பத்தாண்டுகளுக்கு முன்னர் நண்பர் சுதீர் செந்திலுடன் குஜராத் மாநிலத்தில் ஏழு நாள்கள் காரில் சுற்றித் திரிந்தேன். குஜராத் ஒளிர்கிறது என்று கட்டமைக்கப்பட்ட புனைவிற்கு மாறாக குஜராத் கிராமங்கள் பெரும்பாலும் வளர்ச்சியற்றுத் தேங்கியிருந்ததைக் கண்டோம். அந்தப் பயணத்தில் அரசியல் கட்சிக் கொடிகள் பறந்திடும் கொடி மரங்களை எங்கும் பார்க்கவில்லை. அரசியல் கட்சிகளின் போஸ்டர்கள் ஒட்டப்பட்ட சுவர்களோ, சுவரெழுத்துப் பிரசாரங்களோ எந்த இடத்திலும் இல்லை.
தமிழ்நாட்டின் பரப்பரப்பான அரசியல் சூழலில் குறிப்பாக மதுரைக்காரனான எனக்கு போஸ்டர் எதுவுமற்று மொன்னையாகக் காட்சியளித்த குஜராத் தெருக்களும் சுவர்களும் வெறுமையாகத் தோன்றின. குஜராத்தியர்களின் அரசியலற்றதன்மையின் வெளிப்பாடுதான் சுவரொட்டிகள் ஒட்டப்படாமல் விரைத்து நின்ற சுவர்கள்.
சரி, போகட்டும். வரலாற்றுத் தொன்மையுடன் இன்றளவும் தனித்திருக்கிற மதுரை நகரின் இன்னொரு முகம் போஸ்டர்களில் வெளிப்படுகிறது என்று சொன்னால் உங்களுக்கு ஆச்சரியமாகத் தோன்றலாம். அதுதான் உண்மை. அன்றாடம் நிகழும் சம்பவங்களையும் நடைபெறவிருக்கிற நிகழ்வுகளையும் போஸ்டர்களின்மூலம் அறிவிக்கிற போஸ்டர் பண்பாடு, ஒருவகையில் மதுரையின் அடையாளமாகும்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
வால் போஸ்டர்கள் எனப்படும் சுவரொட்டிகள் மூலம் மதுரை நகரத் தெருக்களின் முகங்கள் தினமும் மாறிக்கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நாளும் பொழுது விடிந்திடும்போது வால் போஸ்டர்களால் நிரம்பிய சுவர்கள் ஏதோவொரு புதிய தகவலுடன் காத்திருக்கின்றன. யாரோ ஒருவர் அல்லது அமைப்பினருக்கு சுவரொட்டிகள் மூலம் சொல்வதற்கு ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன. கறுப்பு வெள்ளை அல்லது வண்ணக் காகிதங்களில் அச்சடிக்கப்பட்டுச் சுவர்களில் ஒட்டப்படுகிற போஸ்டர்களின் பின்னர் காத்திரமான அரசியல் பொதிந்துள்ளது. இப்பொழுது பிளக்ஸ் போர்டுகள் மனித உருவங்களுடன் தகவல்களைப் பரப்புகின்றன.
`சுவரில் போஸ்டர் ஒட்டவோ விளம்பரம் செய்யவோ கூடாது. மீறினால் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்படும்' எனச் சுவரில் பெயின்டினால் எழுதப்பட்ட எச்சரிக்கை வாசகத்தின் அருகிலேயே போஸ்டர்களை வளைத்து ஒட்டுவது இயல்பாக நடைபெறுகிறது.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSமதுரைக்காரர்கள் இந்த மாதிரி எச்சரிக்கையை எல்லாம் பொருட்படுத்துவது இல்லை. சுவரில் போஸ்டர் ஒட்டியதற்காக வழக்குப் பதிவுசெய்து, யாரும் தண்டனை பெற்றதாகத் தெரியவில்லை. தெருவில் போஸ்டர் ஒட்டுவது எனது பிறப்புரிமை என்று குடிமகன்கள் கருதுகின்றனரா? தெரியவில்லை. அரசாங்கம் சுவரில் போஸ்டர் ஒட்டத் தடை விதித்துச் சட்டம் இயற்றியிருந்தாலும் மதுரை நகரமெங்கும் வண்ணமயமான போஸ்டர்கள் ஜொலிக்கின்றன. நகர நம்பியர் திரிதரு மருங்கு நிரம்பிய வீதியில் முக்கியமான இடத்தில் பலருடைய கவனத்தையும் ஈர்த்திடுவதற்காகக் காலங்காலமாக ஒட்டப்பட்ட போஸ்டர்களினால் சுவர்கள் வீங்கிக் காட்சியளிக்கின்றன. மதுரைக்காரர்கள் விழித்தெழுந்தவுடன் போஸ்டர்களுடன் தங்களுடைய அன்றாடப் பணிகளைத் தொடங்குகின்றனர் என்று சொல்வதற்கு இடமுண்டு. வீட்டை விட்டு வெளியே வந்தால் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் போஸ்டர்களின் உலகில் மிதக்க வேண்டியதுதான்.
