Published:Updated:

`இனிமே வராதே!' - அம்மாவின் கடைசி உத்தரவு - சிறுகதை #MyVikatan

parents
parents

``இது என்னோட வீடு… ஒருத்தனுக்கும் இடம் கிடையாது. இது என் அம்மா வீட்டு சொத்து. எல்லாரும் வெளிய போங்கடா…” என்று கோபத்தில் கத்திக்கொண்டிருந்தார் அம்மா.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

அம்மாவைப் பார்த்து ஓராண்டிற்கு மேலாகிவிட்டிருந்தது. அப்பாவைப் பார்த்து சில மாதங்களாகி விட்டிருந்தன. கொரோனா வேறு சென்னையிலேயே என்னை அமுக்கி வைத்திருந்தது. தம்பிதான் போன் பண்ணி, ``அப்பா உன்னை பாக்கணும்னு சொன்னார். நாம எல்லோரும் அம்மாவை பாக்கப்போகணும்னு வேற சொல்லிகிட்டே இருக்கார். கிளம்பி வாடா…” என்று சொல்லி இருந்தான்.

அலுவலகத்தில் இருக்கும் மனைவியிடம், ``அப்பாவை பார்க்கப் போறேன், நீ ஆபிஸ் முடிச்சிட்டு விருப்பம் இருந்தா குழந்தைகளை கூட்டிக்கிட்டு ஊருக்கு வா…” என்று சொல்லிவிட்டு சென்னையில் இருந்து ஆத்தூருக்கு பஸ் ஏறிவிட்டேன். ஒன்றே கால் ஆண்டுக்கு முன்பு நடந்த சம்பவம் மனதில் நிழலாட ஆரம்பித்தது.

``இது என்னோட வீடு… ஒருத்தனுக்கும் இடம் கிடையாது. இது என் அம்மா வீட்டு சொத்து. எல்லாரும் வெளிய போங்கடா…” என்று கோபத்தில் கத்திக்கொண்டிருந்தார் அம்மா.

Father, son
Father, son
Pixabay

நான், தம்பி, அண்ணன், அப்பா நால்வரும் அம்மாவைப் பார்த்துக்கொண்டிருக்க, ``எனக்கு இனி புருஷனும் இல்ல… புள்ளங்களும் இல்ல. இந்த வீட்டை என்னை கேட்காம அடகு வச்சிருக்கீங்களே… இதுதான் நீங்க குடும்பம் பண்ற லட்சணமாடா..? அவனவன் பொண்டாட்டி, புள்ளைகளுக்கு காசு, பணம் சேக்கற வேகத்துல, நான் குடியிருக்கிற வீட்டையும் அடகு வச்சிருக்கீங்க. அதுக்கு உங்கப்பனும் ஒடந்தை… ச்சீ…”

``அப்படில்லாம் இல்ல புள்ள… நம்ம பெரியவன் எங்கயோ கடன் வாங்கி மாட்டிக்கிட்டான். பையனை அங்கயே உக்கார வச்சிட்டானுங்க. என்கிட்ட போன் பண்ணி அழுதான். என்ன பண்றதுன்னு தெரியல. நாமளே காய்கறி வியாபாரம் பண்ணிகிட்டு பொழப்பை ஓட்டிக்கிட்டிருக்கோம். 2 லட்சம் கேட்டான். பணமில்ல. வீடா, புள்ளையான்னு பாக்கும்போது புள்ளைதான் பெரிசா தெரிஞ்சான். அதான் வீட்டு பத்திரத்தைக் கொண்டுபோய் அடகு வச்சி பையனை கூட்டிட்டு வந்தேன். மூணு மாசத்துல மீட்டுடலாம்ப்பான்னு சொன்னான்… மூணு வருசமாகிருச்சி….” என்று இழுத்தார் அப்பா.

``அதானே… கைநாட்டுக்காரிதானே நானு? இதோ இவனைத்தான் படாதபாடுபட்டு பெரிய படிப்பு படிக்க வைச்சேன். அது படிச்ச திமிருல மெட்ராஸ்லயே அடைஞ்சிகிச்சு…” என்றபடி என்னைக் கைகாட்டினார்.

