Published:Updated:

`அமைதியான ஊர்.. மாட்டிவிட்ட கூகுள் மேப்..’ -பூட்டானில் எட்டாம் நாள் அனுபவம்! #MyVikatan

பூட்டான்

மலையிலிருந்து இறங்கி பூட்டான் தேசிய அருங்காட்சியகத்தை நோக்கிப் பயணித்தோம். இந்தப் பயணம் முழுவதும் கூகுள் வரைபடத்தைப் பயன்படுத்தினோம். இரண்டு முறை கூகுள் எங்களை இக்கட்டில் மாட்டி விட்டுவிட்டது.

`அமைதியான ஊர்.. மாட்டிவிட்ட கூகுள் மேப்..’ -பூட்டானில் எட்டாம் நாள் அனுபவம்! #MyVikatan

மலையிலிருந்து இறங்கி பூட்டான் தேசிய அருங்காட்சியகத்தை நோக்கிப் பயணித்தோம். இந்தப் பயணம் முழுவதும் கூகுள் வரைபடத்தைப் பயன்படுத்தினோம். இரண்டு முறை கூகுள் எங்களை இக்கட்டில் மாட்டி விட்டுவிட்டது.

Published:Updated:
பூட்டான்

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

காலை எழுந்தவுடன் வழக்கம்போல குளிர்ந்த நீரில் குளிப்பதற்காக பக்கெட்டை நிரப்பினேன். தொட்டுப் பார்த்த விரல்கள் மரத்துப் போய்விட்டன. வேறு வழியில்லாமல் கொஞ்சமாக சுடுநீர் கலந்து குளித்தேன். சில்வர்பைன் விடுதியில் காலை உணவு. பின்னர், புலிக்குகை புத்த மடாலயத்தை நோக்கிப் பயணித்தோம். பாரோ சிறிய நகரம். பாரம்பர்ய முறையில் கட்டப்பட்ட அழகிய கட்டடங்கள்.

செடியில் இருக்கும் ரோஜாக்களின் மலர்ச்சியுடன், சிவந்த கன்னங்களையுடைய பூட்டான் குழந்தைகள் பாரம்பர்ய உடைகளை அணிந்து பள்ளிக்குச் செல்கிறார்கள். மிக அமைதியான ஊர். வாகனங்களின் ஹாரன் சத்தம் கிடையாது. ஒலிபெருக்கிகள் கிடையாது. வீடுகளுக்குள் வசிக்கிறார்களா என்று சந்தேகம் வருமளவுக்கு அமைதி.

பூட்டான்
பூட்டான்

புலிக்குகை புத்த மடாலயம் உள்ளூர் மக்களால் பேரோ தக்த்சாங் என்றழைக்கப்படுகிறது. தக்த்சாங் போகும் வழியில் பாரோ ஆறு ஓடுகிறது. அடியில் இருக்கும் கற்கள் தெரியும் தெளிந்த நீர். இமயமலை ஆறுகளில் மணலைக் காண முடியாது. பெரியதும், சிறியதுமாக, பட்டை தீட்டப்பட்டது போன்ற வளவளப்பான கற்களே ஆறுகளின் படுகைகளிலும், பக்கங்களிலும் காணப்படும். பாரோ பள்ளத்தாக்கில் அதிக அளவில் நெல் பயிரிடப்படுகிறது. நெல் வயல்கள் அமைந்த பள்ளத்தாக்கைக் கடந்ததும் இருமருங்கிலும் உயரமான பைன் மரக்காடுகள். பூட்டான், ஆசியாவின் சுவிட்சர்லாந்து என்றழைக்கப்படுகிறது. இந்தச் சாலையில் பயணித்தால் அது எவ்வளவு பொருத்தமானது என அறிந்துகொள்ளலாம்.

தக்த்சாங் புத்த மடாலயம் கடல் மட்டத்திலிருந்து 10,241 அடி உயரத்தில் இருக்கிறது. நாம் காரை நிறுத்திவிட்டு 2,500 அடி ஏற வேண்டும். செங்குத்தான மலைப்பாதை. மலையடிவாரத்தில் வாடகைக்கு ஊன்றுகோல் கிடைக்கிறது. மலையேறும்போது ஊன்றுகோல் பயன்படுத்துவது, நம் சிரமத்தை 40 விழுக்காடு குறைக்கும். வழக்கம்போல சம்பத் சிரமமில்லாமல் ஏறிவிட்டார். கேசவன் ஓட்டமும் நடையுமாக ஏறினார். எனக்கு இடையிடையே கொஞ்சம் ஓய்வு தேவைப்பட்டது.