எல்லாமே தகவல்கள் என்ற நிலையில் போஸ்டர்களை எளிதாகக் கடந்துபோய்விட முடியாது. பொதுவாக போஸ்டர்களைத் தயாரித்து, அச்சடித்து, அவற்றை நகரத்துச் சுவர்களில் ஒட்டுவதற்கு ஏற்பாடு செய்கிறவர்களின் நோக்கம் ஏதோவொரு விஷயத்தை நகர மாந்தர்களின் கவனத்திற்குக்கொண்டு செல்வதுதான். அது, அரசியல் கூட்டம் தொடங்கி, மரண அறிவிப்பாகக்கூட இருக்கலாம். மதுரையைப் பொறுத்தவரையில் திரைப்படம், அரசியல், குடும்ப நிகழ்ச்சிகள், தனிப்பட்டவர்களின் சுய தம்பட்டம் எனப் போஸ்டர்களின் பயன்பாடு விரிந்துள்ளது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தொழில்மயமாகிக் கொண்டிருந்த சிவகாசி நகரம் உருவாக்கிய அச்சுத் தொழில் தமிழ்ப் பண்பாட்டில் முக்கிய இடம் வகிக்கிறது. அச்சுச் தொழிலுக்குத் தீனி போடும்வகையில் படம் அல்லது ஓவியத்தை வரைந்த ஓவியர்கள், தமிழர்களின் வெகுஜனப் பண்பாட்டில் முக்கிய இடம் வகிக்கின்றனர். கொண்டைய ராஜூ போன்ற ஓவியர்கள் காலண்டருக்காக வரைந்த கடவுள்களின் படங்கள் முக்கியமானவை. அதுவரை கருவறையில் கற்பூரத்தின் மங்கலான ஒளியில் இருளுக்குள் பார்த்த சாமி சிலைகளின் முகங்கள் யாருக்கும் நினைவில் பதிவாகிட வாய்ப்பு இல்லை. ஓவியர்களின் கைவண்ணத்தில் உருவான கடவுளர்களின் படங்கள் ஆப்செட் இயந்திரத்தில் ஆறு வண்ணங்களில் அச்சடிக்கப்பட்ட பின்னர்தான் தமிழர்களுக்குக் கடவுளர்களின் முகங்களும் தோற்றங்களும் பளிச்சென அறிமுகமாயின.
கடவுள்களைச் சிருஷ்டித்த ஓவியர்களும் அச்சகத் தொழில் வல்லுநர்களும் மரத்தில் மறைந்த மாமத யானைபோல இன்றளவும் மறைந்திருக்கின்றனர். கோயில் திருவிழா பற்றிய போஸ்டர்களில் இடம்பெறும் மாரியம்மன், பத்ரகாளியம்மன், கருப்புசாமி, முருகன், பிள்ளையார் போன்ற கடவுளர்களின் படங்கள் மக்களின் மனதில் அழுத்தமாகப் பதிந்துள்ளன. ஓலைச்சுவடியின் பயன்பாடு மறைந்த காலகட்டத்தில் அச்சில் தயாரான புத்தகங்கள் ஒருபுறம் என்றால், குறைந்த நேரத்தில் தகவல்களைப் பரப்பிட போஸ்டர்கள் இன்னொருபுறம் பயன்பட்டன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அச்சுத் தொழில் மதுரை நகருக்கு விரிவடைந்தபோது, பிரின்டிங் பிரஸ்கள், ஆப்செட் அச்சுக் கூடங்கள், வால் போஸ்டர் அச்சடிக்கிற அச்சகங்கள் நகரில் எங்கும் பரவின. எனக்குத் தெரிந்த அளவில் அறுபதுகள் காலகட்டம் முதலாகச் சுவர்களில் திரைப்படம், அரசியல், கோவில் திருவிழா சார்ந்த போஸ்டர்கள் ஒட்டப்படுவதைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். கறுப்பு வெள்ளை, வண்ணங்கள் என அச்சடிக்கப்பட்ட போஸ்டர்கள் ஏதொவொரு குழு அல்லது அமைப்பு அல்லது அரசியல் கட்சியினர் சார்ந்து கருத்துகளை உடனுக்குடன் மக்களிடம் பரப்புகின்றன. போஸ்டர்கள் நகரத்தின் அழகைக் கெடுக்கின்றன என்ற கருத்து மேல்தட்டினரிடம் இருந்தாலும் விளிம்புநிலையினர் சுவராஸ்யமாகப் போஸ்டர்களைச் சுவர்களில் ஒட்டுகின்றனர்; பார்த்து, வாசித்து மகிழ்கின்றனர்.
மதுரைக்காரர்களில் பெரும்பாலானோருக்கு அரசியலில் ஈடுபாடு உண்டு. எங்கோ நடக்கிற செயல் என்று ஒதுங்கிடாமல், கண் முன்னர் நடக்கிற அநியாயத்தைத் தட்டிக்கேட்கிற மனோபாவம் மதுரைக்காரர்களின் பொதுப்புத்தியில் உறைந்துள்ளது. கேலியும் கிண்டலுமான பேச்சு ஒருபுறம் என்றாலும் தவற்றைச் சுட்டிக்காட்டிக் கண்டிக்கிற மனநிலை இன்னொருபுறம் இருக்கிறது. இதனால்தான் இரவும் பகலும் விழித்திருக்கிற மதுரையில் குற்றங்கள் குறைவு.

மதுரையில் அரசியல் அற்ற நிலையில் இருக்கிறவர்களும் சூழலின் காரணமாக ஏதோவொரு அரசியல் கட்சியின் அனுதாபியாகி விடுவர். தொண்ணூறுகள் வரையிலும் நகரின் முக்கியமான தெருக்களில் கட்சிக்காரர்களால் நடத்தப்பட்ட வாசகசாலைகள் அரசியலை மக்களிடம் விதைத்தன. அரசியல் கட்சிகள் நடத்திய பொதுக்கூட்டங்கள் நகரில் அரசியல் பேச்சுக்களை உருவாக்கின. காங்கிரஸ், தி.மு.க, அ.இ.அ.தி.மு.க, கம்யூனிஸ்ட் போன்ற கட்சியினர் நடத்திய அரசியல் கருத்தியல் பரப்புரைகளைப் பலரும் விரும்பிக் கேட்டனர்.
பெரும்பாலான அரசியல் கட்சிகள் தங்களுடைய முதல் அரசியல் மாநாட்டை மதுரையில் நடத்துவதற்குக் காரணம் மதுரையில் அரசியல் விழிப்புணர்வு அதிகம் என்ற நம்பிக்கைதான். மதுரை நகரில் மேடைப் பேச்சு ஒருபுறம் என்றால், கட்சிக் கூட்டத்திற்கு மக்களை அழைப்பதற்கு போஸ்டர்கள் பெரிதும் பயன்பட்டன. எழுபதுகளில் தீப்பொறி ஆறுமுகம், வெற்றிகொண்டான், நெல்லை ஜெபமணி, ஐ.மாயாண்டி பாரதி, கே.பி.ஜானகி அம்மாள் போன்ற அரசியல் கட்சிப் பேச்சாளர்களின் கூட்டங்கள் நடைபெறுவதை உடனுக்குடன் போஸ்டர்கள் மூலம் அறிந்துகொண்டு அவர்களின் பேச்சுக்களைக் கேட்பதற்குப் பலரும் கிளம்பினர்.
கட்சியின் முன்னணித் தலைவர்கள் பங்கேற்கிற கூட்டம் எனில் பிரமாண்டமான போஸ்டர்கள் நகர் முழுக்க ஒட்டப்பட்டன. நகரின் முக்கியமான பாலங்கள், சாலைச் சந்திப்புச் சுவர்கள் போன்ற இடங்களில் கட்சித் தலைவர்களின் பெயர்கள் அடங்கிய சுவர் எழுத்துகள் பெரிய அளவில் எழுதப்பட்டன. அரசியல் கட்சிகளில் இரண்டாமிடம் வகிக்கிற தலைவர்கள், அடுத்த இடம் நோக்கி நகர்வதற்குத் தங்கள் படம் இடம்பெற்ற போஸ்டர்களைச் சொந்தச் செலவில் அச்சடித்து நகரமெங்கும் ஒட்டி, அரசியல் செய்தனர். கட்சியின் கிளைப் பொறுப்பில் இருக்கிறவரின் குடும்ப விழாவான காதணி விழாவிற்கு வருகிற கட்சியின் மாவட்டம், வட்டப் பொறுப்புகளில் இருக்கிறவர்களின் படங்களுடன் அச்சடிக்கப்பட்ட பிரமாண்டமான போஸ்டர்கள் தெருவை அலங்கரிக்கும். தி.மு.க-வின் அரசியல் தலைவரான அழகிரி ஒன்றிய அமைச்சராகப் பதவி வகித்தபோது, அவருடைய பிறந்தநாள் விழா, அவர் பங்கேற்கும் விழாக்கள் என அச்சடிக்கப்பட்ட போஸ்டர்கள் அளவற்றவை. அவை மதுரை மக்களைப் பிரமிப்பில் ஆழ்த்தின.

மதுரை நகரில் எங்கே திரும்பினாலும் கிளர்ச்சியளிக்கிற திரைப்பட போஸ்டர்கள் சுவர்களில் மின்னுகின்றன. திரைப்பட போஸ்டர்கள் அன்றும் இன்றும் எந்தத் தியேட்டரில் எந்தப்படம் திரையிடப்படுகிறது என்ற தகவலை அறிவிப்பதன்மூலம் பார்வையாளர்களுக்கு அழைப்பு விடுக்கின்றன. புதிதாக வெளியாகவிருக்கிற திரைப்படத்தின் வண்ணமயமான போஸ்டர் வெள்ளிக்கிழமை அன்று சுவரில் காட்சியளித்தவுடன் அதன் முன்னர் கூடிநின்று தங்களுடைய அபிமான நடிகரின் படத்தைக் கண் இமைக்காமல் பார்க்கிறவர்கள் இப்பவும் இருக்கின்றனர். குறிப்பிட்ட நடிகரின் திரைப்படம் வெளியாகிற நாளில் நகரில் பரவலாக ஒட்டப்படும் படப் போஸ்டர்கள் ரசிகர்களுக்குக் குதூகலத்தை அளிக்கின்றன.
சினிமா என்ற கனவுலகில் நுழைந்திட கண் சிமிட்டி அழைத்திடும் மோகினியாகத் திரைப்பட போஸ்டர்கள் விளங்குகின்றன. காட்சி ஊடகமும் சமூகவலைதளங்களும் பிரபலமான இன்றைய சூழலிலும் சினிமா போஸ்டர்கள் பலருடைய கவனத்தையும் கவர்கின்றன.
புதிதாகத் திரையிடப்படும் திரைப்படத்திற்குத் திரையரங்கில் கூடுகிற ரசிகர்கள் கூட்டத்தைப் பொறுத்து, போஸ்டர்கள் வாரந்தோறும் சுவர்களில் ஒட்டப்பட்டன. படம் நிச்சயம் நூறு நாள்கள் என்று திரைப்பட விநியோகஸ்தருக்குத் தோன்றிவிட்டால் வெற்றிகரமான இரண்டாவது வாரம் என்ற குறிப்புடன் நகர் முழுக்க போஸ்டர்கள் ஒட்டப்படும்; தொடர்ந்து வாரந்தோறும் மூன்றாவது வாரம், நான்காவது வாரம் என போஸ்டர் ஒட்டப்படும். சிறிய அளவிலான ஒற்றைப் போஸ்டர் முதலாக ஆறு துண்டுகளை இணைத்துப் பசையைத் தடவி ஒட்டப்படுகிற பிரமாண்டமான போஸ்டர்கள் வரை வழக்கில் இருக்கின்றன.
ஒவ்வொரு வாரமும் மட்டுமன்றி 25, 50வது நாள்களில் சிறப்புப் போஸ்டர்கள் ஒட்டப்படும். படத்தின் நூறாவது நாள், வெள்ளி விழாக்களின்போது பிரமாண்டமான போஸ்டர்கள் காட்சியளிக்கும். நடிகர்களின் தலைகளுக்கும் காட்சிகளுக்கும் முக்கியத்துவம் தந்து அச்சடிக்கப்படுகிற போஸ்டர்கள் ரசிகர்களைக் கவர்ந்தன. திரைப்படத்தின் வெற்றியைத் தங்களுடைய சொந்த வாழ்க்கையின் வெற்றியாகக் கருதுகிற ரசிகர்களை ஊக்குவித்ததில் போஸ்டர்களின் பங்கு முக்கியமானது.

மதுரையின் புறநகர்ப் பகுதிகளில் செயல்பட்ட திரையரங்குளிலும் டூரிங் டாக்கீஸ் என அழைக்கப்பட்ட கூரைக் கொட்டகைகளிலும் பெரும்பாலும் பழைய திரைப்படங்கள்தான் திரையிடப்பட்டன. இத்தகைய ஒதுக்குப்புறமான தியேட்டர்களில் வெளியிடப்படும் திரைப்படங்கள் குறித்த போஸ்டர்கள் சாதாரணமானவையாக இருக்கும். மட்டமான சாணித்தாளில் சின்னதாக 3 X 2 அளவில் அச்சடிக்கப்பட்ட போஸ்டர்களில் தியேட்டரின் பெயர், படத்தின் பெயர், நடிக நடிகையரின் பெயர்கள் மட்டும் இருக்கும். போஸ்டரில் இடம்பெறும் ‘பாடல்கள் அத்தனையும் தேன் சொட்டுகள், குளுகுளு வண்ணக் கலரில், உள்ளத்தை உருக்கும் உணர்ச்சிக் காவியம், குடும்பச் சித்திரம்’ போன்ற வாசகங்களைத் துள்ளலான மொழியில் அச்சுக்கோப்பது நிச்சயம் அச்சகத்தில் பணியாற்றும் கம்பாசிட்டராகத்தான் இருக்கும்.
விரலுக்குத்தக்க வீக்கம்போல தியேட்டருக்குத்தக்க வால் போஸ்டர்கள் பார்வையாளர்களுக்கு அழைப்பு விடுத்தன. தினமும் வீட்டை விட்டு வெளியேறி ஏதோ ஒரு வேலையாக வெளியில் பயணிக்கிறவர்களின் விழிகள், திரைப்படப் போஸ்டர்களின்மீது மேய்வது தவிர்க்க இயலாதது. அறுபதுகளில் சுவரில் ஒட்டப்பட்டிருக்கும் சினிமா போஸ்டர்களை வெறித்துப் பார்க்கின்ற கைவண்டி இழுப்பவர்கள், ரிக்சா ஓட்டுநர்கள், சுமை தூக்குகிற தொழிலாளர்கள் போன்ற விளிம்புநிலையினருக்குத் தமிழ் எழுத்துக்களை அறிமுகம் செய்த பணியினைப் போஸ்டர்கள் செய்தன. சங்கம் வைத்துத் தமிழை வளர்த்த மதுரை நகரில் சினிமா போஸ்டர்கள்மூலம், தமிழைப் பாமரர்களிடம் கொண்டுசென்ற திரைப்படத்துறையினர் என்று சொல்லத் தோன்றுகிறது. சரி, இருக்கட்டும்.
அன்றைய காலகட்டத்தில் எம்.ஜி.ஆர்., சிவாஜி, பின்னர் ரஜினி கமல், விஜய், அஜித் என விரிந்த ரசிகர்களின் மோதல்கள் சினிமா போஸ்டர்களிலும் தொடர்ந்தன. ரசிகர் மன்றத்தினர் தங்களுடைய எதிரி நடிகர் நடித்த திரைப்பட போஸ்டர்களைக் கிழித்தல், சாணியைப் பூசுதல் போன்றவற்றைச் செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் அடிதடி, தகராறு எனக் கொதித்தெழுந்தனர். ஏதோ வர்க்க விரோதிகள் போல இரு தரப்பு ரசிகர்களும் மோதிக்கொள்ளவும் செய்தனர்.
