Published:Updated:

`தொடர்பு', `இணைப்பு' - வேறுபாட்டை உணர்த்தும் குட்டிக் கதை! #MyVikatan

Representational Image
Representational Image

தொடர்பு - இணைப்பு இவற்றின் வேறுபாடு என்ன?

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

தொடர்பு - இணைப்பு, இந்த இரண்டு சொற்களும் ஒன்று போல தோன்றலாம். ஆனால், இவை வெவ்வேறானவை! சமூக வலைதளங்களின் வீச்சு மிக மிக அதிகமாக இருக்கும் இன்றைய நாளில், இந்தக் கேள்வியும், இதற்கான பதிலும் அவசியமான ஒன்றாகின்றன!

ஒரு சிறிய கதை இச்சொற்களின் வேறுபாட்டைத் தெளிவாக விளக்கும்.

Representational Image
Representational Image

துறவி ஒருவரிடம் பக்தர் ``ஐயா, இன்றைய உரையில் தொடர்பு மற்றும் இணைப்பு ஆகியவை குறித்து பேசினீர்கள். இவ்விரண்டின் வேறுபாடுகளைக் கூற முடியுமா?" எனக் கேட்டார்.

இந்தக் கேள்வியைக் கேட்ட துறவி சத்தமாகச் சிரிக்க ஆரம்பித்தார்.

``சரி, இந்தக் கேள்விக்கு நான் பதில் கூறுகிறேன். அதற்கு முன்பாக உங்களிடம் நான் சில கேள்விகள் கேட்க வேண்டும்" என்றார் துறவி.

பக்தருக்கு ஒரே ஆச்சர்யம்! ``நாம் துறவியிடம் விளக்கம் பெறுகிறோமா? அல்லது அவர் நம்மிடம் விளக்கம் பெறுகிறாரா?" என்று.

சரி என்னதான் நடக்கும் பார்க்கலாம் என எண்ணிக்கொண்டு, "கேளுங்கள்" என்றார்.

துறவி தன் கேள்விகளை ஆரம்பித்தார்.

``உங்கள் வீட்டில் யாரெல்லாம் இருக்கிறீர்கள்?" என்றார்.

``எனது சகோதர, சகோதரிகள் திருமணம் முடிந்து தனித்தனியாக வசிக்கின்றனர். என் தாயார், மனைவி மற்றும் மகனுடன் நான் வசிக்கிறேன்" என்றார் பக்தர்.

Representational Image
Representational Image

துறவி முகத்தில் புன்னகையுடன், ``நீங்கள் உங்கள் தாயுடன் பேசுகிறீா்களா?" என்று மீண்டும் கேட்டார்.

பக்தர் சற்று எரிச்சலுடன் ``ஆம். பேசுவேன்" என்றார்.

``கடைசியாக எப்போது அவரிடம் பேசினீா்கள்?" என்றார் துறவி.

எரிச்சலை அடக்கிக்கொண்டு, ``ஒரு வாரத்துக்கு முன்பு இருக்கலாம்" என்றார் பக்தர்.

``உங்களுடைய சகோதர சகோதரிகளை அடிக்கடி சந்திப்பதுண்டா?" என்ற அடுத்த கேள்வியுடன்,

``குடும்பமாக கடைசியாக சந்தித்தது எப்போது?" என்ற கிளைக் கேள்வியையும் கேட்டார் துறவி.

இப்போது அந்த பக்தருக்கு வியர்க்க ஆரம்பித்து விட்டது!

திணறலுடன் பக்தர் ``இரண்டு வருடங்களுக்கு முன் பொங்கல் சமயத்தில் சந்தித்தோம்" என்றார்.

``உங்கள் தாயுடன் நேரம் செலவிடுகிறீர்களா?" என்றார் துறவி.

``பணிச்சுமை அதிகம் உள்ளதால் அடிக்கடி நேரம் செலவிட முடிவதில்லை" என்றார் பக்தர்.