எங்களோடு சென்னையைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் அருண் ராகேஷ் இணைந்தார். சொந்த ஊர் திருநெல்வேலி. ஏதாவது சாகசம் செய்ய ஆசைப்பட்டார். சென்னையிலிருந்து சிம்லாவுக்கு விமானத்தில் வந்தார். 20,000 ரூபாய்க்கு சைக்கிள் வாங்கினார். தங்குவதற்கு ஒரு கூடாரம். படுப்பதற்கு ஒரு ஸ்லீப்பிங் பேக். கையில் வெறும் 20,000 ரூபாய். மனதில் வேகமும், துணிவும்! சிம்லாவில் இருந்து சைக்கிள் ஓட்டிக்கொண்டே ஹரித்வார், கேதார்நாத் ஆகிய ஊர்களைக் கடந்து நேபாளம் வழியாக சிலிகுரி வந்து, பவுண்ட்ஷோலிங் வந்துவிட்டார். 2,250 கிலோ மீட்டர் தூரத்தை 25 நாள்களில் கடந்துவிட்டார்.

பூட்டான்
பூட்டான்

பூட்டானுக்குள் சைக்கிளில் செல்ல அனுமதி கிடைக்கவில்லை. அதனால், சைக்கிளை பவுண்ட்ஷோலிங்கில் விட்டுவிட்டு வாடகைக் காரில் தொற்றிக்கொண்டு வந்திருந்தார். மைனஸ் 8 டிகிரி குளிரில் டென்ட் போட்டுத் தங்கியிருந்த அனுபவத்தைப் பகிர்ந்தார். நேபாளத்தில் கூடாரம் அமைத்துக்கொண்டிருந்தபோது, அருகிலிருந்த வீட்டுக்காரர், ``இந்தக் குளிரில் எப்படி வெளியே தங்கப் போகிறாய்? வீட்டுக்குள் வந்து தங்கிக்கொள்" என்று அழைத்து தங்க வைத்தார். அவர்கள் ஏற்கெனவே உணவு அருந்தியிருந்தார்கள். இவருக்காக புதிதாக சமைத்துக் கொடுத்தார்கள். மாநிலங்களையும் நாடுகளையும் கண்டங்களையும் இணைப்பது மானுடம்தான்!

தக்த்சாங் மலை ஏறிக்கொண்டிருந்தபோது சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் ஏறிக்கொண்டிருந்தார். ஒல்லியாக இருந்தார். ``நீங்கள் ராணுவத்தில் அல்லது காவல் துறையில் பணிபுரிந்தீர்களா?" என்று கேட்டேன். சர்மா என்ற பெயருடைய அவர், ``அதெல்லாம் ஒன்றுமில்லை. நான் ஒரு பிசினஸ்மேன். தினசரி உடற்பயிற்சி செய்வேன்" என்றார். அவருக்கு வயது 67. உங்கள் சுறுசுறுப்பையும் இயக்கத்தையும் நிர்ணயிப்பதில் உடல் எடைக்கு முக்கிய பங்கு உண்டு.

உங்கள் உயரம் 160 சென்டி மீட்டர் என்றால் நீங்கள் 60 கிலோ இருக்க வேண்டும். அதற்குமேல் இருக்கிற ஒவ்வொரு கிலோவும் உங்கள் மூட்டுகளுக்கும் இதயத்துக்கும் அதிக வேலையைத் தந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இந்த மலையேற்றத்துக்கு வந்திருந்த பல இளம்பெண்கள், சர்மாவைவிட அதிகமாக சிரமப்பட்டுக் கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. காரணம் கார்போஹைட்ரேட் உணவுகளும், உடல் பருமனும்.

மலையேறும் வழியில், அருவிகளில் வரும் நீரை குழாய்கள் மூலம் ஆற்றுப்படுத்தி, குடிநீர் வசதி ஏற்படுத்தி இருக்கிறார்கள். சுவையான இயற்கைக் குடிநீர். வழியில் பிளாஸ்டிக் பொருள்களைப் போடுவதற்காக தொட்டிகள் அமைத்திருக்கிறார்கள். பிளாஸ்டிக் பைகள், பீர் பாட்டில்கள், குவார்ட்டர் பாட்டில்கள் போன்றவற்றை இங்கும், பூட்டானில் எங்கும் காண முடியவில்லை.

3 மணி நேர மலையேற்றத்துக்குப் பிறகு தக்த்சாங் புத்தக் கோயிலை அடைந்தோம். பஞ்சுப் பொதிகளாக மேகங்கள் ஒட்டிக்கொண்டிருக்கும் மலை முகடுகள். கத்தியால் வெட்டிவிட்டது போன்ற செங்குத்தான பாறையின் முகட்டில் இந்த ஆலயம் கட்டப்பட்டிருக்கிறது. அருகில் ஓடும் அருவியின் நீர், மேல் பகுதியில் உரைந்து பனிப் பாறையாக இருக்கிறது. கோயிலின் மேலே பெரிய பாறை நீட்டிக்கொண்டிருக்கிறது.

பத்மசாம்பவா என்ற புத்தத் துறவி, எட்டாம் நூற்றாண்டில், 3 ஆண்டுகள், 3 மாதங்கள், 3 வாரங்கள், 3 நாள், 3 மணி நேரம் அமர்ந்து இந்த இடத்தில் தியானம் செய்தார். பூட்டான் நாட்டில் பவுத்த மதத்தை பரப்பினார். பறக்கும் பெண்புலியின் முதுகில் அமர்ந்து திபெத்திலிருந்து பறந்து இங்கே வந்ததாக நம்பிக்கை. அவருடைய 12 அடிச் சிலை இங்கே இருக்கிறது. தக்த்சாங் புத்தக் கோயில் 1692 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

பூட்டான்
பூட்டான்

மலையிலிருந்து இறங்கி பூட்டான் தேசிய அருங்காட்சியகத்தை நோக்கிப் பயணித்தோம். இந்தப் பயணம் முழுவதும் கூகுள் வரைபடத்தைப் பயன்படுத்தினோம். இரண்டு முறை கூகுள் எங்களை இக்கட்டில் மாட்டி விட்டுவிட்டது. அருங்காட்சியத்துக்கு வழி கேட்டால், எங்களை ஒரு முட்டுச்சந்துக்குக் கொண்டு போய்விட்டுவிட்டது. மற்றொரு சமயம் சிலிகுரிக்கு அருகில் நெடுஞ்சாலையில் பயணித்துக்கொண்டிருந்தோம். பால வேலை நடைபெற்றுக்கொண்டிருந்தது. மாற்றுப்பாதைக்கான அறிவிப்புப் பலகை எதுவும் இல்லை. சாலையின் இடதுபுறம் ஒரு மண் சாலை சென்றது. அதில் மூன்று கிலோமீட்டர் தூரம் சென்றோம். இரண்டு பக்கமும் குடிசை வீடுகள். மூங்கில் வேலிகள். திடீரென்று மண் சாலை முடிந்துவிட்டது.

வேறு வழியில்லாமல் மீண்டும் நெடுஞ்சாலைக்கு வந்தோம். பாலத்தின் வலது பக்கத்தில் ஒரு மண் சாலை சென்றது. மறுபடியும் ஐந்து கிலோமீட்டர் பயணம். குடிபோதையிலிருந்த இரண்டு பேர், சாலையை மறித்து ஒரு மரத்தைப் போட்டு, அதன் மேல் உட்கார்ந்துகொண்டிருந்தார்கள். குமார், அங்கே இருந்த ஒருவரிடம் தமிழில் `எப்படியாவது வழி விடச் சொல்லுங்கள்' என்று கேட்டுக்கொண்டார். அவர் பதிலுக்கு பெங்காலி மொழியில் ஏதோ பேசி ஒருவழியாக எங்களுக்கு வழி விட்டார்கள். குண்டும் குழியுமான மண் சாலை. வழியில் நூற்றுக்கணக்கான வீடுகள். தெருவிளக்குக் கம்பங்களையோ, குடிநீர்க் குழாய்களையோ வழியில் எங்கும் பார்க்க முடியவில்லை. கிராமங்களுக்கு நல்ல கட்டமைப்பு வசதி செய்து கொடுத்திருப்பது தமிழகம் மட்டும்தான்.

பூட்டான்
பூட்டான்

கூகுளைப் பயன்படுத்தத் தொடங்கிய பிறகு நாம் வரைபடங்களை மறந்தே போய்விட்டோம். இதுபோன்ற நீண்ட பயணங்களுக்கு வரைபடங்களும் இருந்தால் பாதுகாப்பு!

பூட்டானுடைய நாணயம் நிகுல்ட்ரம் (Nglutram). இந்திய ரூபாய்க்குச் சமமான மதிப்புடையது. பூட்டான் நாடு முழுவதும் இந்திய ரூபாய் பயன்படுகிறது. இந்திய ரூபாயை பூட்டான் காசாக மாற்ற வேண்டியதில்லை. பூட்டான் மக்கள் திஃசொங்கா (Dzongkha) மொழி பேசுகிறார்கள். இந்தியும், இங்கிலீஸும் பெரும்பாலோனோருக்குத் தெரிந்திருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் வரட்டனப்பள்ளியில் இரண்டரை லட்சம் ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்திருக்கின்றன. பூட்டானில் மனிதர்கள் 4000 ஆண்டுகளாகத்தான் வாழ்ந்து வருகின்றனர். கி.பி. 9-ம் நூற்றாண்டில் திபெத்தில் கலவரம் ஏற்பட்டபோது அங்கிருந்து தப்பி வந்த புத்த பிக்குகள் இந்த நாட்டின் முதல் குடியேறிகள். வரலாறு நெடுகிலும் பூட்டான் எப்பொழுதும், யாராலும் கைப்பற்றப்படவில்லை.

சுதந்திர நாடாகவே இருந்திருக்கிறது. அதற்குக் காரணம் யாரும் எளிதாகக் கடந்து விட முடியாத இயற்கை அரணாக நான்கு புறமும் சூழ்ந்திருக்கும் இமயமலைத் தொடர்கள். இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள்1907-ம் ஆண்டு பூட்டானோடு ஓர் ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொண்டார்கள். அதன்படி பூட்டான் தன் வெளிவிவகாரக் கொள்கையை பிரிட்டிஷாரிடம் விட்டுவிட்டால், பூட்டானின் உள்நாட்டு விவகாரத்தில் பிரிட்டிஷார் தலையிட மாட்டார்கள். ஏறக்குறைய இதே மாதிரியான ஒப்பந்தத்தை விடுதலை அடைந்த இந்தியாவுடனும் பூட்டான் 1949-ம் ஆண்டு ஏற்படுத்திக்கொண்டது.

பூட்டான் நுழைவுவாயில்
பூட்டான் நுழைவுவாயில்

பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கியல் வாங்சுக் அவர்களுடைய படத்தை பல இடங்களில் காண முடிந்தது. பூட்டான் மன்னர் அழகிய தோற்றமுடையவர். 2004-ம் ஆண்டு தாய்லாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றபோது, தாய்லாந்துப் பெண்கள் அவர் அழகைப் பார்த்து மயங்கினார்கள் என்பது செய்தியாக இருந்தது. 2008-ம் ஆண்டு மன்னராக முடிசூட்டிக் கொண்டபோது வாங்சுக்கின் வயது 26. அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் படித்தவர். முடிசூட்டிக்கொண்டவுடன் நாடு முழுவதும் பயணித்தார். மக்களைச் சந்தித்து, மக்களாட்சியின் மேன்மைகளை விளக்கினார். பூட்டானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றம் அமைத்தார். மாலை சில்வர்பைன் விடுதியைக் காலி செய்துவிட்டு திம்பு நோக்கிப் பயணித்தோம்.

- மருத்துவர் இரா.செந்தில் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், தர்மபுரி தொகுதி)

கட்டுரையாளரின் முந்தைய பயணக் கட்டுரைகளைப் படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்:

முதல் நாள் - https://www.vikatan.com/news/travel/travel-on-the-road-and-live-the-life

இரண்டாம் நாள் - https://www.vikatan.com/news/miscellaneous/story-of-william-lambton-who-measured-india

மூன்றாம் நாள் - https://www.vikatan.com/news/miscellaneous/william-henry-sleeman-suppressed-criminal-gangs-known-as-thuggee

நான்காம் நாள் - https://www.vikatan.com/lifestyle/travel/know-about-the-dhamek-stupa-at-sarnath-and-buddhas-preaching

ஐந்தாம் நாள் - https://www.vikatan.com/lifestyle/miscellaneous/reader-shares-gaya-travel-experience

ஆறாம் நாள் - https://www.vikatan.com/news/miscellaneous/phuentsholing-the-

ஏழாம் நாள் - https://www.vikatan.com/lifestyle/miscellaneous/a-travellerss-story-in-bhutan-amid-of-2-inches-high-snow

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/