
அம்மாவுக்காக அப்பாவிடம் வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்குப் போனதெல்லாம் வாழ்வின் அழகிய நினைவுகள்.
பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
பெரும்பாலும் அம்மாக்களை பற்றியே புகழ் பாடும் நமக்கு அப்பாவின் அன்பு தெரிவது இல்லை. எப்போதும் கணக்காய் செலவு செய்யும் அப்பாவைக் கண்டால் நமக்குப் பிடிப்பது இல்லை. எப்போதும் தான் ஒரு கறார் பேர்வழி எனக் காட்டிக்கொள்ளும் அப்பாவிடமிருந்து தப்பிக்கவே வழி தேடுவோம். அம்மாக்களைப் போல அப்பாக்களுக்கு அன்பை வெளிக்காட்ட தெரிவதே இல்லை.
அம்மாவுக்காக அப்பாவிடம் வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்குப் போனதெல்லாம் வாழ்வின் அழகிய நினைவுகள்.
எல்லாப் பிள்ளைகளைப் போல நானும் இப்படித்தான் இருந்தேன். வயது ஆகும் போதும் வேலை நிமித்தமாக அப்பாவை விட்டு பிரிந்த போதுதான் அவரின் பாசமும் தியாகமும் புரிந்தது. எல்லோர் அப்பாவும் வண்டியில் போகும் போது கூட தனக்கென எதுவும் செய்யாமல் எனக்கு சைக்கிள் வாங்கித் தந்த அப்பாவின் அன்பு பெரிதுதான். எல்லோர் அப்பாவும் மாலை வேளையில் ஓய்வு எடுக்கும் போதும், அந்த நேரத்திலும் எனக்காக உழைத்த என் அப்பாவின் அன்பு பெரிதுதான் எல்லோர் அப்பாவும் அடிக்கடி ஒரு புதுச்சட்டை என வாங்கிய போது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரே செருப்புப் போட்டுக்கொண்ட என் அப்பாவின் அன்பு நிச்சயம் பெரிதுதான்.
எப்போதோ படித்த கதை, நினைவடுக்குகளில் அடிக்கடி தோன்றுவது உண்டு. கடவுள் இரவு உணவு அருந்தி விட்டு ஓய்வு எடுத்துக்கொண்டு இருந்தாராம். அந்த ஊரில் இருந்த அனைவரும் கடவுளுக்குக் காணிக்கை கொடுத்துக்கொண்டிருந்தனர். அதில் அந்த ஊரின் பெரிய செல்வந்தரும் அடக்கம். அவர் தன்னிடம் இருந்த விலை உயர்ந்த பொருள்களை எல்லாம் கொண்டு வந்து காணிக்கையாகக் கொடுத்துக்கொண்டிருந்தார். அவருக்கு தான் மட்டுமே கடவுளுக்கு அதிக காணிக்கை கொடுத்தவராக இருக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது.

எல்லோரும் காணிக்கை கொடுத்து முடித்த பின்னர் அந்தச் செல்வந்தர் கடவுளிடம் சென்று, ``கடவுளே, இன்று உங்களுக்கு அதிகமான காணிக்கை யாரிடமிருந்து வந்தது? அதிகமான காணிக்கை கொடுத்தவர் தானே உங்கள் அன்பிற்கு உரியவராக இருக்க முடியும்" எனக் கேட்டார்.
அதற்கு கடவுள், அந்தக் கூட்டத்தில் ஒரு மூலையில் சோர்வாய் அமர்ந்து இருந்த ஒரு வயசான பாட்டியை நோக்கிக் கையை உயர்த்தி, ``அவர் கொடுத்த இரண்டு ரூபாய் காணிக்கைதான் மிகப் பெரியது. அதுவே என் மனதை நிறைவாக்கியது" எனக் கூறினார்.
பாட்டியோ தான் இன்று முழுவதும் உழைத்துச் சம்பாதித்த இரண்டு ரூபாயை எனக்குக் கொடுத்து விட்டுப் பசியோடு இருக்கிறாள்.
செல்வந்தருக்குக் கோபம் வந்து விட்டது. அதை உணர்ந்த கடவுள், ``நீ பொன்னும் பொருளும் கொண்டு வந்து இறைத்தாய். ஆனால் அவை எல்லாமே உன்னிடம் இருக்கும் செல்வத்தின் முன் ஒன்றுமே இல்லை. ஆனால், அந்தப் பாட்டியோதான் இன்று முழுவதும் உழைத்துச் சம்பாதித்த இரண்டு ரூபாயை எனக்குக் கொடுத்து விட்டுப் பசியோடு இருக்கிறாள். இதே உண்மையான உயர்ந்த அன்பு" என்பார் .
செல்வந்தரும் அதைப் புரிந்துகொண்டு அமைதியாகச் சென்று விடுவார். இருப்பதில் கொடுப்பதை விட இருப்பதை எல்லாம் கொடுப்பது தானே உயர்ந்ததாக இருக்க முடியும். இங்கே அப்பாக்கள் அந்தப் பாட்டியைப் போலதான் இருக்கிறார்கள். நாம்தான் கடவுள் அதை அங்கீகரி்த்ததைப் போன்று அதை அங்கீகரிப்பதில்லை. எனக்கு என் அப்பா இதைச் செய்யவில்லை அதைச் செய்யவில்லை நான் இன்னும் கொஞ்சம் பணக்கார வீட்டில் பிறந்து இருக்கலாம் என்று குறை சொல்ல மட்டுமே தெரிந்த நமக்கு, அவர் நமக்காகச் செய்த எதற்குமே நன்றியோடு இருக்கத் தெரிவதில்லை. என் அப்பாவாக இருந்து விட்டு இதைக் கூட செய்ய முடியாதா? என்றே கேட்கிறோம்.

என் கனவை என் அப்பா புரிந்துகொள்ள மறுக்கிறார். அவர் கனவை என் மீது திணிக்கிறார். என அப்பாவின் மீது குறை சொல்லும் பிள்ளைகளைப் பார்க்கையில் எனக்கு தோன்றும் ஒரே கேள்வி, ``நம் அப்பாக்களின் கனவு என்னவாக இருந்து இருக்கும்?" இங்கு எத்தனையோ ஆண்கள் குடும்பத்திற்காகவும் குழந்தைகளுக்காகவும் கனவுகளைத் தொலைத்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள். பெண்களின் சுதந்திரம், விடுதலை எனப் பக்கம் பக்கமாகப் பேசும் நாம் ஆண்களின் உழைப்பையும் தியாகத்தையும் வசதியாக மறந்து விடுகிறோம். ஆணுக்கு எல்லா சுதந்திரமும் இருக்கிறது அப்பாவுக்கு எல்லா அதிகாரமும் இருக்கிறது என அதைச் சுலபமாகக் கடந்து விடுகிறோம். அப்பாக்கள் நம் கண்களில் அவர்கள் கனவுகளைக் காண்கிறார்கள். நாம் நம் கனவை நிறைவேற்ற அவர்களைப் பயன்படுத்திக்கொள்ள ஆசைப்படுகிறோம். நாம் சுயநலவாதிகளாக மட்டுமே இருக்கிறோமா என நம்மை நாமே கேள்வி கேட்டுக்கொள்வோம்...
- சண்முக ப்ரியா
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.