Representational Image
Representational Image

``சரி. உங்கள் தாயுடன் அமர்ந்து உணவு அருந்தி எவ்வளவு நாள் ஆகிறது?" என்றார் துறவி. கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் இருக்கும் என்றார் பக்தர் கண்கலங்க!

``அப்பா இறந்த பிறகு நாள்களை எப்படி கழிக்கிறீர்கள் என்று அம்மாவிடம் கேட்டுள்ளீர்களா?" என்ற அடுத்த கேள்வியைத் தொடுத்தார் துறவி.

இப்போது பக்தர் பதற்றத்துடனும் சங்கடத்துடனும் கைகள் நடுங்க ஒரு காகிதத்தில் தாறுமாறாக ஏதோ கிறுக்க ஆரம்பித்தார்!

பக்தரின் கண்களில் இருந்து கண்ணீர் துளிகள் கீழே விழ ஆரம்பித்தன!

பக்தரின் கைகளைத் துறவி பிடித்துக்கொண்டார்.

``கலங்காதீர்கள். உங்களைச் சங்கடப்படுத்த நான் இந்தக் கேள்விகளைக் கேட்கவில்லை. உங்களின் கேள்விக்குத் தெளிவான பதில் அளிக்கவே நான் இத்தனை கேள்விகளைக் கேட்டேன். நான் கேட்ட கேள்விகள் உங்களை சங்கடப்படுத்தி இருந்தால் என்னை மன்னியுங்கள்."

``நீங்கள் உங்களுடைய அம்மாவுடன் `தொடர்பில்' இருக்கிறீர்கள். ஆனால், அவரோடு நீங்கள் `இணைப்பில்' இல்லை!

நீங்கள் அவரோடு இணைக்கப்படவில்லை!

Representational Image
Representational Image

இணைப்பு என்பது இதயத்துக்கும் இதயத்துக்கும் இடையே இருப்பது! ஒன்றாய் அமர்ந்து, உணவைப் பகிர்ந்து, ஒருவர்மீது ஒருவர் அக்கரை கொண்டு, தொட்டுக்கொண்டு, கைகுலுக்கி, கண்களை நேருக்கு நேர் பார்த்து, ஒன்றாய் சேர்ந்து, நேரத்தை செலவிடுவதுதான் இணைப்பு(Connection).

நீங்கள், உங்கள் தாயுடனும், சகோதர சகோதரிகளுடன் தொடர்பில் (Contact) இருக்கிறீர்கள், ஆனால், நீங்கள் யாரும் இணைப்பில் இல்லை என்றார். இப்போது பக்தர் கண்களைத் துடைத்துக்கொண்டு, ``எனக்கு அருமையான மற்றும் மறக்க முடியாத பாடத்தைச் சொல்லித் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா" என்றபடி தன் தாயுடன் நேரடியாக உரையாட வேண்டி வேகமாகச் சென்றார்!

இதுதான் இன்றைய வாழ்வின் நிஜமாக இருக்கிறது!

வீட்டிலும், சமுதாயத்திலும் முக்கியமாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் ஒவ்வொருவரும் நிறைய தொடர்பை வைத்திருக்கிறோம். ஆனால், இணைப்பில் இருப்பதில்லை. எல்லோருமே அவரவர் தனித்த, சொந்த உலகில் மட்டுமே மிகவும் பரபரப்பாக இருக்கிறோம்!

இனி நாம் வெறும் `தொடர்பை' பராமரிக்காமல், நமக்கு நெருக்கமானவர்களோடு `இணைப்பில்' வாழ்வோமாக!

நமது மதிப்பு மிக்க நேரத்தை நம்முடைய அன்புக்கு உரிய அனைவரோடும், அக்கறையோடு அன்பை பகிர்ந்து கொள்வதற்காக செலவழித்து வாழ்வோமாக...!

- அகன்சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

பின் செல்ல