Published:Updated:

ஆட்டோக்கள் என்னும் போதிமரங்கள்!

அப்போது ஓவியம், சிற்பம், விஷுவல் ஆர்ட் என மூன்று பிரிவுகள் மட்டும்தான். நான் விஷுவல் ஆர்ட்டைத் தேர்வு செய்தேன்.

பிரீமியம் ஸ்டோரி

``ஆட்டோக்கள்தான் என் களம். நாம் காணும் ஆட்டோக்கள், மூன்று, நான்கு அடுக்குகளாக இருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையை ஓவியங்கள் மூலம் வெளிப்படுத்தினேன். பார்த்தறிந்திராத ஒன்றை வரைவதற்குப் பதில் அனைத்துத் தரப்பு மக்களின் அன்றாட வாழ்வில் தொடர்புகொண்டிருக்கும் ஆட்டோவை எனது படைப்புகளில் நிரந்தரமாக்கலாம் என நினைத்தேன்” - உற்சாகமாகப் பேசத் தொடங்குகிறார் சர்ரியலிச ஓவியர் ‘ஆட்டோ’ திருமலை. `சர்ரியலிசம்’ என்ற கலை வடிவக் கோட்பாட்டிற்குத் தூரிகைகளால் வண்ணம் தீட்டிய சல்வடோர் டாலியின் பின்பற்றாளர் எனப் பெருமையாகக் கூறிக்கொள்ளும் திருமலை, புதுச்சேரியைச் சேர்ந்தவர்.

திருமலை
திருமலை

இல்லத்தின் வாசலில் 2020-ல் இந்தியா அடைய வேண்டிய வளர்ச்சி என்ற கருத்தில் திருமலை அனுப்பிய ஓவியத்துக்கு அப்துல்கலாம் அனுப்பிய நன்றிக் கடிதம் நம்மை வரவேற்றது. அந்த வீட்டின் மேல்மாடியில் அமைந்திருக்கும் அழகான ஆர்ட் கேலரியில் அமர்ந்து அவருடன் பேச ஆரம்பித்தேன்.

ஆட்டோக்கள் என்னும் போதிமரங்கள்!

“விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன் நான். அரசுப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது நடந்த ஓவியப் போட்டியில் நான் வரைந்த பாரதியாரின் ஓவியத்துக்கு முதல் பரிசும், நன்றாக வரையும் மாணவன் என்ற பெயரும் கிடைத்தது. அன்று கிடைத்த `ஓவியன்’ என்ற அந்தஸ்து எனக்குள் தேடுதலை ஏற்படுத்தியது. அதுதான் ஓவியக் கல்லூரியை நோக்கியும் நகர்த்தியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஓவியம், சிற்பத்துக்காக மட்டும் ஒரு கல்லூரி புதுச்சேரியில் இருப்பது அதுவரை எனக்குத் தெரியாது. பரிந்துரையின்றி எனது ஆர்வம் அந்தக் கல்லூரிக்குள் என்னைக் கைபிடித்து அழைத்துச் சென்றது. அப்போது ஓவியம், சிற்பம், விஷுவல் ஆர்ட் என மூன்று பிரிவுகள் மட்டும்தான். நான் விஷுவல் ஆர்ட்டைத் தேர்வு செய்தேன்.

ஆட்டோக்கள் என்னும் போதிமரங்கள்!

5 வருடப் படிப்பை முடித்ததும் வேலைக்காக சென்னையில் அனிமேஷன் துறையில் நுழைந்தேன். ஏதோ காரணத்துக்காக அந்தக் கம்பெனியை மூடிவிட்டார்கள். பின் `இந்தோ-ஜெர்மனி’ என்ற கம்பெனியில் வேலைக்குச் சென்றேன். `அக்ரிலிக்’ கொண்டு ஓவியம் வரையும் முறையை முதல்முறையாக அங்குதான் பார்த்தேன். ஒரு அக்லிரிக் ஓவியத்தை மாதிரியாகக் கொண்டு அதேபோல 50 ஓவியங்கள் வரைய வேண்டும். வெவ்வேறு அளவுகளில், வெவ்வேறு ஓவியங்கள் சிறு பிசிர்கூட இல்லாமல் அனைத்தும் ஒரே மாதிரி இருக்க வேண்டும். அந்த வேலையும், அனிமேஷன் அனுபவமும் `சர்ரியலிசம்’ ஓவிய முறையை நோக்கி என்னைத் திரும்ப வைத்தது.