``அம்மா…” என்றேன்

``பேசாதடா… உன்னை படிக்க வச்சதுக்கு நான் சும்மா இருந்திருக்கலாம். எல்லாருமா சேந்து என்னைய சுலபமா ஏமாத்திட்டீங்க. என் வீடு, கடைசியில என்னை விட்டுட்டு போயிடும் போலருக்கு. இந்த வீடு என் அம்மா, என் அக்கா, நான்னு எங்க குடும்பமே என்னோட சின்ன வயசுல சேர்ந்து கட்டி வச்ச கோயிலு. உங்களுக்கு வேணா இது மண்ணுவீடா இருக்கலாம். இது எனக்குப் பொன்னு வீடு.

எல்லாரும் கூட்டுக்களவாணிகளா இருந்துட்டீங்கள்ல… இனி எவனும் என் கண்ணு முன்னாடி நிக்காதீங்க. ஒருத்தணும் இங்க அம்மான்னு சொந்தங் கொண்டாடிக்கிட்டு வரக்கூடாது. பொண்டாட்டின்னு நீயும் வராதே… உன் புள்ளைங்ககூடவே இருந்துக்க. மீறி இங்க வந்தீங்கன்னா… என் பொணத்தைத்தான் பாக்க வேண்டியிருக்கும். வேப்பிலைபட்டியான் பொண்ணு சொன்னா சொன்னதுதான்… என் வீட்டை பாத்துக்க எனக்குத் தெரியும்” என்றபடி வீட்டுக்குள் சென்று பூட்டிக்கொண்டார்.

வீடு (மாதிரி படம்)
வீடு (மாதிரி படம்)

என்ன செய்தும், என்ன சொல்லியும் அம்மா கரையவே இல்லை. பொழுதும் கரைந்து போகவே அவனவனும் பொண்டாட்டி புள்ளைகள் இருக்கே என்று ஊருக்கு கிளம்பி வந்துவிட்டோம். அப்பா மட்டும் அம்மாவிடம் ஒரு மாதம் போராடிப் பார்த்தார். அம்மா மசியவே இல்லை. வேறு வழியின்றி தம்பியோடு அப்பா வந்துவிட்டார்.

அம்மாவிற்கு நான் வாங்கிக் கொடுத்த போனையும் ஆஃப் செய்துவிட்டார். உறவுகள் யாரையும் சந்திக்க விரும்புவதில்லை. தன்னைப் பற்றி யாரும் யாரிடமும் பேசவேண்டாம் என்று அக்கம்பக்கத்திடம் சொல்லிவைத்துவிட்டார். அவர் அந்த மண் வீட்டிலேயே இருக்கிறார் என்ற தகவல் மட்டும் எங்களுக்குக் கிடைத்தது.

காலம் எல்லாவற்றையும் ஆற்றும் என்ற கணக்கில் அவரவர் வேலையை பார்த்துக்கொண்டிருந்தபோதுதான், போதாத கொரோனா வந்து முடக்கிப்போட்டது. அம்மா சண்டை போட்ட மூன்று மாத காலத்தில் வந்த கொரோனா இன்னும் காலத்தை நீட்டிக்க, ஒன்றேகால் வருடம் ஆகிப்போனது. இடையில் அரசின் நெருக்கடியாலும், நோயின் பயத்தாலும் ஊருக்குச் செல்ல முடியாத நிலை ஆகிவிட்டது.

தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டதனால், ஊருக்குச் சென்று கொண்டிருக்கிறேன். எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை.

`ஆத்தூர் வந்துடுச்சி எல்லாம் இறங்குங்கப்பா…” என்று கண்டக்டர் சொன்னது மட்டும் அரைகுறையாய் காதில் விழ, படக்கென்று முழிப்பு வந்துவிட்டது.

ஆறு மணி நேர பஸ் பயணத்திற்குப் பிறகு ஆத்தூரை அடைந்திருந்தேன். பயணக் களைப்பில் உடல் தளர்ந்துபோகவே வீட்டை நோக்கி மெல்ல நடைபோட்டேன்.

வீட்டை நெருங்கும்போதே அம்மாவின் கோபக் குரல் கேட்டது. அப்பாவைத்தான் திட்டிக்கொண்டிருந்தார். ``எங்கய்யா போன நீ..? ஒண்ணே கால் வருஷமாச்சு… என்னை நீ தனியா விட்டுட்டுப்போயி. நீயெல்லாம் புருஷனாய்யா..?” - வயசானாலும் அம்மாவின் கம்பீரமும், ஆளுமையும் குறையவில்லை.