எண்பதுகளில் பிரபலமான மலையாள ஆபாசப் படங்கள் இணைக்கப்பட்ட திரைப்படங்களின் கவர்ச்சியான போஸ்டர்கள், வாலிபர்களுக்கு வலைவீசி தியேட்டருக்குள் இழுக்க முயன்றன. கவர்ச்சியான போஸ்டர்களை ஓட்டிய தியேட்டர்காரர், பிலிம் விநியோகஸ்தர்மீது சிலவேளைகளில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
மதுரை நகரில் அரச மரம் பிள்ளையார் கோயில் திருவிழா, மேலமாசி வீதி நேரு ஆலால சுந்தர விநாயகர் கோயில் திருவிழா போன்ற கோயில் விழாக்களில் நடைபெற்ற பட்டிமன்றம், பாட்டுக் கச்சேரிகளைக் கேட்பதற்குப் பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரள்வதற்கு முதன்மைக் காரணம் போஸ்டர்கள்தான். லாவணிக் கச்சேரி, வள்ளி திருமணம் நாடகம், கரகாட்டம் போன்ற மரபுக் கலைகளுடன் பல்வேறு இசைக்குழுக்களின் செயல்பாடுகளை மக்களுக்கு அறிமுகம் செய்திட போஸ்டர்கள் பெரிதும் உதவுகின்றன.
எழுபதுகளில் கல்லூரி மாணவர் சங்கத் தேர்தல்கள் பரபரப்புடன் நடைபெற்றன. 1976-ம் ஆண்டு நாட்டில் அவசரநிலை அமலில் இருந்தபோது பெரும்பாலான கல்லூரிகளில் மாணவர் பேரவைத் தலைவர் தேர்தல் நடத்தப்படவில்லை. நான் பி.எஸ்ஸி படித்த ச.வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் மட்டும் தேர்தல் நடந்தது. அதற்குக் காரணம் எங்கள் கல்லூரி முதல்வர் சக்திவேல் சாரின் ஜனநாயக மனப்பான்மைதான். அவர் ஒருவகையில் எனக்கு ஆசான். கல்லூரி மாணவர் விடுதியில் தங்கியிருந்த எனது அறைத் தோழனான ஈஸ்வரன் பேரவைத் தலைவர் பதவிக்குத் தேர்தலில் போட்டியிட்டான். நாங்கள் ஒரு குழுவாக அவனுடைய வெற்றிக்குப் பாடுபட்டோம். வண்ண மையினால் எழுதப்பட்ட போஸ்டர்கள்மூலம் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் ஈஸ்வரனுக்கு வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து அவற்றை மதுரைப் பேருந்து நிலையத்திலும் முக்கியமான இடங்களிலும் ஒட்டினோம். எமர்ஜென்ஸிக்கு எதிரான செயல்பாடாக போஸ்டர் ஒட்டியதை நாங்கள் கருதினோம். அப்புறம் ஈஸ்வரன்தான் யூனியன் சேர்மன்.
1981-ல் மக்கள் கலை இலக்கியக் கழகம் என்ற அமைப்பில் சேர்ந்து இடதுசாரி அரசியல் பின்புலத்தில் செயல்பட்டபோது, மே தினத்தை முன்னிட்டு நண்பர் மணா, மக்கள் நேசன் உள்ளிட்ட தோழர்கள் கவிதைகள் எழுதினோம். அவற்றைப் பெரிய தாளில் கையினால் வண்ணத்தில் எழுதி, மதுரைத் தெருக்களில் போஸ்டராக ஒட்டினோம். எனக்கு ரஷ்யக் கவிஞர் மாயாகோவ்ஸ்கியின் ரஷ்யப் புரட்சிக்கு ஆதரவான சுவரொட்டிக் கவிதைகள் நினைவுக்கு வந்தன.
குடும்ப விழாக்களான காதணி விழா, பூப்புனித நீராட்டு விழா, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் பிரமாண்டமான போஸ்டர்கள் தெரு முழுக்க ஒட்டப்படுகின்றன. மாமன் உறவினர் நிகழ்ச்சியை வாழ்த்திட போஸ்டர்களையும் பிளக்ஸ் போர்டுகளையும் பயன்படுத்துகின்றனர். அதேவேளையில் இல்ல விழாவில் கலந்துகொள்ள வருகை தருகிறவர்களை வரவேற்று நண்பர்களால் பிரமாண்டமான பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்படுகின்றன. சில போர்டுகளில் வரவேற்கிற முப்பது பேர்களின் சிரிக்கிற அல்லது ஸ்டைலான தலைகள் இடம் பெற்றிருக்கின்றன. எல்லோருக்கும் தங்களுடைய முகத்தை வண்ணத்தில் தெருவோர போர்டில் காண்பதற்குப் பேராசை. வேறு என்ன?

