Published:Updated:

சோஷியல் மீடியாவில் `பிரபலம்' ஆவது எப்படி? - ஒரு ஈஸீ கைடு

அனைவருமே தங்கள் துறை சார்ந்த இன்ஃப்ளூயன்ஸ் இருக்க வேண்டும் என்று விரும்புவர். ஆனால், பிரபலம் ஆவது சுலபமில்லை. ஆனால், சில வழிகளைப் பின்பற்றினால் அது சாத்தியமாகலாம்.

ஒவ்வோர் ஆண்டும் தமிழ் ட்விட்டர்கள் சார்பாக மெகா ட்வீட்டப் ஒன்று நடக்கும். தமிழகத்தின் முக்கியமான நகரங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து மே மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை அந்தக் கூட்டம் நடக்கும். அங்கு வரும் புதிய ட்விட்டர்கள், அதிக ஃபாலோயர்களைக் கொண்ட ட்விட்டர்களிடம் ஒரு கேள்வி கேட்பார்கள். ``அது ஏன் கம்மியான ஃபாலோயர்ஸ் இருக்கிற ஆட்களுக்கு நீங்க ரிப்ளை பண்ண மாட்றீங்க?" என்பதுதான் அந்தக் கேள்வி. ஒவ்வோர் ஆண்டும் இதே கேள்வி ஒரு புதிய ட்விட்டரால் நிச்சயம் கேட்கப்படும்.

சமூக வலைதளங்களில் இயங்கும் எல்லோருக்குமே அடிப்படை நோக்கம் ஒன்றுதான். நாம் நிறைய பேரால் கவனிக்கப்பட வேண்டும். ட்விட்டர் மொழியில் சொல்வதென்றால் ``பிரபலம்" ஆக வேண்டும்.

அது என்ன `பிரபலம்'?
ஆங்கிலத்தில் social media influencer என்பர்.

சென்ற ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு கணக்கின்படி உலகில் உள்ள 320 கோடி பேர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார்கள். இது உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 42 சதவிகிதம். ஆக, சரியாக திட்டமிட்டால் மார்க்கெட்டிங் விஷயங்களுக்கு சமூக வலைதளங்கள் சரியான இடமென சொல்லலாம். அதனால், சமூக வலைதளங்களில் இன்ஃப்ளூயன்ஸ் உள்ளவர்களுக்கு அதைப் பயன்படுத்தி கரியர் அமைத்துக் கொள்ளும் வாய்ப்புண்டு. எல்லா பிரபலங்களும் இதை வணிகரீதியாக மட்டுமே பார்ப்பதில்லை. பலருக்கு அவர்கள் சொல்வதைக் கேட்க, கவனிக்க இத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதே பெருமையான விஷயமாக இருக்கிறது. அதுவும் தங்கள் துறை சார்ந்த இன்ஃப்ளூயன்ஸ் இருக்க வேண்டும் என்று விரும்புவர். ஆனால், பிரபலம் ஆவது சுலபமில்லை. ஆனால், சில வழிகளைப் பின்பற்றினால் அது சாத்தியமாகலாம்.

Field of Interest

உங்க ஏரியா எது?

பெரும்பாலான சமூக வலைதள பிரபலங்களிடம் ஒரு பொதுவான விஷயத்தைப் பார்க்கலாம். ஏதேனும் ஒரு ஏரியா எடுத்து, அதில் மட்டுமே தொடர்ந்து இயங்குவார்கள். உதாரணத்துக்கு சினிமா விமர்சகர்கள், விளையாட்டு ஆர்வலர்கள், உணவு தொடர்பான பதிவுகளை எழுதுபவர், ஓவியர், பாடகர், அரசியல் விமர்சகர், மீம் கிரியேட்டர் என நிறைய சொல்லலாம். நீங்கள் பிரபலம் ஆக நினைத்தால் உங்களுக்கு எது நன்றாக வருமோ அந்த ஏரியாவை ரெட் மார்க்கரால் வட்டம் போட்டுக்கொள்ளுங்கள். அதில்தான் இனி நீங்கள் அதிக நேரம் செலவழிக்க வேண்டும். அதைப் பற்றிய உரையாடல்களில்தான் ஈடுபட வேண்டும்.

Social Media

சரியான சமூக வலைதளம்

ட்விட்டரில் ஹிட் அடிக்காத ஒருவர் ஃபேஸ்புக்கில் சூப்பர் ஸ்டார் ஆகலாம். ஃபேஸ்புக்கில் செல்ஃப் எடுக்காத ஒருவர் டிக்டாக்கில் செஞ்சுரி அடிக்கலாம். உங்கள் ஏரியா எதுவென முடிவு செய்ததும், அதற்கேற்ற சமூக வலைதளம் எது என்பதையும் முடிவு செய்துவிடுங்கள். உதாரணத்துக்கு, நன்றாகப் பாடத் தெரிந்த ஒருவருக்கு ஸ்மூல் சரியான இடமாக இருக்கலாம். `ஒன்லைனர் காமெடியில் நானொரு கிரேஸி மோகன்' என்பவருக்கு ட்விட்டர் தோதாக இருக்கலாம். `நன்றாக நடிப்பேன்' என்பவர் யூடியூப் சேனல் தொடங்கலாம், டிக்டாக் பக்கமும் தலைகாட்டலாம். ஓரிடத்தில் ஹிட் அடித்த பின், அதே பெயரில் மற்ற சமூக வலைதளங்களுக்குச் சென்றால் அங்கு தானாகவே நல்ல வரவேற்பு கிடைக்கும்.