``ஏ புள்ள… வாய்க்கு வந்ததை எல்லாம் பேசாத. நீதான் எங்ககிட்ட சண்டை போட்டுக்கிட்டு தனியாவே இருந்துட்ட. `என்னைத் தேடி ஒருத்தனும் வராக்கூடாது, எனக்கு இனி புருஷனும் இல்லை, புள்ளைங்களும் இல்லை, மீறி என்னை பாக்க வந்தா அந்த நிமிஷமே என் உசுரை மாய்ச்சிக்குவேன், நீ மட்டுமில்ல… உன் புள்ளைங்களும் என்கிட்ட வரக்கூடாது. இனிமே நீங்க யாரோ… நான் யாரோ…'ன்னு எல்லாம் சொன்னது நீதானடி..? அம்மாடி, உனக்குக் கோவம் வந்தா ஆங்காரமாயிடுவ. சொன்ன சொல்லுலயே நிக்கற ஆளு நீ… அப்பவும் சரி எப்பவும் சரி… உன் வார்த்தையை கேட்டுத்தான் புள்ள எனக்கு பழக்கம். மீறிப் பழக்கமில்லை. ஒங்கோவம் அடங்கட்டுமின்னுதான் பையனுங்க வீட்டுல இருந்தேன். அதுக்குள்ள கொரோனா வந்துடுச்சி… ஊர்லய மாட்டிக்கிட்டேன். நான் பண்ணது தப்புத்தான்… என்னை மன்னிச்சிடுடி…” - எப்போதும்போல அப்பாவின் குரல் அம்மாவுக்குக் கட்டுப்பட்டே இருந்தது.

Father and Son
Father and Son

வீட்டிற்கு வந்திருந்தேன். தம்பியும் அங்கே வந்துவிட்டிருந்தான். அம்மாவைப் பார்த்தேன். அம்மாவின் உடம்பெல்லாம் மண்ணாக இருந்தது. அப்பாவைப் பார்த்தேன். புது மாப்பிள்ளைபோல புத்தாடையோடு இருந்தார். குழப்பம் தலைக்கு ஏற, ``என்னம்மா இது கோலம்… உடம்பெல்லாம் மண்ணாக்கி வச்சிருக்க…” என்றேன்

``என் சாமி… வாய்யா. நல்லாருக்கியா? பேரப்புள்ளைங்கள்லாம் நல்லாருக்குதாய்யா?” என்று நலம்தான் விசாரித்தாரே தவிர, கேள்விக்கு பதில் சொல்லவில்லை.

``எல்லாரும் நல்லா இருக்காங்கம்மா. என்னம்மா வேலை இது… உடம்பெல்லாம் மண்ணா இருக்கு…”

``அதுவாய்யா… வீடு இடிஞ்சி போச்சு… அதான் எடுத்துக் கட்டிக்கிட்டு கிடக்குறேன். ஒண்ணே கால் வருசமா ஒண்டிக்கட்டையாதான் இந்த மண்ணு வீட்ல இருந்தேன். ஒங்கப்பன் போன இடம் தெரியல. ஒங்களையும்தான் வரவேணாம்னு சொல்லிப்புட்டேன். நான் பெத்த புள்ளைங்களாச்சே நீங்க… எனக்கிருக்கிற ரோசம் உங்களுக்கு இருக்காதா…? அதான் நீங்களும் வரலயே. எதோ ஒங்கப்பனுக்கு இன்னிக்குத்தான் என் நெனைப்பு வந்திருக்கு. த பாரு… ஒங்கப்பன… புதுமாப்பிளை கணக்கா நிக்கிறத…” என்றார்.

``ஏம்புள்ள… ஒண்ணே கால் வருசமா உன்னை பிரிஞ்சி இருந்தேன். உன்னை பாக்க வரும்போது நல்லா வரணுமில்லையா… அதான்…”

``எங்கய்யா உன் கையில இருந்த வாட்ச், மோதிரம் எல்லாம்…” என்று அம்மா அதிகாரத்தோடு கேட்டார்.

``வாட்சை பேரனுக்குக் கொடுத்துட்டேன். மோதிரத்தை வியாபாரத்துக்கு அடகு வச்சிட்டேன் புள்ள. கணேசன், மீட்டுடலாம்ப்பான்னுதான் சொன்னான். நான்தான் கொஞ்ச நாள் போகட்டும்ப்பான்னு சொல்லிட்டேன்.” என்றார் பாந்தமாக.

home
home

``ஏன்யா… உனக்கு புத்தியே வராதா? குருவி சேக்கற மாதிரி கொஞ்சம் கொஞ்சமா சேத்துதானே உனக்கு மோதிரம் போட்டுவிட்டேன்… அடகு வைக்கிற புத்தி உன்னைவிட்டு போய்த்தொலையவே தொலையாதா?” என்றார் அம்மா.

அப்பாவை காப்பாற்றும் நோக்கத்தில், ``சரி விடும்மா… நான் மீட்டுத் தந்துடறேன். வீடெல்லாம் இடிஞ்சி கிடக்கு… இதுல எப்படிம்மா தனியா இருந்த?” என்று கேட்டேன்.

``வைராக்கியம்டா கணேசா… அதான் உன் அம்மாவோட வைராக்கியம். அது அவ ரத்தத்துலயே ஊறிப்போனது. சத்தியம்… உண்மை… இதுதான் உன் அம்மாகிட்ட இருக்கும். நம்பிக்கை துரோகம் இருக்கக்கூடாது. நம்பினவங்கள ஏமாத்தினா அது என் அம்மாவா இருந்தாலும் ஒதுக்கித்தள்ளிடுவேன். என்னை பெத்தவளுக்கே அந்த கதின்னா… நான் பெத்த நீங்க மட்டும் ஒசத்தியா என்ன?

அது சரி... ஒண்ணே கால் வருசமா பாக்க வரமா இருந்துபுட்டு அண்ணன், தம்பி, அப்பன் எல்லோரும் எதுக்குப்பா இப்ப வந்திருக்கீங்க?” என்று ஒரு போடு போட்டார்.

``கொரோனா வந்ததால எல்லாரும் அவங்கவங்க ஊர்ல மாட்டிகிட்டோம்மா…” என்று நானும் தம்பியும் கோரஸாக சொன்னோம்.

``ஓ… அதனால யாரும் என்னை பாக்க வரல. இவ செத்தாளா, பொழைச்சாளான்னு எட்டிப்பாக்க முடியல. அப்படித்தானே?” - அம்மாவின் கேள்வியில் ஒரு விரக்தி இருந்தது.

``அப்படி எல்லாம் இல்ல புள்ள…” - அப்பா வாய் எடுத்தார்.

``வாய்யா… என்னை கட்டிக்கிட்ட மவராசா. உன் புள்ளைங்கள கேட்டா உனக்கு பொத்துக்கிட்டு வந்துடுமே..? அவனுங்கதான் வரல, அவனவனுக்குக் குடும்பம், குட்டினு இருக்கு. நீ ஏன்யா வரல..? உனக்கு எல்லாமே நான்தான்னு சொல்லுவ?” - கேள்வியில் சீற்றம் இருந்தது.

``என்னை வீட்டுக்குள்ள சேத்துக்கடினு வாசல்லயே ஒரு மாசம் படுத்துக் கிடந்தேன். நீதான் என்னை சேத்துக்கவே இல்லையே…” என்று அப்பா சொல்லி வாய் மூடுவதற்குள்...

``யாரு… நீயி..? நல்லா படுத்துக்கிடந்தியே… போதையில. நான் உன்னை விட்டுட்டு தனியா வந்துட்டேங்கற துக்கம் தாங்காம மூக்குமுட்ட நல்லா குடிச்சிபுட்டு போதையில வந்து படுத்துகிடப்ப. நான் சாப்டேனா, சாப்பிடலையான்னுகூட உனக்குத் தெரியாது. ஆனா நான் மட்டும் உனக்கு அஞ்சி மூணு நாயமும் செஞ்சி வச்சி… மடியில தூக்கி வச்சி சோறு ஊட்டி படுக்க வைக்கணும். இப்படியே செஞ்சிக்கிட்டிருந்த உன்னை விரட்டி அடிக்காம… வீட்டுக்குள்ள சேத்துக்கிட்டு மணத்துவாங்களா..?” என்று வெடித்தார் அம்மா.

old age
old age

``போதும் உங்க சண்டை… மறுபடியும் ஆரம்பிச்சிட்டீங்களா…” என்றபடி என் தம்பி கத்திவிட்டுக் கிளம்பினான்.

``டேய் தம்பி… நில்றா…” என்று சொன்னதற்கு, ``அவனை கூப்பிடாதடா கணேசா. அவனுக்கு நான்னாவே தொக்கு. போறவனை விட்டுத்தள்ளு. என் புருசன்கிட்ட நான் சண்டை போடறேன், திட்டறேன். அந்தாளு எது வேணா சொல்லட்டும். முறுக்கிக்கிட்டு கூட போகட்டும். புருசனுக்கே அதான் நெலமைங்கும்போது புள்ளைய பத்தி நினைக்கவே மாட்டேன். அவன் இனிமே இங்க வரக்கூடாதுன்னு மட்டும் சொல்லிடு.”

அம்மாவின் பேச்சை இடைமறித்தார் அப்பா. ``இனி நான் உன்னை விட்டு எங்கயும் போகமாட்டேன் புள்ள. புள்ளங்களை பாத்தவரைக்கும் போதும். நான் பட்டவரைக்கும் போதும். அவனவன் பொண்டாட்டி, புள்ளைங்களோட சந்தோஷமாத்தான் இருக்கான். நான்தான் தனிக்கட்டையா இருக்கேன்.

உன்னை விட்டுட்டு தனியா இருந்ததுதான்மா நான் இந்த ஓண்ணே கால் வருசமா செஞ்ச மகா தப்பு. உன்னை நெனைச்சி நெனைச்சி குடிச்சி குடிச்சி… குடல் வெந்து நொந்து, படுக்கையில கிடந்து, உன் பிள்ளைங்களுக்கு தொந்தரவு கொடுத்துட்டேன். இனி யாருக்கும் தொந்தரவு கொடுக்கக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டு, உன் காலடியிலயே இருந்துக்கலாம்னு வந்துட்டேன் வள்ளியம்மா…” என்றார் கெஞ்சலாக.

வள்ளியம்மா என்ற ஒற்றை வார்த்தையில் அம்மா உருகிப்போய்விட்டார்.

``ஏன்யா… இப்படி சொல்ற… என்னய்யா ஆச்சு உடம்புக்கு? குடிச்சித் தொலையாதே மனுசான்னு தலைப்பாடா அடிச்சிக்குவேனே… என்ன பண்ணி வச்சி தொலைச்ச? உடம்பு ஏதாச்சும் பண்ணுதா? வயிறு ஏன்யா இப்படி உப்புன மாதிரி இருக்கு?” என்றார்.

``அதெல்லாம் ஒண்ணுமில்ல புள்ள… எல்லாம் நல்லாத்தான் இருக்கேன். மனசுதான் சரியில்ல. பொண்டாட்டி உன்னை நான் தனியா விட்டுட்டு இருந்தது என் தப்புதான புள்ள? வீணா நம்ம புள்ளைங்களுக்குத்தான் தொந்தரவை கொடுத்துப்புட்டேன்…” என்றார்.

``ஏம்பா இப்படி சொல்றீங்க…” என்றேன்.

Old age
Old age

``உம்புள்ளைங்க என்னைக்கும் உன்னை தொந்தரவா நினைக்காதுங்களே… அப்படி நான் என் மூணு புள்ளைங்களையும் வளக்கலயே. மருமகளுக ஏதாச்சும் சொல்லிப்புட்டாளுகளா? சொல்லுய்யா…” என்று பதைபதைப்போடு கேட்டார்.

``யாரும் எதும் சொல்லலம்மா. கணேசனுக்கு வேலை போயிடுச்சிம்மா. கொரொனாவை காரணம் காட்டி கம்பெனிய இழுத்து மூடிபுட்டானுங்க. பையன் மெட்ராஸ்ல பொண்டாட்டி, புள்ளைங்களோட கஷ்டப்பட்டுகிட்டு இருக்கான். அவன் இருக்க கஷ்டத்துல நாம உடம்பு முடியல, அது முடியல, இது முடியலன்னு போய் நிக்கவும் மனசு வரல.

பல்லு எல்லாம் கொட்டி போயிடுச்சி புள்ள. எதுவும் சாப்பிடவும் முடியல. உன்னைய பாக்க வரலாம்னு மூணு மாசத்துக்கு முன்னாடியே தனியா கிளம்பினேன். ரெண்டு எட்டுதான் நடந்திருப்பேன், பள்ளம் இருக்கறது தெரியாம காலை விட்டுட்டேன். அது காலை பெரட்டிவிட்டுடுச்சி. காலு பிசகி சுளுக்கு புடிச்சிகிச்சி.

