Published:Updated:

விபத்துகளைத் தவிர்க்க தண்டபாணி அண்ணன் டெக்னிக்கை ஃபாலோ பண்ணுங்க..!

Auto Driver Dhandapani
Auto Driver Dhandapani

"முப்பது வருஷத்துல ஒரு ஆக்சிடென்ட்கூட நான் பண்ணலை. காரணம்...'' - சீக்ரெட் சொல்லும் ஆட்டோ டிரைவர் தண்டபாணி

முகூர்த்த நாள் ஒன்றின் இரவு நேரம், வியாசர்பாடியில் ஆட்டோவுக்காக நின்றுகொண்டிருந்தேன். `எங்க போகணும்மா' என்ற கேள்வியுடன் என்னருகில் வந்து நின்ற அந்த ஆட்டோவைப் பார்த்த முதல் நொடியிலேயே, `ஆட்டோக்களின் எழுதப்படாத ஒரு விதிக்கு அப்பாற்பட்ட ஆட்டோ'வாக இது இருக்கிறதே என்ற தகவலை, என் கண்கள் மூளைக்கு அனுப்பிவிட்டன. அதென்ன எழுதப்படாத வரைமுறை என்கிறீர்களா? ஆட்டோ முகப்பிலும் அதன் கண்ணாடியிலும் சம்பந்தப்பட்ட டிரைவரின் ஆதர்ச சினிமா நட்சத்திரங்களின் படங்கள் கட்டாயம் இருக்கும். இவருடைய ஆட்டோவில் அப்படி எதுவும் இல்லை. 'அட, இவர் விதிவிலக்காக இருக்கிறாரே' என்று நினைத்தபடியே, செல்லவேண்டிய இடத்தைச் சொல்லிவிட்டு ஆட்டோவில் ஏறி உட்கார்ந்தேன். ஆட்டோ ஓட்டுநர் தண்டபாணி அண்ணனுடனான அறிமுகம் அப்படித்தான் நிகழ்ந்தது எனக்கு!

Auto Driver Dhandapani
Auto Driver Dhandapani

பயணத்தின்போதுதான் கவனிக்க முடிந்த முக்கியமான விஷயம், ஆட்டோ முழுவதும், குறிப்பாக ஓட்டுநரின் தலைக்கு மேல் அவருடைய குடும்பப் புகைப்படங்கள் வரிசையாக ஒட்டப்பட்டிருந்தன. அவற்றில் பட்டமளிப்பு விழாவின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களையும் காண முடிந்தது. நான் கணித்தவரையில், அதிலிருந்த இருவரும் அவரின் மகன்களாக இருக்கவேண்டும்.

இந்தப் புகைப்படங்களுக்கு மத்தியில், ஓரிடத்தில் தேஜஸ் குறையாமல் பளிச்சென புன்னகைத்துக் கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். ஆர்வம் தாங்காமல், `என்ன செட் அப் அண்ணே இது? வரிசையா ஃபேமிலி ஃபோட்டோஸா இருக்குதே... எதுக்கு இதெல்லாம்?' எனக் கேட்டுவிட்டு பதிலுக்காகக் காத்திருந்தேன்.

Auto Driver Dhandapani
Auto Driver Dhandapani

என் கேள்விக்கு எதிர்க்கேள்வியாக, "சமீபகாலமா சாலை விபத்துகள் அதிகரிச்சுக்கிட்டிருக்குதே... அதுக்கு என்ன காரணம்னு நினைக்கிறீங்க நீங்க?" என்றார்.

ஒன்றும் புரியாதவளாய், "என் கேள்விக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்ண்ணா?" என்றேன்.

காரணம் இருக்கு என்பதைப்போல சிரித்துக்கொண்டே, பேச ஆரம்பித்தார்.

Auto Driver Dhandapani
Auto Driver Dhandapani

"என்னைப் பொறுத்தவரைக்கும், டிரைவர்கள் அஜாக்கிரதையா இருக்கிறதுதான்மா விபத்துக்களுக்கெல்லாம் அடிப்படை. நமக்குனு ஒரு வீடு இருக்கு, அங்க நம்பளை நம்பி மனைவி - பிள்ளைங்களெல்லாம் இருக்காங்க அப்படிங்கிற எண்ணம்தான் எந்தவொரு மனுஷனுக்கும் வாழ்க்கைமேல இருக்கிற பிடிப்பை அதிகப்படுத்தும். ஆனா, பரபரப்புக்கு மத்தியிலேயே தொடர்ச்சியா இருக்கிறப்போ, இந்தப் பிடிப்பு விட்டுப்போயிடுது. இதுக்கு என்னை மாதிரி ஆட்டோ டிரைவர்களும் விதிவிலக்கில்லை" என்பவர் முதலில் சைக்கிள் ரிக்‌ஷாதான் ஓட்டி வந்திருக்கிறார்.

"எங்களோட வாழ்க்கையைப் பொறுத்தவரைக்கும், அதிகாலையில வீட்லேர்ந்து கெளம்புனா, மறுபடியும் நடுராத்திரிதான் வீட்டுக்குத் திரும்பப் போவோம். நாம ஆட்டோ ஓட்ற ஏரியாவுக்கும் வீட்டுக்கும் ரொம்ப தூரம், நிறைய சவாரிகள்னு இதுக்குப் பல காரணங்கள் இருக்கு. ஆட்டோ ஓட்ட ஆரம்பிச்ச புதுசுல எனக்கும் இப்படியொரு சிக்கல் வந்துச்சு. அதைச் சரிசெய்றதுக்காக செஞ்ச ஏற்பாடுதான் இந்த செட் அப். என் வீட்டம்மா, என் பசங்க ஃபோட்டோவை என் கண்ணுலபடற மாதிரி ஒட்டிவைச்சிக்கிட்டேன். பசங்க வளர வளர போட்டோவை மாத்திக்கிட்டே இருப்பேன். வண்டியோட்டறப்போ எல்லாம் இவங்க போட்டோவைப் பார்த்துக்கிட்டே இருந்தா, அப்புறம் எங்கிருந்து வரும் அஜாக்கிரதையெல்லாம்?" எனச் சொல்லி முடித்தவரின் முகத்தில், நமக்குத் தெளிவாக பதில் சொன்ன நிறைவு!

Auto Driver Dhandapani
Auto Driver Dhandapani

பதினெட்டு வயதில், பால் வண்டியில் தர்மபுரியிலிருந்து சென்னை பூந்தமல்லிக்கு, ஐந்து ரூபாய் கொடுத்து வந்து இறங்கியிருக்கிறார் தண்டபாணி அண்ணா. அன்று தொடங்கிய பயணம், இப்போது ஐம்பத்தியோரு வயது வரை சோர்வேயின்றி அவரை உற்சாகமாகவே ஓடவைத்துக் கொண்டிருக்கிறது. எல்லாத்துக்கும் குடும்பத்தின் மேலிருக்கிற அன்புதான் காரணம் என்கிறார் அண்ணன்.

"எனக்கு மூணு பிள்ளைங்கம்மா. மூத்த மகன், கால்நடை மருத்துவர். இன்னொரு மகன், இன்ஜினீயர். பொண்ணு தாவரவியல் முடிச்சிட்டா. `அதான், பசங்க எல்லாம் வளர்ந்து நல்லபடியா செட்டிலாயிட்டாங்களே... ஜம்முன்னு வீட்டோட இருக்கவேண்டியதானே'ன்னு ஒரு சிலர் எங்கிட்ட கேட்பாங்க. என்னைப் பொறுத்தவரைக்கும், சும்மா இருக்கறதுபோல கஷ்டமான வேலை, வேறெதுவுமே இல்ல.

நான் எம்.ஜி.ஆரோட அதிதீவிரமான ரசிகன், தொண்டன்... எல்லாமும்!
ஆட்டோ ட்ரைவர் தண்டபாணி

ஓட்டுநர் வாழ்க்கையைப் பொறுத்தவரைக்கும், ரோடு இன்னொரு வீடு எங்களுக்கு. அந்த வகையில, இந்தக் குடும்பத்தையும் நான் விட்டுடக்கூடாதுல்ல...!" என்பவரின் குரலில் உண்மைதான் தெரிந்தது எனக்கு.

"ஆட்டோவுல குடும்பப் புகைப்படங்களை வைக்கிற யோசனை உங்களுக்கு எங்கிருந்து வந்தது?" என்று கேட்டேன்.

"நான் எம்.ஜி.ஆரோட தீவிரமான ரசிகன். ஒருகாலத்துல, அவர்தான் எனக்கு எல்லாம்னு சொல்ற அளவுக்கு வெறியன்னு வெச்சுக்கோங்களேன். அவரோட பொதுக்கூட்டங்கள் ஒண்ணையும் விடமாட்டேன். அவர் காலத்துக்குப் பிறகும், அவர் மேலேருந்த பிரியத்துல எந்த மாற்றமும் வரலை. இப்போகூட மனசு சரியில்லனா, தலைவர் பாட்டுகளைத்தான் போட்டுக் கேட்பேன். உடனே உற்சாகம் வந்துடும். அவர் முதல்வரா இருந்தப்போ, ஒரு மேடைப்பேச்சுல சொன்ன ஐடியாதான் ஓட்டுநர்கள் வாகனங்கள்ல குடும்ப ஃபோட்டோ வைக்கணும்கிறது. அப்படி வெச்சுக்கிட்டா, எந்தச் சூழலிலும் குடும்பப் பொறுப்புகள் மறந்துபோகாதாம். தலைவர் சொன்னா சரியாத்தானே இருக்கும்... இருக்கணும்ல!" என்கிறார் புன்முறுவலுடன்.

`அவ்ளோ காசு இல்ல; கைது செய்துக்கோங்க'- ஆட்டோ ஓட்டுநரை அதிரவைத்த அபராதம்!

இதுவரையில் எந்த விபத்தையும் தான் செய்யவிலை என்பதில் தண்டபாணி அண்ணாவுக்கு அவ்வளவு பெருமிதம். தமிழகம் முழுவதும் கடந்த வாரத்தில் வாகன ஓட்டிகளுக்கான விதிமுறைகள் மேம்படுத்தப்பட்டு, மோட்டார் வாகனச்சட்டத்தில் பல திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன என்பது அனைவரும் அறிந்த விஷயம்தான். அபராதத் தொகை அதிகரிப்பது தொடர்பாக, சரி தவறென விவாதங்கள் எல்லாப்பக்கங்களிலும் எழுந்துகொண்டே இருக்கின்றன.

Auto Driver Dhandapani
Auto Driver Dhandapani

`விபத்துகளைக் கட்டுப்படுத்தத்தான் அபராதத்தொகை அதிகரிப்பு' என ஒரு தரப்பினர் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருக்கின்றனர். இந்த நிலையில் விபத்துகளைத் தவிர்க்க, தண்டபாணி அண்ணனின் `ஃபேமிலி போட்டோ' வழியைப் பின்பற்றலாம் எனத் தோன்றினால்... எதுக்கு வெயிட் பண்றீங்க மக்களே? ரெடி ஸ்டார்ட்!

பின் செல்ல