`நவீன ஓவியங்கள் என்பது மேல்தட்டு மக்களுக்கானது’ என்ற மரபுடன் செல்லாமல், பாமர மக்களுக்கும் புரியும் படியான நவீன ஓவியமாகவும், தனித்துவமான அடையாளத்துடனும் இருக்க வேண்டும் என நினைத்தேன். முதலில் உலக உருண்டையை வைத்து வரைய ஆரம்பித்தேன். பிறகு மரங்களை இணைத்துப் பார்த்தேன்.

ஆனால் எதிலும் திருப்தி ஏற்படவில்லை. அப்போது நான் தங்கியிருந்த வேளச்சேரி வீட்டிலிருந்து ஷேர் ஆட்டோவில்தான் வேலைக்குச் செல்வேன். 4 பேர் செல்லக்கூடிய ஒரு ஆட்டோவில் 10 பேர் அடித்துப் பிடித்துக்கொண்டு ஏறுவார்கள். அப்போதுதான் இந்த ஆட்டோக்கள் மூன்று, நான்கு அடுக்குகளாக இருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையை, ஓவியங்கள் மூலம் வெளிப்படுத்தினேன். ஓவியத்துக்காகத் தேடிக்கொண்டிருந்த தனித்துவம் ஆட்டோவின் மூலம் கிடைத்ததாகத்தான் நினைக்கிறேன்.

ஆட்டோக்கள் என்னும் போதிமரங்கள்!

எனது படைப்புகள் தட்டையாக (flat) இல்லாமல் முன்னோக்கிச் (perspective) செல்வதைப் போலவே அமைக்கிறேன். ஆட்டோவை மையப்படுத்தி வரையும் படைப்புகள் விற்பனை ஆகின்றன என்றாலும் பிழைப்பை நடத்துவதற்கு அது போதாது. ஜல்லிக்கட்டு, இயற்கை, நீர்நிலைகள் என சிறிய அளவிலான கமர்ஷியல் ஓவியங்களையும் வரைந்து கொண்டிருக்கிறேன். சார்கோல் மூலம் குதிரைகளை மையப்படுத்தி சுமார் 35 ஓவியங்களைக் காட்சிப்படுத்தினேன். அதற்காக 3 மாதங்கள் ஆரோவில்லுக்குச் சென்று குதிரைகளிடம் நெருக்கமாகப் பழகிய தருணம் மறக்க முடியாதது.

ஆட்டோக்கள் என்னும் போதிமரங்கள்!

நண்பர்கள் மற்றும் சீனியர் ஆர்ட்டிஸ்டுகள் கொடுக்கும் ஊக்கம் மற்றும் யோசனைகளைக் கொண்டு, எனது கற்பனைகள் தடைப்படாமல் படைப்புகளை மேம்படுத்திக்கொள்கிறேன். படைப்பாளிக்குக் கட்டற்ற சுதந்திரமும் கற்பனையும் முக்கியமானவை. சக ஓவியர்கள், நண்பர்கள் என மற்றவர்கள் கூறுவதை நான் கேட்க ஆரம்பித்துவிட்டால், என் கைகள் மட்டும்தான் தூரிகையைப் பிடித்துக்கொண்டு வரைந்து கொண்டிருக்கும். அதேபோல இங்கு நீண்டகாலமாக நம் ஓவியர்கள் வருத்தமளிக்கக் கூடிய ஒரு மரபைக் கடைப்பிடித்து வருகிறார்கள். கல்வி அடிப்படையில் ஓவியர்களை ஒதுக்குகிறார்கள். ஓவியக் கல்லூரியில் படித்தவர்கள்தான் ஓவியம் வரைய வேண்டுமென்று நினைக்கிறார்கள். கலையில் கட்டுப்பாடுகளை விதிப்பது சரியான அறமல்ல” என்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு