Published:Updated:

``அப்போ ரஜினி, விஜய், ஷாருக் வரை... இப்போ தள்ளுவண்டிக் கடை!'' - ஸ்டன்ட் நடிகர் கிருஷ்ணன்

நடிகர் கிருஷ்ணன்
நடிகர் கிருஷ்ணன்

``நான் சினிமா ஆர்ட்டிஸ்ட். பவுன்சரும்கூட. இருந்தாலும் இப்போ எனக்கு சோறு போடுறது என் தள்ளுவண்டி பீஃப் கடைதான்" - நடிகர் கிருஷ்ணன்

திரைத்துறையில் 20 வருடங்கள் ஸ்டன்ட் நடிகராகப் பணியாற்றியர் நடிகர் கிருஷ்ணன். தற்போது சென்னை அடையாற்றில் தள்ளுவண்டிக் கடை போட்டிருக்கிறார் என்ற செய்தி கிடைக்க, அவரைப் பார்க்கச் சென்றோம்.

Krishnan
Krishnan

அடையாற்றில் கிருஷ்ணன் வழக்கமாகத் தள்ளுவண்டிக் கடை போடும் இடத்துக்குச் சென்று, அக்கம் பக்கம் விசாரித்து, கிருஷ்ணன் வீட்டை அடைந்தோம். சிறிய, பழைய வீடு. கிருஷ்ணனிடம், பள்ளியில் தாங்கள் போட்டிகளில் வென்ற கதை சொல்லிக்கொண்டிருந்தார்கள் அவரின் பெண் குழந்தைகள். 'சொல்லுங்க பிரதர்' என்று நம்மிடம் திரும்பிய கிருஷ்ணனிடம், அவரைப் பற்றிக் கேட்டோம். மெல்ல, ஹஸ்கி வாய்ஸில் பேச ஆரம்பித்தார்.

"நான் சினிமா ஆர்ட்டிஸ்ட். பவுன்சரும்கூட. இருந்தாலும் இப்போ எனக்கு சோறு போடுறது என் தள்ளுவண்டி பீஃப் கடைதான்.

Krishnan
Krishnan
`` `மிஸ்டர் தனுஷ்... உங்க மாமாகிட்ட கேளுங்க'ன்னு சொல்ற விசு இதை யோசிக்கணும்!'' - `தில்லு முல்லு' விவகாரம்

வயசு 40 ஆகுது. நான் பொறந்தது, வளர்ந்தது எல்லாமே இதே அடையாறுதான். குடும்பச் சூழ்நிலை காரணமா பத்தாவது முடிச்ச கையோடு வேலைக்குக் கிளம்பிட்டேன். இன்னைக்கு வரைக்கும் எத்தனையோ வேலைகளைப் பார்த்துட்டேன்.

சின்ன வயசுலயிருந்தே பாடி பில்டிங்னா எனக்கு உயிரு. ஒருநாள்கூட உடற்பயிற்சி செய்யாம என்னால இருக்க முடியாது இன்னைக்கு வரை! ஜிம்லேயே கிடந்த என் முயற்சியும் பயிற்சியும், 20 வயசுல என்னை 'மிஸ்டர் தமிழ்நாடு' டைட்டில் அடிக்க வெச்சது. அதுக்கப்புறம் நிறைய டைட்டில் வின் பண்ணி, 'மிஸ்டர் இந்தியா' வரைக்கும் போயிருக்கேன். என் பல்க் உடம்ப பார்த்துட்டு சினிமாக்காரங்க தேடி வந்தாங்க.

Mr Tamilnadu Krishnan
Mr Tamilnadu Krishnan

எனக்கும் சினிமா ஆசை வர, அந்தத் துறைக்குப் போனேன். இதுவரை 200 படங்களுக்கு மேல நடிச்சிருக்கேன். இப்போ... அடையாறு இந்திரா நகர் வாட்டர் டேங்க் ரோட்ல சாயங்காலத்துல தள்ளுவண்டியில இடியாப்பம் பீஃப் கறி வித்து குடும்பத்தை நடத்துறேன். சினிமாவுல ஃபுல் டைமா இருந்த நான், அதை பார்ட் டைமா மாத்திக்கிட்டு அஞ்சு வருஷமாச்சு. எல்லாம் பொழப்பப் பார்க்கத்தான்" என்றவர், தன் பீஃப் கடை பற்றி பகிர்ந்தார்.

''பாடி பில்டிங் துறையில இருக்கிறதால, எனக்கு பீஃப் சிறப்பு பத்தி நல்லா தெரியும். நான் சின்ன வயசுலயிருந்து சாப்பிட்டு வர்ற மாமிசம் இது. ஆனா, இப்போ மாட்டுக் கறியை வெச்சு இங்க நிறைய பேர் அரசியல் பண்ணுறாங்க. மாட்டு இறைச்சி மாதிரி புரதம் மற்றும் சத்துகள் நிறைந்த மாமிசம் வேற இல்லைன்னு நான் சொல்லுவேன். சொல்லப்போனா, சிலருக்கு டாக்டருங்களே பீஃபை பரிந்துரைப்பாங்க. இதைப் பத்தி பேச இன்னும் நிறைய இருக்கு, ஆனா பேசினா பெரிய விவாதமே ஆயிடும்.

Food
Food

என் தள்ளுவண்டிக் கடையில பீஃப் மட்டும்தான் இருக்கும், சிக்கன், மட்டன்னு வேற எதுவும் இருக்காது. பீஃப் தவா கறி - 60, மாட்டு வால் சூப் - 20, இடியாப்பம் - 20... இது மூணும்தான் நம்ம கடையில ஸ்பெஷல். அடையாறுல வேற எங்கேயும் பீஃப் கிடைக்காது என்பதால, மக்கள் என் கடையைத் தேடி வாடிக்கையா வர்றாங்க.

சமையல்ல எனக்கு இயல்பிலேயே ஆர்வம் என்பதால, கடை வேலைகளைச் சுலபமா பார்க்க முடியுது. காலையில கறிக்கடைக்குப் போய், பார்த்து நல்ல கறியா வாங்கிட்டு வந்து, சுத்தம் பண்ணுவேன். சாயங்காலம் 4 மணிக்கு மேல வண்டியில கடை போடுவேன். அங்கேயே கறியை சமைப்பேன். 5 மணிக்கு மேல பொறுமையா வியாபாரம் ஆரம்பிக்கும். நைட்டு 10, பத்தரை வரை ஆகும் வீடு திரும்ப.

Krishnan
Krishnan

ஒரு நாளைக்கு 600, 700 ரூபாய் கிடைக்கும். அதை வெச்சுத்தான் அடுத்த நாள் பொழுதை ஓட்டிக்கிட்டிருக்கேன். அப்படியே பார்ட் டைமா சினிமாவுல வாய்ப்பு கிடைச்சா நடிக்கிறேன். அதே மாதிரி பவுன்சர் வேலைக்கும் அப்பப்போ போயிட்டிருக்கேன். நிலையான வருமானம்னா, அது இந்தத் தள்ளுவண்டிக் கடைதான்'' என்றவர், மாட்டுக் கறியை சுத்தம் செய்தபடியே தன் சினிமா அனுபவங்களைத் தொடர்ந்தார்.

"20 வருஷமா சினிமாவுல இருக்கேன். ரஜினி, கமல், அஜித், விஜய் தொடங்கி, பாலிவுட்ல ஷாருக்கான், சல்மான்கான் வரை எல்லோர்கூடவும் நடிச்சிருக்கேன். `தெறி', 'வேதாளம்', 'டார்லிங்', 'என்னை அறிந்தால்', கடைசியா 'ஸ்கெட்ச்'... இவையெல்லாம் சமீபத்துல நடிச்ச படங்கள்.

Krishnan with Ajith
Krishnan with Ajith
சீனாவில் கொரோனா... இத்தாலிக்குப் பறக்கும்  கமல்... `இந்தியன் - 2' அப்டேட்ஸ்!