ஹேஷ்டேக்

ஹேஷ்டேக்

ஹேஷ்டேக்குகள்தான் ட்விட்டரின் முக்கியமான பலம். உங்கள் ட்வீட்களைத் தொடர்புடைய ஹேஷ்டேக்குடன் பதிவு செய்தால் உங்களைப் பின்பற்றாதவர்கள்கூட உங்கள் ட்வீட்டைப் பார்க்கலாம். போலவே, உங்கள் படைப்புகளுக்கும் பொதுவான ஒரு ஹேஷ்டேக் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் பெயர் ரமேஷ்; நீங்கள் சினிமா விமர்சனம் செய்வதாக வைத்துக்கொள்வோம். அந்த ட்வீட்களுக்கு மட்டும் #RameshReviews என்ற ஹேஷ்டேகைச் சேர்க்கலாம். ட்விட்டர் என்றில்லை ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என மற்ற சமூக வலைதளங்களுக்கும் ஹேஷ்டேக் முக்கியம்தான்.

உண்மையாக இருங்கள்

உண்மையாக இருங்கள்

சமூக வலைதளங்களில் போலித்தன்மை எடுபடாது. எடுபட்டாலும் எப்படியும் ஒரு நாள் காட்டிக்கொடுத்துவிடும். அதனால் உங்களுக்கு என்ன தெரியுமோ அதை அப்படியே பிரதிபலியுங்கள். நெட்டிசன்கள் நல்ல மனது கொண்டவர்கள். தவறிருந்தாலும் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் எல்லாமே பொய், போலி எனத் தெரிந்தால் ட்ரோலில் ஒரு வழி செய்துவிடுவார்கள். அடுத்த வாய்ப்பே கிடைக்காது.

உரையாடுங்கள்

உரையாடுங்கள்

முடிந்தவரை பலருடன் உரையாடுங்கள். கமென்ட்களுக்குப் பதில் சொல்லுங்கள். பாராட்டுபவர்களுக்கு நன்றி சொல்லுங்கள். நீங்களும் திறமைகளைப் பாராட்டுங்கள். முடிந்தளவுக்கு இதை செய்தாக வேண்டியது அவசியம்.

நெட்வொர்க்

நெட்வொர்க்

நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதே போன்ற ஆட்களுடன் கைகோத்துக் கொள்ளுங்கள். அவர்களைப் பின் தொடருங்கள். உங்கள் ஆடியன்ஸ் யார் என்பதை அவர்கள் மூலம் தெரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கேற்ற நபர்களுடன் நெட்வொர்க்கை வளர்த்துக்கொள்ளுங்கள்.

கன்சிஸ்டென்ஸி

கன்சிஸ்டென்ஸி

முடிந்தவரை தினமும் பதிவிடுங்கள். ஏதேனும் ஒரு நாள் அல்லது நேரத்தை முடிவு செய்து அந்த நேரத்தில் பதிவிட்டால் நல்ல ரீச் கிடைக்கும். உதாரணத்துக்கு, ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை விமர்சனம் வரும், தினமும் மாலை 7 மணிக்கு ஒரு பாடல் வீடியோ வரும் என்பதுபோல. மற்றபடி பொதுவான பதிவுகளை எப்போது வேண்டுமென்றாலும் போடலாம். அதே சமயம், பல நாள்கள் தொடர்ந்து லீவு விட்டுவிடாதீர்கள்.

Patience

பொறுமை

பல வருடங்கள் ட்விட்டரில் இயங்கிவிட்டு, நல்ல வரவேற்பு இல்லாமல் வெறுத்துப் போய் வேறு பெயரில் வந்து ஹிட் அடித்தவர்கள் நிறைய பேர். ஒரு பிரேக்தான் தேவை. அது கிடைக்கும்வரை பொறுமைதான் தேவை.

Be updated

அப்டேட்டாக இருங்கள்

தோனி சதமடித்தாலோ, விஜய் ஆடியோ லாஞ்ச் நடந்தாலோ சமூக வலைதளங்கள் எக்ஸ்டிரா ஆக்டிவ் ஆகிவிடும். அந்த நேரத்தில் நீங்களும் ஆக்டிவ் ஆக இருக்க வேண்டும். அது உங்களை நிறைய பேரிடம் கொண்டு செல்லும்.

உங்களுக்குத் தெரிந்ததை, பிடித்ததை, உண்மையாகச் செய்யுங்கள். நிச்சயம் புகழ் உங்களைத் தேடி வரும். ஆல் தி பெஸ்ட் வருங்கால பிரபலமே!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு