Published:Updated:

`உழைத்து வாழவே விரும்புகிறோம்!' - திருநங்கைகள் நடத்தும் ஆவின் பாலகம் ஊட்டியில் திறப்பு

`உழைத்து வாழவே விரும்புகிறோம். ஆனால், நிறையபேர் வாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். எங்களுக்கு நீங்கள் ஆதரவு அளித்தால் போதும்.'

யுகங்கள் பல கடந்தும் சமூக நீரோட்டத்தில் இன்றளவும் கலக்க முடியாமல் தவிப்புக்கும் ஒதுக்குதலுக்கும் ஆளாக்கப்பட்டு வந்த மூன்றாம் பாலினத்தவர் எனப்படும் திருநங்கை, திருநம்பிகளை மெல்ல கரம் பற்றித் தோழமை பாராட்டும் நிகழ்வுகள் நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது. இவர்கள் தமிழக காவல்துறை, வனத்துறை உள்ளிட்ட அரசு துறைகளில் வாய்ப்பளிக்கப்பட்டு தடம் பதித்து வருகின்றனர்.

aavin
aavin

இந்த நிலையில் தமிழக்தில் முதல் முறையாக முழுக்க முழுக்க திருநங்கைகள் மூலம் இயங்கும் ஆவின் பாலகம் நீலகிரி மாவட்டம் ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள பூமாலை மகளிர் வணிக வளாகத்தில் இன்று தொடங்கப்பட்டது. இதை ஆவின் நிர்வாக இயக்குநர் வள்ளலார் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

திருநங்கைகள் மூலம் இயங்கும் முதல் பாலகத்தை திறந்து வைத்து பேசிய ஆவின் நிர்வாக இயக்குநர் வள்ளலார், ``தமிழ்நாடு ஊரக வாழ்வாதார திட்டத்தின் முயற்சியின் கீழ் திருநங்கை சுய உதவிக்குழு மேம்பாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ள இந்த விற்பனை மையத்தை முதல்கட்டமாக 5 திருநங்கைகள் நடத்த உள்ளனர்.

வள்ளலார்
வள்ளலார்

இதைச் சிறப்பாக நடத்தும் பட்சத்தில் தமிழகம் முழுவதும் இதுபோன்ற கடைகள் திருநங்கைகளுக்காக ஏற்படுத்தப்படும். ஆவின் நிறுவனம் சார்பில் பல்வேறு புதிய பொருள்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. ஆவின் பொருள்கள் அனைத்தும் தரமானது. தனியார் பாலைவிட ஆவின் பால் குறைந்த விலையில் நிறைந்த தரத்துடன் விற்பனை செய்யப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாடுகள் வளர்க்க திருநங்கைகள் மற்றும் பொதுமக்களுக்கு ஆர்வமிருந்தால், மாட்டுக் கடன்கள் வழங்கப்படும். மேலும், தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியைப் பெருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 1980-ம் ஆண்டு ஆவின் தொடங்கப்பட்டது. விரைவில் அதிகபட்ச விற்பனை இலக்கை ஆவின் நிறுவனம் அடையும்'' என்றார்.

திருநங்கைகள்
திருநங்கைகள்

இது குறித்து நம்மிடம் பேசிய திருநங்கை சௌமியா, ``இந்த வாய்ப்பை அளித்த அனைவருக்கும் நன்றி. இது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகக் கருதுகிறோம். தன்மானத்துடன் உழைத்து வாழவே விரும்புகிறோம். ஆனால், நிறைய பேர் வாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். எங்களுக்கு நீங்கள் ஆதரவு அளித்தால் போதும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு