Published:Updated:

`இந்த மீனவரின் கதையில்தான் உங்கள் மகிழ்ச்சிக்கான ரகசியம் இருக்கிறது!' - பெண்ணே ரிலாக்ஸ் ப்ளீஸ் 3.0

Representational Image
News
Representational Image

பங்களாவும் பெரிய காரும் உடைய பல பணக்காரர்களை நெருக்கமாகப் பார்க்கிறவன் என்கிற முறையில் சொல்கிறேன். அவர்களில் பலரும் மகிழ்ச்சியாக இல்லை. தங்களைவிட பெரிய பணக்காரர்களைப் பார்த்து, அவர்கள் தங்களை ஏழைகளாக நினைத்து ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

மகிழ்ச்சி என்பது கார், பங்களா, நகை, ஆடம்பரமான உடைகள் ஆகியவற்றில்தான் இருக்கிறது என்றும், பதவியிலும், புகழிலும், அதிகாரத்திலும், அந்தஸ்திலும்தான் அது மறைந்திருக்கிறது என்றும் நினைப்பவர்கள் பலரும் அவற்றின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

சிலர் இதையெல்லாம் தேடி அடைந்தும்விட்டார்கள். ஆனாலும் அவர்கள் தேடிய மகிழ்ச்சி அவர்களுக்கு கானல் நீர் போல கண்ணுக்குப் புலப்பட்டு, வெகு சீக்கிரமே காணாமல் போய்விட்டது. ஆனாலும், இப்போது இருப்பதைவிட பெரிய வீட்டிற்கும், காருக்கும் மகிழ்ச்சி இடம்பெயர்ந்து சென்றுவிட்டதாக நினைத்து ஓட்டத்தைத் தொடர்கிறார்கள்.

Job / Representational Image
Job / Representational Image

மகிழ்ச்சியை பங்களாவிலும், காரிலும், நகையிலும் தேடுவது என்பது முட்டாள்தனமானது. ஆட்டை தோளில்போட்டுக் கொண்டு, அதைத் தேடிய முட்டாளின் செயலுக்கு ஒப்பானது. பங்களாவிலும், காரிலும் மகிழ்ச்சி இருக்கிறது என்றால், பெரிய பங்களாவில் வசிப்பவர்களும், பெரிய காரில் போகிறவர்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்தானே?! பங்களாவும் பெரிய காரும் உடைய பல பணக்காரர்களை நெருக்கமாகப் பார்க்கிறவன் என்கிற முறையில் சொல்கிறேன். அவர்களில் பலரும் மகிழ்ச்சியாக இல்லை. தங்களைவிட பெரிய பணக்காரர்களைப் பார்த்து, அவர்கள் தங்களை ஏழைகளாக நினைத்து ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

எல்லோருக்கும் தெரிந்த எளிமையான ஓர் உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். வெளிநாடுகளில் பலரும் வேகாத மாமிசத்தை, உப்பு, காரம் எதுவும் சேர்க்காமல் சப்புக்கொட்டிக்கொண்டே ருசித்து சாப்பிடுவார்கள். நம் நாட்டில் பலருக்கும் அதைப் பார்த்தாலே குமட்டிக் கொண்டுவரும். அதேபோல நாம் விரும்பி ருசித்துச் சாப்பிடும் காரக் குழம்பும், மிளகாய்ப்பொடியும் நாவில் பட்டாலே அவர்கள் துடிதுடித்துப் போவார்கள். மது என்பது சிலருக்கு மாபெரும் மகிழ்ச்சிதரும் பொருள். வேறு சிலருக்கோ அதன் வாடையே ஆகாது. ஆக... ஒருவருக்கு மகிழ்ச்சி தரும் விஷயம், இன்னொருவருக்கு மகிழ்ச்சியைத் தருவதில்லை. இவ்வளவு ஏன்... ஒருவருக்கு மகிழ்ச்சி தரும் ஒரு விஷயம், அளவுக்கு மீறிக் கிடைக்கும்போது அவருக்கேகூட அது திகட்டிவிடும்.

ஆக... மகிழ்ச்சி என்பது பங்களாவிலோ, காரிலோ, உணவிலோ, போதைப் பொருளிலோ இல்லை. மகிழ்ச்சி மறைந்திருப்பது நம் மனதில்தான். எப்படி என்பதை விளக்க ஒரு கதை சொல்கிறேன். எல்லோருக்கும் தெரிந்த கதைதான். அர்த்தத்தைப் புரிந்து கொள்ளாமலேயே பலரும் கடந்து போய்விட்ட கதை. அதனால் இன்னொரு முறை சொல்வதில் தவறில்லை என நினைக்கிறேன்.