சாதிப் பெருமையினை முன்வைத்துக் குடும்ப விழாக்கள் அல்லது சாதியத் தலைவரின் பிறந்தநாளில் பிரமாண்டமான பிளக்ஸ் போர்டுகள் தெருவோரத்தில் வைக்கப்படுகின்றன. வேட்டி கட்டிய இளைஞர்கள் வரிசையாகத் தெனாவட்டுடன் நிற்கிற போர்டுகளில் சாதிப் பெருமையைப் பேசும் வாசகங்கள் இடம் பெறுகின்றன. இந்திய விடுதலைப் போராளிகளான காமராஜர், வ.உ.சிதம்பரம் போன்றவர்களைச் சாதியச் சிமிழில் அடக்கி சாதிய சங்கத்தினர் போஸ்டர்கள் ஒட்டுவதும் நடைபெறுகின்றது.
சமூகத்தில், பொருளாதாரத்தில் முன்பைவிட வளர்ந்தவுடன், பணம் சம்பாதித்தவுடன் சிலர் ஆண்டுதோறும் பிறந்தநாளில் பெரிய பிளக்ஸ் போர்டில் சிரித்துக்கொண்டிருக்கிற படங்களைச் சில இடங்களில் வைக்கிற வைபவங்களும் நடைபெறுகின்றன. மல்டி கலர் ஆப்செட் பிரஸ்ஸில் அச்சடிக்கப்பட்ட போஸ்டர்களில் தங்களுடைய பிறந்தநாள் வாழ்த்துகளுக்கு மகிழ்கிற சுயமோகிகளும் இருக்கின்றனர்.
அண்மைக்காலமாகத் தினமும் காலையில் எழுந்து கடைவீதிக்கு வந்தவுடன் காண்கிற கறுப்பு வண்ண போஸ்டர் யாரோ ஒருவர் அகாலமான துக்க நிகழ்ச்சியை அறிவிக்கிறது. ’ஐயகோ! இமயம் சரிந்தது’ என்ற வாசகத்துடன் இறந்தவரின் போட்டோவுடன் அச்சடிக்கப்பட்ட போஸ்டர்கள் ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தில் ஒட்டப்படுகின்றன. சில போஸ்டர்கள் இறந்தவரின் பத்தாவது ஆண்டு நினைவுடன், படத்துடன் ஒட்டப்படுகின்றன. இளம் வயதில் விபத்தில் இறந்த பதின்பருவத்தினரின் ஆள் உயரப் படத்துடன் பிரமாண்டமான பிளக்ஸ் போர்டுகளை மூன்று இடங்களில் வைத்திருப்பதைப் பார்த்தவுடன் வருத்தமாக இருந்தது. தாங்க முடியாத துக்கத்தில் அழகிய தோற்றமுடைய வாலிபன் படத்துடன் இரங்கல் செய்தியை பிளக்ஸில் உருவாக்கிட மனத்துணிவு வேண்டும்.

கோயில் திருவிழாக்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள், தள்ளுபடியில் பொருள் விற்பனை, வீடு, பிளாட் விற்பனைக்கு, அடகு நகையை மீட்டு விற்பனை செய்திட, காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு, அடையாளம் காணாத பிணத்தின் போட்டோவுடன் காவல்துறை அறிவிப்பு… போஸ்டர்கள் சமூக ஒருங்கிணைப்பில் காத்திரமான பணியாற்றுகின்றன.
மதுரை நகரத் தெருக்களில் ஒட்டப்படுகிற வால் போஸ்டர் எனப்படும் சுவரொட்டிகள் வெறுமனே காகிதங்கள் மட்டுமல்ல; அவை நடப்புச் சமூகம் குறித்த பதிவுகள். போஸ்டர்கள், ஒருநிலையில் மதுரைக்காரர்களின் அன்றாட வாழ்க்கையுடன் இயைந்திருக்கின்றன.