபலிப்பான்கள் (Reflectors) கிடையாது. குத்துமதிப்பாகத்தான் ஓட்ட வேண்டும். எதிரில் வரும் வாகனங்களின் வெளிச்சம் கண்ணைக் கூசச் செய்யும். சில விநாடிகளுக்கு எதுவும் தெரியாது. ஒருமுறை எதிரில் வந்த வாகன வெளிச்சம் கடந்த பிறகு சாலையைப் பார்த்தபோது, சாலையின் குறுக்காகச் சென்ற ஒரு சைக்கிளைப் பார்த்து, மயிரிழையில் அதைத் தவிர்த்தேன்.

போகும்போது இரவுப் பயணத்தை முழுவதும் தவிர்த்தோம். திரும்பி வரும்போது ஒருநாள் இரவு 12 மணி வரையும், இரண்டு நாள்கள் இரவு 10 மணி வரைக்கும் பயணிக்க வேண்டியதாயிற்று.

இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்பு சாலையோரங்களில் பெரிய மரங்கள் இருக்கும். கண்ணுக்கு இதமாக இருக்கும். வெயிலின் தாக்கமும் கடுமையாக இருக்காது. புதிதாகப் போடப்பட்டிருக்கும் நான்கு வழிச் சாலைகளின் ஓரங்களில் மரங்கள் கிடையாது. இந்தச் சாலைகள் பொட்டல்வெளிகளாகக் காட்சியளிக்கின்றன. சாலை அமைக்கத் தொடங்கும்போதே மரங்களை நட்டு விட வேண்டும். அதுவும் ராஜமுந்திரியில் கிடைப்பது போன்ற ஆறு அடி, ஏழு அடி உயரமுள்ள மரங்களை நடவேண்டும். சாலை அமைத்து முடிப்பதற்கு முன்பே சுங்கச்சாவடிகளை அமைத்து சுங்கம் மட்டும் வசூலிக்கத் தொடங்கிவிடுகிறார்கள்! நான்கு வழிச்சாலைகளின் நடுவில் உள்ள இடைவெளிகளில் கண்டிப்பாகச் செடிகளை வளர்க்க வேண்டும். எதிர் வரும் வாகனங்களின் விளக்கொளி நம் கண்களைக் கூசாமல் தடுக்க இவை பயன்படும்.

நான் என் மருத்துவப் பணியை நேசிப்பவன். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஆண்டுகளிலும்கூட மருத்துவப் பணியைச் செய்தவன். எவ்வளவு பிடித்த வேலையாக இருந்தாலும் அந்த வேலைக்கும் ஓய்வு தேவை.

பயணம்
பயணம்

"Any attraction needs a detraction"

பயணங்கள், விடுமுறையைக் கழிக்க நம் மனச்சுமைகளிருந்து சிறிது விடுபட சிறந்த அனுபவங்கள். மனித இனத்தின் வரலாறு என்பது மனித இனத்தின் பயணங்களின் வரலாறு.

இந்தியாவுக்கு கடல் வழி தேடிப் பயணித்த கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார். மனித வரலாற்றின் மிக முக்கியப் பயணம் அது. முதன் முதலில் இந்தியாவுக்குக் கடல் வழி கண்டுபிடித்த வாஸ்கோடகாமா ஆசிய நாடுகளின் வரலாற்றையே மாற்றினார்.

பயணியுங்கள்!

உலகத்தைப் பாருங்கள்!

- மருத்துவர் இரா.செந்தில் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், தர்மபுரி தொகுதி)

கட்டுரையாளரின் முந்தைய பயணக் கட்டுரைகளைப் படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்:

முதல் நாள் - https://www.vikatan.com/news/travel/travel-on-the-road-and-live-the-life

இரண்டாம் நாள் - https://www.vikatan.com/news/miscellaneous/story-of-william-lambton-who-measured-india

மூன்றாம் நாள் - https://www.vikatan.com/news/miscellaneous/william-henry-sleeman-suppressed-criminal-gangs-known-as-thuggee

நான்காம் நாள் - https://www.vikatan.com/lifestyle/travel/know-about-the-dhamek-stupa-at-sarnath-and-buddhas-preaching

ஐந்தாம் நாள் - https://www.vikatan.com/lifestyle/miscellaneous/reader-shares-gaya-travel-experience

ஆறாம் நாள் - https://www.vikatan.com/news/miscellaneous/phuentsholing-the-

ஏழாம் நாள் - https://www.vikatan.com/lifestyle/miscellaneous/a-travellerss-story-in-bhutan-amid-of-2-inches-high-snow

எட்டாம் நாள் - https://www.vikatan.com/lifestyle/miscellaneous/eighth-day-experience-in-bhutan-which-is-a-silence-place

ஒன்பதாம் நாள் - https://www.vikatan.com/lifestyle/miscellaneous/a-ninth-day-travel-in-bhutan-via-thimbu-nagar-and-see-a-big-buddha-statue

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/