சினிமாவுல எங்களை மாதிரி ஸ்டன்ட் ஆர்ட்டிஸ்ட், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்க்கு எல்லாம் ரொம்பக் குறைவான சம்பளம்தான் கொடுப்பாங்க. ஒரு சண்டைக் காட்சிக்கு 40 அடியாள்கள் தேவைனு வெச்சுப்போம். அந்தக் காட்சியில நடிக்கிற 40 பேருக்குமே ஒரே சம்பளம் கிடையாது; யாரு லீடு ரோல் பண்றாங்களோ அவங்களுக்குத்தான் சம்பளம் அதிகம். மத்தவங்களுக்கு எல்லாம் கம்மிதான். ஹீரோ, ஹீரோயினுக்கு மட்டுமல்ல, சின்ன ரோலுக்குக்கூட சினிமாதுறையில பின்புலம் இருந்தாதான் வாய்ப்பு கிடைக்கும். வெறும் திறமை மட்டும் போதாது.

ஒரு நாளைக்கு ஷூட்டுக்கு நடிச்சா அதிகபட்சம் 2,000 கிடைக்கும். ஆனா, மாசத்துல பத்து நாள்கூட வேலை இருக்காது. நிரந்தர வருமானம்னு இங்க எதுவும் இருக்காது. அப்படியே போய் நடிச்சுக் கையில வாங்குற காசும், எங்களுக்குப் பத்தாது. ஏன்னா, சினிமாக்காரங்களுக்கு எங்களோட உடல்வாகுதான் தேவை. அதை நல்லா வெச்சிருந்தா மட்டும்தான் இங்க பொழைக்க முடியும். அதுக்கு எங்களுக்கு ஒரு நாளைக்கு குறைஞ்சது 300, 500-னு செலவாகும். கிடைக்கிற ரெண்டாயிரத்துல மிச்சம் என்ன இருக்கும் சொல்லுங்க?

Krishnan
Krishnan

இருக்கிற பிரச்னையில பெரிய பிரச்னை என்னனு பார்த்தீங்கன்னா, சினிமால நடிக்கணும்ங்கிற ஆர்வத்துல உள்ள நுழையுற புது வரவுகள்தான். பல வருஷம் அனுபவம் வாய்ந்த நாங்க ஒரு ஷூட்டுக்கு 5,000 கேட்டா, புதுசா வர்றவங்க '1,000, 500 கொடுத்தாகூட போதும், இல்ல சும்மாவேகூட நடிக்கிறோம்'னு சொல்லி நடிக்கிறாங்க. அவங்களால எங்கள மாதிரி ஆளுங்க ரொம்ப பாதிக்கப்படுறோம். சொல்லப்போனா, காசுக்கு நடிக்கிற காலம்போய் காசு கொடுத்து நடிக்கிற காலமாயிடுச்சு.

இவ்ளோ பிரச்னைகளுக்கு மத்தியிலும் நான் இந்தத் துறையில நீடிக்க பல போராட்டங்ளை சந்திச்சிருக்கேன். ஆனா, ஒரு கட்டத்துக்கு மேல என்னாலேயே முடியாம மனசை விட்டுட்டேன். பட வாய்ப்பு எதுவும் வர்றதில்ல. என் மனைவி, புள்ளைங்களை, அவங்க எதிர்காலத்தை நினைச்சுதான், இனியும் சினிமாவை நம்பமுடியாதுனு விலகிவந்து, தள்ளுவண்டிக் கடை போட்டு பிழைச்சுகிட்டிருக்கேன்.

Krishnan Family
Krishnan Family
`நெயில் பாலிஷ் விலையோ ரூ.388; பறிபோனதோ ரூ.92,446!’ -சினிமா பாணியில் இளம்பெண்ணுக்கு வந்த அதிர்ச்சி

கோடிக் கணக்குல பணம் செலவழிச்சுப் படம் எடுக்கிற தயாரிப்பாளர்களுக்கு ஒரு வேண்டுகோள். ஹீரோ, ஹீரோயினுக்கு கோடிகள்ல சம்பளம் கொடுக்கிறீங்க. இந்த சினிமாவையே பொழப்பா நினைச்சு வாழ்ந்துகிட்டு வர்ற எங்களை மாதிரி ஆள்களுக்கு சம்பளத்தைக் கொஞ்சம் உயர்த்திக் கொடுங்க. எங்களுக்கும் குடும்பம், புள்ள, குட்டினு இருக்கு!" - விரக்தியுடன் பேசி முடித்தார் கிருஷ்ணன்.

அடுத்த கட்டுரைக்கு