Happy
Happy

கடற்கரை காற்றில் படகின் நிழலில் ஒருவன் பாட்டுப் பாடிக்கொண்டு படுத்திருந்தான். அந்த வழியாகச் சென்ற பெரிய பணக்காரர் ஒருவர் இவனைப் பார்த்து. ``ஏன் இப்படி வெட்டியாக பாட்டுப்பாடி படுத்துக் கொண்டிருக்கிறாய். நீ மீனவன்தானே? கடலுக்குச் சென்று மீன் பிடிக்கலாம் இல்லையா?' என்று கேட்டார்.

``எனக்குத் தேவையான மீன்களை இன்று பிடித்து வந்துவிட்டேன்!'' என்று பதில் சொன்னான் அவன். ``அதனால் என்ன, மீண்டும் கடலுக்குச் சென்று மேலும் நிறைய மீன்கள் பிடித்துவந்தால் இன்னும் பணம் கிடைக்கும் இல்லையா?'' என்று கேட்டார் அந்தப் பணக்காரர். `''அந்தப் பணத்தை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வது' என்று அவன் கேட்க, ``பைத்தியக்க்காரனாக இருக்கிறாயே. அதிக மீன்கள் பிடித்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம். அதிக பணம் சம்பாதித்தால், கட்டுமரத்துக்கு பதிலாக விசைப் படகு வாங்கலாம். விசைப் படகு வாங்கினால், ஆழ்கடலில் போய் இன்னும் அதிக மீன்கள் பிடிக்கலாம். அதிக பணம் கிடைக்கும். அதை வைத்து இன்னும் பெரிய விசைப் படகு வாங்கி மீன் பிடிக்கலாம். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம், டாலரில் சம்பாதிக்கலாம்...'' நிறுத்தாமல் சொல்லிக்கொண்டே போன பணக்காரரை இடைநிறுத்தி. ``அவ்வளவு பணத்தை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வது?'' என்று அந்த மீனவன் அப்பாவியாகக் கேட்க, அதற்கு அந்தப் பணக்காரர், ` `நிம்மதியாக ஓய்வெடுக்கலாம்'' என்று சொன்னார். உடனே அந்த மீனவன், ``அதைத்தானே, இப்போதுதான் செய்து கொண்டிருக்கிறேன்'' என்றான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தக் கதையில் புதைந்திருக்கும் பதில், உழைக்காமல் சோம்பேறியாக இருப்பதே சிறந்தது என்பதல்ல. ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து மகிழ்ந்திரு என்பதுதான். ``பணம் வந்தால்தான் மகிழ்ச்சியாக இருப்பேன். விசைப்படகு வாங்கினால் மகிழ்ச்சியாக இருப்பேன். டாலரில் சம்பாதித்தால் மகிழ்ச்சியாக இருப்பேன்'' என்று மகிழ்ச்சியாக இருப்பதற்கு நமக்கு நாமே நிபந்தனைகள் விதித்துக் கொள்ளக்கூடாது என்பதுதான்.

சுவாமி சுகபோதானந்தா
சுவாமி சுகபோதானந்தா

நல்ல இசையைக் கேட்பது, இயற்கையை ரசிப்பது, பசியோடு இருக்கும்போது உணவை ருசிப்பது, குடும்பத்தினரோடு இருப்பது, நடைப்பயிற்சி செய்வது, நண்பர்களோடு உரையாடுவது, நல்ல திரைப்படங்களைப் பார்ப்பது, பிடித்த புத்தகங்களை வாசிப்பது, தினமும் ஏதாவது ஒரு புதிய விஷயத்தைக் கற்றுக் கொள்வது, நலிந்தவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி மகிழ்வித்து மகிழ்வது... என உலகில் மகிழ்ச்சியாக இருக்க எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. மகாகவி சொன்னது மாதிரி உலகில் பல கோடி இன்பங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றையெல்லாம் பார்க்காமல், அனுபவிக்காமல் பணத்தில் மட்டும்தான் இன்பம் இருக்கிறது என்று தவறாகப் புரிந்துகொண்டு, அதன் பின்னால் மட்டும் ஓடுவது எத்தகைய பேதைமை!

நம் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்ய பணம் இன்றியமையாதது என்பதில் சந்தேகமில்லை. அதன் பொருட்டு பணம் ஈட்டுவதும் தவறில்லை. ஆனால், பணம் மட்டும்தான் மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்று நினைப்பதும், பணம் மட்டும்தான் பாதுகாப்பு கொடுக்கும் என்று நினைப்பதும்தான் தவறு.

- சுவாமி சுகபோதானந்தா

- சிந்திப்போம்