கணேசன் மெட்ராஸுக்கு கூட்டிக்கிட்டுப் போயிட்டான். காலுக்கு எக்ஸ்ரே எடுத்து பாத்தப்பதான் எலும்பு முறிஞ்சி போயிருந்தது தெரிஞ்சிச்சி. கண்ணுலயும் புரை விழுந்துடுச்சி. 75 வயசாகுதுல்ல…

ஆஸ்பத்திரியும் வீடுமா பையன்தான் அங்கயும் இங்கயும் அல்லாடிக்கிட்டு இருந்தான். நாலுமுறை மாவுக்கட்டு போட்டோம். அத்திப்பால் அடிச்சா நல்லா இருக்குமுன்னு சொன்னேன். பையன் அந்த ஊர்ல எங்கெங்கயோ தேடி அத்தி மரக்கிளைய வெட்டிக்கிட்டு வந்து பால் அடிச்சான். கூட்டிப்போய் எனக்குக் கண்ணுல ஆபரேஷனும் பண்ணிவிட்டான்.

பையனுக்கு வேலை இல்ல, மருமக மட்டும்தான் வேலைக்குப் போறா. இதுல நாம எதுக்கு சுமையா அங்க இருக்கறதுன்னு, பையன்கிட்ட உன் ஞாபகமா இருக்கு, ஊருக்குப் போறேன்னு சொல்லிட்டு வந்துட்டேன்.

job loss (representational image)
job loss (representational image)

வரும் வழியிலேயே சின்னவன் வீட்டுக்கும் ஒரு எட்டு போயிட்டு வந்துடலாம்னு சின்னசேலம் போனேன் புள்ள. அங்க ஒரு வாரம் இருந்தேன். அதுக்கு மேல இருக்க முடியல… உன் நினைப்பு நாளுக்கு நாள் அதிகமாகிடுச்சி. அதான் கிளம்பி வந்துட்டேன்” என்றார்.

நான் அப்பாவை இயலாமையோடு பார்த்தேன். அம்மாவின் குரல் என்னை கலைத்தது.

``ம்ம்ம்… இப்பவாச்சும் உனக்கு புத்தி வந்துச்சே. ஏற்கெனவே வீடு பாழடைஞ்சி இருந்துச்சி. பக்கத்து இடத்தை புதுசா ஒரு ஆளு வாங்கி இருக்காங்க. வீட்டை இடிச்சி கட்டினாங்க. பொது சுவருங்கறதால நம்ம வீட்டு சுவரும் அடிவாங்கிடுச்சி. நான் ஒரு ஆளு படுக்கறதுக்கு மட்டும் இடம் இருந்துச்சி. நீயும் வந்துட்டியா… வீட்டை எடுத்து புதுசாதான் கட்டணும்” என்றார் அம்மா.

``சரிம்மா… கவலைப்பட வேண்டாம். அதான் நான் இருக்கேனே. நான் கட்டித்தர்றேன்மா…” என்றேன்.

``உனக்கே வேலை இல்ல. இருக்கிற இடத்துல நானும் அப்பாவும் இப்போ இருந்துக்குறோம். வேலை கிடைச்சதுக்கு அப்புறம் வீட்டை கட்டிக்கொடுய்யா, நாங்க இருந்துக்கறோம். வயசான கட்டைங்களுக்கு இனி என்ன?” என்று சொன்னவர், ``சாப்டியா சாமி? உன்னை அம்மா சாப்டியான்னு கேக்கலையேன்னு பாக்காதய்யா. வீடு கட்டற முசுவுல எதுவும் சமைக்கல அம்மா. நீங்க வருவீங்கன்னும் தெரியாது…” என்றார்.

``அதெல்லாம் ஒண்ணும் இல்லம்மா. நீங்க ரெண்டு பேரும் கோபத்தை எல்லாம் மறந்துட்டு ஒண்ணு சேர்ந்தீங்க பாருங்க… அது போதும் எனக்கு. தேவையில்லாத பேச்செல்லாம் வாங்கத் தேவை இருக்காது…” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே என் கண்ணில் நீர் வழியத் தொடங்கியது.

அப்பா பதறினார். ``யப்பா எதுக்குப்பா அழுவுற… அதான் நான் உன் அம்மாகிட்ட வந்துட்டனே. அம்மா என்னை பாத்துக்குவா, நான் அவளை பாத்துக்குவேன். இனி அவளை விட்டு ஒரு நிமிஷம்கூட பிரியமாட்டேன். ஏய்… வள்ளியம்மை… புள்ளை அழுவுறான் பாத்துகிட்டு நிக்கிறியேடி…”

என் கண்ணில் நீர் வழிவதைப் பார்த்துவிட்டு, அம்மா கண்ணில் பொலபொலவென கண்ணீர் வழிய ஆரம்பித்துவிட்டது. ``என் சாமி… நீ எதுக்குய்யா அழுவுற? என்னை மாதிரியே எம்புள்ளைக்கு எளகின மனசு. அய்யோன்னு யாரு வந்து நின்னாலும் எம்புள்ளை கலங்கிப்போயிடும். நீ கலங்காத சாமி. உங்கப்பன யாரு, எது சொன்னாலும், என்னை யாரு எது சொன்னாலும் அது இந்த காத்தோடு போயிடும். யார் சொல்லும் எங்களை எதுவும் பண்ணாதுய்யா. நீ கலங்காதய்யா… பெத்த வயிறு தாங்காது சாமி…” என்றார்.

அம்மாவின் காலில் தடாலடியாக விழுந்துவிட்டேன். ``என்னை பெத்த அம்மா…. உன்னை விட்டு பிரிந்து நான்பட்ட பாடு சொல்லி மாளாதம்மா… என்னை மன்னிச்சிடம்மா…” என்று அழுதேன்.

என்னை அப்படியே தூக்கி நிறுத்தினார். ``அழாதய்யா… என் புள்ளை எதுக்கும் அழக்கூடாது. அதான் அம்மா வந்துட்டேன்ல. இனி நான் பாத்துக்கறேன். அப்பாவைப் பத்தி யாரும் கவலைப்படாதீங்க. நானாச்சி… இனி என் புருஷனாச்சு. இனி நாங்க சண்டை போட்டுக்கவே மாட்டோம். என் புருஷனும் யார் வீட்டுக்கும் வந்து நிக்கவும் மாட்டாரு, நானும் வர விடமாட்டேன்…”

அழுகை நிற்கவில்லை எனக்கு. ``பாருங்கப்பா அம்மாவை…” என்றேன்.

``டேய் கணேசா… அதான் அம்மா சொல்லிட்டாளேப்பா… எதுக்குப்பா அழுவுற? சாப்பிடாம கொள்ளாம வந்திருப்ப… கோனார் கடையில போய் சூடா இட்லி சாப்பிட்டுட்டு, தம்பி கோச்சுகிட்டு போனான்… அவன் என்ன ஆனான்னு பாருப்பா. நான் என் பொண்டாட்டியோட இருந்துக்கறேன். அவனவன் பொழப்பைப் பாருங்க…” என்றார்.

old age people
old age people

கண்ணில் நீர் வழிய நின்றேன். ``நேத்து சாப்பிட்டது… இன்னும் சாப்பிடாம இருந்தா உடம்பு தாங்காதுய்யா. போ… போய் கடையிலயாச்சும் சாப்பிடு… போ. அம்மாவைப் பாக்க வரேன், அப்பாவைப் பாக்க வரேன்னுட்டு இங்க வராதே…” என்றார் அம்மா.

``ஏம்மா இப்படி சொல்ற… நான் உங்களை பாக்காம இருந்தது தப்புதான்மா. எப்பவும் மகராசனா போய்ட்டு வாய்யான்னுதானம்மா சொல்லுவ… இப்ப ஏம்மா இப்படி சொல்ற…?” - உடைந்து அழத்தொடங்கினேன்.

``அழாதய்யா… அம்மா சொன்னா எல்லாத்துக்கும் காரணம் இருக்கும்யா. போ… இனிமே இங்கே வராதே…” - அப்பாவும் அம்மா சொன்னதையே திரும்பச் சொன்னார்.

ஒன்றும் புரியாமல் கண்ணில் நீர் வழிய, மழங்க மழங்க, முழித்துக் கொண்டே மந்திர விசையால் செலுத்தப்பட்டதுபோல் அங்கிருந்து நடக்க ஆரம்பித்தேன்.

சற்று தூரம் சென்ற பின்பு அம்மா, அப்பா நின்றிருந்த திசையைப் பார்த்தேன். ஒன்றேகால் ஆண்டுக்கு முன்பு கட்டிய அம்மாவின் சமாதியும், அன்றைய தினம் மூடப்பட்ட அப்பாவின் சமாதியும் கண்ணிற்குத் தெரிந்தன.

- மோ.கணேசன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு