உடல் ஆரோக்கியத்திற்காகவும், சர்க்கரை நோய் காரணமாகவும் நம்மில் பலர் நடைபயணம் மேற்கொண்டுவரும் சூழலில், சூழல் சமூக நீதிக்கான (Climate social justice) நடைபயணம் ஒன்றை சென்னைக் காலநிலைச் செயல்பாட்டுக் குழு (Chennai climate action group) ஏப்ரல் 29 அன்று மேற்கொண்டனர். காலநிலைச் செயல்பாட்டுக் குழு என்ற இந்தத் தன்னார்வக் குழு, வடசென்னையில் சூழல் சமூக நீதிக்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அந்தச் செயல்பாடுகளின் புதிய முன்னெடுப்பாக, எண்ணூர் முதல் வேப்பேரி வரை 24 கி.மீ. நடைபயணத்தை இவர்கள் ஒருங்கிணைத்தனர்.
சமூக நீதியும், சூழல் நீதியும் வெவ்வேறானவை அல்ல என்பதை உணர்த்தவும், எண்ணூர் - மணலி பகுதியின் சமூக மற்றும் சுற்றுச்சூழல் நீதியைக் கோரியும் இந்நடைப் பயணம் மேற்கொள்ளப்பட்டது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
காந்தியவாதியும் சமூக செயற்பாட்டாளருமான நிதினுடன் 5 இளைஞர்கள் இணைந்து மொத்தம் ஆறுபேர், எண்ணூரிலிருந்து பெரியார் திடல் வரை இந்தச் சமூக மற்றும் சுற்றுச்சூழல் நீதிக்கான நடைபயணத்தை மேற்கொண்டனர்.
மஹாராஷ்டிராவைச் சேர்ந்த நிதின் உலக அமைதி மற்றும் நட்பு இயக்கத்தின் சமூக ஆர்வலர் ஆவார். இதுவரை 46 நாடுகளில் அமைதிக்கான நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ள இவர் இன்றைய நடைப்பயணத்தில் எண்ணூர் பகுதிக்கான சூழலியலைக் கருத்தில் கொண்டு காலநிலை செயல்பாட்டுக் குழுவுடன் இணைந்தார்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSகாலநிலை செயல்பாட்டுக் குழுவின் தன்னார்வலர் பெநிஷா இதுகுறித்துப் பேசும்போது, “வடசென்னை பகுதியில் தொழில் விரிவாக்கங்கள் அல்லது புதிய தொழிற்சாலைகள் கூடாது, சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்து எண்ணூர் பகுதிக்கு விளிம்புநிலை மக்களை இடமாற்றம் செய்யக்கூடாது ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, அங்கு வாழும் மக்களுக்கான நீதியைப் பெற்றுத்தர வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த நடை மேற்கொள்ளப்பட்டது” என்றார்.
மேலும், “நம்மைச் சுற்றி நடக்கும் அத்தனை நிகழ்வுகளுக்கும் ஒரு குடையாய் அமைவது சமூகநீதிதான். மற்ற அனைத்து நீதிகளுக்கான தாய் சமூகநீதிதான். எனவே சூழலியல் நீதியும் சமூக நீதியினுள் அடங்கும்” என்றார்.

எண்ணூர் பகுதியானது 32 ரெட் கேட்டகிரி இண்டஸ்ட்ரீஸ், அதாவது சிவப்புப் பிரிவில் அடங்கும் அபாயம் நிறைந்த தொழிற்சாலைகளைக் கொண்டுள்ள பகுதியாகும். தொழிற்சாலைகளால் எண்ணூரின் விளிம்புநிலை மக்கள் வாழும் இடங்கள் நிரப்பப்பட்டு வரும் சூழலில், அவர்களுக்கான நீதியை முன்னிறுத்தியிருக்கின்றனர் இந்தக் குழுவினர்.
சென்னையின் சிறந்த விளையாட்டு வீரர்கள் வடசென்னையின் பகுதிகளிலிருந்து வந்தவர்களாகவே இருக்கின்றனர். ஆனால், தற்போதைய சூழலில் எண்ணூர் - மணலி பகுதியில் உள்ள அசுத்தமான தொழில்துறை மாசு மற்றும் கழிவுகள் விளையாட்டு மைதானங்களை விஷமாக்கியுள்ளன. இதனால் இளம் வீரர்களின் கனவுகளும் மைதானங்களின் விஷத்தால் கரைக்கப்படுகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தால் நியமிக்கப்பட்ட கூட்டு நிபுணர் குழுவின் சமீபத்திய அறிக்கை, எண்ணூரில் உள்ள குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்படும் அபாயம் அதிகமாக உள்ளது என்று தெரிவித்திருக்கிறது. மேலும் எண்ணூர் அனல் மின்நிலையத் தொகுதியைச் சுற்றி வாழும் 5 வயதுக்குட்பட்ட 63 சதவிகித குழந்தைகள் சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்று மற்றொரு சமீபத்திய ஆய்வு உறுதி செய்திருக்கிறது. இவை அனைத்தும் வடசென்னை மக்களின் மீது செலுத்தப்படும் சத்தமில்லா வன்முறையாகக் கருதப்படுகிறது.

"அகிம்சை எனப்படுவது சண்டையிடாமல் சாந்தமாக இருப்பது மட்டுமில்லாமல், நம்மைச் சுற்றி இருக்கும் எவற்றிற்கும் நம்மால் தீங்கு விளையாதபடி வாழ்வை மேற்கொள்வதும் ஆகும். அந்த வகையில் நம்மைச் சுற்றி இருக்கும் சூழலுக்குத் தீங்கு விளைவிக்காதபடி நம் நடத்தைகள் அமைய வேண்டும். மகாத்மா காந்தி கூறியதுபோல், ஒவ்வொரு மனிதனின் தேவையையும் பூர்த்தி செய்யப் பூமி போதுமான அளவு வளங்களை வழங்குகிறது, அவ்வளங்கள் அவர்களின் பேராசையைப் பூர்த்தி செய்வதற்கு அன்று. சூழலியல் அநீதிகள் பரவலாக இல்லாத காலத்திலேயே காந்தி இந்தச் செய்தியை நமக்கு அளித்துவிட்டுச் சென்றுள்ளார். அதை மனதில் ஏந்தியே இந்தச் சூழலியல் சமூகநீதிக்கான நடைப்பயணத்தை நான் காலநிலை செயல்பாட்டுக் குழுவுடன் இணைந்து மேற்கொண்டேன்” என்றார் நிதின்.
மேலும் நடைபயணங்கள் நம்மை மண்ணுடனும் இயற்கையுடனும் மக்களுடனும் நேரடியாக தொடர்புப்படுத்தக் கூடியவை என்றும் சாலைகளில் நாம் இணைந்து நடக்கையில், அதனைப் பார்க்கும் மக்கள் ஒருவித ஆர்வத்துடன் நம்மை அணுகும்போது அவர்கள் விழிப்புணர்வு அடைவார்கள், நடைபயணங்களே நாம் பழகும் அதிகபட்சமான அகிம்சை வெளிப்பாட்டு முறை என்றும் கூறினார்.

நடந்தால் மாற்றங்கள் நடந்தேறுமா என்ற எண்ணம் நம் மனதில் எழ, நடத்திக்காட்ட வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர் சென்னை காலநிலை செயல்பாட்டுக் குழு.